திங்கள், டிசம்பர் 19, 2016

"Ira madiyama" (August sun) சிங்களத்திரைப்படம் -2003



"Ira madiyama" (August sun)என்ற ஒரு சிங்களத்திரைப்படம் 2003 இல் வெளியானது.பல விருதுகளை வென்ற சிங்கள இயக்குனர் பிரசன்ன விதானகே இதை இயக்கியுள்ளார்.

"Death on a full moon day" என்ற திரைப்படத்தை மிகத்துணிவுடன் 1997 இல் இயக்கிய இயக்குனர் இவர்.
"மிகத்துணிவுடன்" என்று சொன்னதற்கு காரணம் அதன் கதைக்கரு ஒரு விடயத்தினை உச்சந்தலையில் ஆணி அடித்தது போல சிங்கள பேரினவாத போர்விரும்பிகளுக்குச்சொன்னது.
போருக்கு அனுப்பிவிட்டு ஒரு குக்கிராமத்தில் கண்ணீர் வடிக்கும் தந்தையின் கதை அது!
(அந்த திரைப்படம் பற்றி பின்னர் எழுதுவேன்)


இப்போது " இரா மடியம" திரைப்படத்துக்கு வருவோம்.

2003 வெளியான இந்த திரைப்படம் பற்றி நான் கொழும்பில் இருந்தபோது கேள்விப்பட்டேன்.
ஆனால் அந்த திரைப்படம் எங்களைக்கொச்சைப்படுத்தும் படம் என்று எனக்கு சொல்லப்பட்டதால் வேண்டுமென்றே அதை பார்ப்பதை தவிர்த்தேன்.

ஆனால் "death on full moon day" திரைப்படத்தை பார்த்தேன்.

"இரா மடியம" திரைப்படம் ஆனது பல பேசாப்பொருட்களை துணிவோடு பேசியிருப்பதாகவே பார்க்கிறேன்.

இராணுவத்தில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வரும் "இளைஞன்".

கைதியாக விடுதலைப்புலிகளிடம் சிக்கிய கணவனை தேடும் ஒரு இளம் பெண்.அந்தப்பெண்ணுக்கு உதவும் ஒரு சிங்கள ஊடகவியலாளன்.

விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் சிறுவனும் அவனது நாயும்.

இந்த கதாபாத்திரங்களை சுற்றியே படம் நகர்கிறது.


விடுமுறையில் வரும் சிங்கள இளைஞன் தன் நண்பர்களோடு விபச்சார விடுதிக்கு செல்கிறான்.
அங்கே அவனுக்கு "அதிர்ச்சி" காத்திருக்கிறது. 

விடுதலைப்புலிகளிடம் கைதியாக இருக்கும் கணவனை தேடிப்போகும் இளம்பெண் தன் கணவனை பார்க்கிறாளா?

விடுதலைப்புலிகளால் 12 மணித்தியால கால அவகாசத்தில் வெறும் 4000 ரூபாய் பணத்தோடு விரட்டியடிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் குடும்பத்தின் சிறுவன் தான் ஆசையோடு வளர்த்த நாய்க்குட்டியை மீண்டும் கண்டுபிடித்தானா?

திரைப்படத்தினை முழுதாய் பார்த்தால் விடைகள் கிடைக்கும்.




திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் சிங்கள ஊடகவியலாளன் பங்குபெறுவார். அவர் லண்டனில் ஒரு ஊடகத்தில் வேலை செய்கிறார்.
அந்த நேர்காணலின் உள்ளடக்கம் கீழே:


தொகுப்பாளர்:We are discussing the responsibility of the media , in a war situation.

ஊடகவியலாளர்:This is like a cricket match

What is the local media tell us?

They gives us the scores!

"35 terrorists were killed,the army lost 25 soldiers "
As the though we have won by ten runs!

This is not a game.

We are talking about human lives.

Each man is either a husband,brother or son.

When we talk about "martyrs"
We forget the victims of war.

தொகுப்பாளர்:But the tamil tigers is a terrorists organisation.
How can you defeat terrorists without going to war?

ஊடகவியலாளர்:With a political solution!
What's wrong with that?

I feel the tigers are willing to consider a federal solution,and not a separate state.they have said many times,They are ready to discuss power sharing.

Issues like this have been successfully negotiated in other countries.

Telephone call:

நேயர்:How can you be sure that the tigers are willing to negotiate?

How can you know what is on their leaders mind?

ஊடகவியலாளர்:we often talk to Tamil Tigers representatives abroad.
They trust us because they know we don't talk sides.


We think people like you are tiger sympathisers!

Anyone has the freedom to think what they like!


இந்த உரையாடலில் பல யதார்த்தமான உண்மைகளை வெளிப்படையாக பேசியிருக்கிறார் திரைப்பட இயக்குனர்.


ஒரு காட்சியில்...
விடுதலைப்புலிகள் ரக்ரர் வாகனத்தில் வந்து "துரோகிகளுக்கு இங்கே இடமில்லை.உடனே வெளியேறவேண்டும்" என ஒலிபெருக்கியில் அறிவிப்பார்கள்.
அந்த முஸ்லிம் சிறுவன் தன் தாயிடம் கேட்பான் "உம்மா துரோகி எண்டா யாரு? நாங்கள் துரோகியா?".தாய்: இல்லை நாங்கள் துரோகிகள் இல்லைமகன்: அப்ப அவர்கள் அப்படித்தானே சொல்கிறார்கள்.தாய்: அவர்கள் சொல்வது எல்லாம் சரியல்ல.



விடுதலைப்புலிகளால் ஊரைவிட்டு விரட்டப்பட்ட அந்த முஸ்லிம் சிறுவனின் வலிகளை நான் மனதார உணர்ந்தவன்.

 ஏனெனில் என்னுடைய ஊரை விட்டு 10 வயதில் ஓடிய போது அதே வலிகளை நானும் அனுபவித்தேன்.சிறிலங்கா ராணுவத்தின் மீது எனக்கு அந்தளவு கோபமும் வன்மமும் இருந்தது.

அதே அளவு கோபமும் வன்மமும் தான் அந்த முஸ்லிம் சிறுவனுக்கும் விடுதலைப்புலிகளின் மேல் இருந்திருக்கும்.

"ரெக்ஸ்" என்ற நாயின் கதாபாத்திரம் மனதை தொடுகிறது.

முஸ்லிம்கள் அனுபவித்த "ஆறாத வலியை" அச்சொட்டாக திரைப்படம் ஆணி அடித்தால்போல பேசுகிறது.
அதைப்பார்க்கும் போது "யாழ்ப்பாண தமிழனாக" குற்ற உணர்வு நெஞ்சை குத்திக்கிழிக்கிறது.



வன்னிக்கு போவதற்காய் மன்னாரில் ஊட்கவியலாளரும் கணவனைத்தேடும் இளம்பெண்ணும் காத்திருக்கிறார்கள்.
கூட்டிக்கொண்டு போவதாய் சொன்ன விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரியான நேரத்துக்கு வரவில்லை.
"புலிகள் நேரம் தவறமாட்டார்கள். அப்படி நேரம் தவறினால் அந்த விடயம் நடக்காது எண்டு அர்த்தம்" என ஊடகவியலாளர் சொல்கிறார்.
விடுதலைப்புலிகளோடு நெருக்கமாய் பழகிய ஊடகவியாளர் ஒருவரின் வாக்குமூலம் அது.

இந்த திரைப்படத்தை இயக்கிய "பிரசன்ன விதானகே" மீது பல விமர்சனங்கள் இருப்பினும்;

என்னைப்பொறுத்தவரை சிங்கள தேசத்தில் இருந்து துணிவோடு பேசும் ஒரு "சிறந்த" இயக்குனராகவே எனக்கு தெரிகிறது.

விரும்பினால் "இரா மடியம" திரைப்படத்தினை ஒரு முறை பாருங்கள். பார்க்கவேண்டிய திரைப்படம்!!!!




#தமிழ்ப்பொடியன்

புதன், டிசம்பர் 07, 2016

உனது உயரம்





அண்ணாந்து பார்த்தால்..
உனது உயரம் தெரியாது.


கொஞ்சம் குனிந்து கீழே பார்
உனக்கான குழி வெட்டப்படுகிறது!!!




புதன், நவம்பர் 23, 2016

Mummy i want thanni......!!!

ஆயிரம் மைல் கடந்து அன்னைதேசம் தனை பிரிந்து
அனாதைகளாய் ஆனபோதும்
அண்ணனாய் தம்பியாய் பிள்ளைகளாய் உற்ற உறவுகளாய்
அன்போடு அரவணைக்கும் என் புலம் பெயர் சொந்தங்களே வணக்கம்!
 
