திங்கள், பிப்ரவரி 15, 2021

சனிக்கிழமைசாமியாரும் மோட்டச்சைக்கிளும்

2004 ஆம் ஆண்டு குத்துமதிப்பா ஆனி மாதம் ஒரு மாலைப்பொழுது!

சாமியார் "Bajaj கலிபர் 115" இல கொடிகாமச்சந்தியை தாண்டும் போது பின்னேநேரம் 5 மணி இருக்கும்.

மினிபஸ் ஒண்டு காது கிழிய "கோண்" அடிச்சுக்கொண்டு முடக்கால திரும்பி சாமியாரை முந்திச்சென்றது.

டீசல் வாசம். சாமியாருக்கு ஒத்துக்கொள்ளாது.சத்திவாறமாதிரி ஓங்காளிச்சுக்கொண்டு வந்தது.

சாமியார் மோட்டச்சைக்கிளை ஓரமாக நிப்பாட்டி விட்டு றோட்டுக்கரையில "ஓ...க்" எண்டு சத்தி எடுத்தார்.

தலை சுத்திக்கொண்டு வந்தது. பேசாமல் திரும்பிவீட்ட போவமோ எண்டு நினைச்சார் சாமியார்.

சாமியாரின் புத்தி "திரும்பி பருத்தித்துறைக்கே போ" எண்டு சொன்னாலும்; 
சாமியாரின் சின்ன மனசு "இல்லை ஆழியவளைக்கு போ" எண்டது.

கடைவாயில வழிஞ்ச "சத்தியை" பிறங்கையால் வழிச்சு ஜீன்சின்ர பிறப்பக்கம் துடைச்சுப்போட்டு;

மீண்டும் சாமியார் பயணத்தை தொடர்ந்தார்.

மிருசுவில் சந்திக்கு கிட்ட ஆமிக்காரன் மறிச்சு;
எங்க போறாய் எண்டு கேட்டான்.

சாமியார் ஊருக்கு போறன் எண்டு சொன்னதும் போ எண்டு விட்டுவிட்டான்.

"ஏன் போறாய்" எண்டு கேக்கயில்லை!

மிருவிலுக்கும் எழுதுமட்டுவாளுக்கும்  இடையில் போகும் போது;

மழை சொட்டுச்சொட்டாய் துமிக்க ஆரம்பிச்சுவிட்டது.

தார் றோட்டில மழை துமிக்கும் போது மோட்டச்சைக்கிள் டக்கெண்டு சறுக்கும்.

இருட்டுறதுக்கு முன்னம் "பாத்துவிடவேணும்".கெதியாப்போனால்த்தான் வெளிச்சத்தில பாக்கலாம். அதுகும் எத்தினையோ வருசத்துக்கு பிறகு முதல் முதலா இருட்டில பாத்தால் நல்லா இருக்காது எண்டு சாமியாரின் மனசு சொன்னது.

எழுதுமட்டுவாள் ஆமிக்காம்பை தாண்டும் போது " செக்பொயின்ற்றில்" நிண்ட ஆமிக்காரன் சாமியாரை மறிக்கவில்லை.
பக்கத்தில் நிண்ட ஆமிக்காரியோடை அவர் கடலைபோட்டுக்கொண்டு நிண்டதால சாமியாரை போகச்சொல்லி கையசைச்சான்.

மழை தூறிக்கொண்டேயிருந்தது!

ஆமிக்காம்பை தாண்டினால் ஒரு வெளி. றோட்டில ஒருத்தரும் இல்லை.

ஆமி போட்ட A9 தார் றோட்டில் சாமியார் "கலிபர்115" ஐ முறுக்கினார்.

மோட்டச்சைக்கிளின் வேகமுள், 100km ஐ தொட்டு தொட்டு விளையாடிக்கொண்டிருந்தது.

சடீர் எண்டு ஒரு சத்தம்!!!

குறுக்கால ஒரு நாய். பிறேக் அடிக்க நேரம் காணாது. மோட்டச்சைக்கிளில் மோதிய நாய் பின்வளமாக கத்தியபடி வீதியில் சறுக்கியது. மோட்டச்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாமியார் தார் றோட்டில் சறுக்கியபடி ஒரு 20மீற்றர் போயிருப்பார்.

மோட்டச்சைக்கிள் 50 மீற்றர் தூரத்துக்கு அப்பால் றோட்டோரமாய் இருந்த பத்தைக்குள் கொழுவுப்பட்டு இருந்தது.

சாமியாருக்கு தன்ர மோட்டச்சைக்கிள் எண்டால் உயிர்.அது சாமியாருக்கு அவர் அப்பா வாங்கிக்குடுத்த சைக்கிள்.

ஓடிப்போய் மோட்டச்சைக்கிளை தூக்கி நிமித்தினார்.
பம்பர் கம்பி பூட்டி இருந்ததால்;
சைற்றில சாதுவான கீறல் மட்டும் தான். சைற் கண்ணாடியின் ஓரத்திலும் ஒரு கீறல்.

அந்த நாய் ஒண்டும் நடவாதது போல தன்ரபாட்டில எழும்பி போய்க்கொண்டிருந்தது.

சாமியாருக்கு வந்த ஆத்திரத்துக்கு ஒரு கல்லை எடுத்து அந்த நாய்க்கு படத்தக்கனையா  எறிஞ்சார். அது படவேயில்லை. அந்த நாயும் கல்லை கவனிக்கவேயில்லை.

சாமியாருக்கு முழங்காலில் அடி. பின் ஜீன்சில் ஒரு கொஞ்சம் உரைஞ்சுப்பட்டு உள்ளாடைவரை கிழிஞ்சு போய் இருந்தது.சாதுவா ரத்தம். லேசாக வலி. முழங்கால்தான் விசுக்கு விசுக்கு என்று குத்தியது.

ஜீன்சுக்குள் அழகாய் விட்ட "மாட்டீன்" சேட்டை எடுத்து வெளியே விட்டார்.
பின்பக்க ஓட்டையை சேட்டு மறைத்தது.

முகமாலையை போய்ச்சேர பின்னேரம் 5:30 ஆகிட்டுது. ஆமிக்காரங்களின் கடைசி செக்பொயின்ற். தாண்டினால் இயக்க கட்டுப்பாடு.

6 மணிக்கு பாதை பூட்டு. சாமியார் மட்டுமட்டாக வந்து சேர்ந்தார்.

கொஞ்சம் பிந்தினால் திரும்பி பருத்தித்துறைக்கு போயிருக்கவேண்டி வந்திருக்கும்.

சாமியார் அம்மான்ர கதையை கேட்டு ஒரு "முடிவோடதான்" வெளிக்கிட்டவர். அம்மாக்கு சொல்லிப்போட்டுத்தான் வெளிக்கிட்டவர். பாக்காமல் திரும்பி போனால் அவமானம்.

ஆமிக்காரங்கள் பாதை பூட்டுற நேரம் எண்டதால பெரிசா "செக்கிங்" இல்லை.

இயக்க கட்டுப்பாட்டுக்குள் போற ஆக்களைப்பற்றி அவங்கள் பெரிசா அலட்டிக்கொள்ளவில்லை.

முகமாலையில் நிண்ட கடைசி ஆமிக்காரனுக்கு சிங்களத்தில் நன்றி சொல்லிவிட்டு;

இயக்கத்தின்ர கட்டுப்பாட்டுக்குள் சாமியார் போகும் போது 6 மணி இருக்கும். 

7:30 இக்கு இருட்டுப்பட்டுவிடும். இருள முதல் போயிடவேணும். சாமியாருக்கு அவசரம்.

"பாஸ்" எடுக்கவேணும். வரிசையில் நின்றார் சாமியார். நீண்ட வரிசை. ஆமை வேகத்தில் தான் சனம் நகர்ந்துகொண்டிருந்தது.

திடீரெண்டு ஒரு இயக்கப்பிள்ளை சாமியாரிடம் வந்து;
"அண்ணை கொஞ்சம் 7 ஆம் இலக்க கொட்டிலுக்கு வர ஏலுமோ?" எண்டு கூப்பிட்டுது.

இவ்வளவு பேரும் லைனில நிக்கும் போது ஏன் சாமியார் மட்டும் கொட்டிலுக்கு எண்டு யோசிப்பியள்?

சாமியார் வைச்சிருந்த "பொண்டிங் தாடி" சாமியார் கொழும்பு பக்கம் இருக்கிறதை காட்டிக்கொடுத்துவிட்டது.

7 ஆம் நம்பர் ஓலைக்கொட்டில். ஒரு மேசை. எதிரேதிரே ரண்டு கதிரை.

சுவரில் தேசியத்தலைவரின் படம் கம்பீரமாக தொங்கிக்கொண்டிருந்தது. இடதுபக்க மூலையில் கடிகாரம். 

"அண்ணை வணக்கம். இருங்கோ"

சிரிச்ச முகம். பொதுநிறம். நேர்த்தியாக உச்சி புறிச்சு இழுத்த தலை. இடுப்பில் கறுப்பு பட்டி. பொக்கற்றில் சிவத்தப்பேனையும் கறுத்தப்பேனையும் இருந்தது.

கழுத்தில் கட்டப்பட்ட கறுப்பு கயிறில் குப்பி. அது இன்னொரு பொக்கற்றுக்குள் இருந்தது.

"எங்க இருந்து வாறியள்?" என்ற கேள்வியில் ஆரம்பிச்சு; 

"கொழும்பில் எங்க படிக்கிறீங்கள்?" வரை கனக்க கேள்விகள்.

சாமியார் சுவரில் தொங்கிய மணிக்கூட்டைப்பார்த்துக்கொண்டேயிருந்தார். சின்ன முள்ளு 6 இலும் பெரிய முள்ளு 3 இலும் நின்றன.

போராட்டத்தின் நியாயங்களையும், சிங்களப்பேரினவாதத்தின் அடக்குமுறைகளையும் பற்றி;

அந்தப்பிள்ளை சாமியாருக்கு சொல்லிக்கொண்டிருந்தது. 

வழமையாகவே ஆறுமுகம் ரீச்சரின் சமூகக்கல்வி பாடத்துக்கு கொப்பியுக்குள்ள ராணி காமிக்ஸ் வைச்சு படிச்ச சாமியாருக்கு;

சமூகக்கல்விக்கும் வரலாறுக்கும் OL இல அதிவிசேட சித்தி.

சாமியாரின் மண்டைக்குள்ள "கனக்க" இருக்கு.

அந்த அக்கா சொல்லுறது முக்கியமான விடயங்களாக இருந்தாலும்;

அதை பொறுமையாக இருந்து கிரகிச்சு கேக்கும் நிலையில் சாமியார் இல்லை.

சாமியாரின் கவனம் முழுக்க மணிக்கூட்டிலேயே நின்றது. இருளக்குமுதல் ஊருக்கு போயிடவேணும்.

"எங்க போறியள்?"

"ஆழியவளைக்கு"

"ஏன்? "

"____"

சாமியார் சொன்ன பதிலைக்கேட்டு அந்தப்பிள்ளை ஒண்டும் கதைக்கவேயில்லை.

"நானும் உங்கட ஊர்தான்"

"ஓ எவடம்? "

"உடுத்துறை" என்றது அந்தப்பிள்ளை.

"நீங்கள் விஜயகுமார் சேரின்  தம்பியா?"

"ஓம். என்னண்டு அண்ணாவை தெரியும்?" சாமியார் ஆச்சரியமாக கேட்டார்.

"தெரியும். நீங்கள் போகலாம். அனுமதிப்பத்திரத்தை நிரப்பிக்குடுத்துவிட்டு போங்கோ"

சாமியார் விட்டால் காணும் எண்டு;
ஓடிப்போய் அனுமதிப்பத்திரத்தை(pass) அவக் அவக்கெண்டு நிரப்பி குடுத்துவிட்டு;

மோட்டச்சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடினார்.

கொஞ்சத்தூரம் போறதுக்கிடையில்;
ஒரு அண்ணை மறிச்சு....

"அண்ணை என்னை ஒருக்கால் புதுக்காட்டு சந்தியில் இறக்கிவிட ஏலுமோ?" 

என்று சாமியாரைக்கேட்டார்.

சாமியார் அந்த அண்ணையையும் ஏத்திக்கொண்டு பயணத்தை தொடர்ந்தார்.

அந்த இயக்கப்பிள்ளை கேட்ட அதே கேள்விகளை அந்த அண்ணையும் கேட்டார். 

புதுக்காட்டு சந்தியில இறக்கச்சொன்ன அண்ணை இத்தாவில் சந்திக்கு கிட்ட இருந்த இயக்கப்பொடியளின் முகாமுக்கு அண்மையில் இறங்கினார்.

இத்தாவில்லதான் சாமியாருக்கு மாமி ஒராள் இருக்கிறா.
"இத்தாவில் மாமி" எண்டு செல்லமாக கூப்பிடுவார்.
வதனி மச்சாள் சாமியாரில் விருப்பம்.
ஊருக்கு வரும்போது கண்டோஸ் வாங்கி வராமல் வந்ததேயில்லை.

சாமியாருக்கு இத்தாவில் மாமி வீட்ட  போக ஆசைதான். ஆனால் இண்டைக்கு அதுக்கு நேரமில்லை.சாமியாருக்கு மிக முக்கியமான "வேற அலுவல்" இருக்கு.

பளையில சாமியாரின் மாமா ஒராள் கடை வைச்சிருந்தவர். மாமாவிடம் ஒரு அலுவலை கேட்டு வரச்சொல்லி சாமியாரின் அப்பா சொல்லிவிட்டவர்.

ஆனால் இப்ப சாமியாருக்கு நேரமில்லை. வரும்போது அந்த அலுவலைப்பாப்பம் எண்டு முடிவெடுத்து சாமியார் மோட்டச்சைக்கிளை முறுக்கினார்.

புதுக்காட்டுச்சந்தி!

சந்தியில் உள்ள தேத்தண்ணிக்கடையில் "தமீழீழ வானொலி" பெருசா ஒலித்துக்கொண்டிருந்தது.

வழமையாக அந்தக்கடையில் மோட்டச்சைக்கிளை நிப்பாட்டி ஒரு தேத்தண்ணியும் வாய்ப்பனும் தின்னாமல் சாமியார் போனதில்லை. ஆனால் இண்டைக்கு சாமியாருக்கு நேரமில்லை.

மோட்டச்சைக்கிளின் வேகத்தை குறைத்து மடக்கி வெட்டினார் சாமியார். 

கொஞ்சத்தூரம் போனதும் ஆழியவளைக்கு போகும் தமிழீழ போக்குவரத்து கழக பஸ்சுக்கு காவலுக்கு சனம் காத்துக்கொண்டிருந்தது.

ஆரும் தெரிஞ்சாக்கள் கண்டால் கட்டாயம் ஏத்திக்கொண்டுபோகச்சொல்லி கேப்பினம் எண்டு சாமியாருக்கு தெரியும்.

"கேட்டால் மாட்டன்" எண்டும் சொல்லேலாது. 

சாமியார் ராங்கில் வைச்சிருந்த ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டினார். முகத்தை மூடிக்கொண்டார்.

சாமியார் நேரத்தைப்பார்த்தர்.
ஏழுமணி!!!

இருளக்குமுதல் ஆழியவளைக்கு போய்விடலாம் என்ற நம்பிக்கை போய்விட்டது சாமியாருக்கு...!!

இருந்தாலும் மண்டலாய்ப்பிள்ளையாரை நினைச்சு கும்பிட்டுவிட்டு;

மோட்டச்சைக்கிளை முறுக்கினார் சாமியார். சாமியாரின் கவலையை புரிந்துகொண்ட bajaj கலிபர் 115;

மாயாவியின் குதிரை போல சிட்டாய் பறந்தது.

சனிக்கிழமைசாமியார் மருதங்கேணிச்சந்தி தாண்டி நாவலடியால மோட்டச்சைக்கிளை திருப்பும் போது;

வயதுபோன ஆச்சி ஒண்டு மறிச்சு "தம்பி உதில அஞ்சாம்மனைப்பிள்ளையார் கோயிலடியில இறக்கிவிடப்பு. புண்ணியம் கிடைக்கும்" எண்டு கேட்டா.

"எணை அம்மம்மா கவனமா பின் காண்டிலை இறுக்கிப்பிடிச்சுக்கொண்டிரு" எண்டார் சாமியார்.

அம்மம்மாவின் "கம்பஸ் பாக்கை" வாங்கி மோட்டச்சைக்கிளின் முன்னுக்கு கொழுவினார் சாமியார்.

"தம்பி ஊரில எவடம் ராசா? ஆற்ற மோன் நீ"

"நான் ஆழியவளை"

"கொப்பான்ர பேர் என்னப்பு?"

அப்பான்ர பேரை விட அப்புவின் பேரைச்சொன்னால் தான் கிழவிக்கு புரியும் எண்டு நினைச்சார் சாமியார்.

"நான் பெரியதம்பியின்ர பேரன்"

"ஐயோ என்ர குஞ்சு. பெரியாம்பி அத்தான்ர பேரனோ நீ?"

"ஓமணை . அப்புவுக்கு சொந்தமோ நீ?"

"சொந்தமோ? இரத்த உறவடா ராசா. உன்ர கொப்புவின்ர கொப்பாவும் என்ர அம்மாவும் ஒருவகையில சகோதரம்"

இதுக்கு மிஞ்சு உறவுமுறை கேட்டால் சாமியாருக்கு தலை சுத்திப்போடும்.

"கொப்பா எப்பிடி சுகமாய் இருக்கிறானோ? அவனைக்கண்டு கனகாலம்"

இடப்பெயர்வு சொந்தங்களை பிரித்துவைத்திருந்தது. 

ஆச்சியை அஞ்சாம்மனைப்பிள்ளையார் கோயிலடியில் இறக்கிவிட்டார் சாமியார். கிழவி சாமியாரை தேத்தண்ணி குடிச்சுவிட்டு போகசொல்லி ஒரே அரிகண்டம். 

சாமியார் ஒருமாதிரி கெஞ்சிமண்டாடி தப்பி ஓடினார்.

பிள்ளையாருக்கு பக்கத்தில் "சின்ன முருகன் கோயில்"!

சாமியாரின் பரம்பரைக்கோயில் அது.

பிள்ளையாரோட கோவிச்சுக்கொண்டு முருகன் கோயிலை அப்புவும் அவற்ற சகோதரங்களும் கட்டின கோயில்.

அது பெரிய கதை. பிறகு பாப்பம்.

நிண்டபடியே " முருகா" எண்டு இரண்டு கையையும் தலைக்குமேல தூக்கி கும்பிட்டுவிட்டு;

சாமியார் தன்ர அலுவலுக்கு ஓடினார்.

முதல்ல ஆற்ற வீட்ட போவம். 

தம்பித்துரை இளையய்யா வீட்ட போவம். இளையம்மான்ர கையால ஒரு தேத்தண்ணி குடிச்சால்த்தான் வந்த களைப்பு தீரும்.

இளையம்மா நாலு கறண்டி சீனி போட்டு குண்டுக்கோப்பையில முட்ட முட்ட தாற தேத்தண்ணி அமிர்தம்!

அதுகும் வெள்ளை குருகு மண்ணில காலை நீட்டி இருந்து குடிச்சால் தனிசுகம்.

இளையம்மா வீட்டு படலையடியில் மோட்டச்சைக்கிளை விட்டுப்போட்டு;

உள்ள போனார் சாமியார்.

வீட்டில ஒருத்தரும் இல்லை.

நாலைஞ்சு தரம் சாமியார் கூப்பிட்டும் பாத்தார் ஒருத்தரும் இல்லை.

"அவையள் கிளிநொச்சி போட்டினம். உவள் தங்கச்சி தான் நிண்டவள். கிளியாச்சி வீட்ட போயிருப்பாள்"

அதால போன மனிசி ஒண்டு சாமியாருக்கு தகவல் சொல்லியது.

பக்கத்திலதான் வீடு. சாமியார் நடந்தே போனார்.

வாசலில் ஒரு நாய் உறுமியது. சாமியார் ஹெல்மெட்டை எடுத்து உறுக்கினார். அது அடங்கி மற்றப்பக்கமாய் சுருண்டுப்படுத்தது.

வெளியில ஒரு "லேடிஸ் சைக்கிள்" மட்டைவேலியில் சாத்தியிருந்தது.

"வீட்டுக்காரர்...வீட்டுக்காரர்" சாமியார் கூப்பிட்டார்.

முற்றத்தில் ஒரு சேவல் பேட்டுக்கோழியை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது.

"ரமணன் அண்ணா..."

தங்கச்சி ஓடி வந்து கட்டிப்பிடிச்சு கொஞ்சினாள். கனகாலம் அவளைக்கண்டு! 
கொஞ்சம் உடம்பு வைச்சு நெடுத்திருந்தாள்.

"மாமி ரமணன் அண்ணா வந்திருக்கிறான்" தங்கச்சி சந்தோசத்தில் கத்தினாள்.

கிழவிக்கு சாமியாரில் சரியான விருப்பம். 

வெத்திலை வாயோட  கட்டிப்பிடிச்சு கொஞ்சியது. அதில் ஒரு ஆழமான பாசம் இருந்தது.

சாமியார் முற்றத்தில் மண்ணில் இரு காலையும் நீட்டி சுவரோடு முதுகைச்சாய்த்து இருந்தார்.

தங்கச்சி குசினிக்குள் ஓடினாள் சாமியாருக்கு தேத்தண்ணி வைக்க!

"எனக்கு மாப்போடாமல் பிளேன்ரீ தாடி" சாமியார் தங்கச்சிக்கு உரத்துச்சொன்னார்.

தங்கச்சியையும் கிழவியையும் தவிர இன்னும் ஒராள் அங்க நிற்பதாய் சாமியாரின் உள்ளுணர்வு சொன்னது.

வெளியில "லேடிஸ் சைக்கிள்" !

ஆற்றையா இருக்கும்?

சாமியாருக்கு ஒரு ஆர்வக்கோளாறு.

"அவளின்ர சைக்கிளா இருக்குமோ?" 
சாமியாரின் பிடரிக்கு பின்னால நாலைஞ்சு வண்ணத்துப்பூச்சிகள் பறந்தன!

முற்றத்தில் மேய்ஞ்சுகொண்டிருந்த சேவலையும் பேட்டுக்கோழியையும் காணவில்லை!

குசினிக்குள் தங்கச்சி ஆரோடையோ குசுகுசுத்து பேசும் சத்தம் சாமியாரின் பாம்பு காதுகளுக்கு கேட்டுவிட்டது.

சாமியாரின் இதயத்துடிப்பு சாதுவா வேகமாக அடிக்கத்தொடங்கியது.

6 வயசில கடைசியாய் பாத்தது. இப்ப அவளுக்கு 18 வயது.

எப்பிடி இருப்பாள்?

"அவள் நல்ல வடிவு" எண்டு சாமியாரின் அம்மா சொன்னதைக்கேட்டுத்தான் உந்தளவு தூரம்;
சிக்கல்பட்டு வந்தவர் சாமியார்.

சாமியார் நித்திரை எண்டு நினைச்சு;
சாமியாரின் அம்மாவும் அப்பாவும் பேசினதுகளை சாமியார் கேட்டுக்கொண்டு கிடந்தார்.

"எங்களுக்கு விருப்பம். இனி இவன் என்ன சொல்லுறானோ தெரியாது. கேட்டால் ஏசுவான். போய்ப்பாத்தான் எண்டால் ஓம் எண்டு சொல்லுவான்" எண்டு அம்மா சொன்னதுதான் சாமியாரின் ஆவலைத்தூண்டியது.

அவள் மச்சாள்தான். அவளுக்கு பேர் வைச்சதே சாமியாரின் அண்ணாதான். 

சின்னனில் இருந்தே மாமிக்கும் மாமாவுக்கும் சாமியாரில் "ஒரு கண்"!

ஏனெண்டால் சாமியார் சின்னனில் வலு குழப்படி. ஆளும் கொஞ்சம் வெள்ளை. வடிவு !!!

காலகஸ்ரம் வந்து ஒரு காணிப்பிரச்சினையால இரண்டு குடும்பமும் பிரிஞ்சுபோகவேண்டிய நிலை வந்தது. ஊரில இருந்தால் பிரிஞ்ச குடும்பங்கள் ஒண்டாகியிருக்கும்.

ஆனால் இடப்பெயர்வு இரண்டு குடும்பத்தையும் தூரமாக்கியது.

 வன்னிக்கும் பருத்தித்துறைக்கும் இடைவெளி அதிகமாகியது.

சாமியாரின் அண்ணா வன்னிக்குள் இருந்ததால் அவன் இடைக்கிடை போய்;
உறவை அறுந்துவிடாமல் வைத்துக்கொண்டான்.

ஆனால் சாமியார் 12 வருசமாக பாக்கவேயில்லை.

6 வயதில பாத்த மச்சாள் 18 வயதில எப்பிடி இருப்பாள் எண்ட ஆர்வத்தில தான் விழுந்தெழும்பி சாமியார் ஓடி வந்தவர்.

மட்டைவேலியில் ஒரு அணிலை இன்னொரு அணில் விட்டுத்துரத்திகொண்டு ஓடியது.

" ரண்டுபேரும் என்னடி உதுக்குள்ள குசுகுசுக்கிறியள்? தேத்தண்ணியை கொண்டு வாங்கோடி" கிழவி கத்திச்சொன்னது.

ரண்டுபேரா? ஆரது உள்ளுக்குள்ள!!!

ஒரு வேளை அவளா இருக்குமோ?

அவளா இருந்தால்....!
சாமியாரின் மனம் அங்கலாய்த்தது.

சாமியார் கிணத்தடியில் போய் முகத்தை கழுவி பொக்கற்றுக்குள் இருந்த லேஞ்சியால் துடைத்தார்.

பொக்கற்றுக்குள் இருந்த சின்ன கறுத்த சீப்பை நடுவிரலில் கொழுவி;
ஸ்ரைலா தலையை மேவி
இழுத்துக்கொண்டார்.

கிணத்து தண்ணீர் சில்லென்று குளிராய் இருந்தது.

சாமியார் கிணத்தடியில் நிண்டு கொண்டே சாதுவாய் குசினியை எட்டிப்பபார்த்தார்.

குசினியை சுற்றி வரிஞ்சு கட்டிய பனம்மட்டை இடுக்குக்குள்ளால "கிளியரா" ஒண்டும் தெரியவில்லை.

மீண்டும் சாமியார் வந்து முற்றத்தில் இருந்தார்.  

தங்கச்சி மட்டும் வெளியால தேத்தண்ணியோட வந்தாள்.

"இந்தா அண்ணா" தந்துவிட்டு சாமியாரின் அருகில் இருந்தாள் தங்கச்சி.

"உவள் உதுக்குள்ள குசினியுக்குள்ள என்ன முட்டை இடுகிறாள். வெளிய வா" கிழவி புறுபுறுத்தது.

முத்தத்தில் நிண்ட எக்ஸ்சோறா பூவில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் தேன்குடித்துக்கொண்டிருந்தன.

தேத்தண்ணி சரியான இனிப்பு. 

"அடியே ஏன்ரி இவ்வளவு இனிப்பு போட்டனீ" சாமியார் தங்கச்சியின் காதில் திருகினார்.

"நான் போடயில்லை தேத்தண்ணி"

"அடியே என்ர தேத்தண்ணியை கொண்டு வா" கிழவி கூப்பிட ;

குசினி படலை திறந்து உள்ளே இருந்து அவள் வந்தாள்.

சிவத்த புள்ளிபுள்ளி பூச்சட்டை!
சைற்றால உச்சிபுறிச்சு  ரட்டைப்பின்னல். 

பொது நிறம். சாமியாரின் தோளளவு உயரம்!

நெத்தியில் ஒரு ஸ்ரிக்கர் பொட்டு.

திடீரெண்டு மழைத்துளி. அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழுந்தது.தூரத்தே வானவில்!

அவள் தான். இருந்தாலும் ஒரு டவுட்டு. 
"ஆராவது பேரைச்சொல்லி கூப்பிடுங்கோ" எண்டு சாமியார் மனசுக்குள் கெஞ்சினார்.

தங்கச்சிக்கு சாமியார் படும் அந்தரம் விளங்கிவிட்டது.

"அகிலா அக்கா உங்கட சைக்கிள் மழையுக்குள்ள நனையப்போகுது. உள்ள விடுங்கோ" என்றாள்.

அவளேதான்!

எவ்வளவு வளந்திட்டாள். 

சாமியாரை திரும்பிபாக்காமலே தேத்தண்ணியை கிழவியிடம் குடுத்துவிட்டு;

"நான் வீட்ட போறன் அம்மம்மா" என்றாள்.

சாமியார் வைச்ச கண் எடுக்காமல் அவளையே பார்த்தார்.

அவள் தன்னை பாக்கமாட்டாளோ என்று மனம் ஏங்கியது.

கல்நெஞ்சக்காரி பாக்கவேயில்லை.

சாமியார் இவ்வளவு தூரம் கஸ்ரப்பட்டு வந்து அஞ்சுசதத்து பிரயோசனமும் இல்லை. 

முற்றத்தில் சேவல் மட்டும் எதையோ கிழறி கிழறி தேடியது. கூட நிண்ட பேட்டுக்கோழியை காணவேயில்லை!


#சனிக்கிழமைசாமியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge