|
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடலை நிகழ்த்தி அவர்களையும் ஒருங்கிணைத்து "தமிழ் மக்கள் பேரவை" உருவாகியிருக்கவேண்டும் என பலர் இப்போது ஆதங்கப்படுகிறார்கள். அவர்களின் ஆதங்கம் நியாயமானதுதான்! ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்புத்தான் மக்களுடனும் இதை உருவாக்கிய சமூக ஆர்வலர்களுடனும் நெருங்கிய கலந்துரையாடலை நடத்தி இப்படியான ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருக்கவேண்டும்.அதைச்செய்ய த. தே.கூ தவறிவிட்டது அல்லது பிந்திவிட்டது என்பதே யதார்த்தம். த.தே.கூ இற்குள் இருக்கும் பிச்சல் பிடுங்கல்கள் , இழுபறிகளை தீர்க்கும் வேலையில் அதன் தலைமைகளின் கவனம் முழுக்க இருக்கும் நிலையில் இப்படியான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கு அவர்களுக்கு நேரம் இல்லாமல்போனது மனவேதனை!! த.தே.கூ இல் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டமைப்பில் தமிழரசு கட்சியின் ஏகாதிபத்தியம் தலைதூக்கி ஆடும் இந்த காலகட்டத்தில்... தமிழரசு கட்சி மட்டும் தான் த.தே.கூ என்ற இழிநிலை உருவாக யார் காரணம்?? தேர்தலில் (கள்ள) வாக்குகளால் வெல்வது எளிது ஆனால் மக்களின் மனதை வெல்லுவது எல்லோருக்கும் எளிதான காரியம் அல்ல!! ஆபத்தான அரசியல் கலாச்சாரம் ஒன்று எமது மண்ணில் முளைவிடுவதை நாங்கள் அறிவோம். சாதி அரசியல், பிரதேச அரசியல், மத அரசியல் என விசங்கள் எமது மண்ணில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றப்படுவதையும் நாம் இன்று பல இடங்களில் காண்கிறோம். மக்களுக்கு நன்மையும் பொதுத்தொண்டும் செய்ய அரசியல் பலமோ அல்லது அதிகார பலமோ தேவயற்றது! அவைகள் இல்லாமலும் நிறைய விடயங்கள் தனி மனிதனாகக்கூட சமுதாயத்துக்கு நிறைய நல்ல விடயங்கள் செய்யமுடியும். அரசியல்வாதிகளை எங்களின் மேய்ப்பர்களாகவும் கடவுளர்களாகவும் நினைத்து எடுபிடிகளாக அவர்கள் பின் செல்லும் ஒரு "வலது குறைந்த" இளம் தலைமுறையை நாம் இன்று எம் மண்ணில் காண்கிறோம். அரசியல்வாதிகளை கேள்விகேட்கும் திராணியும் வல்லமையும் இல்லாத ஏலாவாளி இளம் தலைமுறை ஒன்று என்மண்ணில் வளர்க்கப்படுகிறது. அரசியல் என்பது புத்தகங்கள் படித்தும் அரசியல் வாதிகளின் பின்னால் சென்றும் வரும் ஆளுமை அல்ல!!! இன்றுவரை எம் இனத்தில் ஒரு சிறந்த அரசிலவாதி என அடையாளப்படுத்த யாரும் இல்லை என்பதும் எம் இனத்தின் சாபக்கேடு!! தமிழ் மக்கள் பேரவையில் யார் இருக்கிறார்கள்?? யார் இதை முன்னெடுத்தார்கள்?? இவர்களின் நோக்கம் என்ன?? என்பதை ஆராய்ச்சி செய்வதற்கு அப்பால்... இந்த முன்னெடுப்பு ஏன் ஏற்பட்டது? யாரால் ஏற்பட்டது? என்ற கேள்விகளுக்கு விடைகண்டால் , அதன் விடைகளும் விளக்கங்களும் கசப்பானவை. மேலும் இது உடனடித்தோற்றம் எனும் கருத்தை பலரும் முன்வைக்கிறார்கள். அவசரமான முன்னெடுப்பு எனவும் குற்றம் சொல்கிறார்கள்.அந்த கருத்து மிக மிக மிகத்தவறானது. இப்படியான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்பது த.தே.கூ உருவாகியபோதே முன்மொழியப்பட்ட ஒரு விடயம். காலம் தாழ்த்தி இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்டுள்ளது என்பதே யதார்த்தம். இதன் ஏற்பாட்டு குழுவின் தலைவர்களில் ஒருவரான மருத்துவர் திரு.லக்ஸ்மன் அவர்களின் முகவுரை எமக்கு மிகத்தெளிவாக அதைச்சொல்கிறது. அவரின் உரையில் ஆழமான , அவசியமான, ஆக்கபூர்வமான கருத்துகள் மிகச்செழுமையாக காணக்கிடைக்கிறது.அவரின் பேச்சில் ஒரு பகுதி கீழே.. ///""எம்மை பொறுத்தவரை இன்றைய அரசியல் சூழ்நிலை 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தைவிட மிக ஆபத்தானது. எமது அரசியல்வாதிகள் மக்களுக்கு உண்மையுடையவர்களாகவும், மக்கள் விழிப்பாகவும் இல்லாதுவிடின் எமது எதிர்காலத்தையே காவுகொண்டுவிடும் ஆபத்து உள்ளது. நுண்ணிய நகர்வுகளுக்கூடக நடைபெறும் அரசியல் காய்நகர்த்தல்கள், எமக்கான தீர்வுகள் எமது மக்களின் பிரசனம் இல்லாமலே உருவாக்கப்பட்டு, எமக்கு தரப்பட்டதாக பதியப்படும். இதனை மக்கள் ஏற்றார்கள் என்று கூறுவதற்கும், தயாரிப்புக்கள் நடைபெறலாம். மிகவேகமாக நடைபெறும் இவிதமான நகர்வுகள் எம்மை சூழ்வதை நாம் அறிந்திருக்கவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் நாம், எமது மக்கள் விழிப்பாக இல்லாவிடின் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்திக்கநேரிடும். இந்த சவாலை தனி நபர்களாகவோ அல்லது தனித்தனி அமைப்புகளாகவோ எதிர்கொள்ளமுடியும் என நாம் கருதவில்லை. மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் சக்திகள் அனைத்தும் ஒன்றுபடவேண்டும். அனைவரும் ஒன்றுபட்ட அரசியல்மயப்பட்ட ஒரு மக்கள் அமைப்பின் மூலமே இது சாத்தியமாகும்.// -மருத்துவர் லக்ஸ்மன்-"" மருத்துவர் லக்ஷ்மன் அவர்கள் யாழ்ப்பாணம் தரை போக்குவரத்து தடை செய்யப்பட்ட காலத்தில் பல மருத்துவர்கள் யாழில் இருந்து வெளியேறிய போது தனது குடும்பத்தை விட்டுட்டு கப்பல் மூலம் யாழ்ப்பாணம் போய் மக்களுக்க்க பணியாற்றியவர். பல உயிர்களை காப்பாற்றிய உன்னதமான மனிதர். ஒரு சிலர் இந்த முன்னெடுப்பை முற்றாக புறக்கணித்து எதிர்மறையாய் விமர்சிக்கிறார்கள்.இந்த முன்னெடுப்பால் மக்களுக்கு என்ன நன்மை வரப்போகிறது??என்பது அவர்களது கேள்வி. அதற்கான தெளிவான பதிலை மருத்துவர் திரு.லக்ஸ்மன் தனது முகவுரையில் மிகத்தெளிவாக வைத்துள்ளார். இது மக்களின் நலன் சார்ந்த அமைப்பு என்பதை விட மக்களின் நலன் சார்ந்த ஒரு ஆரோக்கியமான முன்னெடுப்பு என்பது சாதாரண பொதுமகன் தொடக்கம் கற்றறிந்த பலரும் அறிவர். இந்த முன்னெடுப்பு ஒரு சில அரசியல்வாதிகளின் மக்களை ஏமாற்றும் அரசியல் சுத்துமாத்துகளுக்கு அபாய அறிவிப்பு விடுக்கிறது. ஆதலால் அப்படியானவர்களுக்கு தீமை பயக்கும் என்றால் அது ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் எம் மக்களுக்கு தீமை பயக்கும் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத யதார்த்தம். எவரையும், எதையும் எடுத்த எடுப்பில் கண்மூடித்தனமாக எதிர்ப்பதோ அல்லது ஆதரிப்பதோ மக்கள் நலன் சார்ந்த எண்ணத்திலும் செயற்பாட்டிலும் நன்மை பயக்காது. ஒரு நீண்ட பொதுநலத்தின் பாதையில் தடைகளையும் விமர்சனங்களையும் தாண்டி நடந்து ... களைத்து... சற்று ஓய்வெடுக்கும் பொது விடுதிதான் அரசியல். அரசியல் சாக்கடையல்ல..!!! அது சாக்கடையெனில் யாரும் அதற்குள் இறங்கி நின்று வேலை செய்யமாட்டார்கள். அரசியல் என்பது ஒரு வியாபாரம்!!! ஒரு நல்ல வியாபாரியே நல்ல அரசியல்வாதியாக இருக்க தகுதி உடையவன். இந்த கட்டமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு உயரிய நோக்கத்தினை மனதில் நிறுத்தி பயணிக்கவேண்டும் என்பதே தமிழ்மக்களின் இன்றைய ஆசையும் எதிர்பார்ப்பும். ஏனெனில் புலம் பெயர் தேசத்திலும் தாயகத்திலும் நிறைய நிறைய " பேரவைகள்" உருவாகி அவை " பெயரளவில்" மட்டும் இருப்பதை நாம் கண்ணெதிரே காண்கிறோம். எனவே அந்த வரிசையில் தாயகத்தில் உருவான "தமிழ் மக்கள் பேரவையும்" வரிசையின் முதலில் வந்து நிற்கக்கூடாது என்பதும் எங்களின் ஆதங்கம்!! - முகப்புத்தகத்துக்காக தமிழ்ப்பொடியன்- கவலை: கடைசியில என்னையும் ஒரு நீண்ட ஆய்வை எழுதவைச்சிட்டாங்களே...
தமிழ்ப்பொடியன்®
|
திங்கள், ஜூலை 11, 2016
இப்ப எதுக்கு தமிழ் மக்கள் பேரவை???
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக