திங்கள், பிப்ரவரி 15, 2021

🧔சனிக்கிழமைசாமியாரும் சாறியும்!!!

அவுஸ்திரேலியாவில் கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. இனிமேல் சனிக்கிழமைகளில் ஒரே கொண்டாட்டம்தான். 

பொதுவாக ஒவ்வொரு சனியும் ஏதாவது ஒரு விசேசம் வரும். 

பிறந்தநாள் , கலியாணவீடு, சாமத்தியவீடு என்று தனியாக புறம்பாக அதுக்கெண்டு உழைக்கவேணும்.

நெருங்கின ஆக்கள் எண்டா 100$ . கொஞ்சம் தூரத்து சொந்தம் எண்டால் 50$ குடுத்தாத்தான் மரியாதை.

சனிக்கிழமைசாமியார் கடந்த 10 வருசமா குடுத்ததை கணக்குப்பாத்தால் எப்பிடியும் இலங்கை காசுக்கு 20 லச்சத்துக்கு கூடத்தான்.

சாமியார் வாங்கினது ரண்டுதரம் தான்.

குட்டிச்சாமியாரின் முதலாவது பிறந்தநாளை இந்தமுறை செய்யாமல் தவிர்த்துவிட்டோம்.

குட்டிச்சாமியார் பிறந்தது மேமாதம் எண்டதால அந்த மாதத்தில் பிறந்தநாளை செய்வதில்லை என்ற முடிவு எடுத்தாச்சு. காரணம் மேமாதம் எண்டது "வலி சுமந்த மாதம்"!

குட்டிச்சாமியார் வளந்து " ஏன் மேமாதத்தில் என்ர பிறந்தநாள் செய்யுறதில்லை" எண்டு கேள்வி கேட்டால் அவனுக்கு கனவிசயங்களை சொல்லவேணும்.

இந்தமுறை ஏப்ரலில் பிறந்தநாள் செய்வம் எண்டு நினைச்சு அடுக்கெடுத்தால் அதுவும் ஒரு சில காரணங்களால் பிழைச்சுப்போட்டுது.

பறுவாயில்லை அடுத்தமுறை ரண்டாவது பிறந்தநாளை ஊரில செய்வம் எண்ட பிளானில இருக்கிறார் சாமியார்.

குட்டிச்சாமியாரின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் 1000 மரங்களை ஊரில் நடவேணும் எண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேரகாலம் கூடி வந்தால் வாற ஏப்ரலுக்கு ஊரில் குட்டிச்சாமியாரின் ரண்டாவது பிறந்தநாள் ஊரில செய்யும் போது 1000 மரங்கள் நடப்படும்.

குட்டிச்சாமியார் வளந்து பெரியாள் ஆகும் போது அவன் தன்ர கையால வருசாவருசம் ஒவ்வொரு ஊரிலும் 1000 மரங்களை நடுவான் எண்ட நம்பிக்கை சனிக்கிழமை சாமியாருக்கு இருக்கிறது.

இதற்கு குட்டிச்சாமியாரின் அம்மா (ஆதீனம்) முழுச்சம்மதம் குடுத்திருக்கிறா.ஏனெண்டால் அவாதானே நிதி அமைச்சர்.

உப்பிடித்தான் போன கிழமை ஒரு கலியாணவீடு.

முதல் நாள் இரவு சனிக்கிழமைசாமியார் பிக்பொஸ் பாத்துக்கொண்டிருந்தார்.

" இஞ்ச உந்த கோதாரியை பாக்குறதை விட்டுப்போட்டு என்ர சாறியை ஒருக்கா பிளீட்ஸ் பிடிச்சு அயின் பண்ணி வையுங்கோ" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிக்பொஸ் நிகழ்ச்சியில் செரின் கட்டின சாறியை ஆவெண்டு பாத்துக்கொண்டிருந்த சாமியாருக்கு இது ஒரு தண்டனை.

மனிசிமாரின் சாறியை அயின் பண்ணாத புருசன்மார் உலகத்தில் இல்லை. சாமியாரும் விதிவிலக்கல்ல!

"எந்த சாறியை அயின் பண்ணுறது?" 

"நீலக்கலர் சாறி இருக்கு . அதை எடுத்து அயின் பண்ணுங்கோ"

சாமியார் ரண்டு சூட்கேஸுகளையும் கிண்டிக்கிழறி அதுக்குள்ள நீந்தி ஒருமாதிரி நீலக்கலர் சாறியை கண்டெடுத்தார். 

அந்தச்சாறியை நெஞ்சோட அணைச்சு எடுத்து வந்து அயின் பண்ணிக்கொண்டிருக்கும் போது;

"எதை அயின் பண்ணுறியள்? என்னைக்கேக்கத்தெரியாதே! உந்த நீலம் இல்லை. மற்ற நீலம். மயில் டிசைனில இருக்கு"

"ஏன் இதுக்கென்ன குறை?" சாமியாருக்கு ஆத்திரம் வந்தது.

"உந்த நீலம் போனமாதம் மோகன் அண்ணைவீட்டு பிறந்தநாளுக்கு கட்டினது. அது கூட நினைவில்லை. என்னைப்பாக்காமல் வாற ஆக்களின்ர வாயைப்பாத்தால் உப்பிடித்தான்!"

எந்த எந்த நிகழ்வுக்கு மனிசி என்ன கலர் சாறி கடினவள் எண்டதை 38 வயதிலயும் ஞாபகம் வைச்சிருக்கவேணும். இல்லையோ வீண் பிரச்சினைகள் வரும்.

"மோகண்ணையின் பிறந்தநாளுக்கு வந்த சனம் இங்க வராது. அதையே கட்டுமன். உனக்கு இந்த நீலம் வடிவா இருக்கும்"
ஆதினத்துக்கு என்ன கலர் சாறி கட்டினாலும் வடிவுதான்.அதை சாமியார் வெளிப்படையாக மனிசிக்கு சொல்வதில்லை.சொல்லோணும் நினைப்பார் அதுக்குள்ள ஏதேனும் கொழுவல் வந்திடும்.
உப்பிடித்தான் ஒரு நாள் சாமியார் வாய் தடுமாறி ஒருபேரைச்சொல்லி ;
"அவாவை விட நீ வடிவு " எண்டார்.

"அப்ப அந்த கலியாணவீட்டில் நீங்கள் என்னைப்பாக்குறதை விட்டிட்டு அவாவைத்தான் பாத்தனியளோ?" எண்ட குதர்க்கமான கேள்விக்கு சாமியார் என்ன பதிலைச்சொல்ல???

"இந்த நீலம் உன்ர கலருக்கு எடுப்பா இருக்கும்"!
சாமியார் அயின் பண்ணுற பஞ்சியில் கெஞ்சினார்.

"அந்த சாறியோட நிண்ட போட்டோவை பேஸ்புக்கில போட்டாச்சு. எல்லாரும் பாத்திருப்பினம். இனி அது கட்டேலாது"

வெளிக்கிட்டுப்போட்டு பூமரத்துக்கு முன்னால நிண்டு போட்டோ எடுங்கோ எண்டு அரிகண்டப்பிடிச்சு அதை பேஸ்புக்கில போடவேணும். அது பெண்களின் நவீன சம்பிரதாயங்களில் ஒண்டு.

போட்டோ எடுத்துப்போட்டு உடன காட்டவேணும். பிழையெண்டால் திருப்ப திருப்ப எடுக்கவேணும்.அதுக்கு புருசன்மாருக்கு நிறைய பொறுமை வேணும். கலியாண கட்டினால் அது தன்னால வரும். வராட்டிலும் வரப்பண்ணிப்போடுவாகள்!!!

"இஞ்ச ஒண்டில் பெடியை வெளிக்கிடுத்துங்கோ. அல்லது நான் வெளிக்கிடுகிறதுக்கு உதவி செய்யுங்கோ"

சாமியார் வெளிக்கிடுவதைப்பற்றி சமூகம் கவலைப்படுவது மாதிரி தெரியவில்லை. சுயநலம் பிடிச்ச சமூகம் எங்கட சமூகம்.

"குந்தியிருந்து பிளிற்சை வடிவா லைனா பிடிச்சு விடுங்கோ. சீமானுக்கு ஏன் குனிய ஏலாமல் இருக்கோ?"

என்னதான் வீரமா நெஞ்சை நிமித்தி மேடையில் பேசுற சீமானும் மனிசியின்ர காலடியில் குனிஞ்சு இருந்துதான் பிளிற்ஸ் பிடிக்கவேணும்.

"தப்புறதுக்கு வாய்ப்பில்லை ராசா!"

ஒரு மாதிரி கஸ்ரப்பட்டு பிளிற்சைப்பிடிச்சு ....அப்பாடா முடிஞ்சுது எண்டு எழும்பினால்;

அடுத்தது.....

"இஞ்சை இந்த நெக்கிளசை கொழுவி விடுங்கோ"

"இந்த தோட்டு சுரையை பூட்டி விடுங்கோ"

"இந்த பிளவுசின்ர நூலை வடிவா ஸ்ரைலா பின்னால கட்டி விடுங்கோ"

"இந்த தொங்கலை வடிவா ஊசியால குத்தி விடுங்கோ"

ஊசி குத்தும் போது சாமியாருக்கு கை நடுக்கத்தில் முதுகில் சாதுவா குத்திப்போட்டார்.

"எனக்கு தெரியும் வேணுமண்டுதான் குத்தினனியள்.போங்கோ போய் பேஸ்புக்கை நோண்டுங்கோ. நான் என்ர பாட்டில வெளிக்கிடுறன்"

எல்லாம் செய்து முடிச்சாப்பிறகு இந்த ஏச்சையும் கேட்டுக்கொண்டு பேசாமல் போகவேணும்.

திருப்பி கதைச்சியள் எண்டால் சீலையை உரிஞ்சு எறிஞ்சுபோடுங்கள்.

பிறகு கலியாணவீடும் இல்லை.பெடியளோட சேந்து தண்ணி அடிக்கவும் ஏலாது.பம்பல் அடிக்கவும் ஏலாது.

பொறுமை... பொறுமை முக்கியம் ஆண்களே!

ஆ...ஆ....ஆண் நெடில் !!!

"எனக்கு என்ன உடுப்பு?" சாமியார் குழந்தைபெடி போல கேட்டார்.

"நல்ல ஒரு வேட்டியும் சேட்டையும் போடுங்கோ. எனக்கு மச்சிங்கா போடுங்கோ"

"நீலச்சேட்டு ஒண்டுதானே கிடக்கு. போன முறை ஊருக்கு போகயுக்குள்ள வாங்கினது. அதையே போடுறது?"
சாமியார் தெளிவுபடுத்திக்கொண்டார்.

"ஏன் அதைப்போட்டால் என்ன? இளந்தாரி எண்ட நினைப்போ? ஆரைப்பாக்க வாறியள்?"

தாங்கள் மட்டும் ஒருக்கா போட்டதை பிறகு போடமாட்டினம். ஆனால் ஆம்பிளைகள் மட்டும் வருசக்கணக்கா போடவேணும்.

காலக்கொடுமை.

1000 சீமான் வந்தாலும் இந்த பொம்பிளைகள் திருந்த வாய்ப்பில்லை ராசா!!!

எல்லாம் முடிச்சு வெளிக்கிடும் போதுதான் பொடியன் கக்கா போவான்.

"இஞ்சை அவனை ஒருக்கா கழுவுங்கோ.என்ர சாறி நனைஞ்சிடும்"

கட்டின வேட்டியை அவுத்துப்போட்டு யட்டியோட நிப்பார் சாமியார்.
வேட்டி நனைஞ்சுபோடும்.

நப்பியோட நிக்கிற பொடியனை தூக்கி குண்டியை கழுவி திரும்பவும் அவனுக்கு உடுப்புகளை போட்டார் சாமியார்.

"இவ்வளவு நேரமும் வெளிக்கிடாமல் யட்டியோட என்னத்துக்கு அலையுறியள்?"

சாமியார் வேட்டி கட்டி முதல்ல வெளிக்கிட்டு நிண்டதை குறும்படம் போட்டா காட்டமுடியும்?

"காரை ஓடுங்கோ. வரயுக்குள்ள நான் தானே ஓடவேணும்!" 

ஏதோ சிறிலங்கன் பிளைட்டை ஓடுறமாதிரி ஒரு பில்டப்.

எல்லாம் முடிச்சு காரை கறாஜ்ஜுக்குள்ள இருந்து வெளியில எடுக்கும் போதுதான் ஞானம்பிறந்தமாதிரி ஒண்டு கேப்பினம்.

"என்வலப் இருக்கோ?"

"இல்லை போகயுக்குள்ள கடையில வாங்குவம்"

"இஞ்ச நான் வேட்டியோட நிக்கிறன். கடையுக்குள்ள போனால் வெள்ளைக்காரங்கள் நக்கலா பாப்பாங்கள். நீ இறங்கிப்போய் வாங்கி வாறியா" 

"என்னால இறங்கேலாது. சாறி மடிப்பு குலைஞ்சுபோடும். பிள்ளை அழுவான். நீங்கள் போங்கோ"

சாமியார் இறங்கி சுப்பர் மார்க்கெட்டில் உள்ள கடையுக்குள்ள போனால் கடையுக்குள்ள நிக்கிறவன் எல்லாரும் விநோதமாக பாப்பாங்கள்.

இருந்தாலும் சாமியார் மீசையை முறுக்கிக்கொண்டு ஒரு கையால ஒரு பக்கத்து வேட்டி தலைப்பை தூக்கிகொண்டு விசய் சேதுபதி மாதிரி நடந்து போய் 1$ இக்கு "என்வலப்" வாங்குற அழகே தனி!!!

அண்டைக்கு உப்பிடித்தான் சாமியார் கம்பீரமாக நடந்து போய் என்வலப் வாங்கிக்கொண்டு வந்து ;
கவுண்டரில் நிண்ட வெள்ளைக்காரியிட்ட நீட்டி காசைக்குடுத்து வாங்கிக்கொண்டு வெளிக்கிடும் போது;
சாமியாரைப்பாத்து சிரிச்சுப்போட்டு ஒண்டு சொன்னாள்.

சாமியாருக்கு சீ ... எண்டு போட்டுது.

விசய் சேதுபதி வேதாளத்தில் கம்பீரமாக வேட்டியோடு நடந்து வந்து சீரியசா பேசும் போது வேட்டி கழண்டு கீழ விழுந்தா எப்பிடி இருக்கும்.

அதுபோல எண்டு வையுங்கோவன்.

வெள்ளைக்காரி என்ன சொன்னவள் எண்டு கேளுங்கோவன்?

"Man i like your saree"

என்னதான் கலியாணம் கட்டின பொடியள் மீசையை முறுக்கி வேட்டியை கட்டினாலும் அது மனிசிமாரின் சீலை போலத்தான் இருக்கும் எண்ட "வாழ்க்கைத்தத்துவம்" வெள்ளைக்காரனுக்கு தெரிஞ்சிருக்கு.

#சனிக்கிழமைசாமியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge