திங்கள், பிப்ரவரி 15, 2021

சனிக்கிழமைசாமியாரும் வெளிநாட்டு லைசன்ஸும்

ஊரில இருந்து வெளிநாடு வந்த பொம்பிளைப்பிள்ளை ஒரு மாதத்தில “லைசன்ஸ”எடுத்தா...

மாப்பிள்ளை எந்தளவு குடிகாரன் எண்டு ஊரில இருக்கும் பொம்பிளை வீட்டுக்காரர் புரிஞ்சு கொள்ளவேணும். 😉

"என்ர மோள் வெளிநாடு போய் ஒரு மாதத்திலேயே கார் ஓடுறாள்" எண்டு
புளுகித்திரியப்படாது!!!!

( சிறிலங்கா லைசென்ஸ் எடுத்துக்கொண்டு வா எண்டு மாப்பிளை அரிகண்டம் செய்தார் எண்டா... மாப்பிள்ளை மரணக்குடி எண்டு அர்த்தம். கவனம்.lol)

#சனிக்கிழமைசாமியார்

🧔சனிக்கிழமைசாமியாரும் சாறியும்!!!

அவுஸ்திரேலியாவில் கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. இனிமேல் சனிக்கிழமைகளில் ஒரே கொண்டாட்டம்தான். 

பொதுவாக ஒவ்வொரு சனியும் ஏதாவது ஒரு விசேசம் வரும். 

பிறந்தநாள் , கலியாணவீடு, சாமத்தியவீடு என்று தனியாக புறம்பாக அதுக்கெண்டு உழைக்கவேணும்.

நெருங்கின ஆக்கள் எண்டா 100$ . கொஞ்சம் தூரத்து சொந்தம் எண்டால் 50$ குடுத்தாத்தான் மரியாதை.

சனிக்கிழமைசாமியார் கடந்த 10 வருசமா குடுத்ததை கணக்குப்பாத்தால் எப்பிடியும் இலங்கை காசுக்கு 20 லச்சத்துக்கு கூடத்தான்.

சாமியார் வாங்கினது ரண்டுதரம் தான்.

குட்டிச்சாமியாரின் முதலாவது பிறந்தநாளை இந்தமுறை செய்யாமல் தவிர்த்துவிட்டோம்.

குட்டிச்சாமியார் பிறந்தது மேமாதம் எண்டதால அந்த மாதத்தில் பிறந்தநாளை செய்வதில்லை என்ற முடிவு எடுத்தாச்சு. காரணம் மேமாதம் எண்டது "வலி சுமந்த மாதம்"!

குட்டிச்சாமியார் வளந்து " ஏன் மேமாதத்தில் என்ர பிறந்தநாள் செய்யுறதில்லை" எண்டு கேள்வி கேட்டால் அவனுக்கு கனவிசயங்களை சொல்லவேணும்.

இந்தமுறை ஏப்ரலில் பிறந்தநாள் செய்வம் எண்டு நினைச்சு அடுக்கெடுத்தால் அதுவும் ஒரு சில காரணங்களால் பிழைச்சுப்போட்டுது.

பறுவாயில்லை அடுத்தமுறை ரண்டாவது பிறந்தநாளை ஊரில செய்வம் எண்ட பிளானில இருக்கிறார் சாமியார்.

குட்டிச்சாமியாரின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் 1000 மரங்களை ஊரில் நடவேணும் எண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேரகாலம் கூடி வந்தால் வாற ஏப்ரலுக்கு ஊரில் குட்டிச்சாமியாரின் ரண்டாவது பிறந்தநாள் ஊரில செய்யும் போது 1000 மரங்கள் நடப்படும்.

குட்டிச்சாமியார் வளந்து பெரியாள் ஆகும் போது அவன் தன்ர கையால வருசாவருசம் ஒவ்வொரு ஊரிலும் 1000 மரங்களை நடுவான் எண்ட நம்பிக்கை சனிக்கிழமை சாமியாருக்கு இருக்கிறது.

இதற்கு குட்டிச்சாமியாரின் அம்மா (ஆதீனம்) முழுச்சம்மதம் குடுத்திருக்கிறா.ஏனெண்டால் அவாதானே நிதி அமைச்சர்.

உப்பிடித்தான் போன கிழமை ஒரு கலியாணவீடு.

முதல் நாள் இரவு சனிக்கிழமைசாமியார் பிக்பொஸ் பாத்துக்கொண்டிருந்தார்.

" இஞ்ச உந்த கோதாரியை பாக்குறதை விட்டுப்போட்டு என்ர சாறியை ஒருக்கா பிளீட்ஸ் பிடிச்சு அயின் பண்ணி வையுங்கோ" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிக்பொஸ் நிகழ்ச்சியில் செரின் கட்டின சாறியை ஆவெண்டு பாத்துக்கொண்டிருந்த சாமியாருக்கு இது ஒரு தண்டனை.

மனிசிமாரின் சாறியை அயின் பண்ணாத புருசன்மார் உலகத்தில் இல்லை. சாமியாரும் விதிவிலக்கல்ல!

"எந்த சாறியை அயின் பண்ணுறது?" 

"நீலக்கலர் சாறி இருக்கு . அதை எடுத்து அயின் பண்ணுங்கோ"

சாமியார் ரண்டு சூட்கேஸுகளையும் கிண்டிக்கிழறி அதுக்குள்ள நீந்தி ஒருமாதிரி நீலக்கலர் சாறியை கண்டெடுத்தார். 

அந்தச்சாறியை நெஞ்சோட அணைச்சு எடுத்து வந்து அயின் பண்ணிக்கொண்டிருக்கும் போது;

"எதை அயின் பண்ணுறியள்? என்னைக்கேக்கத்தெரியாதே! உந்த நீலம் இல்லை. மற்ற நீலம். மயில் டிசைனில இருக்கு"

"ஏன் இதுக்கென்ன குறை?" சாமியாருக்கு ஆத்திரம் வந்தது.

"உந்த நீலம் போனமாதம் மோகன் அண்ணைவீட்டு பிறந்தநாளுக்கு கட்டினது. அது கூட நினைவில்லை. என்னைப்பாக்காமல் வாற ஆக்களின்ர வாயைப்பாத்தால் உப்பிடித்தான்!"

எந்த எந்த நிகழ்வுக்கு மனிசி என்ன கலர் சாறி கடினவள் எண்டதை 38 வயதிலயும் ஞாபகம் வைச்சிருக்கவேணும். இல்லையோ வீண் பிரச்சினைகள் வரும்.

"மோகண்ணையின் பிறந்தநாளுக்கு வந்த சனம் இங்க வராது. அதையே கட்டுமன். உனக்கு இந்த நீலம் வடிவா இருக்கும்"
ஆதினத்துக்கு என்ன கலர் சாறி கட்டினாலும் வடிவுதான்.அதை சாமியார் வெளிப்படையாக மனிசிக்கு சொல்வதில்லை.சொல்லோணும் நினைப்பார் அதுக்குள்ள ஏதேனும் கொழுவல் வந்திடும்.
உப்பிடித்தான் ஒரு நாள் சாமியார் வாய் தடுமாறி ஒருபேரைச்சொல்லி ;
"அவாவை விட நீ வடிவு " எண்டார்.

"அப்ப அந்த கலியாணவீட்டில் நீங்கள் என்னைப்பாக்குறதை விட்டிட்டு அவாவைத்தான் பாத்தனியளோ?" எண்ட குதர்க்கமான கேள்விக்கு சாமியார் என்ன பதிலைச்சொல்ல???

"இந்த நீலம் உன்ர கலருக்கு எடுப்பா இருக்கும்"!
சாமியார் அயின் பண்ணுற பஞ்சியில் கெஞ்சினார்.

"அந்த சாறியோட நிண்ட போட்டோவை பேஸ்புக்கில போட்டாச்சு. எல்லாரும் பாத்திருப்பினம். இனி அது கட்டேலாது"

வெளிக்கிட்டுப்போட்டு பூமரத்துக்கு முன்னால நிண்டு போட்டோ எடுங்கோ எண்டு அரிகண்டப்பிடிச்சு அதை பேஸ்புக்கில போடவேணும். அது பெண்களின் நவீன சம்பிரதாயங்களில் ஒண்டு.

போட்டோ எடுத்துப்போட்டு உடன காட்டவேணும். பிழையெண்டால் திருப்ப திருப்ப எடுக்கவேணும்.அதுக்கு புருசன்மாருக்கு நிறைய பொறுமை வேணும். கலியாண கட்டினால் அது தன்னால வரும். வராட்டிலும் வரப்பண்ணிப்போடுவாகள்!!!

"இஞ்ச ஒண்டில் பெடியை வெளிக்கிடுத்துங்கோ. அல்லது நான் வெளிக்கிடுகிறதுக்கு உதவி செய்யுங்கோ"

சாமியார் வெளிக்கிடுவதைப்பற்றி சமூகம் கவலைப்படுவது மாதிரி தெரியவில்லை. சுயநலம் பிடிச்ச சமூகம் எங்கட சமூகம்.

"குந்தியிருந்து பிளிற்சை வடிவா லைனா பிடிச்சு விடுங்கோ. சீமானுக்கு ஏன் குனிய ஏலாமல் இருக்கோ?"

என்னதான் வீரமா நெஞ்சை நிமித்தி மேடையில் பேசுற சீமானும் மனிசியின்ர காலடியில் குனிஞ்சு இருந்துதான் பிளிற்ஸ் பிடிக்கவேணும்.

"தப்புறதுக்கு வாய்ப்பில்லை ராசா!"

ஒரு மாதிரி கஸ்ரப்பட்டு பிளிற்சைப்பிடிச்சு ....அப்பாடா முடிஞ்சுது எண்டு எழும்பினால்;

அடுத்தது.....

"இஞ்சை இந்த நெக்கிளசை கொழுவி விடுங்கோ"

"இந்த தோட்டு சுரையை பூட்டி விடுங்கோ"

"இந்த பிளவுசின்ர நூலை வடிவா ஸ்ரைலா பின்னால கட்டி விடுங்கோ"

"இந்த தொங்கலை வடிவா ஊசியால குத்தி விடுங்கோ"

ஊசி குத்தும் போது சாமியாருக்கு கை நடுக்கத்தில் முதுகில் சாதுவா குத்திப்போட்டார்.

"எனக்கு தெரியும் வேணுமண்டுதான் குத்தினனியள்.போங்கோ போய் பேஸ்புக்கை நோண்டுங்கோ. நான் என்ர பாட்டில வெளிக்கிடுறன்"

எல்லாம் செய்து முடிச்சாப்பிறகு இந்த ஏச்சையும் கேட்டுக்கொண்டு பேசாமல் போகவேணும்.

திருப்பி கதைச்சியள் எண்டால் சீலையை உரிஞ்சு எறிஞ்சுபோடுங்கள்.

பிறகு கலியாணவீடும் இல்லை.பெடியளோட சேந்து தண்ணி அடிக்கவும் ஏலாது.பம்பல் அடிக்கவும் ஏலாது.

பொறுமை... பொறுமை முக்கியம் ஆண்களே!

ஆ...ஆ....ஆண் நெடில் !!!

"எனக்கு என்ன உடுப்பு?" சாமியார் குழந்தைபெடி போல கேட்டார்.

"நல்ல ஒரு வேட்டியும் சேட்டையும் போடுங்கோ. எனக்கு மச்சிங்கா போடுங்கோ"

"நீலச்சேட்டு ஒண்டுதானே கிடக்கு. போன முறை ஊருக்கு போகயுக்குள்ள வாங்கினது. அதையே போடுறது?"
சாமியார் தெளிவுபடுத்திக்கொண்டார்.

"ஏன் அதைப்போட்டால் என்ன? இளந்தாரி எண்ட நினைப்போ? ஆரைப்பாக்க வாறியள்?"

தாங்கள் மட்டும் ஒருக்கா போட்டதை பிறகு போடமாட்டினம். ஆனால் ஆம்பிளைகள் மட்டும் வருசக்கணக்கா போடவேணும்.

காலக்கொடுமை.

1000 சீமான் வந்தாலும் இந்த பொம்பிளைகள் திருந்த வாய்ப்பில்லை ராசா!!!

எல்லாம் முடிச்சு வெளிக்கிடும் போதுதான் பொடியன் கக்கா போவான்.

"இஞ்சை அவனை ஒருக்கா கழுவுங்கோ.என்ர சாறி நனைஞ்சிடும்"

கட்டின வேட்டியை அவுத்துப்போட்டு யட்டியோட நிப்பார் சாமியார்.
வேட்டி நனைஞ்சுபோடும்.

நப்பியோட நிக்கிற பொடியனை தூக்கி குண்டியை கழுவி திரும்பவும் அவனுக்கு உடுப்புகளை போட்டார் சாமியார்.

"இவ்வளவு நேரமும் வெளிக்கிடாமல் யட்டியோட என்னத்துக்கு அலையுறியள்?"

சாமியார் வேட்டி கட்டி முதல்ல வெளிக்கிட்டு நிண்டதை குறும்படம் போட்டா காட்டமுடியும்?

"காரை ஓடுங்கோ. வரயுக்குள்ள நான் தானே ஓடவேணும்!" 

ஏதோ சிறிலங்கன் பிளைட்டை ஓடுறமாதிரி ஒரு பில்டப்.

எல்லாம் முடிச்சு காரை கறாஜ்ஜுக்குள்ள இருந்து வெளியில எடுக்கும் போதுதான் ஞானம்பிறந்தமாதிரி ஒண்டு கேப்பினம்.

"என்வலப் இருக்கோ?"

"இல்லை போகயுக்குள்ள கடையில வாங்குவம்"

"இஞ்ச நான் வேட்டியோட நிக்கிறன். கடையுக்குள்ள போனால் வெள்ளைக்காரங்கள் நக்கலா பாப்பாங்கள். நீ இறங்கிப்போய் வாங்கி வாறியா" 

"என்னால இறங்கேலாது. சாறி மடிப்பு குலைஞ்சுபோடும். பிள்ளை அழுவான். நீங்கள் போங்கோ"

சாமியார் இறங்கி சுப்பர் மார்க்கெட்டில் உள்ள கடையுக்குள்ள போனால் கடையுக்குள்ள நிக்கிறவன் எல்லாரும் விநோதமாக பாப்பாங்கள்.

இருந்தாலும் சாமியார் மீசையை முறுக்கிக்கொண்டு ஒரு கையால ஒரு பக்கத்து வேட்டி தலைப்பை தூக்கிகொண்டு விசய் சேதுபதி மாதிரி நடந்து போய் 1$ இக்கு "என்வலப்" வாங்குற அழகே தனி!!!

அண்டைக்கு உப்பிடித்தான் சாமியார் கம்பீரமாக நடந்து போய் என்வலப் வாங்கிக்கொண்டு வந்து ;
கவுண்டரில் நிண்ட வெள்ளைக்காரியிட்ட நீட்டி காசைக்குடுத்து வாங்கிக்கொண்டு வெளிக்கிடும் போது;
சாமியாரைப்பாத்து சிரிச்சுப்போட்டு ஒண்டு சொன்னாள்.

சாமியாருக்கு சீ ... எண்டு போட்டுது.

விசய் சேதுபதி வேதாளத்தில் கம்பீரமாக வேட்டியோடு நடந்து வந்து சீரியசா பேசும் போது வேட்டி கழண்டு கீழ விழுந்தா எப்பிடி இருக்கும்.

அதுபோல எண்டு வையுங்கோவன்.

வெள்ளைக்காரி என்ன சொன்னவள் எண்டு கேளுங்கோவன்?

"Man i like your saree"

என்னதான் கலியாணம் கட்டின பொடியள் மீசையை முறுக்கி வேட்டியை கட்டினாலும் அது மனிசிமாரின் சீலை போலத்தான் இருக்கும் எண்ட "வாழ்க்கைத்தத்துவம்" வெள்ளைக்காரனுக்கு தெரிஞ்சிருக்கு.

#சனிக்கிழமைசாமியார்

சனிக்கிழமைசாமியாரும் கொமுனிக்கேசன் சிஸ்ரமும்!

1998!
அந்த நேரம் ஊரில கைத்தொலைபேசிகள் இல்லை.5G உம் இல்லை.சம்சுங்கும் இல்லை. ஆனாலும் எங்கட தொழில்நுட்பங்கள் பனையின்ர வட்டை விட உயரமாகவே இருந்தன.

உதாரணத்துக்கு சனிக்கிழமைசாமியார் ரியூசனுக்கு "கட்" அடிச்சுப்போட்டு ஓராங்கட்டை சந்தியில உள்ள பிரியா தியேட்டரில் படம் பார்ப்பார். படம் முடிஞ்சு வெளியில வர வாசலில சாமியாரின் தேப்பன் பூவரசம் தடியோட நிப்பார்.
அப்பிடி ஒரு வேகமான "கொமுனிக்கேசன் சிஸ்ரம்" எங்கட ஊரில இருந்தது.

இன்னும் ஒரு உதாரணம் சொல்லுறன்.
சனிக்கிழமைசாமியார் A/L உயர்தரம் படிக்கும் போது சாமியாரின் நாலாவது ஆள் O/L படிச்சவா. சனிக்கிழமை சாமியாருக்கும் அவரின் நண்பனுக்கும் கொடுக்கப்பட்ட வேலை என்னண்டால்;

அந்த பிள்ளையை பத்திரமா வீட்டு படலையடியில இருந்து கூட்டிக்கொண்டே ரியூசன் வாசலில விடுவதும்;
பிறகு ரியூசன் முடிய அலுங்காமல் குலுங்காமல் திரும்பவும் அந்த பிள்ளையின் வீட்டு வாசலில கொண்டே விடுவது. இந்த வேலையை சாமியாரும் சாமியாரின் நண்பனும் ஒரு நாள்கூட "சிக் லீவு" எடுக்காமல் ஒரு வருசமாக செய்தார்கள்.

உப்பிடித்தான் ஒருநாள் சாமியாருக்கு உசுப்பேறி அந்தப்பிள்ளையை ஒரு ஒழுங்கையுக்குள்ள மடக்கி;
முடிவைக்கேட்டார்.
ஒழுங்கை தொங்கலில சனிக்கிழமை சாமியாரின் உயிர் நண்பன் காவல்.

"நான் அம்மாவைக்கேட்டுத்தான் முடிவு சொல்லுவன்" எண்டு அந்தப்பிள்ளை சொல்லி முடிச்சு தலைநிமிரமுதல் ;
ஒழுங்கை வாசலில அந்தப்பிள்ளையின் அம்மாவை ஏத்திக்கொண்டு மூத்தமச்சாள் வந்திட்டா.

மூத்தமச்சாள் எண்டு சொன்னது சனிக்கிழமை சாமியாரின் ஆளின்ர மூத்த அக்கா.அவாவுக்கு சனிக்கிழமைசாமியாரில் ஒரு விருப்பம் இருக்கு. விருப்பம் எண்டால் பிழையா விளங்கப்படாது.
தன்ர தங்கச்சியை சனிக்கிழமைசாமியார் போல ஒரு வடிவான பொடியனுக்கு கட்டிக்குடுக்க விருப்பம். அவ்வளவுதான்.

சுமார் 20 வருசம் கழிச்சு சனிக்கிழமைசாமியாரை முகநூலில் தேடிப்பிடிச்சு மூத்தமச்சாள் இந்த விசயத்தை சொன்னபோது சாமியார் உருகிப்போனார்.

சரி விசயத்துக்கு வருவம்.
சனிக்கிழமைசாமியாரின் ஆள் கொஞ்சம் வடிவான பெட்டை. பொதுவா வடிவான பெட்டை எண்டால் குறைஞ்சது நாலுபேரெண்டாலும் பின்னால சுத்துவாங்கள். சனிக்கிழமைசாமியார் தன் உயிர் நண்பனோடு அஞ்சாவதாகத்தான் சுத்துவார். ஆனால் சுத்தி முடிக்கும் போது முதலவதாக நிப்பார். அதுக்கு காரணம் சாமியாரின் ஆருயிர் நண்பன். சாமியாரை சைக்கிள் முன்னால இருத்தி நாய் மாதிரி மூசி மூசி ஓடுவான்.குச்சொழுங்கை, கிறவல், மண்றோட்டு , பள்ளம், திட்டி எண்டு பாராமல் அவன் ஓடிய ஓட்டம் தான் இண்டைக்கும் சாமியாரின் விடாமுயற்சிக்கு ஊன்றுகோல்.

பதிலுக்கு சாமியாரும் நண்பனுக்காக பருத்தித்துறையில் இருந்து தொண்டைமானாறு, கெருடாவில், உடுப்பிட்டி, கரணவாய்க்கு தேயத்தேய நண்பனை சைக்கிளில் ஏத்திக்கொண்டு ஓடியிருக்கிறார்.

சனிக்கிழமைசாமியார் ஒரு அசட்டுத்துணிச்சலில் பெட்டையை ஒழுங்கையுக்குள்ள மடக்கி முடிவை கேக்கும் நேரத்தில் ஆரோ ஒரு வில்லன் இந்த விசயத்தை வலு வேகமாக அந்தப்பிள்ளையின் வீட்டில சொல்லிப்போட்டான்.

பிற்காலத்தில் நடந்த பல காட்டிக்கொடுப்பு, துரோகம் போன்ற பெரிய குற்றச்செயல்களுக்கு இதுதான் ஆரம்பம் எண்டும் சொல்லலாம்.

SMS ஐ விட வேகமாக அந்தக்காலத்தில் செய்திகள் பரப்பப்பட்டுவிடும்.

மந்திகையில் இந்தியன் ஆமிக்காரன் றோந்தில வாறான் எண்டுறது 2 நிமிசத்தில  மெத்தைக்கடை சந்தியில் உள்ள இயக்கப்பொடியளுக்கு தெரிஞ்சிடும்.

கதையோட கதையா ஒழுங்கை வாசலில காதலுக்கு காவல்  நிண்ட சனிக்கிழமைசாமியாரின் நண்பனை மறந்திட்டம் பாருங்கோ!

ஒழுங்கை வாசலில சென்றியில காவலுக்கு நிண்ட நண்பனின் AK 74 ஐத்தாண்டி எப்பிடி மூத்தமச்சாளும் மாமியும் வந்தவை எண்டு சாமியார் குழம்பிட்டார்.

மாமி எண்டு சொன்னது சாமியாரின் ஆளின்ர அம்மா. காதலிச்ச பிள்ளையை கட்டுறமோ இல்லையோ சாகும்வரைக்கும் ஒரு சோட்டைக்கு மாமி, மாமா, மச்சான்,மச்சாள் என்ற உறவு முறைகளை சொல்லிக்கூப்பிடுவதில் ஒரு தனிச்சுகம்.

ஆமிக்காரன்ர றவுண்டப்பில் ஆப்பிட்ட ஆளைப்போல பதறிப்போய் தன் ஆருயிர் நண்பனைத்தேடினார் சாமியார்.

ஒழுங்கை வாசலில ஆள் இல்லை.

ஒரு மாதிரி மூத்தமச்சாள் பாவப்பட்டு சனிக்கிழமைசாமியாரை பிணை எடுத்து விட்டார். அண்டைக்கு மட்டும் மூத்தமச்சாள் வந்திருக்காவிட்டால் நிச்சயம் சனிக்கிழமைசாமியாரின் கன்னத்தில் மாமி குடுத்திருப்பா. அதாவது சனிக்கிழமை சாமியாருக்கு கன்னத்தில அடி விழுந்திருக்கும்.

அவமானத்தில் கூனிக்குறுகி ஒழுங்கை வாசலில் நிண்டு தன் நண்பனைத்தேடினார் சாமியார். ஒழுங்கை வாசலில் சைக்கிள் மல்லாக்காய் கிடந்தது. நண்பனைக்காணவில்லை!

ஒழுங்கையின் எதிர்ப்பக்கத்தில் உள்ள பனம் காணிக்குள் இருந்து வந்தான் நண்பன். வரும்போது தன்னுடைய காச்சட்டையின் "சிப்பை" சரிசெய்துகொண்டு வந்தான்.

"மச்சான் என்ன முடிஞ்சுதா? என்னவாம் ஆள். ஓமண்டுட்டாளோ?" 
நண்பனின் கேள்விக்கு சாமியாரின் பதில் என்ன பாசையில் இருந்திருக்கும் என்பதை உங்களின் ஊகத்துக்கே விடுவம்.

சனிக்கிழமைசாமியாரை ஏத்திக்கொண்டு சைக்கிள் பருத்தித்துறை றோட்டால் தும்பளைக்கு பயணமானது. அவ்வளவு நேரமும் ஒழுங்காய் ஓடின சைக்கிள் செயின் "கிறீச் கிறீச்" எண்டு சோக கீதம் இசைத்தது.

மாமி கேட்ட கேள்வி ஒண்டு சாமியாரின் இதயத்தில் சாக்கு தைக்கிற ஊசியால குத்தின மாதிரி ஒரு வலி!

வீட்டுக்குப்போன சாமியார் கிணத்தடியில போய் நிண்டு அள்ளி முழுகினார். முழுகும் போது அவமானத்திலும் தோல்வியிலும் சாமியரின் கண்ணில் இருந்து கண்ணீர்த்துளிகள் "லக்ஸ்" சோப்போடு கழுவுப்பட்டு போயின.

அம்மாவின் சோட்டியால் தலையை உணத்திப்போட்டு அப்பாவின் சாரத்தை கட்டினார் சாமியார். 
கொடியில் கிடந்த அண்ணாவின் சேட்டைப்போட்டுக்கொண்டு றேடியோவில் சோகப்பாட்டை போட்டு கேட்டபடி விறாந்தையில் இருந்தார் சாமியார்.

"அந்தப்பிள்ளையில எங்களுக்கும் விருப்பம் தான். ஆனால் அதுகளுக்கும் எங்களுக்கும் ஒத்துவராது. பேசாமல் துரையன் மாமாவின்ர அகிலாவைப்பார். அவளின்ர வடிவுக்கு ஒருத்தரும் கிட்ட நிக்காயினம்"

அம்மா குசினியுகுள்ள இருந்து புறுபுறுத்தது சாமியாரின் காதுகளுக்கு பனிகாலத்தில் புலிகளின் குரல் செய்திகள் கிளியராய் கேப்பது போல கேட்டது.

சம்பவம் நடந்து அரை மணித்தியாலத்துக்குள்ள சனிக்கிழமைசாமியாரின் அம்மாவின் காதில போடும் அளவுக்கு அந்த நேரம் எங்கட "கொமுனிக்கேசன் சிஸ்ரம்" வலு வேகமாத்தான் இருந்தது. உந்த 5G எல்லாம் அப்ப இல்லை எண்டதை நினைவில் வைச்சுக்கொள்ளுங்கோ!

சரி உதைவிடுவம். சனிக்கிழமை சாமியாரின் அம்மா சொன்ன துரையன் மாமாவின் மகளைத்தேடி சாமியார் போனாரா? இல்லையா? என்பதை அடுத்த கிழமை பாப்பம்.

#சனிக்கிழமைசாமியார்

சனிக்கிழமைசாமியாரும் "றாணி சோப்பும்"!

கிட்டத்தட்ட பத்து வருசத்துக்கு பிறகு "றாணி" சோப்பில ஒரு குளிப்பு!

ஊரில முந்தி கிணத்தடியில அள்ளி முழுகிப்போட்டு றாணி சோப்பை காகம் எடுக்காமல்;

கிணத்துவேலி கிடுகுக்குள்ள ஒழிச்சுவைப்பம்.

(ஆனால் இப்ப ஊரில காகங்கள் சோப்பை எடுப்பதில்லை. காகங்கள் இப்ப களவெடுப்பதில்லை)

பள்ளிக்கூடத்துக்கு "றாணி" சோப்பு குளிச்சுப்போட்டு வாற பெட்டைகளின்  வாசம் சும்மா  சுண்டி இழுக்கும்!

என்னதான் "சோப்பு" வந்தாலும் றாணி சோப்பு வாசம் ஒரு தனிரகம்!

அம்மாவாணை புழுகையில்லை. ஒருக்கா வாங்கி குளிச்சுப்பாருங்கோ. 

வெளிநாட்டில இருக்கிற எனக்கு ஊர்வாசம் வீடுமுழுக்க மணக்குறமாதிரி ஒரு "பீலிங்" ;-)

அதுகும் கிணத்தடியில் வாளியால அள்ளி குளிக்கிறது வேற லெவல் "சொர்க்கம்"!

கிணத்தடியும் வாளியும் பாக்க இன்னும் ஒரு வருசம் ஆகும் போல கிடக்கு.

அதனால " சோட்டைக்கு" இண்டைக்கு "றாணி சோப்" குளியல்!

#சனிக்கிழமைசாமியார்

♥️மெல்பேர்ண் எயாப்போட்டில் சனிக்கிழமைசாமியார்

சாமியாரின் நண்பன் ஒருத்தன் குடும்பத்தோட ஊருக்கு போயிருந்தான். திரும்பி வரும் போது அவனை ஏத்துவதற்காக போயிருந்தார்.

பின்னேரம் 3:30 இக்குத்தான் கொழும்பு - மெல்பேர்ண் சிறிலங்கா ஏயார்லைன்ஸ் வரும்.

சாமியார் கொஞ்சம் நேரத்தோட போய் arrival இடத்தில உள்ள கதிரையில் காவல் இருந்தார்.

பக்கத்தில இன்னும் கொஞ்ச எங்கட ஆக்கள் ஆளும்பேருமா வந்து இருந்தினம். சாமியார் ஒரு சிரிப்பை சிரிச்சுப்போட்டு போனை நோண்டத்தொடங்கினார்.

“மன்னார் புதைகுழி முடிவுகள் தமிழருக்கு ஆச்சரியத்தை கொடுக்கும். சுமந்திரனின் தீர்க்கதரிசனம் உண்மையானது”

“வரவு செலவு திட்டத்தை நிபந்தனையின்றி கூட்டமைப்பு ஆதரிக்கும்”

“திருமணமான 3 பிள்ளைகளின் தாயிடம் 60 லச்சத்தை பறிகொடுத்தார் ஜேர்மன் தமிழ் மைனர்”

இப்படி பல விநோதமான செய்திகள் முகப்புத்தகத்தில் உலாவின.

பக்கத்தில் இருந்த எங்கட ஆக்களின் ஆரவாரம் பெரிய ஆரவாரம்!

“போட்டோக்காரன் வந்திட்டானா?”
“ஒரு பூச்செண்டு காணுமோ இன்னும் ரண்டு வாங்கவோ மச்சான்?”
“மச்சான் நாலு காரும் ஒண்டாப்போவம். ஒருத்தனையும் இடையில பூர விடாத!”
“வீட்ட போனதும் ஆராத்தி ரெடி பண்ணவேணும்!”
“வாற சனி இரவு எயாப்போட்டுக்கு ஏத்த வந்த ஆக்களுக்கு பாட்டி”

இந்தக்கதைகள் சாமியாரின் இடக்காதுக்குள் பூந்து வலக்காதுக்குள்ளால போய்க்கொண்டிருந்தன.

சாமியாரின் புலன்விசாரணையின் அடிப்படையில் ஊரில இருந்து புதுசா “பொம்பிளை” இண்டைக்கு அவுஸ்திரேலியாவுக்கு வந்து இறங்கப்போகுது என்பது தெரிந்தது.

வந்திறங்கும் வாசலில் (departure gate) பூட்டப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டிக்கு அருகில் ரண்டுபேர் போய் நிண்டு ஆள் வாறவோ எண்டு பாத்துக்கொண்டிருந்தார்கள்.

மாப்பிளைக்கு ஊரில் இருந்து தொலைபேசி அழைப்பு மேல் அழைப்பு.

“ஓம் மாமி பிளேன் இறங்கிட்டுது. சனம் வெளியில வந்துகொண்டிருக்குது. கறுத்த ஜக்கெட் தானே போட்டுக்கொண்டு வந்தவள். ஒரு பிரச்சினையும் இல்லை”

“10 கிலோ மிளகாய்த்தூளும் கருவாடும் குடுத்து விட்டவையாம். எப்பிடியும் நாய் மணந்து பிடிச்சிருக்கும். கொண்டுவந்த எல்லா சாமானும் கிழறித்தான் விடுவாங்கள். கொஞ்சம் லேட் ஆகும்”

மாப்பிளை பரபரப்பா அங்கும் இங்கும் ஓடித்திரிஞ்சார்.

அதுக்கிடையில் போட்டோக்காரன் வந்திட்டான். போட்டோக்காரன் சும்மா ஏன் நிப்பான் எண்டு அங்க நிண்ட சனத்தை போட்டோ எடுக்கத்தொடங்கினார். 

“அண்ணை காரில டக்கெண்டு ஏறிப்போகவேண்டாம். கொஞ்ச நேரம் காருக்கு பக்கத்தில நில்லுங்கோ. போட்டோ எடுத்திட்டு போவம்”
போட்டோக்காரன் “லொக்கேசன்” சொன்னான்.

மாப்பிளை புது மனிசியை ஏத்த புதுக்கார் வாங்கியிருக்கிறார்.எப்பிடியும் அந்த கார் லோன் கட்டி முடிய நாலு வருசம் ஆகலாம்.

“புதுமனிசியை புதுக்காரில தான் ஏத்தவேணும” எண்டு ;
கூட இருந்த பொடியள் உசுப்பேத்தி இருப்பாங்கள். அதைக்கேட்டு பொடியனும் லோனில கார் வாங்கியிருப்பான்.

“மாப்பிளை என்ர மோளை புதுக்காரிலதான் எயாப்போட்டில வந்து ஏத்தினவர்” எண்டு மாப்பிளையின் மாமா கோப்பிறேசனில் புளிச்ச கள்ளை குடிச்சபடி புழுகியிருப்பார் என்பது சாமியாரின் ஞானக்கண்ணுக்கு தெரிந்தது.

திடீரெண்டு ஒரு சின்னப்பிள்ளை துள்ளிக்குதிச்சு கத்தியது.
“அந்தா அன்ரி வாறா மாமா”

சனம் எல்லாம் எழும்பி வாற வாசலுக்கு ஓடியது.மாப்பிளையும் பின்னால ஓடினார்.

மாப்பிளை புது மனிசியை பாக்குற அந்தரத்தில வாங்கின பூச்செண்டை சாமியாரின் கதிரைக்கு கொஞ்சம் அங்கால மறந்து போய் வைச்சிட்டு ஓடினார்.

சாமியார் அந்தப்பூச்செண்டை எடுத்துக்கொண்டு அதை மாப்பிளையிடம் கொடுக்க பின்னால ஓடினார்.

அதுக்கிடையில் ஒரே ஆரவாரம்!!!

வந்த பிள்ளையை சுத்தி சனம். கைகுடுப்பதும் கட்டிப்பிடிச்சு கொஞ்சுவதுமாய் ஒரே களோபரமா கிடந்தது. மாப்பிளையை கிட்டயும் விடயில்லை. வந்த பிள்ளை பாவமாக பேந்தப்பேந்த முளிச்சுக்கொண்டு தன்ர புருசனை தேடுகிறது.

கோதாரிவிழுந்த கல் நெஞ்சக்கார சனம் புது மாப்பிளையை மனிசிக்கு கிட்ட விடுகுது இல்லை.

சாமியார் எப்பிடியும் பூச்செண்டை அந்த பொடியனிடம் குடுக்க முயற்சிசெய்தார். சனம் விட்டால்த்தானே!

“அண்ணை ... இடிக்காதையுங்கோ. நாங்கள் முதல் வந்தனாங்கள். போட்டோ எடுத்துட்டு விடுறம். பிறகு பூச்செண்டை குடுங்கோ”

ஒரு குண்டு மனிசி சாமியாரைப்பர்த்து கொஞ்சம் கோபத்தோடு சொன்னா.

அடப்பாவிகளா சும்மா வந்த சாமியாரை உங்கட கூட்டத்தோடு சேத்திட்டியளே!!!

போட்டோக்காரன் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தான். 

கடைசியா ஒருமாதிரி மாப்பிளையை பொம்பிளையோடு சேர விட்டிட்டாங்கள்.

பிள்ளை டக்கெண்டு பொடியனின் கையை இறுக்கிப்பிடிச்சுக்கொண்டு அவன்ர முகத்தை பார்த்தது.

“இந்த சனத்திட்ட இருந்து என்னை காப்பாத்தி கூட்டிக்கொண்டு போ” எண்டு அந்தப்பிள்ளை மனசுக்குள் நினைச்சது மாப்பிளைக்கு கேட்டுதோ இல்லையோ சாமியாருக்கு கேட்டது.

அவுஸ்திரேலியா எண்டு கனவோட வந்த பிள்ளைக்கு விமான நிலையத்தில் வைச்சே எங்கட சனம் செய்யுற அலப்பறைகள் அந்த பிள்ளைக்கு மனதில் பயத்தை ஏற்படுத்தியிருக்கும்.

“தனக்கு இவ்வளவு ஆக்கள் வெளிநாட்டில இருக்கினம்” எண்டு காட்ட ஒரு பந்தாவுக்கு மாப்பிளை செய்த ஒரு “செட்டப்” தான் இது!

“இஞ்சை எல்லாரும் கையை தூக்கி ரண்டு விரலை காட்டுங்கோ. பேஸ்புக் லைவ் போகுது” ஒருத்தன் கத்தினான்.

அவர்களோடு சேர்ந்து சாமியாரும் கையை தூக்கி விரலை காட்டினார். 

“கறுத்தசட்டை போட்ட அண்ணை ஒருவிரல் இல்லை. ரண்டு விரல்”

சத்தியமா சாமியாரின் காதுக்கு ரண்டு விரலை காட்டச்சொன்னது கேக்கவேயில்லை.என்னத்துக்கு ரண்டு விரலை தூக்கி காட்டவேணும் என்பதும் இண்டுவரை சாமியாருக்கு தெரியவே தெரியாது.

சனத்தை விலத்தி ஒருமாதிரி மாப்பிளை பொம்பிளையிடம் வந்து சேர்ந்தார் சாமியார்.

“தம்பி ... உங்கட பூச்செண்டை மறந்து....”
சாமியார் சொல்லிமுடிக்க முதல் போட்டோக்காரன் கத்தினான்.

“அண்ணை கிட்ட நில்லுங்கோ  பூச்செண்டை பிள்ளையிட்ட மெதுவா குடுங்கோ”

சாமியார் திகைச்சுப்போனார். 

சாமியாரையும் அந்த சனக்கூட்டத்தில் ஒராள் எண்டு போட்டோக்காரன் தப்பா நினைச்சிட்டான்.

சாமியார் வழியில்லாமல் பூச்செண்டை மாப்பிளையிடம் கொடுக்க...

“அண்ணை அவாட்ட குடுங்கோ” என்றார் மாப்பிளை.

சாமியார் பூச்செண்டை புதுசா வந்த பிள்ளையிடம் கொடுத்தார். அதுவரை நேரமும் பேந்தப்பேந்த முளிச்ச பிள்ளையின் முகத்தில் ஒரு “மலர்ச்சி”!!!

“அண்ணா நன்றி. நீங்கள் தானே சனிக்கிழமைசாமியார்” 

பிள்ளை சிரிச்சபடி சாமியாருக்கு நன்றி சொன்னது.

“இவரை முதலே உனக்கு தெரியுமா?”
மாப்பிளை ஆச்சரியத்தோடு பிள்ளையிடம் கேட்டார்.

“என்ர பேஸ்புக்கில இருக்கிறார்.நல்லா எழுதுவார்” எண்டது பிள்ளை.

“அண்ணை விலத்துங்கோ. அடுத்த ஆக்கள் வாங்கோ” மீண்டும் போட்டோக்காரன் கத்தத்தொடங்கினான்.

சாமியார் வந்த அலுவலை மறந்து இதுக்குள்ள செருகுப்பட்டு நிண்டதால ஊரில இருந்து வரும் நண்பனை மறந்துவிட்டார்.

ஏற்கனவே நண்பன் வந்து இந்த “கூத்துகளை” பாத்துக்கொண்டு நிண்டான்.

சாமியார் நண்பனிடம் ஓடிப்போய் மன்னிப்பு கேட்டுவிட்டு அவனின் பயணப்பொதிகளை வாங்கி தள்ளிக்கொண்டு நடந்தார்.

“மச்சான் நீ என்னை ஏத்த வந்தனியோ அல்லது அவைக்கு பூச்செண்டு குடுக்கவந்தனியோ? உண்மையை சொல்லு”
நண்பன் கேட்ட கேள்வியால் சாமியார் ஒருகணம் ஆடிப்போனார்.

“இல்லை மச்சான் சத்தியமா உன்னைத்தான்ரா ஏத்த வந்தனான். அது பெரிய கதை. போகேக்குள்ள காரில சொல்லுறன்” என்றார் சாமியார்.

கடைசியாய் ஒருமுறை சாமியார் திரும்பிப்பார்த்தார். ஆரவாரம் இன்னும் முடியவில்லை. கமெரா flash ஒளித்துக்கொண்டேயிருந்தது.

பாவம் “அந்தப்பிள்ளை”!!!!

#சனிக்கிழமைசாமியார்

☢️சனிக்கிழமை சாமியாரும் லொசுலியாவின்ர தேப்பனும்

"பெரிய முதலாளி bigboss" நிகழ்ச்சியில் எங்கட கிளிநொச்சிப்பெட்டை ஒண்டு பங்குபற்றுவது எல்லாருக்கும் தெரியும்.

சாமியார் பெரிய முதலாளி நிகழ்ச்சியை முதலாம் நாள் தொடக்கம் பாக்குறார்.

சாமியாருக்கு வேலை வெட்டி இல்லை எண்டோ அல்லது விசர் எண்டோ சிலர் நினைக்கலாம்.நினைச்சால் நினைச்சுப்போட்டு போங்கோ.

சாமியாருக்கு இருக்கிற தலையிடிக்கு பெரிய முதலாளி நிகழ்ச்சிதான் பனடோல்.

ஆரம்பத்தில் சாமியாருக்கு ரேஸ்மா மீது ஒரு கண். பிறகு அவள் போக அபிராமி மேல சாமியாருக்கு ஒரு "இது" வந்திட்டுது. பிறகு அவள் ஒரு மாதிரி விசர்க்கூத்தாட சாமியாருக்கு "கடுப்பாகிவிட்டது"!

பிறகு வேற வழியில்லாமல் கவின்ர ரண்டாவது " செற்றப்"சாக்சிக்கு பின்னால திரிஞ்சார்  சாமியார்.

சாக்சி "தம்" அடிக்கிறாள் எண்டு அறிஞ்சதும் சாமியார் சத்தம் போடாமல் செரினுக்கு பின்னால போனவர். இண்டுவரை சாமியார் செரினைத்தான் முதலாவதா வைச்சிருக்கிறார்.

விசயகுமாற்ற மோள் வனிதாவின்ர பக்கம் சாமியார் எட்டிக்கூடப்பாத்ததில்லை. ஏனெண்டால் சாமியாருக்கு அது "செற்" ஆகாது. காரணம் வாற விசருக்கு சாமியார் கன்னத்தை பொத்தி வெளுத்துப்போடுவார்.

செரின் எப்ப சீலை கட்டினாளோ; அண்டைக்கு சாமியார் தடக்கி விழுந்தவர்தான் இன்னும் எழும்பயில்லை!

லொசுலியா மேல சாமியாருக்கு ஆரம்பத்தில ஒரு விருப்பம் இருந்தது உண்மை. ஆனால் எப்ப அந்தப்பெட்டை சிரிச்சுதோ அண்டைக்கு அதைப்பாத்து பயந்த சாமியார் அதுக்குப்பிறகு அந்தப்பக்கம் போறதில்லை.

மற்றது அவா கதைக்கிற கொழும்பு தங்லீசு டமிழைக்கேட்டு ஒரு நாள் சாமியாருக்கு கடுங்கோபம்.கையில  அம்பிட்டு இருந்தால் செவிட்டைப்பொத்தி ரண்டு போட்டிருப்பார்.

கவினைப்பற்றி எல்லாம் தெரிஞ்சபிறகுதான் இவா அவனுக்கு பின்னால போனவா. அவனைச்சொல்லி பிழையில்லை. இவாதான் அவன்ர குண்டிக்கு பின்னால திரியுறா!

கவினும் சேரனும் இல்லையெண்டால் பிள்ளை நாலாவது கிழமையே வெளியில போயிருப்பா. ஒரு கோதாரியும் இல்லை. தான் உள்ள இருக்கோணும் எண்டால் ஆரையும் ஒருத்தனைப்பிடிச்சால்த்தான் உள்ள இருக்கலாம் எண்டது வடிவா தெரிஞ்சுதான் உவா கவினுக்கு பின்னால போனவா.

சாமியாருக்கு தர்சனில சரியான விருப்பம். அவன் அப்பிடியே அச்சு அசல் எங்கட பொடியன். சாமியாருக்கு இருக்கும் அத்தனை குறும்பும் அவனிட்ட இருக்கு. சாமியார் தன்ர குணத்தை தர்சனில் பாக்குறார்.

கணக்காப்பாத்து செரினை மடக்கினான் பொடியன்.அங்க நிக்கிறாண்டா எங்கட யாழ்ப்பாணத்துப்பொடியன். ஒருத்தனும் கிட்ட நெருங்க ஏலாது எண்டு நினைச்ச செரினை மடக்கினதுதான் தர்சனின் கெட்டித்தனம். இருந்தாலும் பட்டும் படாமலும் கொண்டுபோறான் பொடியன்.அங்கதான் அவன்ர கெட்டித்தனம் இருக்கு. அவன் வெல்லுவான் எண்டு சாமியாரின் ஏழாம் அறிவு சொல்லுது.

சரி விசயத்துக்கு வருவம்.

லொஸ்லியான்ர தேப்பன் உள்ள வந்து கோவத்தில கத்தினவரல்லோ!

உப்பிடி கன கத்தலுகளை சாமியார் பாத்திருக்கிறார்.

உப்பிடித்தான் ஒருக்கால் சாமியாரும் அவற்ற சிநேகிதப்பொடியனும் வல்லிபுரக்கோயில்ல ஒரு பெட்டையை பாத்திட்டு பின்னால போனவை.

சொல்லகூடாது ஆள் நல்ல சிவப்பி. சாமியாருக்கு சிவத்த பெட்டையளைக்கண்ணில காட்டக்கூடாது. அதுக்கு ஒரு வலராறு இருக்கு. அது சொன்னால் பெரிய கதை.இப்ப அதைவிடுவம்.

சிவப்பியோட ஒரு கறுப்பி. கறுப்பி சாமியாரை ஓரக்கண்ணால பாத்ததால நண்பனுக்கு உதவிசெய்ய முடிவு செய்தார். சிவப்பி நண்பனுக்கு.கறுப்பி சாமியாருக்கு!

முதல்ல கடலைக்கொட்டை கடையில நிண்டு கச்சான் விலை கேட்டாளவை.ஆனால் வாங்கயில்லை. உடன நண்பன் ரண்டு கச்சான் பைக்கற்றும் மஞ்சள் கடலையும் வாங்கிக்குடுத்தான். வெக்கப்படுறமாதிரி வாங்கி திண்டாகள்.

பிறகு பூந்திக்கடைக்கு பக்கத்தில நிண்டு மண்டினாகள். இந்தமுறை சாமியார் பூந்தியும் தொதலும் வாங்கிக்குடுத்தார். அதையும் திண்டாகள்.

பிறகு றியோ கிறீம் கவுஸுக்குள்ள போனாகள். சாமியார் சொல்லியும் கேளாமல் நண்பன் உள்ள போனான்.

ரண்டு ஸ்பெசல் ஓடர் பண்ணினாகள்.
சாமியாரும் நண்பனும் வெறும் ஐஸ்கிறீம் ஓடர் பண்ணி சாப்பிட்டினம்.

சாமியார் அம்மாட்ட களவெடுத்து வந்த 150 ரூபா மண்ணாய்ப்போச்சு.

உப்பிடியே ரண்டுதரம் கோயிலைச்சுத்திப்போட்டு அச்சுவேலி போற பஸ்சில ஏறினாகள்.

சாமியார் வேண்டாம் வேண்டாம் எண்ட கொற கொற எண்டு சாமியாரை இழுத்து பஸ்சில ஏத்தினான் நண்பன்.

"அச்சுவேலி நாலு ரிக்கற்"

நண்பன் தன்ர காசில ரிக்கற் எடுத்தான்.

சிவப்பி இவனை விடுகிற மாதிரி இல்லை. ஒரே எறியல் தான்.
கறுப்பியும் சும்மா லேசுப்பட்ட ஆளில்லை.
சனத்தின்ர ஊட்டுக்குள்ளால சாமியாரைப்பாத்து கொடுப்புக்குள்ள சிரிச்சுக்கொண்டே இருந்தாள்.

"சிக்னல்" நல்லா வேலை செய்தாலும் சாமியாருக்கு ஒரு ஐமிச்சம். ஏனெண்டால் ஏற்கனவே சாமியார் உவகளின் ஜில்மாலுகளை அறிவார்.அவரின் முன்அனுபவங்கள் சாமியாரை எச்சரித்தன.

சாமியார் நண்பனுக்கு அறிவுரை சொன்னால் அவன் கேக்குற நிலையில இல்லை. காதல் மயக்கம். அதில வேற மினிபஸ்காரன் "இடைக்கால"  பாட்டுகளைப்போட்டு உசுப்பேத்தினான்.

மினிபஸ் நெல்லியடியில நிக்க அவகள் ரண்டுபேரும் இறங்கினாகள்.

"அநியாயம் அச்சுவேலிக்கு நாலு ரிக்கற்"

சாமியார் கொண்டக்டரிடம் மிச்சக்காசைக்கேட்டார். 

அவன் மிச்சக்காசை தாறதுக்கு இடையில நண்பன் சாமியாரை கொற இழுவையில கீழ இறக்கி அவகளுக்கு பின்னால நடந்தான்.

"மச்சான் உனக்கு மிச்சக்காசு முக்கியமா? கறுப்பி முக்கியமா" எண்டு ஒரு அறிவுபூர்வமான கேள்வியைக்கேட்டான்.

சாமியாருக்கு மிச்சக்காசுதான் முக்கியம்.
150 ரூபா காசை அம்மாட்ட இருந்து களவெடுக்கப்பட்ட பாடு அவருக்குத்தானே தெரியும்.

கொண்டக்டர் இதுதான் தாயம் எண்டு பஸ்ஸை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்.

கொடிகாம றோட்டால திரும்பி வாற இரண்டாவது வலப்பக்க ஒழுங்கையுள்ள இறங்கி நடந்தாளவை இரண்டுபேரும்.

"மச்சான் என்ன பேரெண்டு கேளன்" சாமியாரின் நண்பன் கெஞ்சினான்.

அவகளின் காதுக்கு அது கேட்டிருக்கவேணும்.

கறுப்பி சிவபியின்ர பேரைச்சொல்லி "கெதியா நடவடி" எண்டாள்.

கறிப்பியின்ர பேரை சிவப்பி சொல்லவேயில்லை.

முடக்கால திரும்பி நாலாவது வீட்டுக்குள்ள போனாகள்.

போகும் போது சிவப்பி திரும்பிப்பாத்து சிரிச்சாள்.

"மச்சான் ஆள் மடங்கிட்டுது" எண்டு நண்பன் குதூகலித்தான்.

கறுப்பி திரும்பி பாக்கவேயில்லை!

சரி காதல் கதைமுடிஞ்சுது எண்டு நினைப்பியள். இல்லை இனித்தான் கிளைமக்ஸ் இருக்கு.

வீட்டுக்கு பக்கத்தால சுடுதண்ணி குடிச்ச நாய் மாதிரி பதினெட்டு தரம் குறுக்காலும் மறுக்காலும் நடந்திருப்பம். உள்ள போனவகள் வரவேயில்லை.

கறுப்பியிர வீடா இல்லை சிவப்பியின்ர வீடா தெரியவில்லை!

"மச்சான் வா போவம். நாளைக்கு வருவம்" எண்டு சாமியார் கேட்டார்.

"மச்சான் ஒரே ஒருக்கால் பாத்திட்டுப்போவம்"  எண்டு ஒத்தைக்காலில நிண்டு கெஞ்சினான் நண்பன்.

திடீரெண்டு கறுப்பி வெளியில வந்து;
கேற்றைத்திறந்து வந்தாள்.

சாமியாரும் நண்பனும் எதிர்வீட்டு வேலியோட நிண்ட பூவரச நிழலில்  நிண்டிச்சினம்.

"உங்கட பேர் என்ன?" எண்டு கேட்டாள்.

சாமியாரின் தலைக்கு மேல நாலஞ்சு சிவத்த வண்ணத்துப்பூச்சிகள் பறந்தன.

சாமியார் தன்ர பேரைச்சொன்னார்.

"நான் உங்கட பேரைக்கேக்கயில்லை. அவற்ற பேரைக்கேட்டனான்" எண்டாள்.

சாமியாரின் தலைக்கு மேல பறந்த நாலைஞ்சு சிவத்த வண்ணத்துப்பூச்சிகள் இப்ப நண்பனின் தலைக்கு மேல பறந்தன.

நண்பன் தன்ர பேரைச்சொன்னான்.

கறுப்பி தன்ர பேரைச்சொல்லிவிட்டு வெக்கத்தில திரும்பிச்சென்றாள்.

கேற்று வாசலில் நிண்ட சிவப்பி சாமியாரைப்பாத்து சிரித்தாள்.

இப்ப நண்பனின் தலைக்கு மேல பறந்த வண்ணத்துப்பூச்சிகள் சாமியாரின் தலைக்குமேல பறந்தன.

சாமியாருக்கும் நண்பனுக்கும் அப்பதான் விசயம் விளங்கியது.

கடுப்பான நண்பன் ஆத்திரத்தில் சாமியாரின் தலைக்கு மேல பறந்த வண்ணத்துப்பூச்சிகளை பிடிச்சு காலால உழக்கி சாக்கொண்டு போட்டு;

"வாடா போவம்" எண்டான்.

போயிருந்தால் பிரச்சினை வந்திராது.

ஏழரைச்சனியன் சும்மா விட்டால்த்தானே!!!

சாமியார் சிவப்பியோட ஒருக்கால் கதைப்பம் எண்டு கேற்றுக்கு கிட்ட போக;
கேற்றுக்கு பக்கத்தில ஒரு சைக்கிள் வந்து நிண்டுது.

பின் கரியரில வாழைக்குலையோட காண்டில்ல அரிவாள் கொழுவினபடி; லொஸ்லியான்ர தேப்பன் மாதிரி பெரிய மீசையோட ஒரு ஆள் பிறேக் அடிச்சு இறங்கினார்.

அந்தாளைக்கண்டதும் கறுப்பியும் சிவப்பியும் வீட்டுக்குள்ள ஓடிவிட்டாகள்.

கவினும் சாண்டியும் லொஸ்லியான்ர தேப்பனிட்ட மாட்டினமாதிரி சாமியாரும் நண்பனும் மாட்டுப்பட்டுப்போட்டினம்.

அஞ்சு நிமிசமா சிவப்பியின்ர தேப்பன்காரன் கேளாக்கேள்வி எல்லாம் கேட்டார்.

நண்பனும் சாமியாரும் கடைசிவரை குனிஞ்ச தலை நிமிரவே இல்லை.

இவ்வளவும் நடக்குது ஒருக்கால் கூட வெளியில வரயில்லை சிவப்பியும் கறுப்பியும்.

கொடுமை என்னண்டால்!
சிவப்பியின்ர தேப்பனனோ அல்லது கறுப்பியின்ர தேப்பனோ எண்டு தெரியாமல் ஏச்சு வாங்கினது தான் கேவலம்.

"கனக்க கதைக்காமல் உன்ர மோள் திண்ட கடலைக்கொட்டை காசையும் ஐஸ்கிறீம் காசையும் தாறியா?" எண்டு சாமியார் கேட்டிருப்பார்.

ஆனால் கரியரில் இருந்த வாழைக்குலையையும் அதை வெட்டின  அரிவாளையும் பாத்த பிறகு கேக்கிறது பாதுகாப்பில்லை எண்டு உணர்ந்து சாமியார் கேக்கவேயில்லை!!!

எல்லாம் முடிய;
சாமியாரும் நண்பனும் நெல்லியடி பஸ் ஸ்ராண்டுக்கு வந்து தட்டிவானில் ஏறி பருத்தித்துறைக்கு போனார்கள். இந்தமுறை தட்டிவானில் இடைக்கால காதல் சோகப்பாட்டுகள் ஒலித்தன!!!

அதுக்குப்பிறகு அந்த சிவப்பியையும் கறுப்பியையும் மீண்டும் வல்லிபுரக்கோயிலில் கண்டார்கள்.

இந்தமுறை அவகளுக்கு பின்னால ரண்டு பொடியள் வீணி வழிய திரிஞ்சதையும் கண்டார்கள். 

பாவம் அந்தப்பொடியளின் விதி அவ்வளவுதான்.

போனகிழமை சாமியார் லொஸ்லியான்ர தேப்பன் மரியநேசனுக்கு "கோல்" அடிச்சார்.

மரியநேசன் இந்தியாவில் இருந்து கதைச்சார்.

"சாமியார் எனக்கு வாற விசருக்கு அவளுக்கு வெழுத்துப்போட்டு வந்திருப்பன். நான் அப்பிடி அவளை வளக்கயில்லை" எண்டு கோவப்பட்டார்.

"அப்ப என்ன சீலம்பாய்க்கு உள்ள விட்டனீர்? உதுகள் எல்லாம் நடக்கும் எண்டு தெரியாதோ உமக்கு?" எண்டு கேட்டார் சாமியார்.

"சாமியார் உள்ள போகேயுக்குள்ள எனக்கு என்ன சொல்லிப்போட்டு போனவள் தெரியுமோ" எண்டு கொந்தளிச்சார் மரியநேசன்!

"என்ன சொல்லிப்போட்டு போனவா?" சாமியார் கேட்டார்.

"நான் நல்லா கேமை விளையாடி கெத்தா வெண்டு வருவன் எண்டவள்" எண்டார் மரியநேசன்.

"நல்லாத்தான் கேம் விளையாடுறா உன்ர மோள். இந்தக்கிழமை பாத்தனீரோ?" எண்டார் சாமியார்.

மரியநேசனுக்கு கோவம் வந்து கடுப்பாகி ஏசிப்போட்டு போனை வைச்சிட்டார்.

எல்லாத்தேப்பன்மாருக்கும் தங்கட மோள்மார் திறம். மற்றவன் எல்லாம் கெட்டவன் எண்ட நினைப்பு!

"முதல்ல உங்கட பிள்ளையளையும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமா வளவுங்கோ. பிறகு பின்னால வாறவங்களை கேள்வி கேளுங்கோ " எண்டு சாமியார் தனக்குள்ள சொல்லிக்கொண்டார்.

பெரிய ஆப்பு வெகுவிரைவில் காத்திருக்கிறது.

அந்த ஆப்பு மரியநேசனுக்கா அல்லது கவினுக்கா எண்டு "டக்கு டிக்கு டோஸ்" போட்டுத்தான் பாக்கவேணும்!

#சனிக்கிழமைசாமியார்

சனிக்கிழமைசாமியார் நிலாவில் நிக்கிறார்!

உங்களின் மூக்கையும் காதையும் பார்வையையும் படலைக்கு வெளியில் போகவிடுங்கள்.

உங்களின் வளவை விட ஊர் 300 மடங்கு பெரியது.
உலகம் உங்கள் ஊரைவிட மூண்டு லச்சம் மடங்கு பெரியது.

உங்கட கிணத்துக்குள்ள இருக்கும் தண்ணியை விட கடல் மிக மிக பெரியது. போய்ப்பாருங்கள்!

பயணம் செய்யுங்கள். உங்கள் வீட்டுக்கு மேல் இருக்கும் வானத்தை விட உண்மையில் வானம் கோடிமடங்கு பெரியது.

முதுமையடையமுன் வீட்டை விட்டு கொஞ்சம் தூரம் நடவுங்கள்.உங்கள் வீட்டு மதிலை விட சீனப்பெருஞ்சுவர் 10000 மடங்கு பெரியது.

உலகத்தை அறிந்துகொள்ள;
யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் கனடாவுக்கு செல்லவேண்டியதில்லை.
கண்டிவரை போனாலே போதும்.

ஒரு ஊருக்குப்போங்கள் அங்கே 100வித்தியாசமான மனிதர்களை பார்ப்பீர்கள். 100 புத்தகங்களை  வாசித்த அனுபவத்தை விட மேலான அனுபவத்தை உணர்வீர்கள்.

மல்லாக்கா படுத்து கூரையின் ஓட்டையால் வானத்தை பார்ப்பதை விட கூரைக்கு மேல் இருந்து வானத்தைப்பாருங்கள்.வானம் அழகாகவும் அகலமாகவும் தெரியும்.ஊரும் வடிவாத்தெரியும்!!!

என் மனசு முழுக்க "வெண்மேகங்கள்"!

ஒரே இடத்தில நில் எண்டால்;
நிற்பேனா?

எனக்கும் இறக்கைகள்...
பறக்காதே எண்டால்;
கேட்பேனா?

என் கால்களில் சக்கரங்கள்
ஒடாதே எண்டால்;
இருப்பேனா?

எனக்கு வானத்தில் தான் பாதைகள்
ஆதலால்;
நடக்கமுடியாது.
பறந்துகொண்டேயிருப்பேன்.

என் வீட்டு விலாசம் 
பூமியில் இல்லை.

நாளை எங்கே இருப்பேனோ தெரியாது!
இன்று நிலாவில் நிற்கிறேன்.


#சனிக்கிழமைசாமியார்

சனிக்கிழமைசாமியாரும் மோட்டச்சைக்கிளும்

2004 ஆம் ஆண்டு குத்துமதிப்பா ஆனி மாதம் ஒரு மாலைப்பொழுது!

சாமியார் "Bajaj கலிபர் 115" இல கொடிகாமச்சந்தியை தாண்டும் போது பின்னேநேரம் 5 மணி இருக்கும்.

மினிபஸ் ஒண்டு காது கிழிய "கோண்" அடிச்சுக்கொண்டு முடக்கால திரும்பி சாமியாரை முந்திச்சென்றது.

டீசல் வாசம். சாமியாருக்கு ஒத்துக்கொள்ளாது.சத்திவாறமாதிரி ஓங்காளிச்சுக்கொண்டு வந்தது.

சாமியார் மோட்டச்சைக்கிளை ஓரமாக நிப்பாட்டி விட்டு றோட்டுக்கரையில "ஓ...க்" எண்டு சத்தி எடுத்தார்.

தலை சுத்திக்கொண்டு வந்தது. பேசாமல் திரும்பிவீட்ட போவமோ எண்டு நினைச்சார் சாமியார்.

சாமியாரின் புத்தி "திரும்பி பருத்தித்துறைக்கே போ" எண்டு சொன்னாலும்; 
சாமியாரின் சின்ன மனசு "இல்லை ஆழியவளைக்கு போ" எண்டது.

கடைவாயில வழிஞ்ச "சத்தியை" பிறங்கையால் வழிச்சு ஜீன்சின்ர பிறப்பக்கம் துடைச்சுப்போட்டு;

மீண்டும் சாமியார் பயணத்தை தொடர்ந்தார்.

மிருசுவில் சந்திக்கு கிட்ட ஆமிக்காரன் மறிச்சு;
எங்க போறாய் எண்டு கேட்டான்.

சாமியார் ஊருக்கு போறன் எண்டு சொன்னதும் போ எண்டு விட்டுவிட்டான்.

"ஏன் போறாய்" எண்டு கேக்கயில்லை!

மிருவிலுக்கும் எழுதுமட்டுவாளுக்கும்  இடையில் போகும் போது;

மழை சொட்டுச்சொட்டாய் துமிக்க ஆரம்பிச்சுவிட்டது.

தார் றோட்டில மழை துமிக்கும் போது மோட்டச்சைக்கிள் டக்கெண்டு சறுக்கும்.

இருட்டுறதுக்கு முன்னம் "பாத்துவிடவேணும்".கெதியாப்போனால்த்தான் வெளிச்சத்தில பாக்கலாம். அதுகும் எத்தினையோ வருசத்துக்கு பிறகு முதல் முதலா இருட்டில பாத்தால் நல்லா இருக்காது எண்டு சாமியாரின் மனசு சொன்னது.

எழுதுமட்டுவாள் ஆமிக்காம்பை தாண்டும் போது " செக்பொயின்ற்றில்" நிண்ட ஆமிக்காரன் சாமியாரை மறிக்கவில்லை.
பக்கத்தில் நிண்ட ஆமிக்காரியோடை அவர் கடலைபோட்டுக்கொண்டு நிண்டதால சாமியாரை போகச்சொல்லி கையசைச்சான்.

மழை தூறிக்கொண்டேயிருந்தது!

ஆமிக்காம்பை தாண்டினால் ஒரு வெளி. றோட்டில ஒருத்தரும் இல்லை.

ஆமி போட்ட A9 தார் றோட்டில் சாமியார் "கலிபர்115" ஐ முறுக்கினார்.

மோட்டச்சைக்கிளின் வேகமுள், 100km ஐ தொட்டு தொட்டு விளையாடிக்கொண்டிருந்தது.

சடீர் எண்டு ஒரு சத்தம்!!!

குறுக்கால ஒரு நாய். பிறேக் அடிக்க நேரம் காணாது. மோட்டச்சைக்கிளில் மோதிய நாய் பின்வளமாக கத்தியபடி வீதியில் சறுக்கியது. மோட்டச்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாமியார் தார் றோட்டில் சறுக்கியபடி ஒரு 20மீற்றர் போயிருப்பார்.

மோட்டச்சைக்கிள் 50 மீற்றர் தூரத்துக்கு அப்பால் றோட்டோரமாய் இருந்த பத்தைக்குள் கொழுவுப்பட்டு இருந்தது.

சாமியாருக்கு தன்ர மோட்டச்சைக்கிள் எண்டால் உயிர்.அது சாமியாருக்கு அவர் அப்பா வாங்கிக்குடுத்த சைக்கிள்.

ஓடிப்போய் மோட்டச்சைக்கிளை தூக்கி நிமித்தினார்.
பம்பர் கம்பி பூட்டி இருந்ததால்;
சைற்றில சாதுவான கீறல் மட்டும் தான். சைற் கண்ணாடியின் ஓரத்திலும் ஒரு கீறல்.

அந்த நாய் ஒண்டும் நடவாதது போல தன்ரபாட்டில எழும்பி போய்க்கொண்டிருந்தது.

சாமியாருக்கு வந்த ஆத்திரத்துக்கு ஒரு கல்லை எடுத்து அந்த நாய்க்கு படத்தக்கனையா  எறிஞ்சார். அது படவேயில்லை. அந்த நாயும் கல்லை கவனிக்கவேயில்லை.

சாமியாருக்கு முழங்காலில் அடி. பின் ஜீன்சில் ஒரு கொஞ்சம் உரைஞ்சுப்பட்டு உள்ளாடைவரை கிழிஞ்சு போய் இருந்தது.சாதுவா ரத்தம். லேசாக வலி. முழங்கால்தான் விசுக்கு விசுக்கு என்று குத்தியது.

ஜீன்சுக்குள் அழகாய் விட்ட "மாட்டீன்" சேட்டை எடுத்து வெளியே விட்டார்.
பின்பக்க ஓட்டையை சேட்டு மறைத்தது.

முகமாலையை போய்ச்சேர பின்னேரம் 5:30 ஆகிட்டுது. ஆமிக்காரங்களின் கடைசி செக்பொயின்ற். தாண்டினால் இயக்க கட்டுப்பாடு.

6 மணிக்கு பாதை பூட்டு. சாமியார் மட்டுமட்டாக வந்து சேர்ந்தார்.

கொஞ்சம் பிந்தினால் திரும்பி பருத்தித்துறைக்கு போயிருக்கவேண்டி வந்திருக்கும்.

சாமியார் அம்மான்ர கதையை கேட்டு ஒரு "முடிவோடதான்" வெளிக்கிட்டவர். அம்மாக்கு சொல்லிப்போட்டுத்தான் வெளிக்கிட்டவர். பாக்காமல் திரும்பி போனால் அவமானம்.

ஆமிக்காரங்கள் பாதை பூட்டுற நேரம் எண்டதால பெரிசா "செக்கிங்" இல்லை.

இயக்க கட்டுப்பாட்டுக்குள் போற ஆக்களைப்பற்றி அவங்கள் பெரிசா அலட்டிக்கொள்ளவில்லை.

முகமாலையில் நிண்ட கடைசி ஆமிக்காரனுக்கு சிங்களத்தில் நன்றி சொல்லிவிட்டு;

இயக்கத்தின்ர கட்டுப்பாட்டுக்குள் சாமியார் போகும் போது 6 மணி இருக்கும். 

7:30 இக்கு இருட்டுப்பட்டுவிடும். இருள முதல் போயிடவேணும். சாமியாருக்கு அவசரம்.

"பாஸ்" எடுக்கவேணும். வரிசையில் நின்றார் சாமியார். நீண்ட வரிசை. ஆமை வேகத்தில் தான் சனம் நகர்ந்துகொண்டிருந்தது.

திடீரெண்டு ஒரு இயக்கப்பிள்ளை சாமியாரிடம் வந்து;
"அண்ணை கொஞ்சம் 7 ஆம் இலக்க கொட்டிலுக்கு வர ஏலுமோ?" எண்டு கூப்பிட்டுது.

இவ்வளவு பேரும் லைனில நிக்கும் போது ஏன் சாமியார் மட்டும் கொட்டிலுக்கு எண்டு யோசிப்பியள்?

சாமியார் வைச்சிருந்த "பொண்டிங் தாடி" சாமியார் கொழும்பு பக்கம் இருக்கிறதை காட்டிக்கொடுத்துவிட்டது.

7 ஆம் நம்பர் ஓலைக்கொட்டில். ஒரு மேசை. எதிரேதிரே ரண்டு கதிரை.

சுவரில் தேசியத்தலைவரின் படம் கம்பீரமாக தொங்கிக்கொண்டிருந்தது. இடதுபக்க மூலையில் கடிகாரம். 

"அண்ணை வணக்கம். இருங்கோ"

சிரிச்ச முகம். பொதுநிறம். நேர்த்தியாக உச்சி புறிச்சு இழுத்த தலை. இடுப்பில் கறுப்பு பட்டி. பொக்கற்றில் சிவத்தப்பேனையும் கறுத்தப்பேனையும் இருந்தது.

கழுத்தில் கட்டப்பட்ட கறுப்பு கயிறில் குப்பி. அது இன்னொரு பொக்கற்றுக்குள் இருந்தது.

"எங்க இருந்து வாறியள்?" என்ற கேள்வியில் ஆரம்பிச்சு; 

"கொழும்பில் எங்க படிக்கிறீங்கள்?" வரை கனக்க கேள்விகள்.

சாமியார் சுவரில் தொங்கிய மணிக்கூட்டைப்பார்த்துக்கொண்டேயிருந்தார். சின்ன முள்ளு 6 இலும் பெரிய முள்ளு 3 இலும் நின்றன.

போராட்டத்தின் நியாயங்களையும், சிங்களப்பேரினவாதத்தின் அடக்குமுறைகளையும் பற்றி;

அந்தப்பிள்ளை சாமியாருக்கு சொல்லிக்கொண்டிருந்தது. 

வழமையாகவே ஆறுமுகம் ரீச்சரின் சமூகக்கல்வி பாடத்துக்கு கொப்பியுக்குள்ள ராணி காமிக்ஸ் வைச்சு படிச்ச சாமியாருக்கு;

சமூகக்கல்விக்கும் வரலாறுக்கும் OL இல அதிவிசேட சித்தி.

சாமியாரின் மண்டைக்குள்ள "கனக்க" இருக்கு.

அந்த அக்கா சொல்லுறது முக்கியமான விடயங்களாக இருந்தாலும்;

அதை பொறுமையாக இருந்து கிரகிச்சு கேக்கும் நிலையில் சாமியார் இல்லை.

சாமியாரின் கவனம் முழுக்க மணிக்கூட்டிலேயே நின்றது. இருளக்குமுதல் ஊருக்கு போயிடவேணும்.

"எங்க போறியள்?"

"ஆழியவளைக்கு"

"ஏன்? "

"____"

சாமியார் சொன்ன பதிலைக்கேட்டு அந்தப்பிள்ளை ஒண்டும் கதைக்கவேயில்லை.

"நானும் உங்கட ஊர்தான்"

"ஓ எவடம்? "

"உடுத்துறை" என்றது அந்தப்பிள்ளை.

"நீங்கள் விஜயகுமார் சேரின்  தம்பியா?"

"ஓம். என்னண்டு அண்ணாவை தெரியும்?" சாமியார் ஆச்சரியமாக கேட்டார்.

"தெரியும். நீங்கள் போகலாம். அனுமதிப்பத்திரத்தை நிரப்பிக்குடுத்துவிட்டு போங்கோ"

சாமியார் விட்டால் காணும் எண்டு;
ஓடிப்போய் அனுமதிப்பத்திரத்தை(pass) அவக் அவக்கெண்டு நிரப்பி குடுத்துவிட்டு;

மோட்டச்சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடினார்.

கொஞ்சத்தூரம் போறதுக்கிடையில்;
ஒரு அண்ணை மறிச்சு....

"அண்ணை என்னை ஒருக்கால் புதுக்காட்டு சந்தியில் இறக்கிவிட ஏலுமோ?" 

என்று சாமியாரைக்கேட்டார்.

சாமியார் அந்த அண்ணையையும் ஏத்திக்கொண்டு பயணத்தை தொடர்ந்தார்.

அந்த இயக்கப்பிள்ளை கேட்ட அதே கேள்விகளை அந்த அண்ணையும் கேட்டார். 

புதுக்காட்டு சந்தியில இறக்கச்சொன்ன அண்ணை இத்தாவில் சந்திக்கு கிட்ட இருந்த இயக்கப்பொடியளின் முகாமுக்கு அண்மையில் இறங்கினார்.

இத்தாவில்லதான் சாமியாருக்கு மாமி ஒராள் இருக்கிறா.
"இத்தாவில் மாமி" எண்டு செல்லமாக கூப்பிடுவார்.
வதனி மச்சாள் சாமியாரில் விருப்பம்.
ஊருக்கு வரும்போது கண்டோஸ் வாங்கி வராமல் வந்ததேயில்லை.

சாமியாருக்கு இத்தாவில் மாமி வீட்ட  போக ஆசைதான். ஆனால் இண்டைக்கு அதுக்கு நேரமில்லை.சாமியாருக்கு மிக முக்கியமான "வேற அலுவல்" இருக்கு.

பளையில சாமியாரின் மாமா ஒராள் கடை வைச்சிருந்தவர். மாமாவிடம் ஒரு அலுவலை கேட்டு வரச்சொல்லி சாமியாரின் அப்பா சொல்லிவிட்டவர்.

ஆனால் இப்ப சாமியாருக்கு நேரமில்லை. வரும்போது அந்த அலுவலைப்பாப்பம் எண்டு முடிவெடுத்து சாமியார் மோட்டச்சைக்கிளை முறுக்கினார்.

புதுக்காட்டுச்சந்தி!

சந்தியில் உள்ள தேத்தண்ணிக்கடையில் "தமீழீழ வானொலி" பெருசா ஒலித்துக்கொண்டிருந்தது.

வழமையாக அந்தக்கடையில் மோட்டச்சைக்கிளை நிப்பாட்டி ஒரு தேத்தண்ணியும் வாய்ப்பனும் தின்னாமல் சாமியார் போனதில்லை. ஆனால் இண்டைக்கு சாமியாருக்கு நேரமில்லை.

மோட்டச்சைக்கிளின் வேகத்தை குறைத்து மடக்கி வெட்டினார் சாமியார். 

கொஞ்சத்தூரம் போனதும் ஆழியவளைக்கு போகும் தமிழீழ போக்குவரத்து கழக பஸ்சுக்கு காவலுக்கு சனம் காத்துக்கொண்டிருந்தது.

ஆரும் தெரிஞ்சாக்கள் கண்டால் கட்டாயம் ஏத்திக்கொண்டுபோகச்சொல்லி கேப்பினம் எண்டு சாமியாருக்கு தெரியும்.

"கேட்டால் மாட்டன்" எண்டும் சொல்லேலாது. 

சாமியார் ராங்கில் வைச்சிருந்த ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டினார். முகத்தை மூடிக்கொண்டார்.

சாமியார் நேரத்தைப்பார்த்தர்.
ஏழுமணி!!!

இருளக்குமுதல் ஆழியவளைக்கு போய்விடலாம் என்ற நம்பிக்கை போய்விட்டது சாமியாருக்கு...!!

இருந்தாலும் மண்டலாய்ப்பிள்ளையாரை நினைச்சு கும்பிட்டுவிட்டு;

மோட்டச்சைக்கிளை முறுக்கினார் சாமியார். சாமியாரின் கவலையை புரிந்துகொண்ட bajaj கலிபர் 115;

மாயாவியின் குதிரை போல சிட்டாய் பறந்தது.

சனிக்கிழமைசாமியார் மருதங்கேணிச்சந்தி தாண்டி நாவலடியால மோட்டச்சைக்கிளை திருப்பும் போது;

வயதுபோன ஆச்சி ஒண்டு மறிச்சு "தம்பி உதில அஞ்சாம்மனைப்பிள்ளையார் கோயிலடியில இறக்கிவிடப்பு. புண்ணியம் கிடைக்கும்" எண்டு கேட்டா.

"எணை அம்மம்மா கவனமா பின் காண்டிலை இறுக்கிப்பிடிச்சுக்கொண்டிரு" எண்டார் சாமியார்.

அம்மம்மாவின் "கம்பஸ் பாக்கை" வாங்கி மோட்டச்சைக்கிளின் முன்னுக்கு கொழுவினார் சாமியார்.

"தம்பி ஊரில எவடம் ராசா? ஆற்ற மோன் நீ"

"நான் ஆழியவளை"

"கொப்பான்ர பேர் என்னப்பு?"

அப்பான்ர பேரை விட அப்புவின் பேரைச்சொன்னால் தான் கிழவிக்கு புரியும் எண்டு நினைச்சார் சாமியார்.

"நான் பெரியதம்பியின்ர பேரன்"

"ஐயோ என்ர குஞ்சு. பெரியாம்பி அத்தான்ர பேரனோ நீ?"

"ஓமணை . அப்புவுக்கு சொந்தமோ நீ?"

"சொந்தமோ? இரத்த உறவடா ராசா. உன்ர கொப்புவின்ர கொப்பாவும் என்ர அம்மாவும் ஒருவகையில சகோதரம்"

இதுக்கு மிஞ்சு உறவுமுறை கேட்டால் சாமியாருக்கு தலை சுத்திப்போடும்.

"கொப்பா எப்பிடி சுகமாய் இருக்கிறானோ? அவனைக்கண்டு கனகாலம்"

இடப்பெயர்வு சொந்தங்களை பிரித்துவைத்திருந்தது. 

ஆச்சியை அஞ்சாம்மனைப்பிள்ளையார் கோயிலடியில் இறக்கிவிட்டார் சாமியார். கிழவி சாமியாரை தேத்தண்ணி குடிச்சுவிட்டு போகசொல்லி ஒரே அரிகண்டம். 

சாமியார் ஒருமாதிரி கெஞ்சிமண்டாடி தப்பி ஓடினார்.

பிள்ளையாருக்கு பக்கத்தில் "சின்ன முருகன் கோயில்"!

சாமியாரின் பரம்பரைக்கோயில் அது.

பிள்ளையாரோட கோவிச்சுக்கொண்டு முருகன் கோயிலை அப்புவும் அவற்ற சகோதரங்களும் கட்டின கோயில்.

அது பெரிய கதை. பிறகு பாப்பம்.

நிண்டபடியே " முருகா" எண்டு இரண்டு கையையும் தலைக்குமேல தூக்கி கும்பிட்டுவிட்டு;

சாமியார் தன்ர அலுவலுக்கு ஓடினார்.

முதல்ல ஆற்ற வீட்ட போவம். 

தம்பித்துரை இளையய்யா வீட்ட போவம். இளையம்மான்ர கையால ஒரு தேத்தண்ணி குடிச்சால்த்தான் வந்த களைப்பு தீரும்.

இளையம்மா நாலு கறண்டி சீனி போட்டு குண்டுக்கோப்பையில முட்ட முட்ட தாற தேத்தண்ணி அமிர்தம்!

அதுகும் வெள்ளை குருகு மண்ணில காலை நீட்டி இருந்து குடிச்சால் தனிசுகம்.

இளையம்மா வீட்டு படலையடியில் மோட்டச்சைக்கிளை விட்டுப்போட்டு;

உள்ள போனார் சாமியார்.

வீட்டில ஒருத்தரும் இல்லை.

நாலைஞ்சு தரம் சாமியார் கூப்பிட்டும் பாத்தார் ஒருத்தரும் இல்லை.

"அவையள் கிளிநொச்சி போட்டினம். உவள் தங்கச்சி தான் நிண்டவள். கிளியாச்சி வீட்ட போயிருப்பாள்"

அதால போன மனிசி ஒண்டு சாமியாருக்கு தகவல் சொல்லியது.

பக்கத்திலதான் வீடு. சாமியார் நடந்தே போனார்.

வாசலில் ஒரு நாய் உறுமியது. சாமியார் ஹெல்மெட்டை எடுத்து உறுக்கினார். அது அடங்கி மற்றப்பக்கமாய் சுருண்டுப்படுத்தது.

வெளியில ஒரு "லேடிஸ் சைக்கிள்" மட்டைவேலியில் சாத்தியிருந்தது.

"வீட்டுக்காரர்...வீட்டுக்காரர்" சாமியார் கூப்பிட்டார்.

முற்றத்தில் ஒரு சேவல் பேட்டுக்கோழியை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது.

"ரமணன் அண்ணா..."

தங்கச்சி ஓடி வந்து கட்டிப்பிடிச்சு கொஞ்சினாள். கனகாலம் அவளைக்கண்டு! 
கொஞ்சம் உடம்பு வைச்சு நெடுத்திருந்தாள்.

"மாமி ரமணன் அண்ணா வந்திருக்கிறான்" தங்கச்சி சந்தோசத்தில் கத்தினாள்.

கிழவிக்கு சாமியாரில் சரியான விருப்பம். 

வெத்திலை வாயோட  கட்டிப்பிடிச்சு கொஞ்சியது. அதில் ஒரு ஆழமான பாசம் இருந்தது.

சாமியார் முற்றத்தில் மண்ணில் இரு காலையும் நீட்டி சுவரோடு முதுகைச்சாய்த்து இருந்தார்.

தங்கச்சி குசினிக்குள் ஓடினாள் சாமியாருக்கு தேத்தண்ணி வைக்க!

"எனக்கு மாப்போடாமல் பிளேன்ரீ தாடி" சாமியார் தங்கச்சிக்கு உரத்துச்சொன்னார்.

தங்கச்சியையும் கிழவியையும் தவிர இன்னும் ஒராள் அங்க நிற்பதாய் சாமியாரின் உள்ளுணர்வு சொன்னது.

வெளியில "லேடிஸ் சைக்கிள்" !

ஆற்றையா இருக்கும்?

சாமியாருக்கு ஒரு ஆர்வக்கோளாறு.

"அவளின்ர சைக்கிளா இருக்குமோ?" 
சாமியாரின் பிடரிக்கு பின்னால நாலைஞ்சு வண்ணத்துப்பூச்சிகள் பறந்தன!

முற்றத்தில் மேய்ஞ்சுகொண்டிருந்த சேவலையும் பேட்டுக்கோழியையும் காணவில்லை!

குசினிக்குள் தங்கச்சி ஆரோடையோ குசுகுசுத்து பேசும் சத்தம் சாமியாரின் பாம்பு காதுகளுக்கு கேட்டுவிட்டது.

சாமியாரின் இதயத்துடிப்பு சாதுவா வேகமாக அடிக்கத்தொடங்கியது.

6 வயசில கடைசியாய் பாத்தது. இப்ப அவளுக்கு 18 வயது.

எப்பிடி இருப்பாள்?

"அவள் நல்ல வடிவு" எண்டு சாமியாரின் அம்மா சொன்னதைக்கேட்டுத்தான் உந்தளவு தூரம்;
சிக்கல்பட்டு வந்தவர் சாமியார்.

சாமியார் நித்திரை எண்டு நினைச்சு;
சாமியாரின் அம்மாவும் அப்பாவும் பேசினதுகளை சாமியார் கேட்டுக்கொண்டு கிடந்தார்.

"எங்களுக்கு விருப்பம். இனி இவன் என்ன சொல்லுறானோ தெரியாது. கேட்டால் ஏசுவான். போய்ப்பாத்தான் எண்டால் ஓம் எண்டு சொல்லுவான்" எண்டு அம்மா சொன்னதுதான் சாமியாரின் ஆவலைத்தூண்டியது.

அவள் மச்சாள்தான். அவளுக்கு பேர் வைச்சதே சாமியாரின் அண்ணாதான். 

சின்னனில் இருந்தே மாமிக்கும் மாமாவுக்கும் சாமியாரில் "ஒரு கண்"!

ஏனெண்டால் சாமியார் சின்னனில் வலு குழப்படி. ஆளும் கொஞ்சம் வெள்ளை. வடிவு !!!

காலகஸ்ரம் வந்து ஒரு காணிப்பிரச்சினையால இரண்டு குடும்பமும் பிரிஞ்சுபோகவேண்டிய நிலை வந்தது. ஊரில இருந்தால் பிரிஞ்ச குடும்பங்கள் ஒண்டாகியிருக்கும்.

ஆனால் இடப்பெயர்வு இரண்டு குடும்பத்தையும் தூரமாக்கியது.

 வன்னிக்கும் பருத்தித்துறைக்கும் இடைவெளி அதிகமாகியது.

சாமியாரின் அண்ணா வன்னிக்குள் இருந்ததால் அவன் இடைக்கிடை போய்;
உறவை அறுந்துவிடாமல் வைத்துக்கொண்டான்.

ஆனால் சாமியார் 12 வருசமாக பாக்கவேயில்லை.

6 வயதில பாத்த மச்சாள் 18 வயதில எப்பிடி இருப்பாள் எண்ட ஆர்வத்தில தான் விழுந்தெழும்பி சாமியார் ஓடி வந்தவர்.

மட்டைவேலியில் ஒரு அணிலை இன்னொரு அணில் விட்டுத்துரத்திகொண்டு ஓடியது.

" ரண்டுபேரும் என்னடி உதுக்குள்ள குசுகுசுக்கிறியள்? தேத்தண்ணியை கொண்டு வாங்கோடி" கிழவி கத்திச்சொன்னது.

ரண்டுபேரா? ஆரது உள்ளுக்குள்ள!!!

ஒரு வேளை அவளா இருக்குமோ?

அவளா இருந்தால்....!
சாமியாரின் மனம் அங்கலாய்த்தது.

சாமியார் கிணத்தடியில் போய் முகத்தை கழுவி பொக்கற்றுக்குள் இருந்த லேஞ்சியால் துடைத்தார்.

பொக்கற்றுக்குள் இருந்த சின்ன கறுத்த சீப்பை நடுவிரலில் கொழுவி;
ஸ்ரைலா தலையை மேவி
இழுத்துக்கொண்டார்.

கிணத்து தண்ணீர் சில்லென்று குளிராய் இருந்தது.

சாமியார் கிணத்தடியில் நிண்டு கொண்டே சாதுவாய் குசினியை எட்டிப்பபார்த்தார்.

குசினியை சுற்றி வரிஞ்சு கட்டிய பனம்மட்டை இடுக்குக்குள்ளால "கிளியரா" ஒண்டும் தெரியவில்லை.

மீண்டும் சாமியார் வந்து முற்றத்தில் இருந்தார்.  

தங்கச்சி மட்டும் வெளியால தேத்தண்ணியோட வந்தாள்.

"இந்தா அண்ணா" தந்துவிட்டு சாமியாரின் அருகில் இருந்தாள் தங்கச்சி.

"உவள் உதுக்குள்ள குசினியுக்குள்ள என்ன முட்டை இடுகிறாள். வெளிய வா" கிழவி புறுபுறுத்தது.

முத்தத்தில் நிண்ட எக்ஸ்சோறா பூவில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் தேன்குடித்துக்கொண்டிருந்தன.

தேத்தண்ணி சரியான இனிப்பு. 

"அடியே ஏன்ரி இவ்வளவு இனிப்பு போட்டனீ" சாமியார் தங்கச்சியின் காதில் திருகினார்.

"நான் போடயில்லை தேத்தண்ணி"

"அடியே என்ர தேத்தண்ணியை கொண்டு வா" கிழவி கூப்பிட ;

குசினி படலை திறந்து உள்ளே இருந்து அவள் வந்தாள்.

சிவத்த புள்ளிபுள்ளி பூச்சட்டை!
சைற்றால உச்சிபுறிச்சு  ரட்டைப்பின்னல். 

பொது நிறம். சாமியாரின் தோளளவு உயரம்!

நெத்தியில் ஒரு ஸ்ரிக்கர் பொட்டு.

திடீரெண்டு மழைத்துளி. அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழுந்தது.தூரத்தே வானவில்!

அவள் தான். இருந்தாலும் ஒரு டவுட்டு. 
"ஆராவது பேரைச்சொல்லி கூப்பிடுங்கோ" எண்டு சாமியார் மனசுக்குள் கெஞ்சினார்.

தங்கச்சிக்கு சாமியார் படும் அந்தரம் விளங்கிவிட்டது.

"அகிலா அக்கா உங்கட சைக்கிள் மழையுக்குள்ள நனையப்போகுது. உள்ள விடுங்கோ" என்றாள்.

அவளேதான்!

எவ்வளவு வளந்திட்டாள். 

சாமியாரை திரும்பிபாக்காமலே தேத்தண்ணியை கிழவியிடம் குடுத்துவிட்டு;

"நான் வீட்ட போறன் அம்மம்மா" என்றாள்.

சாமியார் வைச்ச கண் எடுக்காமல் அவளையே பார்த்தார்.

அவள் தன்னை பாக்கமாட்டாளோ என்று மனம் ஏங்கியது.

கல்நெஞ்சக்காரி பாக்கவேயில்லை.

சாமியார் இவ்வளவு தூரம் கஸ்ரப்பட்டு வந்து அஞ்சுசதத்து பிரயோசனமும் இல்லை. 

முற்றத்தில் சேவல் மட்டும் எதையோ கிழறி கிழறி தேடியது. கூட நிண்ட பேட்டுக்கோழியை காணவேயில்லை!


#சனிக்கிழமைசாமியார்

❤️சனிக்கிழமைசாமியாரும் காதலர் தினமும்!


"I love you" 
விடியக்காத்தால சாமியார் சாத்துவாயோட ஒரு SMS ஐ தட்டிவிட்டார்.

ஆதீனம் எல்லா அலுவலுகளையும் முடிச்சுப்போட்டுத்தான் அதை வாசிச்சவா.

"என்ன திடீரெண்டு? மாறி அனுப்பிட்டியளோ?" 
கொடுப்புக்குள் ஒரு சிரிப்பு.

உப்பிடித்தான் ஒருநாள் 2003 ஆம் ஆண்டு எண்டு நினைக்கிறன்.

பெப்ரவரி 14

கொழும்பில்  படிச்சுக்கொண்டிருந்த காலப்பகுதியில்;

மாணவர் விடுதியில் உள்ள இரண்டாம் மாடியில் நண்பர்களுடன் இரும்புக்கட்டிலில் "சுதந்திரமாக" படுத்திருந்தார்.

குப்புற படுத்திருந்த சாமியார் தன்னுடைய Nokia 3310 போனை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தார்.

"மச்சான் இண்டைக்கு காதலர் தினமாம். உன்ர மச்சாளுக்கு ஒரு SMS ஐ போடன்" 

சாமியாரின் "கட்டில் தோழன்" அவன்.

ஏற்கனவே அவனுக்கு "ஆள்" இருக்கு.

"மச்சான் போன் அடிச்சு கதைக்க பயமா இருக்கு. ஒரு SMS போடப்போறன். உன்னிட்ட ஏதும் படம் இருக்கோ?"

அந்தக்காலத்தில் நொகியா போனில் வெறும் படங்கள்
மாத்திரமே அனுப்பலாம்.

"தாஜ்மகால்" ஒண்டை நண்பன் உபயம் செய்தான்.

அந்த தாஜ்மகாலை சாமியார் மச்சாளுக்கு அனுப்பிவிட்டார்.

அண்டைக்கு முழுக்க பதிலே இல்லை.

சாமியாருக்கு கெடிக்கலக்கம்.ஒருவேளை அவள் பாத்துப்போட்டு வேண்டாம் எண்டு சொன்னால்???

இன்னுமொருதரம் "வேண்டாம்" "சரிவராது"  எண்ட சொல்லை தாங்கும் மனவலிமை சாமியாருக்கு இல்லை.

உப்பிடித்தான் சுமார் மூண்டு ஆண்டுகளுக்கு முன்னம் 2000 ஆம் ஆண்டு "சரிவராது" எண்டு ஒருத்தி சொல்லிவிட்டுப்போனாள்.
போனவள் போனவள்தான். இண்டுவரைக்கும் அதற்குப்பிறகு சாமியார் அவளை பார்க்கவேயில்லை. 

மீண்டும் அதேமாதிரி ஒரு ஏமாற்றத்தை தாங்கும் சக்தி சாமியாருக்கு இருக்கவில்லை.

ஒரு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு காதலர் தினத்தில் சாமியாரின் மனசில் செவ்வரத்தம் பூ அரும்பி பூத்துக்கிடந்தது.

சாமியார் அண்டு முழுக்க மச்சாளின் பதிலுக்காய் காத்திருந்தார்.

"ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்"

அண்டுமுழுக்க பதில் வரவேயில்லை.

நினைச்சதும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு போறதெண்டால் சும்மா சிம்பிள் வேலையில்லை.

அதனால சாமியார் பதிலுக்காய் காத்திருந்தார்.

அடுத்தநாளும் பதில் வரவில்லை. 

சாமியார் நினைச்சிருந்தால் ஒரு "கோல்" அடிச்சு கேட்டிருப்பார்.

"கேக்காத" எண்டு மனசு சொன்னதால சாமியார் பேசாமல் இருந்துவிட்டார்.

மூண்டாவது நாள் சாமியார் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

"இனிமேல் உந்த காதல் மயிர் மண்ணாங்கட்டி" எல்லாம் வேண்டாம்.

"தின்னுறம்.குடிக்கிறம்.நல்லா அனுபவிக்கிறம்.சாகிறம்"
சாமியார் மிகத்திடமாக முடிவெடுத்தார்.

நாலு நாளாச்சு "ஒரு பதிலுமில்லை"!!

வார இறுதி எண்டதால மாணவர் விடுதி வெறிச்சோடி இருந்தது.

சாமியார் மட்டும் தனியாக அறையில் கிடந்தார்.

சக்தி FM இல் இடைக்கால சோகப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன.

" மச்சா எண்டகோ! படு தியனுவா. காமுத?"
(மச்சான் சரக்கு இருக்கு. வா அடிப்பம்)

நுவான் சாமியாரின் சிங்கள வகுப்புத்தோழன். சாமியாருடன் மிக மிக நெருக்கமானவன்.

அவனுக்கு நாலைஞ்சு பெண் நண்பிகள். மிகவும் ஜாலியான பேர்வழி.நன்றாக வாழ்க்கையை அனுபவிக்கத்தெரிந்தவன்.

அவனுடன் சுமார் 6 மாதமாக ஒரே அறையில் தங்கியிருந்திருக்கிறார் சாமியார்.

பல அந்தரங்கங்களை அவன் சாமியாருடன் பகிர்ந்திருக்கிறான்.

"சரக்கு அடிப்பம் வா" எண்டு நுவான் கேட்டதும் சாமியார் ஒருகணம் குழம்பிவிட்டார்.

தன் காச்சட்டை பொக்கற்றுக்குள் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்துக்காட்டினான் நுவான்.

அது "ஈயப்பேப்பரால்" சுற்றப்பட்ட சின்னச்சரை.

வலப்பக்க காதில் ஒரு "கோல்ட்லீவ்" சிகறட் சொருகியிருந்தான்.

கோதாரிவிழுவான் இதையா சரக்கு எண்டான்?

நுவானின் அறையில் யாரும் இல்லை. 

மேசையில் ஒரு "லயன் லார்கர்" பியர் திறந்து கிடந்தது. அதன் ஆடை அரைவாசிக்கு மேல் உரிந்து கிடந்தது. 

ஏற்கனவே "உள்ள" விட்டுப்போட்டுத்தான் அவன் வந்திருந்தான்.

"மச்சான் வாடிவெண்ட"
(இரு மச்சான்)

சாமியார் மேசையில் இருந்த லயன் லாகரை எடுத்து மடக்கு மடக்கு எண்டு உள்ளே விட்டார்.

நுவான் சிரித்துக்கொண்டே இன்னொரு போத்தலை அலுமாரிக்குள் இருந்து எடுத்து வைத்தான்.

"மச்சான் ஏதும் பிரச்சினையா? ஏன் கவலையா இருக்கிறாய்?" என்று கேட்டான் நுவான்.

நுவான் காதில் இருந்த "கோல்ட்லீவை"  பற்றவைத்து ரண்டுதரம் இழுத்துவிட்டு சாமியாரிடம் நீட்டினான்.

சாமியார் இருந்த விசருக்கு அதைவாங்கி மூண்டு இழுவை இழுத்தார்.

நொகியா போன் அலறியது.

அவளா இருக்குமோ எண்டு ஆர்வத்தோடு போனை எடுத்தால்...

"டயலொக்காறன்" போன் பில்லை கட்டச்சொல்லி SMS அனுப்பியிருந்தான்.

சாமியார் தனக்கு பழக்கமான தூசணத்தால் டயலொக்காறனை ஏசிப்போட்டு;

லயன் லாகர் பியரை மடக்கு மடக்கு எண்டு உள்ளே விட்டார்.

"பச்சைக்கச்சல்" எண்டாலும் லயன் லாகர் பியர் ஒரு "கிக்" தான்.

"கோல்ட் லீவ்" கைமாறியது.

"மச்சான் நீதானே இப்ப உன்ர மச்சாளை லவ் பண்ணுறாய். அதில ஏதும் பிரச்சினையா?"
நுவானுக்கு சாமியார் ஏற்கனவே தன்ர கதையை விலாவாரியா சொல்லியிருக்கிறார்.

"இல்லை மச்சான்"

"விமலே அப்ப உன்ர முதல் காதல் ஏதும் பிரச்சினையோ?"

அவளைப்பற்றியும் நிறையவே நுவானுக்கு சாமியார் சொல்லியிருக்கிறார்.

"இல்லை மச்சான் அவள் எங்க இருக்கிறாள் எண்டே எனக்கு தெரியாது.தெரியவும் வேணாம்"

சிலதுகளை நினைவில் இருந்து அழிச்சாலும் மனசில் இருந்து அகற்றுவது கஸ்ரம்.

ஒவ்வொரு காதலர் தினத்திலும் சாமியார் முதல் காதலை நினைச்சுக்கொள்ளுவார்.
அவ்வளவுதான்.முதல்க்காதலை வாழ்வின் கடைசிவரை சந்திக்காதவன் பாக்கியசாலி. சாமியார் பெரிய பாக்கியசாலி.

திடீரெண்டு நொகியா போன் கிணுகிணுத்தது.

சாமியாருக்கு முக்கால் வெறி!

"ஹலோ நான் அகிலா கதைக்கிறன்.என்னத்துக்கு அந்த SMS அனுப்பினனியள்?"

விமானம் ஒன்று இரைச்சலோடு விடுதிக்கு மேலாக தாழப்பறந்து எழும்பிச்சென்றது.

விமானச்சத்தத்தில் அவள் சொன்னது சாமியாருக்கு விளங்கவில்லை.அல்லது சாமியார் அடிச்ச சரக்கு வேலையை காட்ட தொடங்கியிருக்கவேண்டும்.

இரண்டில ஏதோ ஒண்டு!

நுவான் தன் பங்கு முடிந்ததும் "கோல்ட்லீவை" சாமியாரிடம் நீட்டினான்.

சாமியார் அதை வாங்கிக்கொண்டு "பல்கனிக்கு" சென்றார்.

வெளியில் வானம் மிகத்தெளிவாய் இருந்தது. தூரத்தில் இன்னொரு விமானம் வெண் மேகங்களை கிழித்தபடி சாமியாரை நோக்கி வந்துகொண்டிருந்தது.

"ஏன் நான் எதுக்கு அனுப்பின்னான் எண்டு உனக்கு தெரியாதோ?" 
சாமியார் நன்றாக இழுத்து புகையை வெளியே விட்டார்.

போனுக்குள்ளால மணக்கவா போகுது எண்ட தைரியம்.

"நீங்கள் அனுப்பின SMS ஐ நான் அம்மாட்ட காட்டின்னான்"

"வலு சிறப்பு"
இதைவிட சாமியாருக்கு என்ன பதில் சொல்லுறது எண்டு தெரியவில்லை.

"பிறகு" 
சாமியாருக்கு என்ன கேக்குறது எண்டே தெரியவில்லை.

"பிறகென்ன?"
"எப்ப யாழ்ப்பாணம் வாறியள்?"

அந்த விமானம் சாமியாரின் தலைக்குமேல  தாழப்பறந்து பாதுக்காப்பாக தரையிறங்கியது.

கடைசியா அவள் சொன்னது சத்தியமாக சாமியாருக்கு கேக்கவேயில்லை.

சத்தியமாக சாமியாருக்கு வெறி இல்லை. 

"கடைசியா என்ன சொன்னனீ?"
சாமியார் பதட்டமாக கேட்டார்.

"எப்ப யாழ்ப்பாணம் வாறியள்?"

சாமியார் நிலத்தில் இல்லை. விடுதியின் ரண்டாவது மாடியில் இருந்தார்.

அப்பிடியே பல்கனியால குதிச்சு பறக்கவேணும் போல இருந்தது.

"மச்சான் சரக்கு இன்னும் வேணுமா?"
நுவான் நேரகாலம் தெரியாமல் கேட்டான்.

அருந்தப்பு அவன் சிங்களத்தில கேட்டதால நிச்சயம் அவளுக்கு விளங்கியிருக்காது.

கடைசியாக கோல்ட்லீவை ஒரு இழுவை இழுத்து மேலிருந்து கீழே தூக்கி தூர எறிந்துவிட்டு;

வெள்ளவத்தை ஹயஸ் வான்காரனுக்கு கோல் அடிச்சார் சாமியார்.

"அண்ணை இண்டைக்கு இரவு அவசரமாக யாழ்ப்பாணம் போகவேணும். இடமிருக்கோ?"

"பின்னுக்கு கடைசியில ஒரே ஒரு சீற்தான் மிச்சம் இருக்கு. வேற இல்லை. வேணுமோ?"

"பறுவாயில்லை. புக் பண்ணுங்கோ"

"கொன்பேர்ம்"

நொகியா 3310 மீண்டும் கிணுகிணுத்தது.

திறந்துபாத்தால் சாமியார் மச்சாளுக்கு அனுப்பிய தாஜ்மஹால் அவளிடம் இருந்து திரும்பி வந்திருந்தது. மேலதிகமாக அதுக்கு கீழ;

"I love you aththu" எண்டு முத்து முத்தாய் எழுதியிருந்தது.

#சனிக்கிழமைசாமியார்

சனிக்கிழமைசாமியாரும் தியேட்டரும்

சனிக்கிழமை சாமியார் கன காலத்துக்குப்பிறகு படம் பாக்க தியேட்டருக்குப்போனார்.

ஆதீனம், குட்டிச்சாமியார் இல்லாமல் களவாக வீட்டுக்குத்தெரியாமல் ஒழிச்சுப்படம் பாக்குறதிலையும் ஒரு "கிக்" தான்!

முந்தி உப்பிடித்தான் சாமியார் களவா அச்சுவேலி தியேட்டரில் இருந்து நெல்லியடி மகாத்மா, பருத்தித்துறை பிரியா வரை கன படங்கள் ஒழிச்சுப்பாத்தவர்.

படம் முடிய முதல் ஒரு நிமிசத்துக்கு முதலே சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒழுங்கைக்குள்ளால ஓடி மெயின் றோட்டில ஏறுமட்டும் நெஞ்சு இடி.

மெயின் றோட்டில ஏறிட்டால் அங்கால ஏறி ஒரு மிதி. தப்பிடுவம்.

ஆனாலும் ஆரோ குறுக்கால போன ஒருத்தன் 750 றூட் பஸ்ஸுக்குள்ள இருந்து கண்டுபோட்டு ;
சாமியாரின் அப்பாவிடமோ அம்மாவிடமோ போட்டுக்கொடுத்துவிடுவார்கள்.

உப்பிடித்தான் "காதலுக்கு மரியாதை" படம் பாத்திட்டு தியேட்டரை விட்டு வெளியில வந்தார் சாமியார்.
இடப்பக்கம் வலப்பக்கம் ஒரு தெரிஞ்ச ஆக்களும் இல்லை.

சடாரெண்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு முன் ஒழுங்கைக்குள்ள விட்டார் சாமியார். முன்னால சாமியாரின் அப்பா MD 90 இல் வந்துகொண்டிருந்தார்.

பிறகென்ன "வீட்டில மரியாதை" அமோகமாக இருந்தது.

விசயத்துக்கு வருவம்.

வெளிநாட்டிலையும் படம் பாக்க போகும் போது எங்கட தமிழ் ஆக்களைக்கண்டால் பிரச்சினை.

சாமியார் களவாக படம் பாக்கவாறதை அடுத்த நிமிசம் ஆதீனத்திடம் போட்டுக்குடுத்து விடுவார்கள். 

ஊரெண்டால் மொட்டாக்கு போட்டுக்கொண்டு போகலாம். வெளிநாடுகளில் அப்பிடிச்செய்ய ஏலாது. 

சாமியார் படம் ஆரம்பிக்க முன்னர் கொஞ்சம் நேரத்தோட போட்டார். ஏனெண்டால் சனம் வரமுதல் போய் ஓரமா ஒழிச்சு இருந்தால் ஆரும் பாக்கமாட்டாங்கள்.

வழமையா தியேட்டருக்கு போகமுதல் கழிவறைக்கு போய் "இயற்கை கடனை" முடிச்சால்தான் மூண்டு மணித்தியாலம் உள்ள இருக்கலாம்.

கழிவறைக்குள் ஒரு "தமிழ்க்குரல்"

"இந்தா முடியுது செல்லம். பொறு டக்கெண்டு வாறன்"

சாமியார் தன்னுடைய கடமையை முடித்துவிட்டு கைகழுவ வந்தார். பக்கதில தமிழில கதைச்ச பொடியன் சாமியாருக்கு பழக்கம்.

என்னண்டு பழக்கம் எண்டால்?
பேஸ்புக்கிலதான் பழக்கம். பொடியன் நெல்லியடி. ரண்டு மூண்டு மாதத்துக்கு முன்னம் தான் கலியாணம் நடந்தது.
பெட்டை பருத்தித்துறை. சாமியாருக்கு தெரிஞ்ச பொடியன் ஒருத்தனின் தங்கச்சிதான். அந்தப்பொடியன் சாமியாருக்கு நல்ல பழக்கம்.

கலியாணவீட்டு போட்டோவுக்கு சாமியார் ஒரு லைக்கும் போட்டு கீழ வாழ்த்தும் போட்டவர்.

பிள்ளை நல்ல கிளி மாதிரி வடிவு. பொடியன் கறுவல். இருந்தாலும் மொறட்டுவை எஞ்சினியர் எண்டதால கட்டிக்குடுத்திட்டினம்.

"வணக்கம் தம்பி. எப்ப ஊரில இருந்து வந்தனியள்? கலியாணம் எல்லாம் எப்பிடிப்போச்சுது?" 

"ஒமண்ணை போனகிழமைதான் வந்தனான்.ஓம் எல்லாம் ஓகே" எண்டு சொல்லிவிட்டு அவசரமாக கைகழுவினதும் கழுவாததுமா பாதியில் ஓடினார் தம்பி.

அவருக்கு வெளியில அவற்ற " செல்லம்" காத்திருக்கிறா ;-)
கலியாணம் கட்டின புதுசுதானே.

"செல்லம்" கூப்பிட்டா டக்கெண்டு போகத்தானே வேணும்.

சாமியார் தியேட்டரை நோக்கி நடந்தார். வழியில தம்பி மீண்டும் தடக்குப்பட்டார்.

சாமியாருக்கு அதிர்ச்சி!

வேற ஒரு  பெட்டையோட தம்பியர் படம் பாக்க வந்திருந்தார். பெட்டை பாக்க சிங்களத்தி போல இருந்தது. கறுப்பி!

இவர் ஏதோ இங்கிலீசில சொல்ல அவா இவருக்கு கையில செல்லமா அடிச்சுப்போட்டு சிரிக்கிறா!

முழங்காலுக்கு மேல பாவாடை! 
ஆம்பிளையள் மாதிரி தலைவெட்டும் ஆளும் அவான்ர எடுவையும்?

அவர் கலியாணம் கட்டி ஒரு மாதம் ஆகயில்லை இன்னொரு பெட்டையோட கும்மாளம்!

அதுகும் சாமியாருக்கு முன்னால்!

எவ்வளவு நெஞ்சழுத்தம் ???

பொடியன் கட்டின பிள்ளையின் தமையனுக்கு கோல் அடிச்சார் சாமியார். பதில் இல்லை. 
"அவசரமா கோல் எடுங்கோ"  எண்டு ஒரு குறுந்தகவலை அனுப்பிவிட்டு தியேட்டருக்குள் நுழைந்து ஒரு மூலையில் ஒதுங்கினார் சாமியார்.

சாமியாருக்கு இடப்பக்கமாக முன் வரிசையில் தான் அவை ரண்டுபேரும் இருந்திச்சினம்.

இவர் அவான்ர தலையை தடவுறதும் அவா இவற்றை தோளில சாயுறதுமா ஒரே "அன்பு மழை"!

சாமியாருக்கு படத்தை பாக்குறதா? இல்லை இவையின்ர அன்பு மழையில் பட்டுத்தெறிக்கும் தூறலில் நனையுறதா?  எண்டு ஒரே குழப்பம்.

திடீரெண்டு சாமியாருக்கு " கோல்" வந்தது.

"தம்பி உங்களிட்ட சொல்லலாமோ தெரியாது. ரென்சன் ஆகவேண்டாம். ஆனால் பிரச்சினை சீரியஸ்" சாமியார் மெதுவாக எழும்பி தியேட்டருக்கு வெளியில வந்து கதைச்சார்.

"இல்லை பறுவாயில்லை சாமியார் சொல்லுங்கோ"

"உங்கட மச்சான் பொடியன் ஒரு சிங்களப்பெட்டையோட தியேட்டரில படம் பாக்குறார்"

"சாமியார் வடிவாப்பாத்தனியளோ?"

பருத்தித்துறை மெத்தக்கடைச்சந்தியால சாமியாரின் ஆள் சைக்கிளில் வரும் போது;
ரண்டு மைல் தள்ளி இருக்கும் நாலாம் குறுக்குத்தெரு புளியமரச்சந்தியில நிண்டு " மச்சான் என்ர ஆள் இண்டைக்கு சிவத்தப்புள்ளி" சட்டை எண்டு சொல்லும் அளவுக்கு சாமியாருக்கு கண் கூர்மை!!!

"தம்பி நான் வடிவாப்பாத்தனான். கதைச்சனான். எனக்கு முன்னாலதான் இருக்கினம். வந்தால் பிடிக்கலாம்"

"சாமியார் ஆக்களை நோட்டம் விட்டுக்கொண்டே இருங்கோ. இப்ப வாறன்"

"தம்பி ...நிறைய தமிழாக்கள் இருக்கினம். படம் முடியட்டும் . தனியா மடக்குவம்"

"தம்பி இன்னொரு விசயம் உங்கட தங்கச்சிக்கு சொல்லவேண்டாம். தெரிஞ்சால் பிரச்சினை பெரிசாகும்"

"இல்லை சாமியார் நான் சொல்லயில்லை. எனக்கு என்ன செய்யுறதெண்டே தெரியயில்லை. வாற விசருக்கு அவனை வந்து வெளுக்கிறன் பாருங்கோ"

" சொல்லாமல் விட்டிருக்கலாமோ" என சாமியார் ஒரு கணம் யோசித்தார். 

இல்லை சொல்லத்தான் வேணும்.என்ன குரங்குச்சேட்டை.அதுகும் சாமியாரின் கண்ணுக்கு முன்னால!

படம் முடியுறதுக்கு பத்து நிமிசத்துக்கு முன்னமே அவை ரண்டுபேரும் எழும்பி வெளியில வந்தினம். சாமியார் பின் தொடர்ந்தார்.

ரண்டு பேரும் சின்னப்பிள்ளைகள் விளையாடுற இடத்தில போய் துவக்கு சுட்டு விளையாடிச்சினம்.

"கொஞ்சம் பொறு ராசா . உன்ர கொத்தான் வந்து இப்ப உனக்கு சுடுவான்" எண்டு சாமியார் மனசுக்குள் நினைச்சார்.

"தம்பி டக்கெண்டு வாங்கோ . ஆக்கள் ரண்டுபேரும் எஸ்கேப் ஆகப்பாக்கினம்" சாமியார் சொல்லி வாய் மூடவில்லை பொடியன் முன்னுக்கு வந்து நிண்டான்.

"சாமியார் ஆக்கள் எங்க?"

பொடியன் துணைக்கு இன்னொருத்தனையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தான்.

"உந்தா உதுக்குள்ளதான் நிக்கினம்" சாமியார் காட்டிக்குடுத்தார்.

சொல்லிப்போட்டு சாமியார் கொஞ்சம் விலத்தி நிண்டார். ஏன் வீண் பிரச்சினை!

உள்ள போய் அவரை குமுறும் போது எப்பிடியும் சத்தம் வரும் அப்ப போய் விலக்குப்பிடிப்பம் எண்டு நினைச்சார் சாமியார்.

போய் கொஞ்சநேரமாக ஒரு சத்தத்தையும் காணயில்லை.

என்னடா நடக்குது எண்டு எட்டிப்பாத்தார் சாமியார்.

எல்லாரும் ஒண்டா நிண்டு சிரிச்சுக்கொண்டு நிண்டாங்கள்.

"என்ன கேவலம் கெட்ட குடும்பமடா" எண்டு சாமியாருக்கு பத்திக்கொண்டு வந்தது.

"சாமியார் வாங்கோ இங்க" கூப்பிட்டாங்கள்.

"சாமியார் இது என்ர தங்கச்சி. நீங்கள் மாறி பிழையா நினைச்சுப்போட்டியள்" சிரிச்சுக்கொண்டே பொடியன் சொன்னான்.

சாமியார் வடிவா பெட்டையின் முகத்தை கிட்டவா உத்துப்பாத்தார். 

கலியாணவீட்டு போட்டோவில நிண்ட பிள்ளைக்கும் இந்த கறுப்பிக்கும் சம்பந்தமே இல்லை!

ஊரில உள்ள கலியாணவீட்டு "மேக்கப்காறியள்" ஆரும் அந்த நேரம் சாமியாரின் கையில அம்பிட்டு இருக்கவேணும். கொலைசெய்திருப்பார்!

பிளடி பனங்கொட்டைஸ்!!!

#சனிக்கிழமைசாமியார்


Comments System

Recent Posts Widget

Facebook Badge