என் உயிரிலும் மேலான தமிழ்தாயின் உச்சிமுகர்ந்து
அவள் தந்த தமிழ்ப்பாலின் பாசம் உணர்ந்து
புதுவை அண்ணாவை என் நெஞ்சில் வைத்து
காசி அண்ணாவின் கைபிடித்து 
கவிதை நான் எழுதி வந்தேன் காலம் அறிந்து!
 
வீட்டிலே தமிழ்!
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!
 
தமிழனாய் பிறந்தோம் என்று பெருமை பேசு-இல்லையேல்
தமிழினத்தின் அருமை போச்சு!
 
தமிழினத்தின் உயிர் மூச்சுதானே எங்கள் செம்மொழி
மூச்சையே நிறுத்திவிட்டால் இனம் வாழ ஏது வழி?
 
படலை திறந்து வந்தோம்
உடலை மட்டும் தானே கொண்டுவந்தோம்
உயிரும் உணர்வும் இப்போதும் அங்கேதானே!
 
சத்தியமாய் சொல்லுங்கள் எங்களின் கால் இடுக்கில்
இப்போதும் எங்கள் வீட்டின் முற்றத்து மண்தானே ஒட்டி இருக்கிறது.
 
அரியாலையில் இருந்தமாதிரி அவுஸ்திரேலியாவில் இருக்கமுடியாது
மேடைக்கு ஏற்ற வேசம் போட்டே ஆகவேண்டும்
ஆனாலும் தமிழன் என்ற அடையாளம் தொலைக்கப்படாது
 
அடையாளங்களை தொலைத்துவிட்டு அரைகுறையாய் வாழ்வதை விட
அட அம்மணமாக வாழ்வது எவ்வளோ மேல்!
 
”வெள்ளை” என்று சொல்வதில் சிலநேரம் எனக்கு பெருமை!
என்னதான் வெளுக்க "லோசன்"(lotion) போட்டாலும் என் தோல் கருமை!
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகாது அதுதான் உண்மை!
 
வீட்டிலே தமிழ்!
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!
 
பிள்ளை ஒன்று பெறுவதே பெரும்பாடு
என் பெற்றபிள்ளை தமிழ் மறந்தால் அது வெக்கக்கேடு!
 
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!
 
பெற்ற பிள்ளைக்கு பீற்றர் என்றும் ஹரிபோட்டர் என்றும்
பெயர் வைச்சால் என்ர பிள்ளை என்ன மொழி பேசும்?
 
பீற்றரும் ஸ்ரெல்லாவும் "hi how are you " என்று பேசலாம்
தமிழரசியும் கலையரசியும் "hi how are you buddy" என்று சொன்னால் 
என்னாகும் எங்கள் சந்ததி?
 
தமிழரசியின் பெயரில் மட்டுமே தமிழ்
அவள் மூச்சிலும் இல்லை பேச்சிலும் தமிழ் இல்லையே!
அது அவள் பிழை இல்லை! தழிழரசியை பெற்ற தந்தை என் பிழை!
 
Factory இல பட்டை அடி அடிச்சுப்போட்டு 
பாசத்தோடு ஓடி வந்து முத்தமிட்டால்
"அப்பா" என்று சொன்னால்த்தானெ அந்த அலுப்பு தீரும்
அப்பதான் என்ர ஆயுளும் கூடும்
 
என்ர மூத்தது "Daddy i want ulunthu VADA" என்கிறான்
அட என்ர கடைக்குட்டி Mummy i want thanni... என்கிறாள்
 
தாலி கட்டியவளை "darling" என்றால்
என்ர பிள்ளை என்னப்பாத்து "dada" என்டுதான் சொல்லுவான்
காலம் போக என்னை "வாடா" என்பான்
மனம் நொந்து என்ன பலன்?
 
கட்டிலிலே தமிழ் மறந்தால்....
தொட்டிலிலே என்ன வரும்?
 
Mummy i want thanni......!!!
தமிழ்த்தாய் நொந்து போவாளே இதை எண்ணி
 
வீட்டிலே தமிழ்!
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!
 
தாய்ப்பாலோடு சேர்த்து தமிழையும் ஊட்டுங்கள்
தாய்பாசத்தோடு சேர்த்து தமிழ்நேசத்தையும் காட்டுங்கள்
 
நாங்கள் எல்லாம் பூவரசம் கதியால்
புடுங்கி வந்து FRANCE இல் நட்டாலும் 
பூக்கிறது பூவரசம் பூதான்!
ஆனால் இந்த பிஞ்சுகள் பூவரசம் பூவின் நிறம் அறியாத ரோஜாக்கண்டுகள்
 
விதை விதைக்கும் போது அவதானம்
இல்லையெனில் எங்களுக்குத்தான் அவமானம்!
 
NORWAY இல் இருந்து வந்த மூத்தவளின் இளையதும்
FRANCE  இல் இருந்து வந்த இளையவனின் கடைசியும்
என்ன மொழியில் பேசுவது என்று தெரியாமல் முழிக்கும்..!!!
 
என்ர அப்புவுக்கு ஆயிரம் டொலர் தேவையில்லை
கனடாவில இருந்து வந்த தன்ர பேரன் தமிழ் பேசவேண்டும்.
“அப்பு” எண்டு வாய் நிறையா கூப்பிட வேணும்.
அப்பதான் அப்புவின் அடிவயிறு குளிரும்.
 
ஆங்கிலம் பேச வேண்டாம் எண்டு குதர்க்கம் பேசவில்லை
ஆங்கிலம் என்பது அவசிய மொழிதான் - ஆனால்
அன்னை மொழியை ஆங்கிலம் திண்டால்
அடுத்த சந்ததி தமிழ் மறந்தால்
யாருக்கு வேதனை?
 
தமிழ் இனத்தை அழிக்க ஆரும் தேவையில்லை
மொழியை மறந்தால் தமிழ் இனம் தானாய் அழியாதோ?
 
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!
 
எத்தனை ஆயிரம் உயிர்விலை கொடுத்து
செங்குருதி ஊற்றி வளர்த்த மொழியல்லோ எங்கள் தாய்மொழி
தமிழ் இனத்தின் விழிதானே எங்கள் தமிழ்மொழி
 
அடிபடுவம் பிடிபடுவம் புடுங்குப்படுவம்- ஆனால்
தமிழீழம்,தலைவன்,தமிழ் எண்டால் 
தம்பியாய் தங்கையாய் அண்ணனாய் ஒண்டா நிப்பம்!
 
தாயை பழித்தவனின் நாக்கைதான் அறுப்போம்.
தாய் மொழியை பழித்தவனின் தலையையே அறுப்போம்.
 
நாளைய இந்த சந்ததி தமிழ் மறந்தால் நாறிப்போகாதோ நம் இனம்?
இளைய சந்ததிக்கு இது புரிந்தால் இன்னும் தலைனிமிரும் எம் இனம்.
 
தாய் பிறந்த தேசத்தின் வாசம் அறியாத இந்த பிஞ்சுகள் சில
தமிழீழத்தின் மேலும் தமிழின் மேலும் கொண்ட பாசம்
அப்பழுக்கில்லாத ஆழ்ந்த நேசம்.!
விடுதலை மீதும் அண்ணனின் மீதும் இவர்கள் காட்டும் பாசம்
எங்களில் சிலர் போடும் வேசத்திலும் பெரியது!
 
எல்லா மொழிகளையும் வாசியுங்கள்
தமிழை மட்டும் சுவாசியுங்கள்...!!!
 
வாய்க்கால் வெட்டி வளிந்தோடும்  நீரை விதைகளுக்கு விடுங்கள்.
வளர்க்கிற போதே வாய்க்கு வாய் தமிழ் சொல்லி வளருங்கள்
 
வெளியில என்ன மொழியையும் பேசுங்கோ
விட்டில மறக்காமல் தமிழையே பேசுங்கோ...!!!
 
Mummy i want thanni......!!!
தமிழ்த்தாய் நொந்து போவாளே இதை எண்ணி
 
வீட்டிலே தமிழ்!
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!

எங்கட ஊருக்கும் மின்சாரம்

எங்கட ஊருக்கும் மின்சாரம் - இனி 
அவுணில சுடலாம் பணியாரம்
 
சும்மா குடுக்கிறாங்களாம் எல்.சி.டி
இனி எல்லா வீட்டிலயும் சண் டி.வி
படிப்பு தான்ரா எங்கட சொத்து
வச்சான்ரா ஆமிக்காரன்  அதுக்கு ஆப்பு
 
ஆருக்கு வேணும் தமிழீழம்
அதை மறந்து நாங்கள் கனகாலம்..!!!
தூந்து போன துயிலும் இல்லங்கள்
மறந்து போனாலும் மனச்சாட்சி கொல்லும்
 
லாம்பு விளக்கில் மங்கிய இரவுகள்
இனி ரியூப்பு பல்ப்பில் பளபளக்கும் கனவுகள்..!
 
அன்றைய இரவில் நிலவும் நச்சத்திரங்களும் கூட இருந்தன
மங்கிய வெளிச்சத்திலும் தெளிவாய் நடந்தோம்
இரவுகளின் நீளங்கள் தெரியாமல் வாழ்ந்தோம்.
 
இனி ஆருக்கு வேணும் தமிழீழம்
அதை மறந்து நாங்கள் கனகாலம்...!!!
 
எங்கட ஊருக்கும் மின்சாரம்-இனி
அவுணில சுடலாம் பணியாரம்
 
இனி வீட்டுக்கு வீடு இன்ரனெற்று
கெதியில வரும் ஊரில குத்துவெட்டு
சிலது சொன்னால் புரியாது
பட்டாலும் தெளியாது..!!!
 
வேப்ப மர நிழலின் அருமை
கடற்கரைக்காற்றின் இதமான குழுமை
மண்சட்டியில் சமைத்த சூடை
கொட்டுக்கிணற்றில் குடிக்கும் தண்ணீர்
 
சந்தோசம் என்பது இருக்கும் போது தெரியாது
அதை ஆரும் சொன்னாலும் அனுபவிக்காமல் புரியாது
 
எங்கட ஊருக்கும் மின்சாரம்
எங்களுக்கும் கேக்க சந்தோசம்தான்
 
எங்கட ஊருக்கு மின்சாரம் - இனி 
அவுணில சுடலாம் பணியாரம்...!!!
 
 
 
தமிழ்ப்பொடியன்
18/06/2013
 
குறிப்பு: 21ம் நூற்றாண்டிலாவது எங்கட ஊருக்கு முதல் முதலா கறண்டு வாறது சந்தோசம்தான்.
              1990 களில் இருந்த மாதிரியே எங்கட ஊர் இருக்கோணும் எண்டு அவுஸ்திரேலியாவில இருந்து      கொண்டு ஆசைப்படுவது அபத்தமானதுதான்.இருந்தாலும் சிலதுகளை ஏற்க மனசு மறுக்குது.இன்ரனெற்று,ஈமெயில் எண்டு உலகம் எங்கயோ நிக்கும் போது மாற்றங்களை ஏற்க மறுப்பது மடமைதான்.இருந்தாலும் சில ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் மொழிபெயர்க்கும் போது சில உண்மைகள் சுடுகிறது. நாங்கள் மட்டும் ”எல்லாத்தையும்” அனுபவிச்சு கொண்டு விசைப்பலகைகளில் விண்ணாணம் பேசுவது கேவலம் தான்.இருந்தாலும் சில நேரம் கைகள் அரிக்குது.எழுத வைக்குது.

ஒற்றைச் சொல்லு வலி!!!

1990
ஆனையிறவுசமர்
தரையிறக்கம்
இடப்பெயர்வு
அகதிமுகாம்
இடப்பெயர்வு
முகாம்
பசி
பட்டினி
இழப்பு
வலி
இடப்பெயர்வு...(3)
முகாம்
செல்லடி
பொம்பர்
கெலி
நேவிக்காரன்
படுகொலை
இடப்பெயர்வு
முகாம்

1995
யாழ்இடப்பெயர்வு
கிளாலி
படுகொலை
வன்னி
முகாம்
போராட்டம்
இடப்பெயர்வு
இடப்பெயர்வு
இடப்பெயர்வு......(6)
முல்லைத்தீவு
ஆனையிறவு
வெற்றிகள்


சமாதானம்
ஏ9
ஓமந்தை
கொழும்பு

சுனாமி
அவலம்
சாவு
இடப்பெயர்வு

மகிந்த
சண்டை
சண்டை 
படுகொலை
கொத்து குண்டு
படுகொலை
போராட்டம்
சண்டை
முள்ளிவாய்க்கால்
பாதுகாப்புவலயம்
படுகொலை
இடப்பெயர்வு

வவுனியா
முகாம்
சித்திரவதை
சிறை
ஏழாம் மாடி
அடி
உதை
காசு
லஞ்சம்

புத்தளம்
கப்பல்
காசு
கடல்
பசி
பட்டினி
சாவு
பயம்
கிறிஸ்துமஸ் தீவு
அவுஸ்திரேலியா
அகதி
கெவின் றுட்
NO VISA
வாழ்க்கை??????


#தமிழ்ப்பொடியன்
30/07/2013






Comments System

Recent Posts Widget

Facebook Badge