ஞாயிறு, ஜூலை 02, 2017

சனிக்கிழமை சாமியாரும் பாகுபலியும்!!!



பொதுவாக சனிக்கிழமைசாமியார் எல்லாப்படங்களையும் தியேட்டருக்கு போய் பார்ப்பதில்லை. ஆனால் "பாகுபலியை" தியேட்டரில தான் பாப்பன் என அவரின் "ஆதீனம்" ஒற்றைக்காலில் நிண்டதால்;
ஆதீனத்தின் முடிவை அவரால் நிராகரிக்கமுடியல்லை.
ஆதினத்தின் முடிவுகளை சாமியார் எப்போதும் மறுத்துப்பேசியதில்லை. அப்படி மறுத்தால் வரும் பின்விளைவுகளை சாமியார் அனுபவரீதியாக அறிந்துள்ளார்.
(ஆதீனம் எண்டால் யாரென்பது கலியாணம் கட்டினவைக்கு விளங்கும்)

ரண்டு "கச்சான் பைக்கற்" ,"குளிர்பான போத்தல்கள்" சகிதம் தியேட்டருக்குள் நுழையும் போதே ;
சாமியாரை அடையாளம் கண்டுவிட்டான் ஒரு "பக்தன்"!
"சாமி நீங்கள் வடகொரிய அதிபர் கிம்முக்கு எழுதின கடிதம் awesome" என்றான்.
அவனின் அன்பு மழையில் நனைந்து ஒரு மாதிரி இருட்டுக்குள் கதிரையை தடவி கண்டுபிடிச்சு அமர்ந்தார்.

பக்கத்தில் ஒரு குடும்பம். பொடியன் வைத்திருந்த "கொக்க கோலா" போத்தலில் இருந்து "chivas regal" வாசம் மூக்கை துளைத்தது.

அந்த வாசத்தோடு சேர்த்து சாமியாரும் கச்சானை கொறித்தார்.

"கடைகளின் விளம்பரம்" என்ற பெயரில் ஒரு 15 நிமிடம் எங்களின் பொறுமையை சோதித்தார்கள்.
ஊரெண்டா திரைக்கு போத்தலால எறிஞ்சிருப்பார் சாமியார்.
சாமியாரும் ஒரு ரவுடிதான் ஊரில!

கடைசியா ஒரு மாதிரி படம் ஆரம்பமாகியது!
எழுத்தோட்டமே அந்தமாதிரி. பாட்டுகள் அதைவிட அருமை. கதை எண்டு பாத்தா; எங்களின் தமிழ்காவிய கதைகளில் இருந்து உருவியது தான். ஆனாலும் இயக்குனர் "ராயமெளலி" கையாண்ட விதம் அற்புதம்.

Graphics , VFX அட்டகாசம்!

அதுகும் அந்த ஒரு பாட்டில வானத்தில பறக்கிற கப்பல் மெய்சிலிர்க்கவைத்தது.
"ஆதினத்துக்கு" படம் ரொம்பவே பிடித்துவிட்டது. நான் பக்கத்தில இருக்கிறது தெரியாமலே படத்தில் மூழ்கிவிட்டது!

அதுகும் "தேவசேனா" வீரமா கள்ளர்களை புரட்டி புரட்டி எடுக்கும் போது "ஆதீனம்" கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தது. வாளை எடுத்து சுழட்டி வெட்டும் போதும் அம்புகளை "மல்ரிபரல்" மாதிரி விடும் போதும் ஆதினம் அதிகமான உற்சாகத்தை வெளிக்காட்டியது.

சாமியார் அவற்றையெல்லாம் கடைக்கண்ணால் பார்த்து மண்டையில் குறிப்பெடுத்துக்கொண்டார்.

படத்தில் ஒரு காட்சியில் பென்னாம் பெரிய மரக்குத்தியொண்டை பாகுபலி சிம்பிளா பிளந்துவிடுவார். பென்னாம் பெரிய கல் ஒண்டை சிம்பிளா துக்குவார்.

இதையெல்லாம் உற்றுக்கவனித்த "ஆதினம்" ஒரு அறிக்கை விட்டது.

"இப்பிடி வீரமான விசயங்கள் செய்தாத்தான் கலியாணம் எண்டால் உங்க கனபேருக்கு பொம்பிளை கிடைச்சிருக்காது"

எய்யப்பட்ட இந்த அம்பு பொதுவானதுதான் என்றாலும் அந்த அம்பில் குறிப்பாக சாமியாரின் பெயர் எழுதப்பட்டுள்ளதை சனிக்கிழமை சாமியார் தன் "ஆன்மீக அறிவால்" உணர்ந்துகொண்டார்.
திருப்பி பதில் சொன்னால் அந்த இடத்தில் "சனிக்கிழமை சாமியார்" தான் அவமானப்படுவார் என்பதை அவரின் "தீர்க்கதரிசனம்" எச்சரித்தது!

"இந்த வருசத்துக்கு இடையில் என்ர உடம்பை பாகுபலிபோல ஏத்துறன்" என மனதுக்குள் சபதம் எடுத்தார்.

இப்படியாக "சபதம்" எடுத்தது இதுதான் முதல் தடவை அல்ல.
பல தடவைகள் இப்படி தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்து "Gym membership" வீணா கட்டி ஆதினத்திடம் "கிழிய கிழிய" வாங்கிய அனுபவங்கள் சில பல நடந்திருக்கிறது.
"Gym இக்கு போறதை விட்டுப்போட்டு வீட்டு வேலையளை பாருங்கோ. உடம்பு வைக்கும்" என கண்டிப்பான உத்தரவை மீறி gym இக்கு போய் ஒரு கிழமையால போகாமல் விட்டார் சனிக்கிழமை சாமியார்.
( அந்த சோகக்கதைகளை பிறகு எழுதுறன்)

சரி படத்துக்கு வாறன்.
நல்ல படம் எண்டு சொல்வற்கு அப்பால் இந்திய சினிமா ஒரு சர்வதேச தர எல்லையின் வரை சென்று கொடிகட்டிப்பறக்கிறது என்றே சொல்லவேணும். கடுமையான உழைப்பு தெரிகிறது.

கட்டப்பாவாக வாற "சத்தியராஜ்" இன் இடத்துக்கு ஆரைப்போட்டாலும் அது "சப்பெண்டு" போகும்.

சத்தியராஜ் தான் இந்தப்படத்தின் இன்னோரு ஹீரோ!
நாசர், ரம்மியா கிருஸ்னன் நடிப்பு சொல்லிவேலையில்லை.
வில்லன் "ராணா" மிரட்டுகிறார்.
"அனுஸ்கா" வாற காட்சிகளில் சாமியார் உற்சாகம் அடைந்தார். ஏனெனில் சாமியார் அவாவின் "உடன்கட்டையேறும் ரசிகன்-die hard fan" .

இந்த "உற்சாகம் அடைதலை" ஆதினம் கடைக்கண்களால் குறிப்பெடுத்துக்கொண்டது.
அதன் பலாபலன்கள் அப்பப்ப எதிர்காலத்தில் வெளிப்படுத்தப்படும்.

கடைசியா படம் முடிய இரவு ஒரு மணி ஆகிவிட்டது.
எந்த level park இல காரை விட்டது என்ற பெருங்குழப்பத்துக்கு ஆளான சாமியார் கடைசியில் வெத்திலையில் "மைபோட்டு" காரை கண்டுபிடித்தார்.

வீட்டுக்கு வந்த சாமியாருக்கு அவரின் நண்பன் தொலைபேசி அழைப்பு எடுத்தான்.
" மச்சான் ... படம் அந்த மாதிரி என்ன? Graphics , VFX எல்லாம் விசயின்ர புலி படத்தில வந்தமாதிரியே இருக்கு என்ன?" என்றான்.

சனிக்கிழமை சாமியார் தலைக்கிறுதியில கட்டில்ல அப்பிடியே மயங்கி விழுந்தவர் தான் ....
அடுத்த நாள் விடியக்காலமைதான் எழும்பினார்.

மே மாதம்!




வெசாக் கூடுகள் கட்டும் ஆரவாரத்தில்;
தீப்பந்தங்களை மறந்துவிடாதீர்கள்.

"முழுநிலா வெண்பொங்கலுக்கு"முதல்;
"முள்ளிவாய்க்கால்" கஞ்சிதானே குடித்தோம்.

"பிரித்" ஓதும் சத்தத்தில்
"காணாமல் போனோரின்" கதறல்களை மறந்துவிடாதீர்கள்.

ஆரியகுளத்து மணிகளின் சத்தத்தில்
நல்லூரான் காண்டா மணி அடங்கிப்போகக்கூடாது!

தாமரைகள் குளத்தில் பூக்கட்டும்.
எங்கள் வேலிகளில் பூவரசே பூக்கட்டும்.

"வேட்டிகள்"எப்போதும் வெள்ளையாகவே இருக்கட்டும்.
"காவி" படிந்தால் அது நிறம் மாறிவிடும்.
எங்களின் குணமும் மாறிவிடும்!

"யாழ் தேவி" க்குப்பிறகு
"உத்தரட்ட தேவி" வரட்டும்.
"பற்றிக் சாரம்" கட்டுவதில் தப்பில்லை
"கோமணத்தை" மறப்பது தப்பு!

அந்தியேட்டி நாளில்..
தீபாவளி வந்தால்
"கிடாய்" வெட்டுவதில்லை!

செத்தவீட்டு வளவுக்கு முன்னால
"பைலா" படிப்பதில்லை!

அழுதுகொண்டே இருப்பதும் பிழை
"அதை" மறந்துவிட்டு போவதும் பிழை!

கண்ணீரை கையால துடைக்கலாம்;
"கண்டின காயம்" காலத்தால் அழியாது!

வெடிச்சத்தம் கேட்டால்
மாடுகள் இப்பவும் வெருண்டுதான் ஓடும்.

சீருடைகளை கண்டால் நாய்கள்
இப்பவும் குரைக்கும்.
வாலாட்டுவதில்லை!

வெசாக் கூடுகளை கட்டுங்கள்..
ஆனால் கவனம்;
அவை எப்போதும்...
பனையின் உயரத்துக்கு கீழேயே இருக்கட்டும்!

🎬சனிக்கிழமைசாமியாரும் கலியாண வீட்டு வீடியோவும்!!





கலியாண வீட்டுக்கு வீடியோக்கு ஆரைப்பிடிக்கிறியள் எனும் கேள்வி மிக முக்கியமானது.
அது அந்தக்காலத்தில் என்ர மூத்தக்காவின் சாமத்தியவீட்டில் இருந்து இன்று என் நண்பனின் கலியாணம் வரை "அதே கேள்வி" விதம் விதமாய் கேக்கப்படுகிறது.
அந்தக்காலத்தில் தெரிவுகள் குறைவாய் இருந்ததால் ஒண்டு பருத்தித்துறையில் உள்ள "ராசன் வீடீயோ" அல்லது அச்சுவேலி "ஒளியருவி" தான். இல்லாட்டில் "புலவர் வீடியோ".

ஆனால் இப்ப இஞ்ச வெளிநாடுகளில் பெரிய பிரச்சினை என்னண்டா மணப்பந்தல் சோடினையில இருந்து வீடியோ வரை கனக்கப்பேர் வைச்சிருக்கினம்.
இதில பெரிய சிக்கல் என்னண்டா;
ஆரைப்பிடிக்கிறது? என்பதுதான்.
அவரைப்பிடிச்சா இவருக்கு கோவம்..
இவரைப்பிடிச்சா அவருக்கு கோவம்..!

முந்தி ஊரில கலியாண வீடியோ எண்டால் பெரிய புதினம்.
வீடியோவுக்கு ஆரை முதல் "நிக்கிறதுக்கு"கூப்பிடுறது எண்டதிலேயே பிரச்சினையாகி "வெட்டுக்குத்தெல்லாம்" நடந்திருக்கு. அதே கோதாரி விழுந்த சம்பிரதாயம் இப்பவும் கனடாவுக்கும் வந்து மாறாமல் இருப்பதுதான் பெருங்கேவலம்.

"சாப்பிட்டியளா? "எண்டு கேக்க மறந்தாலும் ;
"போட்டோ எடுத்தியளோ" என கேப்பதை மறக்கமாட்டினம்.
சாப்பாட்டுக்கு நிக்கிற கியூவை விட போட்டோவுக்கு நிக்கிற கியூதான் பெரிசு. அதிலையும் முதல் போறதுக்காக இடையில பூருற ஆக்களை கண்டால் சாமியாருக்கு கடும் கோபம் வரும்.
ஒரு சிலர் இப்பவும் போட்டோவுக்கு நிக்கமாட்டம் எண்டு "லெவல்" காட்டுவினம். அது அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை இருக்கு.

"கூட்டிக்குறா" பவுடரையும் அப்பி தலை நிறைய எண்ணையையும் வைச்சு;
ரட்டை பின்னலையும் பின்னி;
சிவத்த ரிப்பன் கட்டி வீடியோவில் நிற்கும் அழகே அழகு.
நித்தியகல்யாணி, கனகாம்பர கொண்டைகளில் அந்தக்காலத்தில் பெண்கள் தனியழகு!
அதை close up இல வீடியோ எடுக்கும் விதமே தனி அழகு.
சாப்பிடும் போதும்.. சாப்பிட்ட விரலை சூப்பும் போதும் அதை closeup இல எடுத்து போடுவினம்.
அது பெரும்கொடுமை.

அதில வேற ஆக்களை close up இல காட்டி பயமுறுத்துவாங்கள்.
ஒரு long shot, ஒரு close up. இதுதான் அந்தக்கால வீடியோ.

ஆனால் இப்ப கிறேன் எண்டுறாங்கள். பறக்கிற கமரா எண்டுறாங்கள்.
Slow motion, wide angle, close up, arial shoot எண்டுறங்கள்.
ஒரு கோதாரியும் விளங்குதில்லை.

அந்தகாலத்து வீடியோவுகளில் பெரும்பாலும் கலியாண மாப்பிளை பொம்பிளையை slow motion இல ஓட விடுவினம்.பூமரங்களுக்கு முன்னால நிக்கச்சொல்லுவினம். செவ்வரத்தம் பூவை பிடிச்சு முகத்துக்கு கிட்ட ஆட்டச்சொல்லி வீடியோ எடுப்பினம்.

அதிக பட்ட graphics ஆக ஒரு ஆளை நாலைஞ்சா காட்டுவதும் அல்லது விளையாட்டு ஹெலியில பறக்கவிடுவதும் தான்.

அதைவிட செத்த ஆக்கள் அல்லது கலியாணத்துக்கு வரமுடியாத உறவுகளை போட்டோவில் "இணைப்பது" மிக முக்கியம்.

உப்பிடித்தான் சனிக்கிழமை சாமியாரின் கலியாணம் இந்தியாவில் திருச்சியில் நடந்தது.
கலியாணவீட்டுக்கு ரண்டு நாள் முதல்த்தான் மாப்பிளையான சாமியார் போய் இறங்கினார்.
சாமியாரின் ஒல்லியான கறுத்த உருவத்தை பார்த்த ஊர்ச்சனம் அவர் அவுஸ்திரேலியாவில் இருப்பதை நம்ப மறுத்தது. 

அதனால் "பலரின்" வேண்டுகோளை ஏற்று "gold facial " செய்தார் சாமியார். அப்பதான் போட்டோவுக்கும் வீடியோவுக்கும் வடிவா இருக்கும் என்பதால்.
கலியாண வீட்டுக்கு போட்டோ எடுக்கும் போது casual ஆக இருக்கவேணும் என்பதாலும்;
முகத்தில் பயத்தை வெளிக்காட்டகூடாது என்பதற்காகவும்...
சாமியார் ஒரு சின்ன technique பாவித்தார். 

ஒரு bubble gum வாங்கி அதை சப்பிக்கொண்டும் சிரிச்சு சிரிச்சு கதைச்சுக்கொண்டும் இருந்தார்.
கடைசியா வீடியோவை பாக்கும் போது ஆடு இலைகுழையை அரைச்சு தின்னுற மாதிரி இருந்தது!
அசிங்கப்பட்டார் சாமியார்!!!

வெளிப்புற படப்பிடிப்பு( outdoor shooting) எடுப்பதற்கு திருச்சியின் ஒரு பழைய பூங்காவுக்கு போனார் சாமியார்.

அங்கே பூமரங்களுக்கு நடுவிலும் மரத்துக்கு பின்னாலும் ஓடிப்பிடிச்சு விளையாடுவதை படமாக்கினார்கள்.
பழைய பாக்கியராசாவின் படங்களிலும் பாரதிராசாவின் படங்களிலும் எப்படி பாட்டுக்கட்டங்கள் இருக்குமோ...
அதைப்போலவே அச்சொட்டாய் படமாக்கினார்கள்.
பூங்காவின் மூலையில் ஒரு "சறுக்கீஸ்" உம் ஊஞ்சலும் இருந்தது.
ஊஞ்சலில் மாறி மாறி இருத்தி ஆட்டிவிட்டு எடுத்தார்கள்.
அதைவிட கொடுமை "சறுக்கீசில்" இரண்டுபேருமா சறுக்கவிட்டும் எடுத்தார்கள்.
சுமார் மூண்டு மணித்தியாலமா கதறக்கதற வீடியோ எடுத்தார்கள்.

கடைசியா long shot இல நடக்கவிட்டு திரும்பி "டா டா" காட்டுவதோடு எங்களின் திருமண வீடியோ இனிதே நிறைவு பெறும்.

கடைசியா போட்டோவும் வீடியோவும் வந்தபோது....
ஒல்லிப்பயித்தங்காயான சாமியார் போட்டோவுகளில் "மன்மதக்குஞ்சாய்" அழகாக இருந்தார். வீடியோவில் பாட்டுக்கட்டம் மட்டும் பெரும் "காமெடியாக" இருந்தது.
அதுவும் "கண்கள் இரண்டால்.." எண்ட நாடோடிகள் படப்பாட்டை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பு சிரிப்பா வரும்.


ஆ... சொல்லமறந்திட்டன்..
கூலிங்கிளாஸ் போட்டு நெத்தியில கொஞ்சி இப்பிடி வழமையான விளையாட்டுகள் காட்டியும் போட்டோவுகளும் வீடியோவும் எடுத்தம்.
அந்த "து(அ)ன்பியல்" சம்பவம் நடந்தது 2010 களில்.

ஆனால் இப்பவும் அதே பழைய passion இல தான் வீடியோ எடுக்கினம்.
மரத்தை சுத்தி ஓடுவதும்...
கூலிங்கிளாசை கழட்டி மாட்டுவதும்..
பொம்பிளையை தூக்கி சுத்துறதும்..
நெத்தியில கொஞ்சுறதும்...
மூக்கையும் மூக்கையும் தேய்க்கிறதும்...
BMW காருக்கு முன்னால நிண்டு தெறிக்கவிடுவதுமாய்த்தான் இப்பவும் வீடியோ, போட்டோ எடுக்கினம்.

அந்தக்காலத்தில் பருத்தித்துறை ராசன் வீடியோ செய்த graphics இல ஒரு சதவீதம் கூட இருக்காது.
ஹெலியில , விளையாட்டு காரில போற மாதிரி ஏலுமெண்டா செய்து காட்டுங்கோ பாப்பம். ஏலாது உங்களால....
ஆனால் கேட்டால் அதெல்லாம் பழைய fassion எண்டுவியள்.
உப்பிடித்தான் சாமியார் போனவருசம் இதெ மாதம் அவரது "பால்ய"நண்பன் ஒருவனின் கலியாணத்துக்கு சென்னை போனார்.
"தனியாத்தான்" போனவர்.lol
சாமியாரின் நண்பன் "சுழையா"40000 ரூபாய் வீடியோக்காரனுக்கு எண்ணிக்குடுக்கும் போது;
தலையில அடிச்சு சொன்னார்.
"மச்சான் காசை முதல்ல குடுக்காத..
போட்டோ தரமாட்டங்கள்" எண்டு.
பொதுவாக சாமியார் சொல்வது "பலிக்கும்".
காரணம் சாமியாருக்கு "பட்ட அறிவும்" "பார்த்த அனுபவமும்" கனக்க!
இப்ப முழுசா ஒரு வரியம் ஆகப்போகுது. அல்பமும் இல்லை... வீடியோவும் இல்லை!
அவன் இந்தியாவுக்கு போன் அடிச்சா "மோடிஜீ" தான் கதைக்கிறாராம்.
(ஹிந்தியில ரெக்கோடிங் போகுது)

அண்டைக்கு எனக்கெடுத்து அழுவாரப்போல கேக்குறான்...
"மச்சான் உன்ர போனில ஏதும் கலியாண வீட்டு போட்டோ இருக்கோ" எண்டு!

அதுக்கு சாமியார் சொன்னார்
"மச்சான் நீ பேசாமல் திரும்பவும் ஒருக்கா இந்தியா போனியெண்டால் வாங்கிப்பிடிச்சிடலாம்"
அதுக்கு அவன் சொன்னான்.
"மச்சான் பிள்ளை பிறக்கப்போகுது. திருச்சி உச்சிப்பிள்ளையாரிலதான் மொட்டை அடிக்கிறதா நேத்திக்கடன். ஒரேயடியா அங்கையே முதலாவது பிறந்தநாள் செய்து அதையும் என்ர கலியாணவீட்டு வீடியோவில் இணைச்சுவிடுவம்"

சாமியார் அவனை நினைத்து பரிதாபப்பட்டார்.
அடுத்த வரிசமாவது அவனது கலியாண வீட்டு வீடியோ கிடைக்க எல்லாம் வல்ல "மதவடி வைரவர்" துணைபுரியட்டும்.


முக்கியகுறிப்பு:
சாமியாரின் கலியாணவீட்டு வீடியோ "ஆதீனத்தின்"தணிக்கைகுழு கைகளில் சிக்கியிருப்பதால் அதை வெளியிடுவதில் "பெரும்சிக்கல்" இருப்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


"பெத்த வயிறு பத்தி எரிஞ்சு வாற கண்ணீர்" வலியது!



"இல்லை" என்று சொல்லிவிட்டு....
"சும்மா" போகமுடியாது!

காணாமல்ப்போனது "அழி ரப்பரா?"
இன்னொண்டு வாங்க..
அது என் "அண்ணா"!

படலை திறந்தே இருக்கு...
அவன் வருவான்!

"நீங்கள்" எங்களுக்கு "பதில்"
சொல்லியே ஆகவேண்டும்!

"தமிழனின் கண்ணீர்" வலியது!
சுட்டெரிக்கும்....
கவனம்!!!

"சிலுவையில்" அறையப்பட்ட
யேசு மட்டுமல்ல...

வேலேந்திய முருகனும்...
சூலம் எடுத்த மாகாளியும்...
ஊழிக்கூத்தாடும் சிவனும்...
அவதாரம் எடுக்கும் விஸ்ணுவும்...
வதம் செய்யும் பத்திரகாளியும் தான்
எங்கள் "தெய்வங்கள்" !

நிலம்
நீர்
கடல்
காற்று
வானம்
நாங்கள் கையெடுத்து கும்பிடும் கடவுள்கள்!

போதிமரத்தின் கீழ்....
எல்லா அநியாயங்களையும் பார்த்தும்;
கண்மூடி இருக்கும் "புத்தன்" அல்ல!

வானம் அதிர...
வயிறெரிந்து குழறும் ...
வன்னித்தாயின்...
"சாபங்களை" சாதாரணமாய் நினைக்காதீர்கள்!

"பெத்த வயிறு பத்தி எரிஞ்சு வாற கண்ணீர்" வலியது!
"கவனம்" அது சுட்டெரிக்கும்


பேனாக்கள் முறிந்துபோகலாம்!



ஒரு பத்திரிகையால் சமுதாயத்தை சீர்படுத்தவும் முடியும் ...
மாறாக "சீரழிக்கவும்" முடியும்!

பேனாக்கள் முறிந்துபோகலாம்.
வளைந்துபோகக்கூடாது!

கறுத்தப்பேனையால் "சிவப்பாய்" எழுதத்தெரிந்த "வல்லமை"கொண்ட ஊடகவியலாளன் உருவாவதில்லை.
பிறக்கிறான்.

ஒரு ஊடகவியலாளனின் குரல்வளையை நசுக்கும் போது அவனது "பேனா" பத்திரமாகவே இருக்கும்.

பேனாக்களுக்கு பொதுவாக "காலாவதியாகும் திகதி" இருப்பதில்லை"!

எங்கட சனம் திருந்தாது!



எங்கட சனம் திருந்தாது!
நானே நானூறு முறை சொல்லியிருப்பன்.
நானே திருந்தாமல்.

படிச்சவன் எல்லாரும் பொய் சொல்லமாட்டான், ஏமாத்தமாட்டான், சுத்தமாட்டான் எண்ட "பரிசுத்த மனநிலையில்" இருந்து நாங்கள் இன்னும் வெளிவரவில்லை.

உதாரணத்துக்கு;
வைத்தியர் ஒருத்தர் உயிரோட இருக்கும் உன்னை"செத்துவிட்டார்" எண்டு சொன்னா....
நீ சுடலையில எழும்பி ஒப்பாரி வைச்சாலும் உன்னை இந்த சமூகம் நம்ப தயாரில்லை. 
அவ்வளவு படிச்ச "டொக்டருக்கு" தெரியாதோ எண்டு சொல்லி உன்னை அடிச்சுக்கிடத்தி "கொள்ளி" வைச்சுப்பொட்டு போகும் "மனநிலையில்" தான் எங்களின் சமூகம் இப்போதும் இருக்கிறது!

"சேர்" எண்டு நாங்கள் எங்களுக்கு படிப்பிச்ச வாத்தியாரை தவிர வேறு யாரையும் கூப்பிட்டதில்லை!
ஆனால்;
யாழ்ப்பாண ஆசுப்பத்திரியில்:
60 வயது முதியவர் 30 வயது வைத்தியர் பொடியனைப்பாத்து"சேர்" எண்டு கூப்பிடும் போது;
எனக்கு "பத்திக்கொண்டு" வந்தது!

நான் அந்த வைத்தியரை "தம்பி" எண்டன்!
அவன் என்னை "முறைச்சுப்பாக்கிறான்"!
தன்னை "சேர்" எண்டு நான் கூப்பிடவில்லை எண்டு அவனுக்கு கோபம்!
அந்த நேரம் நான் முணுமுணுத்தன்..
"எங்கட சனம் திருந்தாது!"

வெளிநாட்டில் இருந்து ஊருக்குப்போய் "கிலுக்கிப்போட்டு" ...
மீண்டும் கனடா வந்து "எங்கட சனம் திருந்தாது!" எண்டு சொல்லுறவையின் பட்டியலில் நானும் ஒருவன்!
ஊருக்குப்போய் "விலாசம்" காட்டிப்போட்டு, வேலைவெட்டி இல்லாமல் சும்மா ஊர்சுத்தும் தம்பிக்காரனுக்கு 5 லச்சத்துக்கு மோட்டச்சைக்கிளும் அதுக்கு பெற்றோலும் "புள் ராங் full tank" அடிச்சுக்குடுத்துப்போட்டு வந்து;
" எங்கட சனம் திருந்தாது!" எண்டு சொல்லுற கனக்கப்பேரில் நானும் ஒருத்தன்!

கூப்பிடு தூரத்தில இருக்கிற "குஞ்சியப்புவின்ர" வீட்டுக்கு குறுக்கால நடந்து போகலாம். ஆனால் அதுக்கும் "ஆட்டோ" பிடிச்சு போட்டு வந்திட்டு....
"எங்கட சனம் திருந்தாது!" எண்டு சொல்லுறவையில் நானும் ஒருத்தன்!

ஊரிலை இருக்கிறவங்களை..
அதைச்செய்
இதைச்செய்
அதைப்புடுங்கு
இதைப்புடுங்கு...
எண்டு உசுப்பேத்திப்போட்டு
ஒண்டும் செய்யாமல் இருந்து
"எங்கட சனம் திருந்தாது!"
எண்டு சொல்லும் கனபேரில் நானும் ஒருத்தன்!
அவன் "சப்பறம்" பிடிச்சா நான் "இசைக்குழு" பிடிப்பன்.
அவன் நாலு கூட்டு மேளம் எண்டா;
நான் பத்து கூட்டு மேளம்!
இப்பிடி காசைக்கரியாக்கிப்போட்டு ...
கனபேர் சொல்லுற வசனம்:
"எங்கட சனம் திருந்தாது!"

"பலாலியில ஹெலி வாடகைக்கு" இருந்தால் அதையும் எடுத்து கலியாணவீடு செய்யுற அளவுக்கு பந்தாவும் பகட்டும் காட்டிவிட்டு கனபேர் சொல்லுற வசனம்:
"எங்கட சனம் திருந்தாது!"

ஓட்டுபோட்ட கட்டைவிரலையும் வெட்டி அரசியல்வாதிகளிடம் கொடுத்துவிட்டு....
கனபேர் சொல்லுற வசனம்:
"எங்கட சனம் திருந்தாது!"

ஊரில "கஞ்சா" கடத்தினால் என்ன?
களவெடுத்தால் என்ன?
பக்கத்துவீடு பத்தி எரிஞ்சால் என்ன?
ஊரே நாசமா போனால் எனக்கென்ன!
சனத்தை பேக்காட்டி கொள்ளை அடிச்சால் எனக்கென்ன!
படிச்சவன் ஊரில இருக்கிறவன் இதையெல்லாம் பாத்தும் பாக்காமல் போனா உனக்கென்ன!

ஊருக்குப்போனியா...
கிடாயை வெட்டினியா...
கோழியை உரிச்சியா...
கசூறினா beach போனியா...
கள்ளைக்குடிச்சியா....
கவுண்டு படுத்தியா எண்டு இருக்கவேணும்!

திருவிழா போனியா...
காவடி எடுத்தியா...
கறுத்தக்கொழும்பான் திண்டியா...
கட்டுநாயக்கா வந்து;
கனடா flight ஏறினியா ...எண்டு இருக்கவேணும்.

கருத்துச்சொல்லுறது எண்டா
கனடா திரும்பி வந்து சொல்லு!

கடைசியா கனடாவில் இருந்து சொல்லுறன்...
"எங்கட சனம் திருந்தாது!"
"நானும் திருந்தன்!"

சனிக்கிழமை சாமியாரும் குளிப்பும்!!





🚿சனிக்கிழமை சாமியாரும் குளிப்பும்!!



சின்ன வயதில் பொதுவா குளிக்கிறதெண்டால் கனபேருக்கு கள்ளம். அப்படியான "குளிக்கிறதுக்கு கள்ளப்பட்ட"சங்கத்தின் நிரந்தர உறுப்பினரில் சாமியாரும் ஒருவர் என பெருமையாக குறிப்பிடுகிறேன்.
முந்தி ஊரில கிணத்தில வாளியாலதான் அள்ளிக்குளிக்கவேணும்.
உறுமாண்டத்தோட சுதந்திரமா குளிப்பது "சுகானுபவம்"!
சாமியாரின் அப்பாதான் பொதுவா சாமியாரை குளிப்பாட்டுவார். சின்னப்பொடியளுக்கு குளிக்க வாக்கிறது சும்மா சிம்பிள் வேலை இல்லை. அதில கன "ரெக்னிக்" இருக்கு.
முதல் வாளி தண்ணீர் சரியா குளிரும். அதனால அந்த முதல் வாளி தண்ணியை தலையில வாக்கும் போது "கொடுமையான குளிர்" கொல்லும்.
அதுக்காக முதல் வாளி தண்ணீர் குளிராமல் இருக்க சாமியாரின் அப்பா ஒரு "யோசனை" சொன்னார்.
சாமியாரும் அந்த "திறமான சிந்தனையை" இன்றுவரை பின்பற்றுவதால் முதல் வாளி தண்ணிர் இப்போதும் குளிராக இருப்பதேயில்லை!
அது என்ன "மகிந்த சிந்தனை" எண்டு மண்டையை குழப்பாதையுங்கோ.

"முதல் வாளி தண்ணீர் தானே குளிரும். அதை வெளியில ஊத்திப்போட்டு ரண்டாவது வாளி தண்ணீரை தலையில ஊத்தினா குளிராது"
(கடுப்பாகதையுங்கோ... மகிந்த சிந்தனை போல இதுவும் மொக்கைதான்)
ஊரில பொதுவா எப்பிடியும் சின்ன தண்ணீர்த்தொட்டி கிணத்தடியில இருக்கும். அதோட சேத்து உடுப்பு தோய்க்க கல்லும் இருக்கும்.
தொட்டிக்குள்ள தண்ணீரை ஊத்தி அதுக்குள்ள இறங்கி கூத்தடிப்பது பெரும் சந்தோசம்!

"டேய் காணும் குளிச்சது வா" எண்டு அம்மா கத்தினாலும்..
"பொறணை இன்னும் ஒரு அஞ்சு நிமிசம்" எண்டு சொல்லிவிட்டு தொட்டிக்குள் சுழியோடுவதில் ஒரு பெரும் சந்தோசம்!
தொட்டியின் தண்ணீர் போகும் ஓட்டையை அடைக்க "தேங்காய்ப்பொச்சு" பாவிப்பம். அவசரத்துக்கு சாமியார் தன்ர காச்சட்டையை கழட்டி சுத்தி அடைச்சுப்போட்டு உறுமாண்டத்தோட குளிச்சும் இருக்கிறார்.

தொட்டிக்குள்ள தண்ணி ஊத்தும் போது 50 வாளி, 100 வாளி எண்டு எண்ணி எண்ணி ஊத்துவம்.
உப்பிடித்தான் ஒரு நாள் உரிஞ்சாங்குட்டியோட சாமியார் கிணத்தடியில் குளிச்சுக்கொண்டிருந்தார்.
தப்பா நினைக்காதையுங்கோ.. அப்ப சாமியாருக்கு 6 வயது.
"நல்லிணக்க அடிப்படையில்" அன்று அவரது அம்மாவே குளிக்க வார்ப்பதற்கான ஆயத்தங்களை செய்தார்.

பொதுவாக சாமியாருக்கும் அம்மாவுக்கும் இடையில் "புடுங்குப்பாடு" எப்பவும் இருக்கும்.
வடக்குமாகாண சபை போல!
தொட்டிக்குள்ள எத்தினை வாளி தண்ணீர் ஊத்த வேணும் எண்ட "தீர்மானத்தில்" ஆரம்பிச்சது பிரச்சினை.
50 வாளி ஊத்தியாச்சு எண்டு சொன்னா!
ஆனால் சாமியார் ஒத்துக்கொள்ளவில்லை.காரணம் தொட்டிக்குள்ள உள்ள தண்ணீர் மட்டத்தை வைச்சு சாமியார் 50 வாளியா அல்லது 40 வாளியா எண்டு கண்டுபிடிச்சு விடுவார்.
சின்னனிலேயே "உப்பிடியான கணக்கில" சாமியார் "பேக்காய்".
ஆரும் லேசில சுத்தேலாது!
"குளிக்கிற தண்ணியோ.. குடிக்கிற தண்ணியோ?" என்னண்டாலும் "தண்ணியில" ஊழல் செய்வது சாமியாருக்கு பிடிக்காது.

தொட்டியில ஊத்தின தண்ணி வாளிக்கணக்கில் ஊழல் செய்தது பெத்த அம்மா எண்டாலும் பிழை பிழை தான்.
அம்மா சொன்னா ;
"உன்ர கணக்குக்கு எல்லாம் என்னால நிண்டு ஆடேலாது. கெதியில குளிச்சிட்டு வா"
என்ன செய்ய... சாமியார் அம்மா எண்டதால பொறுத்துக்கொண்டு குளிச்சார்.
ஆனால் திரும்பவும் அம்மா தொட்டிக்குள்ள இருந்த தண்ணியை தன்ர உடுப்புத்தோய்க்க எடுத்ததில ஆரம்பிச்சுது சண்டை!
"என்ர தண்ணியை ஏன் என்னைக்கேக்காமல் எடுத்தனீ?" என சாமியார் கேட்டார்.
(சின்ன வயசிலேயே சாமியார் தண்ணீர் பிரச்சினையில் கடுமையா குரல் கொடுத்தவர் என்பதை ஒருசிலர் குறிப்பெடுக்கவும்)

அதுக்கு அம்மா சொன்னா...
"இஞ்ச உன்ர தண்ணி .. என்ர தண்ணி எண்டு ஒண்டும் இல்லை. கிணத்துக்க இருக்கிற பொதுத்தண்ணி"
"தொட்டிக்க இருக்கிறது என்ர தண்ணி. வேணுமெண்டா சொல்லிப்போட்டு எடு.....ஆனால் என்னைக்கேக்காமல் எப்பிடி எடுப்பாய்" சாமியார் கத்த...
அம்மா கடுப்பாகி வேலியில் இருந்த பூவரசு காம்பை முறிச்சு சாமியாரின் குண்டியில் குழறக்குழற அடிக்குடுத்தா!

பொதுவாக சாமியார் எல்லா இடத்திலும் "கடைசியில் அடிவாங்குவது" சின்னனிலையே இருந்து இருக்கு!

அடிவிழும் வேதனையில் ஆத்திரத்தின் உச்சத்தில் "கெட்ட வார்த்தை" ஒன்றை வாய் தவறி சொல்லிப்போட்டார் சாமியார்!
பிறகென்ன...
மலேசியாவிலும் வன்னியிலும் பிள்ளையை அடிச்சு கொடுமைப்படுத்தும் தாய் எண்டு ஒரு வீடியோ உலவினது. அதென்ன அடி... சாமியாருக்கு விழுந்த அடியை பாத்திருந்தா இரத்தக்கண்ணீர் வடிச்சிருப்பியள்.
அடியின் உச்சத்தில் வலி தாங்காத சாமியார் வீட்டை விட்டு வெளிநடப்பு செய்தார்.
நடை இல்லை ஓட்டம்!
உரிஞ்சாங்குண்டியோடு சவுக்காரம் பூசின அரைவாசியோட சாமியார் ஒழுங்கைக்குள்ள இறங்கி மெயின் றோட்டில ஏறினார்.
சாமியார் அந்த நேரமே "நிர்வாண சாமியார்" !!!

ஐயோ பிள்ளை ஓடுதே எண்டு அப்பதான் அம்மாக்கு அன்பு வந்து பின்னால ஓடி வந்தா....

"நில்லு அடிக்கமாட்டன்" எண்டு அம்மா சொன்னாலும் அதை நம்பும் நிலையில் சாமியார் இல்லை.
தடியை பின்னுக்கு ஒழிச்சு வைச்சுக்கொண்டு "அடிக்கமாட்டன்" எண்டா எப்பிடி நம்புறது.

அம்மா பிடிக்க துரத்த சாமியார் ஓடுவதும், அம்மா நிக்க சாமியார் நிப்பதுமாய் இந்த "ஓட்டப்போட்டி" பள்ளிக்கூட பிரதான வீதிவரை நீண்டது.

ஊரில உள்ள சனம் சாமியாரைப்பாத்து சிரிச்சுப்போட்டு போனார்கள். ஒருத்தனும் உதவி செய்யவில்லை.

இதில பெரிய அவமானம் என்னண்டால்....
சாமியார் உரிஞ்சாங்குட்டியுடன் ஓடுவதை சாமியாருடன் நேசறியில் படிச்ச பிள்ளை பாத்து "கொடுப்புக்குள்ள" சிரிச்சிட்டுப்போனாள்.
இதுவே சாமியாருக்கு மிகப்பெரிய "அவமானம்".

திடீரெண்டு சாமியாரை பின்வளத்தால் ஒருத்தர் கட்டிப்பிடிச்சு தோளில் போட்டு தூக்கிக்கொண்டு அம்மாவிடம் போனார்.

அவர் சாமியாரின் ஒரு "மாமா"!
"மருமோன் ... என்ன இது கோலம். உப்பிடி நிண்டியள் எண்டா என்ர மகளை எப்பிடி உனக்கு கட்டித்தாறது?"

அவர் கேட்ட கேள்வி நியாயம் தான்!

ஆனால் அதை புரிஞ்சு கொள்ளும் வயசில் சாமியார் இருக்கவில்லை.
குண்டுக்கட்டாய் தூக்கப்பட்ட சாமியார் அம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
செவியில் பிடிச்சு இழுத்து வரப்பட்ட சாமியாருக்கு வீட்டுக்குள் வைச்சு..
"முறையாக" பூசை நடந்தது.

சாமியாருக்கு சின்ன வயசில் இருந்தே "தண்ணியில" கண்டம்!
அதைவிட அவருக்கு "வாயிலையும்" கண்டம்.

சும்மா எல்லாத்துக்கும் "கருத்துக்கூறி" வாங்கிக்கட்டுவது சாமியாரின் வழமை!

குளிக்கும் போது அம்மாவிடம் அடி வாங்கிய சம்பவம் நடந்து 30 வரிசம் ஆச்சு!

திரும்பவும் அதே ஒரு சம்பவம் இண்டைக்கு நடந்தது!!

"இஞ்ச ... சனிக்கிழமை உந்த போனை நோண்டிக்கொண்டு இருக்கிறதை விட்டிட்டு உடுப்புகளை வோசிங் மெசினுக்குள்ள போட்டிட்டு.. தலைக்கு எண்ணை வைச்சு வடிவா முழுகி குளியுங்கோ"
இப்படி " கட்டளை" பிறப்பிக்கப்பட்டது.

இந்த நேரத்தில் தான் "குளிக்கும் போது" அடிவாங்கிய பழைய நினைவு வந்து போனது.
இதைச்சொன்ன சாமியாரின் மனிசிக்கும் அம்மாவுக்கும் இடையில் ஒரே ஒரு வித்தியாயம் தான் இருந்தது!

அந்த நேரம் அம்மாவின் கையில் "பூவரசந்தடி"!
இப்ப மனைவியின் கையில் கூட்டுற "தும்புத்தடி"!

30 வருசமாச்சு சாமியார் இன்னும் திருந்தவேயில்லை.



சனிக்கிழமைசாமியாரும் சகோதரயுத்தமும்!!



சனிக்கிழமைசாமியாரும் சகோதரயுத்தமும்!!
சின்ன வயசில சகோதரங்களோட போட்ட சண்டையை இப்ப நினைச்சாலும் ஒரு இனம்புரியாத "சந்தோசம்" வரும்.

சாமியாரின் வீட்டில் நாலும் "கடுவன்".அதாவது நாலும் பொடியள்.
சாமியார் மூண்டாவது.

பெரியண்ணருக்கும் சாமியாருக்கும் இடையில் சண்டை வருவதில்லை.
ரண்டு பேரும் வலு ஒட்டு!

சாமியார் ஒரு நாளும் பெரியண்ணரிடம் இருந்து அடி வாங்கியதேயில்லை.
ஒரு காலப்பகுதியில் சாமியாருக்கும் சின்னண்ணருக்கும் இடையில் தான் பயங்கர மோதல் நிகழ்ந்தது.

சின்னண்ணர் கொஞ்சம் அமசடக்கு.
கனக்க கதையான். ஆனால் கோபம் வந்தால் கிடக்கிறதால விளாசுவான்.
பதிலுக்கு சாமியாரும் சும்மா லேசுப்பட்ட ஆளில்லை.

உப்பிடித்தான் சாமியாருக்கும் சின்னண்ணருக்கும் இடையில் ஒரு சண்டை. சண்டைக்கு காரணம் "ரேடியோ".
ஆர் ரேடியோ கேக்கிறது எண்ட பிரச்சினை. 

அதிலும் ஆற்ற தலைமாட்டில ரேடியோ வைக்கிறது எண்ட பிரச்சினை.
"ஒலிச்சித்திரம்" எண்டு முந்தின காலம் படக்கதையை சுருக்கி ஒரு மணித்தியாலம் போடுவாங்கள்.
அண்டைக்கு கமலகாசனின் "அபூர்வ சகோதரர்கள்" படக்கதை போனது.
சாமியார் ரேடியோவை கொஞ்சம் தன்ர பக்கம் இழுக்க...சின்னண்ணர் தன்ர பக்கம் இழுக்கவும் ஆரம்பிச்சது சண்டை!

பேச்சுவார்த்தையில் போன பிரச்சினை திடீரெண்டு வன்முறையில் வெடித்தது!
அம்மா இடையில பூந்து மத்தியஸ்தம் செய்தாலும் சாமியார் கேக்கவில்லை.
வந்த கோபத்துக்கு சாமியார் ரேடியோவை தூக்கி ஒரே அடி!!!
ரேடியோ துண்டு துண்டாய் சிதறியது.
சின்னண்ணர் இதை எதிர்பார்க்கவில்லை.
கணப்பொழுதில் சுதாகரித்து ;
விட்டான் ஒரு விளாசல்!!
சாமியாரின் கன்னம் சிவக்க...!!!

சாமியார் அம்மாவை விலத்தி சின்னண்ணர் மேல் புலியாய்ப்பாய்ந்து விசர்நாயாய் போல கடித்தார்.
பதிலுக்கு சின்னண்ணர் சாமியாரின் தலை மயிரைப்பிடிச்சு மடக்கி முதுகில் முறையாய் நாலு விட்டதில் சாமியார் சுருண்டு விழுந்தார்.

இதுக்கு மேல் சாமியாரால் ஏலாது எண்டு உணர்ந்த அவர் தரையில் மயங்கி விழுந்து "நடித்தார்"!
சாமியாருக்கு "நடிப்பு" கைவந்த கலை!!!

அம்மா பயந்து ஓடி வந்து எழுப்பி தடவி அழுதார். சின்னண்ணர் திகைச்சுப்போனார். சாமியார் விக்கி விக்கி மூச்சு விடக்கஸ்ரப்பட்ட மாதிரி நடிக்கத்தொடங்கினார்.

இவ்வளவத்தையும் பாத்து தம்பி திகைச்சுப்போய் நிண்டான்.
நல்ல காலத்துக்கு பெரியண்ணரும் இல்லை அப்பரும் இல்லை!
இருந்திருந்தால் அண்டைக்கு மரண கலகம் நடந்து சாமியார் குழறக்குழற வாங்கியிருப்பார்.
கொஞ்சக்காலம் உப்பிடி சின்ன சின்ன பிரச்சினைக்கும் பாம்பும் கீரியுமாய் சின்னண்ணரும் சாமியாரும் கொழுவுப்பட்டு குத்துப்பட்டு திரிஞ்சினம்.
பிறகு சின்னண்ணர் வளர....
சாமியாரின் கவனம் தம்பியின் பக்கம் திரும்பியது.

உப்பிடித்தான் ஒருக்கால் சாமியாரும் தம்பியும் "ஆமியும் இயக்கமும்" விளையாட்டு விளையாடினார்கள்.
ஆர் ஆமி? ஆர் இயக்கம் ? எண்ட பிரச்சினையில் சாமியார் முதல்ல இயக்கமாய் இருக்க முடிவெடுத்தார்.
சாமியார் தனது பங்கரை மாமரத்துக்கு கீழேயும் தம்பி தனது பங்கரை பிலா மரத்துக்கு கீழேயும் அமைத்தார்கள்.

பங்கர் எண்டால் ஒரு காவோலையை எடுத்து மறைப்புக்கு வைச்சுபோட்டு...
எறியிறதுக்கு கொக்காரை மற்றும் ஊமக்காய்ச்சி பொறுக்கி வைச்சால் சரி.
சண்டை ஆரம்பமாகியது!
முதலில் கொக்காரையால் எறிஞ்சு கொண்டு இடைக்கிடை ஊமக்காய்ச்சியால் எறிஞ்சம்.
ஊமக்காய்ச்சி முறையாப்பட்டால் மண்டை பிளக்கும்.
சாமியார் மாமரத்துக்கு பின்னால் நிலையெடுத்து தற்காப்பு யுத்தம் நடத்தினார்.
சாமியாரின் தம்பி முன்னேறி வந்து தாக்கினான்.
வெற்றிலைக்கேணியில ஆமிய கடலால இறங்கி வர விட்டு அடிச்ச கதைகளை நன்கு அறிவார் சாமியார்.
அதனால் ஆமியை (தம்பியை)!கிட்ட வரவிட்டார்.
முறையா இரண்டு ஊமக்காய்ச்சியால சாமியார் குறி வைச்சு எறிஞ்சார்.
திரும்பி ஓடிய தம்பியின் முதுகில் பட்டு அவன் குழறினான்.
அட பாவம் தம்பி குழறுறான் எண்டு சாமியார் கிட்ட ஓடிப்போனார்.

அறுவான்!!!
சடாரெண்டு கையில கிடந்த கல்லாலை சாமியாருக்கு எறிஞ்சான்.
சாமியாரின் கையில் விழுப்புண்!
"பொறுடா வாறன்" எண்டு தளத்துக்கு திரும்பிய சாமியார்;
தேவைப்படலாம் எண்டு பொறுக்கி வைச்ச சல்லிக்கல்லோண்டை எடுத்துக்கொண்டு தாக்குதலுக்கு தயாரானார்.

அடிபட்ட புலியாக சாமியார் கடுமையாக தாக்குவார் எண்டு அறிஞ்ச தம்பி பின்வாங்கி ஓட வெளிக்கிட்டார்.
ஆனையிறவில அடிவாங்கின ஆமி பலாலிக்கு ஓடின மாதிரி பக்கத்துவீட்டு ஆச்சி வீட்ட ஓட வெளிக்கிட்டார் தம்பியர்.

கணக்கா "கொட்டுக்கடப்பால" காலைத்தூக்கி வைக்க ...
சாமியார் குறிப்பார்த்து எறிஞ்ச கல் தம்பியரின் தலையை பதம் பார்த்தது.
"கொட்டுக்கடப்பில்" சுருண்டு விழுந்தான் தம்பி!
அவன் "ஐயோ" எண்டு கதறியபடி கண்ணைப்பொத்திக்கொண்டு விழுந்தான்.
சாமியார் நிலமையை உணர்ந்து ஓடிப்போய் தூக்கினார்.
முகம் முழுக்க ரத்தம் கொழ கொழவெண்டு ஓடியது.
ஒரு மாதிரி தம்பியை தூக்கி வந்து கிணத்தடியில் இருத்திப்போட்டு தண்ணியை அள்ளி நாலைஞ்சு வாளி அவன் தலையில் ஊற்றினார்.
தம்பி அரை மயக்கத்தில் முனகினான்.
துவாயை எடுத்து துடைச்சுப்பாத்தால்...
நெத்தியில் ரண்டு மூண்டு "இளைப்போடும்" அளவுக்கு வெடிச்சுப்போய் ஆவெண்டு பிளந்து போய் இருந்தது.

அது பறுவாயில்லை... அவன் கண்ணை திறக்கமாட்டாமல் வேதனையால் துடித்தான்.
கண்ணில பட்டு கண்தெரியாமல் போனால் என்ன ஆகும். சாமியாருக்கு அழுகை வந்தது.
சாமியார் அழுதேவிட்டார்.

கடைசியாய் தம்பி கண்ணைத்திறந்தபோதுதான் சாமியாரின் போன உசிர் திரும்பி வந்தது.
வெளியில போன அம்மா வந்து என்னடா நடந்தது எண்டு கேட்டபோது...
"படியால தடுக்கி விழுந்துவிட்டான்" எண்டு சாமியார் கூசாமல் பொய் சொன்னார்.
(அம்மா வாறதுக்கிடையில் சாமியார் சண்டை பிடிச்சதுக்கான அத்தனை தடையங்களையும் அழிச்சுவிட்டார்)
சாமியார் பொய் சொன்னால் பிடிக்கவே ஏலாது. அந்தளவு வலு விண்ணர்.
கடைசியாய் தம்பியின் நெத்தியில் மூண்டு இழை தையல் போடப்பட்டது.
அந்த அடையாளம் இப்பவும் இருக்கவேணும்.

முப்பது வருசமா "தம்பி படியால தடக்கி விழுந்ததாயே" அம்மா நினைச்சுக்கொண்டு இருக்கிறா!
அதுக்குப்பிறகு "பெரிய சண்டை" நடக்காவிட்டாலும் சின்ன சின்ன சண்டைகள் நடக்கும்.
-குளிக்கும் போது கிணத்தடியில சண்டை
-படுக்கும் போது பாய்க்குச்சண்டை
-தும்பி பிடிக்கிற சண்டை
-சைக்கிளுக்கு சண்டை
-பூரானுக்கு சண்டை
-பேனைக்கு சண்டை
-இறைச்சிக்கறியில ஈரலுக்கு சண்டை
-பட்டத்துக்கு சண்டை
-லக்ஸ்பிறே மாவுக்கு சண்டை
-பங்கருக்குள்ள சண்டை

சாமியார் வளர்ந்து ஒரு 17வயது இருக்கும். ஒருக்கால் சாமியாரின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை.
சாமியார் லாம்பு வெளிச்சத்தில் விறாந்தையில் குனிஞ்சு படிச்சுக்கொண்டு இருந்தார்.
சாமியாரின் அம்மா வாயைத்திறந்தால் மூடமாட்டா!!
சாமியாரின் அப்பாவும் லேசுப்பட்ட ஆளில்லை.
சண்டை ஓயாமல் வர வர கூடிக்கொண்டே போனது!
ஒரு கட்டத்தில் சாமியார் ...
"பேசாமல் ரண்டு பேரும் இருக்கிறியளா?" எண்டு கோபமாய் கத்த;
சாமியாரின் அம்மா அடங்கினா.
சரி அடங்கிட்டா எண்டு பாக்க திரும்பவும் "பழஞ்சீலை கிழிஞ்ச" கணக்காய் புறுபுறுக்க...
பதிலுக்கு அப்பா கத்த ...
மீண்டும் சண்டை !!!

சாமியாருக்கு வந்த ஆத்திரத்தில் மண்ணெண்ணய் லாம்பை தூக்கி சுவத்தில ஒரே அடி!!!
சிமிலி சுக்குநூறாய் வெடிச்சு மண்ணெண்ணய் சிதறி சுவரில் ஒருக்கால் நெருப்பு விளாசி எரிஞ்சு அணைஞ்சது.

சாமியார் இப்படிச்செய்வார் எண்டு அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அதுக்குப்பிறகு சாமியாரின் முன்னால் அவர்கள் "சண்டை" போட்டதாய் நினைவில்லை.
உந்த உசாரில சாமியார் ஒருநாள் தன்ர மனிசியோடு சண்டைபிடிக்கும் போது...
"கனக்க கதைச்சியெண்டா உன்ர போன் உடையும்" எண்டார்.
கடைசியா சண்டையில் "போன்" உடைஞ்சது...!!!
ஆற்றை எண்டு கேளுங்கோவன்
வேறை ஆற்றை???
சாமியாரின் phone தான்!!!
சண்டை போடுறது முக்கியமில்லை.
எதிராளி ஆர் எண்டு அறிஞ்சு கைவைக்கவேணும் எண்ட விசயம் அப்பதான் சாமியாருக்கு விளங்கியது.


Comments System

Recent Posts Widget

Facebook Badge