வெள்ளி, மார்ச் 04, 2016

பூவரசம் இலை

பூவரசம் இலை!!!




பூவரசம் இலைக்கு எங்களின் ஊரில் பலவிதமான பாவனை உண்டு.

பீப்பி செய்து ஊதலாம்.(இதனால் இரவில் ஊதி பாம்பு வரும் எண்டு சொல்லி; அப்பாவிடம் அடி வாங்கிய நாட்கள் பல உண்டு).

எங்கட ஒழுகையால போகும் ராகினி மச்சாளை பாத்து; பம்பலா பகிடி பண்ண பீப்பி ஊதி அவளிட்ட கிழிய கிழிய வாங்கின அனுபவமும் மறக்கமுடியாது.

இரண்டு பீப்பிகளை ஒண்டாய் வாயில வைச்சு
ஏதோ கானமூர்த்தி பஞ்சமூர்த்தி தவில் நாதஸ்வர குழுவுக்கே சாவால் விடுவது மாதிரி சினிமா பாடல்களையும் பாடி இருக்கிறம்.

பீப்பிக்குழலின் ஊதும் முனையை அமத்தும் விதத்தில் நிறைய வித்தியாசமான ரியூண் வரும்.

வடை மற்றும் பணியாரம் அதில் வைத்துத்தான் தட்டுவார்கள்.

அதன் காம்பை ரப்பர் பாண்டில் வைத்து இழுத்து சுண்டி வில் போல் அடித்தால் "சுள்" எண்டு வலிக்கும்.இப்பிடி பள்ளிக்கூடத்தில அடிச்சு ,என்னோட படிச்ச பிள்ளை சாந்தினியில பட்டு ..அவள் அழுதுகொண்டுபோய் ராணி ரீச்சரிட்ட சொல்ல , அவா பிறின்சிப்பலிட்ட சொல்ல.. அந்த ஆள் பூவரசம் காம்பால வெளு வெளு எண்டு துடையில ரத்தம் வர அடிச்சது ஒரு கதை.அதை வீட்ட சொல்லாமல் ஒழிச்சது பெரிய கதை.

கள்ளு குடித்துவிட்டு பூவரசம் இலையை சப்பி துப்பினால் மணம் போகும். இதனால் ஊரில பல பெரும் குடிமக்கள் மனிசியின்ர "அரிச்சனையில்" இருந்து ஓரளவு தப்பி இருக்கினம்.(கொய்யா இலை திறம் சாமான்.ஆனால் கொய்யா இலை தேடி அலையுறதுக்கிடையில வெறி முறிஞ்சிடும்.அதனால கையுக்கெட்டின தூரத்தில கிடைக்கிற பூவரசம் இலைதான் அருமையான MOUTH FRESHENER)

சோறு, கறி எல்லாவற்றையும் ஒண்டாய் பிரட்டி பினைந்து அதை கவளமாக உருட்டி பூவரசம் இலையில் வைத்து அம்மா தரும் அந்த உணவு ...அமிர்தம்.
அஞ்சாம்மனை கோயில்ல புக்கை வாங்க அவசரமா உதவும் பாத்திரம் இதுதான்.கன இலைகளை ஈக்கிலால ஒண்டா வட்டமா கோப்பை போல குத்தி அதில கோயில்ல தரும் புக்கையோ இல்லை அன்னதான சோறோ வாங்கி திண்டால் அதில வாற ருசி சொல்லி வேலையில்லை.
பூவரசம் தடி....!!!
இதனால் பாதிக்கப்படாத யாரும் எங்களின் ஊரில் இல்லை.
வீட்டில குழப்படி செய்தால் அம்மா உடனடியாய் வேலியடிக்கு போய் முறித்து அப்பாவிடம் கொடுக்கும் ஆயுதம் இது.குண்டியில் விழும் அடி சுள் என்று ஏறும்.
பள்ளிக்கூடத்தில் குழப்படி செய்தால் "ஐங்கரன் சேர்" போட்டு வெழுக்கும் ஆயுதமும் இதுதான்.
ஊரில "கள்ளக்காணி" பிடிக்க உடனடியா பயன்படுத்தும் உபகரணம் பூவரசம் கதியால்.

வேலிச்சண்டை,ஒழுங்கைச்சண்டை,காணிச்சண்டை,எல்லைச்சண்டை இப்படி பல பிரச்சினைக்கு காரணம் இந்த "பூவரசம் கதியால்" தான். கொஞ்சம் தண்ணி ஊத்தினா காணும் சும்மா கிசுகிசு எண்டு வளரும்.

அம்மா அடித்தால் கோபத்தில் புலம் பெயர்ந்து ஏறித்தங்கும் தங்குமிடம் "பூவரச மரம்" தான்.

கோடை வெயிலில் பள்ளிக்கூடம் விட்டு ஒழுங்கையால் சுடு மணலில் ஓடி வரும் போது "நிழல்" தந்து எங்களின் பிஞ்சுக்கால்கள் பொக்கிழிக்காமல் காத்ததும் இந்த பூவரச நிழல்தான்.

எங்கட ஊரில கன காதலர்களின் தபால்ப்பெட்டி இதுதான். வேலியோரத்து பூவரச மரத்தில தான் தங்களின் காதல் கடிதங்களையும் அன்பளிப்பு பொருள்களையும் சொருகிப்போட்டு போறவை.

கிணத்தடியில் இருக்கும் பூவரசு மரத்துக்கு ஆயிரம் கதைகள் உண்டு. 

wink emoticon
பூவரசம் இலையை “ voice mail" ஆகவும் பாவிக்கலாம்.ஆற்றையேனும் வீட்ட போகும் போது அவையள் ஆரும் வீட்டில இல்லையெண்டா,
நாங்கள் வந்து போன விசயத்தை சொல்ல "பூவரசம் கொப்பொண்டை" முறிச்சு படலியடியில குத்திப்போட்டு போனா அவையளுக்கு தெரியும் ஆரோ வீட்ட வந்திட்டு போயிருக்கினம் எண்டு.

பூவரசம் மரம் கட்டாயம் எங்கட ஊரில வேலியின் நாலுபக்கமும் நிக்கும்.
ஆரேனும் செத்தால் உடன அதில சில மரங்களை வெட்டி சுடலைக்கு அனுப்புவினம். நெஞ்சாங்கட்டை எண்டு சொல்லும் பிரேதத்தின் நெஞ்சில் தான் வளர்த்த பூவரசு நின்று எரிவது ஒரு பெருமை.பச்சையெண்டாலும் பூவரசம் இலை சும்மா டக்கெண்டு பத்தி எரியும். மசுக்குட்டி எரிக்கும் போது கொஞ்ச மண்ணெண்ணை விட்டு எரிச்சால் சும்மா முளாசி எரியும்.
----------------------
எங்கட அம்மம்மா பொயிலையில சுருட்டு சுத்தி அடிக்கிறதுக்கு காய்ஞ்ச பூவரசம் இலையைத்தான் பாவிக்கிறவா.

மேலும் ஊரில ஏதெனும் ஆடு மாடு களவு போனா கோயில்ல போய் பூசாரியிட்ட மை போட்டு பாக்குறதும் இந்த பூவரசம் இலையிலதான்.

பூவரசம் நிழல் என்பது சொற்களால் விபரிக்கமுடியாத சுகம். கோடை வெயிலுக்கு ஒழுங்கையால நடந்து வரும் போது பூவரசம் நிழலில் நிற்கும் போது அந்த அருமையான நிழலில் ஒரு மெல்லிய காத்து வீசும்.

ஆகா....
அதைப்போல ஒரு “ ஏசி” இன்று வெளிநாட்டின் குளிரூட்டிகளில் கூட கிடைக்காது. பூவரசம் நிழலில் ; வெண்மணலில் ஒரு சாரத்தைப்போட்டு தலைமாட்டில ரேடியோவில பழைய இடைக்கால பாட்டைப்போட்டு ஒரு நித்திரை அடிச்சா சொல்லி வேலையில்லை.
ராமராயன் நடிச்ச ஒரு படத்தில் வரும் பாட்டு “ வாசலிலே பூசணிப்பூ வைச்சிப்புட்டா” எண்ட பாட்டு இப்பவும் கேக்கும் போதும் என் மனசுகளில் பழைய காதல் நினைவுகள் துள்ளி விளையாடும்.
என்னதான் வெயில் எண்டாலும் பூவரசம் கதியாலை வைச்சு ரண்டு மூண்டுதரம் தண்ணி ஊத்தினால் காணும். அது கண்டிப்பா துளிர்விடும்.அந்தளவுக்கு பூவரசு என்பது எங்கள் மண்ணில் பிடிப்பான மரம்.
பள்ளிக்கூடத்தில் இடைவேளை நேரத்தில் வேலி ஓரத்தில் இருக்கும் பூவரசில் ஏறி பெட்டைகளுக்கு சாகசம் காட்டி;
பூவரசம் கொப்பில காச்சட்டை கொழுவி ...
அது பின்பக்கம் கிழிஞ்சு தொங்க...
அதை தபால்பெட்டி எண்டு மற்றப்பொடியள் நக்கல் அடிக்க..
மானம் போன சம்பவங்களும் உண்டு.
பூவரசம் இலையில் அவள்பெயரையும் என்பெயரையும் எழுதி பின் வாங்கிலில் இருந்து முன் வாங்கிலுக்கு எறிஞ்சு...
அது ரீச்சரின் கைகளுக்குப்போய்..
அதே பூவரசம் இலை வளர்ந்த பூவரசம் தடியால் முறிய முறிய அடிவாங்கியதும் மறக்கவே முடியாது.
பூவரசு...
எங்களின் மண்ணின் அடையாளம். அதில் இப்போதும் பசுமையாய் எங்கள் நினைவுகள் பழுத்த இலைகளாக தொங்கிக்கொண்டிருக்கின்றன.

Comments System

Recent Posts Widget

Facebook Badge