வெள்ளி, ஜூன் 02, 2017

யாழ்ப்பாணத்துக்கான ஆற்றுத்திட்டம் -ஒரு சின்ன விளக்கம்





யாழ்ப்பாணத்துக்கான ஆற்றுத்திட்டம் எனப்படுவது;
ஆனையிறவு நீரேரி அதனுடன் கலக்கும் கனகராயன் ஆறு.
சுண்டிக்குளம் கடலில் வீணே கலக்கும் இரணைமடு குள நீர்
வடமராட்சிகிழக்கு , வடமராட்சி,தொண்டைமனாறு
உப்பாறு
இவற்றையெல்லாம் இணைத்து ஒரு ஆறு ஒன்றை உருவாக்குவது.
யாழ்குடாநாட்டின் 50% மழைநீர் மேற்குறிப்பிட்ட நீரேரிகளில் கலந்து வீணாக கடலோடு கலக்கிறது.அல்லது உப்புநீராக மாறுகின்றது.
யாழ்ப்பாண ஆற்றுத்திட்டத்தில் சேமிக்கப்படும் நீரை ஒரு 12 சதுர கிலோமீற்றர் அளவு நீர்த்தேக்கம் ஒன்றில் சேமிக்கவேண்டும்.
அந்த நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றுவது மிக எளிது.அது யாழ்குடாநாட்டின் குடிநீர் தேவையை கணிசமான அளவு பூர்த்திசெய்யும்.
யாழ்ப்பாண ஆற்றுத்திட்டத்தில்/ ஆறுமுகம் திட்டத்தில் சேமிக்கப்படும் நீரை குடிக்க பயன்படுத்தமுடியாது என சில கருத்துகள் சில செய்திதளங்களில் வெளியாகியிருக்கின்றன.
எதன் அடிப்படையில் அவர்கள் அப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
அது முற்றிலும் மிகத்தவறான கருத்து.

அணுகுண்டு புறுபுறுப்பு



செய்தி: 
அணுகுண்டால் அவுஸ்திரேலியாவை அழிப்போம். வடகொரியா எச்சரிக்கை!
புறுபுறுப்பு:
பேசாமல் ஊரில இருந்தே செத்திருக்கலாம்.

வடகொரிய அதிபர் கெளரவ kim jong un அவர்கட்கு!

வடகொரிய அதிபர் கெளரவ kim jong un அவர்கட்கு!

நான் சனிக்கிழமை சாமியார். அவுஸ்திரேலியாவில் இருக்கிறேன். பேஸ்புக்கிலும் இருக்கிறேன்.இது இரண்டிலும் நான் இருப்பது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.ஏனெனில் அவுஸ்திரேலியா மீது நீங்கள் கடுப்பில் இருக்கிறீர்கள். பேஸ்புக்கில் நீங்கள் இல்லை.
நான் சுமார் 8 வருடங்களின் முன் நாட்டுப்பிரச்சினை காரணமாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் அகதியாய் வந்தனான். அவுஸ்திரேலியாவில் சுமார் 8 மாதங்கள் சிறையில் இருந்து வெளியில வந்து பல கஸ்ரங்களின் பின் "நிரந்தர வதிவுரிமை PR" எடுத்து;
இப்ப "சிற்றிசன் எடுத்த முன்னாள் தமிழ் அகதியாய்" இருக்கிறன்.
இது எல்லாத்தையும் நான் ஏன் புலம்புறன் எண்டால்;
அவுஸ்திரேலியாவுக்கு சும்மா சிம்பிளா வரவிலை என்பது உங்களுக்கு தெரியவேண்டும்.இங்க சிற்றிசன் எடுக்க நான் பட்ட பாடு உங்களுக்கு புரியவேண்டும்.
கடந்த 8 வருசமா , படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காமல் செய்யாத வேலை எல்லாம் செய்து இப்ப ஒரு 4 வரிசமாத்தான் கொஞ்சம் படிச்சு ஏதோ கஸ்ரப்பட்டு வேலைசெய்து நிம்மதியா இருக்கிறன்.
2013 எண்டு நினைக்கிறன் , ஒரு கிலோ சீனி வாங்க காசு இல்லாமல் காருக்குள்ள இருந்த சில்லறையெல்லாம் தடவி எடுத்து வாங்கின ஞாபகம். அந்தளவுக்கு கஸ்ரப்பட்டுத்தான் இப்ப ஏதோ கொஞ்சமெண்டாலும் நிம்மதியா இருக்கிறன்.
Kim அவர்களே!
என்னடா வெளிநாட்டில இருந்துகொண்டு "பஞ்சப்பாட்டு" பாடுறன் எண்டு என்னில் கோபப்பட்டு நாய்களை விட்டு உங்கள் மாமாவை கொன்றது போல என்னை குதறிவிடாதீர்கள். உங்களின் மாமாவிடம் இருந்ததுபோல 80kg சதை இறைச்சி என்னிடம் இல்லை. வாந்து எடுத்தாலும் ஒரு 30கிலோ கூட தேறாது.
"அணுகுண்டு அடிச்சா முதல்ல அவுஸ்திரேலியாவுக்குத்தான் அடிப்பன்" எண்டு நீங்கள் அறிக்கை விட்டதில் இருந்து;
கவலையில் 3கிலோ நிறை குறைஞ்சு மெலிஞ்சுபோனன்.
மனிசி ஏசின ஏச்சில நானே "பங்கர்" வெட்டினதால இன்னும் ஒரு 2கிலோ நிறை குறைஞ்சுபோச்சு. நானே தனியா வெட்டினதால நாரி நோவு வேற.
"எப்ப நீங்கள் அணுகுண்டு அடிப்பியள்" எண்டு தெரியாமல் ஒவ்வொருநாளும் ஏங்கிச்சாகிறம்.
றோட்டில "ரயர்" வெடிச்சாலும் டக்கெண்டு நெஞ்சு இடிக்குது. தலைக்கு மேல "traffic police ஹெலிகொப்ரர்" பறந்தாலும் மனம் படக்கு படக்கு எண்டு அடிக்குது.
கனம் கிம் தம்பி!
நான் பொதுவா சனிக்கிழமைகளில் தான் "கருத்து" சொல்லுறன் எண்ட பெயரில் "கழுத்தறுப்பன்".
இண்டைக்கு வியாழன்.....!
கோதாரி விழுந்த அமெரிக்கன் காரன் "carl vision" எண்ட பெரிய கப்பலை உங்கட கடலுக்கு அனுப்பியிருக்கிறானாம்.
அவசரப்பட்டு பட்டினை தட்டி விட்டியள் எண்டா நாங்கள் கருகிப்போடுவம் எண்டுதான் இந்த கடிதத்தை அவசரமாக எழுதுறன்.
நான் அவுஸ்திரேலியன் சிற்றிசன் தான். ஆனால் இந்த அரசாங்கம் செய்யிறதில எனக்கு துளிகூட உடன்பாடு இல்லை.
வெளிவிவகார அமைச்சராக இருக்கும் julia Bishop , அவாவை எனக்கு கண்ணிலையும் காட்டக்கூடாது. இலங்கை அரசாங்கத்தோட "கள்ளத்தொடர்பில" இருக்கிறா அவா.
அகதிகள் விடயத்தில் உவா செய்த "திருக்கூத்துகள்" எங்களுக்கு தெரியும்.
விசர் மனிசி. விசர்த்தனமா கதைச்சதால நீங்கள் கடுப்பானதா கேள்விப்பட்டன்.தயவுசெய்து அந்த மனிசியின் விசர்த்தனமான பேச்சுகளை காதில போடாதையுங்கோ!
அடுத்தது இப்பதையில் அவுஸ்திரேலிய பிரதமந்திரி Malcolm turnbull. அவருக்கு "சூடு சுரணையே" இல்லை. அமெரிக்கன் அதிபர் donald trump என்ற கிறுக்குப்பயல் உவருக்கு தொலைபேசியில "கிழிய கிழிய" ஏசினவர். காறித்துப்பின பிறகும் அதை துடைச்சுப்போட்டு இப்ப அமெரிக்காவுக்கு "வால் பிடிக்க"ஆயத்தமா இருக்கிறார்.
அவுஸ்திரேலியா Darwin என்ற இடத்தில அமெரிக்கன் ஆமி 1300 பேரையும் கப்பலுகளையும் நிறுத்திவைக்க அனுமதி குடுத்தவர் உவர்தான். வெக்கம் ரோசம் இருந்தா அப்பிடிச்செய்திருப்பாரா?
குறுக்காலபோவான்!!!!
சகோதரா கிம்!
உதுகளையெல்லாம் நான் தட்டிக்கேட்க முடியாது.காரணம்;
சும்மா பேருக்குத்தான் நாங்கள் "சிற்றிசன்" ஆனால் வெள்ளைகளுக்கு இருக்கிற உரிமைகள் அனைத்தும் எங்களுக்கு இல்லை.
தயவுசெய்து அவசரப்பட்டு "பொத்தானை" அமுக்கிவிடாதையுங்கோ கிம்!
ஐ.நா சபை இலங்கைக்கு "கால அவகாசம்" குடுத்தது போல நீங்களும் ஒரு கால அவகாசத்தை அவுஸ்திரேலியாவுக்கு குடுங்கோ!
குறைஞ்சது ஒரு மாதம் எண்டாலும் குடுங்கோ!
அதுக்குள்ள நான் கொஞ்ச அலுவலுகள் செய்யவேணும்.
-என்ர போனை விக்கவேணும்
-காரை விக்கவேணும்
-வீட்டு சாமானுகளை ebay இல போட்டு விக்கவேணும்
-கருவேப்பிலை மரம் வளந்துபோய் நிக்குது. இலையை புடுங்கி தமிழ் கடையில குடுத்தாலும் காசு வரும்
இப்பிடி நிறைய அலுவலுகள் செய்யவேணும்.
போனமாதம் ஒரு நண்பனிட்ட கடன் வாங்கின்னான். அதை குடுக்காமல் இழுத்தடிக்கப்போறன்.
காருக்கு வாகன அனுமதிப்பத்திரம் ( car registration) வாற மாதம் செய்யவேணும். ஆனால் நான் கட்டமாட்டன் . கிட்டத்தட்ட 750$. அந்தக்காசுக்கு நான் சிறிலங்கா ரிக்கற் போடப்போறன்.
சிறிலங்காவில இருந்து அவுஸ்திரேலியாவுக்கு "உயிர்ப்பிச்சை" எடுக்க போனவர்கள் என ஏற்கனவே ஊரில உள்ள பொடியள் என்னை பேஸ்புக்கில "கழுவி கழுவி" ஊத்துறாங்கள்.
இப்ப அவுஸ்திரேலியாவில சாகப்போறன் எண்டு ஊருக்கு ஓடிப்போனா "காறித்துப்புவாங்கள்"!
என்ன செய்ய உயிர்வாழவேணும் எண்டால் துடைச்சுப்போட்டு;
வாழவேண்டியதுதான்!
Malcolm turnbull , Julia Bishop இவையோடதான் பிரச்சினையெண்டால் அவை ரண்டு பேரையும் தூக்கி கொண்டு போய்;
என்ன வேணுமெண்டாலும் செய்யுங்கோ!
அவை எங்களுக்கு வேண்டாம் எண்டு கன வெள்ளைக்காரங்களே சொல்லிட்டாங்கள்.
தயவுசெய்து அப்பாவிகளான எங்களை விட்டுவிடுங்கோ!!!
போன கிழமைதான் என்ர நண்பன் ஒருத்தன் "visa interview" இக்கு போனவன். அவனெல்லாம் சரியா கஸ்ரப்பட்டு இந்தோனேசியாவில இருந்து செத்துப்பிழைச்சு கப்பல்ல வந்தவன். காம்பில வருசக்கணக்கா இருந்து வெளிய வந்து ஒரு நல்ல வாழ்கையை ஆரம்பிக்க நினைக்கும் போது நீங்கள் "அணுகுண்டு" அடிச்சுக்கொல்லுவன் எண்டா எப்பிடி இருக்கும்???
மனச்சாட்சி இல்லாமல் அவுஸ்திரேலியா இப்பவும் வருசக்கணக்கா "மனூஸ்" தீவில் எங்கட தமிழ் அகதிகளை அடைச்சு வைச்சிருக்குது. பாவம் அதுகளின் நிலை???
"பனையால விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல" நீங்களும் இப்படி கருணையில்லாமல் நடக்காதையுங்கோ!
புண்ணியம் கிடைக்கும்.
"அணுகுண்டு" அடிக்கப்போறாங்கள் என்ன செய்யலாம் ? எண்டு போன கிழமை நடந்த "பிறந்த நாள்" நிகழ்வில்;
இரவு கலந்துரையாடலில் நான் கேட்டன்.
மூண்டாவது "கிளாஸ்" விஸ்கியை ஒரே மூச்சில் குடித்துவிட்டு...
"மச்சான் சாணியை உடம்பில பூசினால் கதிர்வீச்சு படாது" எண்டான் என் நண்பன்.
அவன் சொன்னதை கேட்டு சாணிக்கு அலைஞ்சு ஒரு இடமும் கிடைக்கவில்லை.
கடைசியா "குதிரைச்சாணம்" கிடைச்சுது. அதை வெட்டின பங்கருக்கு மேல போட்டு வைச்சிருக்கிறன்.
நேர காலம் தெரியாமல் நீங்கள் அணுகுண்டை அடிச்சாலும் எண்ட பயத்தில கதிர்வீச்சு தாக்கத்தில் இருந்து தப்ப;
நான் படுக்கப்போகமுதல் "sun screen lotion" பூசிக்கொண்டுதான் படுக்கிறன்.
Dear Kim
Please ... kindly consider my request and send me the launch 🚀 date of nuclear weapon on Australia 🇦🇺.
Note: i am using made in north korea mobile.
Your obediently
#சனிக்கிழமைசாமியார்©
Australia
Melbourne.


"நொடிகள்"

"நொடிகள்" எனக்கு முன்னால் நடக்கின்றன.
"நிமிடங்கள்" என் முன்னால் ஓடிக்கொண்டிருக்கின்றன.
"நாட்கள்" என்னை கடந்து சென்றுவிட்டன.
"வாரங்கள்" என் கண்ணுக்கெட்டிய தூரத்திலும்;
"மாதங்கள்" கூப்பிடுதூரத்திலும் இருக்கின்றன.
"வருடங்கள்" சந்திக்கமுடியாத தூரத்துக்கு சென்றுவிட்டன!!
ஆனாலும்;
"வாழ்க்கை" எப்போதும் என் கைபிடித்து கூடவே நடக்கிறது!!!

உனக்கான சிம்மாசனத்தை நீயே உருவாக்கு!!!


உனக்கான சிம்மாசனத்தை நீயே உருவாக்கு!!!
அதில் மட்டுமே ஏறி திமிரோடும் செருக்கோடும் உட்கார்ந்துகொள்.

எவனோ செய்து அதை உனக்காக வைத்திருப்பான் என நினைக்காதே!!!
அதை எதிர்பார்த்து காத்திருந்தால்; நிச்சயம் நீ ஏமாந்துபோவாய்.

வழி நெடிகிலும் பல அழகான கதிரைகள் உனக்காக வழங்கப்படும். இளைப்பாறு! ஆனால் அவற்றிலே நிரந்தரமாய் இருந்துவிடாதே!!
அவற்றினை கடந்து போக கற்றுக்கொள்.

உன்னை இந்த உலகம் அங்கிகரிக்கும் என ஏங்கி ஏங்கியே வாழ்வை வீணாக்கிவிடாதே!

முயற்சிகள் என்பது பூக்கள் போல!
எல்லாம் காயாவதும் இல்லை.
காயானது எல்லாம் கனியாவதும் இல்லை!!!

ஒரு சிறு வட்டத்துக்குள் இல்லாமல் உனக்கான எல்லைகளை நீயே கீறிக்கொள்.உன் வல்லமைகளை தாண்டி கொஞ்சம் எட்டாத உயரத்தில் எல்லைகளை வை!
பறந்துகொண்டேயிரு.
வானம் மிகமிகப் பெரியது!!!
தொட்டுவிடும் தூரத்தில் இருந்தால் அதற்கு பெயர் வானம் அல்ல, கூரை!!!

மே18!!

மே18






மரணம் எங்களை சப்பித்துப்பியது!
மரணம் எங்களை பிய்த்து எறிந்தது!
மரணம் எங்களை அம்மணமாக்கியது!
மரணம் எங்களின் குருதியை குடித்தது!
மரணம் எங்களின் குரல்வளைநெரித்தது!
மரணம் எங்களை பட்டினி போட்டது!
மரணம் எங்களை மண்டியிடவைத்தது!

மரணமே எங்களை நிமிர்ந்திடவும் வைத்தது!
மரணமே எங்களுக்கு வழியையும் காட்டியது!
மரணமே எங்களை வாழவும் சொன்னது!
மரணம்தான் மனிதர்களை
அடையாளம் காட்டியது!
மரணமே எங்களின் வாழ்வாய்ப்போனது!!!

"மே18"
ஒற்றை வரியில் எழுதிவிடும் வலியும் அல்ல!
ஒப்பாரி வைத்து அழ இது விதியும் அல்ல!
மறந்துவிட்டுப்போக இது கனவும் அல்ல!
கேட்பார் இன்றி நின்ற இனம்!!
உலகம் திரும்பி பாரா இனம்!!
வஞ்சித்து முழுசாய் அழிச்ச இனம்!!
இன்னும் தன் வாய் திறக்காத இனம்!!

அன்பை உலகுக்கு சொன்ன இனம்
அறிவால் உயர்ந்து நின்ற இனம்
வீரமே உயிராய் வாழ்ந்த இனம்
தனக்காய் நாடு கண்ட இனம்
தன்னிறைவோடு வாழ்ந்த இனம்
தன்மானத்தோடு நிமிர்ந்த இனம்
தரணியே போற்ற வாழ்ந்த இனம்

கொடும்புனல் அடித்துமே
சில்லம்பல்லமாய் சிதறி..
போர் தின்ற இனம்.
வெந்தணல் மீதினில் கருகி...
ஒப்பாரி சத்தம் ஊரெல்லம் கேட்க..
உயிர் சாம்பலாய் போன இனம்.

நீதிக்காய் அலைந்து நிர்க்கதியாய்
நிற்கும் இனம்.
இன்றும் வலிகளை சுமக்கும் ஈழத்தமிழினம்!

சனிக்கிழமை சாமியாரும் பாகுபலியும்!!!

னிக்கிழமை சாமியாரும் பாகுபலியும்!!!


பொதுவாக சனிக்கிழமைசாமியார் எல்லாப்படங்களையும் தியேட்டருக்கு போய் பார்ப்பதில்லை. ஆனால் "பாகுபலியை" தியேட்டரில தான் பாப்பன் என அவரின் "ஆதீனம்" ஒற்றைக்காலில் நிண்டதால்;
ஆதீனத்தின் முடிவை அவரால் நிராகரிக்கமுடியல்லை. 

ஆதினத்தின் முடிவுகளை சாமியார் எப்போதும் மறுத்துப்பேசியதில்லை. அப்படி மறுத்தால் வரும் பின்விளைவுகளை சாமியார் அனுபவரீதியாக அறிந்துள்ளார்.
(ஆதீனம் எண்டால் யாரென்பது கலியாணம் கட்டினவைக்கு விளங்கும்)

ரண்டு "கச்சான் பைக்கற்" ,"குளிர்பான போத்தல்கள்" சகிதம் தியேட்டருக்குள் நுழையும் போதே ;
சாமியாரை அடையாளம் கண்டுவிட்டான் ஒரு "பக்தன்"!
"சாமி நீங்கள் வடகொரிய அதிபர் கிம்முக்கு எழுதின கடிதம் awesome" என்றான்.
அவனின் அன்பு மழையில் நனைந்து ஒரு மாதிரி இருட்டுக்குள் கதிரையை தடவி கண்டுபிடிச்சு அமர்ந்தார்.

பக்கத்தில் ஒரு குடும்பம். பொடியன் வைத்திருந்த "கொக்க கோலா" போத்தலில் இருந்து "chivas regal" வாசம் மூக்கை துளைத்தது.
அந்த வாசத்தோடு சேர்த்து சாமியாரும் கச்சானை கொறித்தார்.

"கடைகளின் விளம்பரம்" என்ற பெயரில் ஒரு 15 நிமிடம் எங்களின் பொறுமையை சோதித்தார்கள்.
ஊரெண்டா திரைக்கு போத்தலால எறிஞ்சிருப்பார் சாமியார்.
சாமியாரும் ஒரு ரவுடிதான் ஊரில!
கடைசியா ஒரு மாதிரி படம் ஆரம்பமாகியது!

எழுத்தோட்டமே அந்தமாதிரி. பாட்டுகள் அதைவிட அருமை. கதை எண்டு பாத்தா; எங்களின் தமிழ்காவிய கதைகளில் இருந்து உருவியது தான். ஆனாலும் இயக்குனர் "ராயமெளலி" கையாண்ட விதம் அற்புதம்.

Graphics , VFX அட்டகாசம்!

அதுகும் அந்த ஒரு பாட்டில வானத்தில பறக்கிற கப்பல் மெய்சிலிர்க்கவைத்தது.
"ஆதினத்துக்கு" படம் ரொம்பவே பிடித்துவிட்டது. நான் பக்கத்தில இருக்கிறது தெரியாமலே படத்தில் மூழ்கிவிட்டது!

அதுகும் "தேவசேனா" வீரமா கள்ளர்களை புரட்டி புரட்டி எடுக்கும் போது "ஆதீனம்" கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தது. வாளை எடுத்து சுழட்டி வெட்டும் போதும் அம்புகளை "மல்ரிபரல்" மாதிரி விடும் போதும் ஆதினம் அதிகமான உற்சாகத்தை வெளிக்காட்டியது.

சாமியார் அவற்றையெல்லாம் கடைக்கண்ணால் பார்த்து மண்டையில் குறிப்பெடுத்துக்கொண்டார்.
படத்தில் ஒரு காட்சியில் பென்னாம் பெரிய மரக்குத்தியொண்டை பாகுபலி சிம்பிளா பிளந்துவிடுவார். பென்னாம் பெரிய கல் ஒண்டை சிம்பிளா துக்குவார்.
இதையெல்லாம் உற்றுக்கவனித்த "ஆதினம்" ஒரு அறிக்கை விட்டது.

"இப்பிடி வீரமான விசயங்கள் செய்தாத்தான் கலியாணம் எண்டால் உங்க கனபேருக்கு பொம்பிளை கிடைச்சிருக்காது"
எய்யப்பட்ட இந்த அம்பு பொதுவானதுதான் என்றாலும் அந்த அம்பில் குறிப்பாக சாமியாரின் பெயர் எழுதப்பட்டுள்ளதை சனிக்கிழமை சாமியார் தன் "ஆன்மீக அறிவால்" உணர்ந்துகொண்டார்.

திருப்பி பதில் சொன்னால் அந்த இடத்தில் "சனிக்கிழமை சாமியார்" தான் அவமானப்படுவார் என்பதை அவரின் "தீர்க்கதரிசனம்" எச்சரித்தது!

"இந்த வருசத்துக்கு இடையில் என்ர உடம்பை பாகுபலிபோல ஏத்துறன்" என மனதுக்குள் சபதம் எடுத்தார்.
இப்படியாக "சபதம்" எடுத்தது இதுதான் முதல் தடவை அல்ல.
பல தடவைகள் இப்படி தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்து "Gym membership" வீணா கட்டி ஆதினத்திடம் "கிழிய கிழிய" வாங்கிய அனுபவங்கள் சில பல நடந்திருக்கிறது.
"Gym இக்கு போறதை விட்டுப்போட்டு வீட்டு வேலையளை பாருங்கோ. உடம்பு வைக்கும்" என கண்டிப்பான உத்தரவை மீறி gym இக்கு போய் ஒரு கிழமையால போகாமல் விட்டார் சனிக்கிழமை சாமியார்.
( அந்த சோகக்கதைகளை பிறகு எழுதுறன்)

சரி படத்துக்கு வாறன்.
நல்ல படம் எண்டு சொல்வற்கு அப்பால் இந்திய சினிமா ஒரு சர்வதேச தர எல்லையின் வரை சென்று கொடிகட்டிப்பறக்கிறது என்றே சொல்லவேணும். கடுமையான உழைப்பு தெரிகிறது.

கட்டப்பாவாக வாற "சத்தியராஜ்" இன் இடத்துக்கு ஆரைப்போட்டாலும் அது "சப்பெண்டு" போகும்.
சத்தியராஜ் தான் இந்தப்படத்தின் இன்னோரு ஹீரோ!
நாசர், ரம்மியா கிருஸ்னன் நடிப்பு சொல்லிவேலையில்லை.
வில்லன் "ராணா" மிரட்டுகிறார்.

"அனுஸ்கா" வாற காட்சிகளில் சாமியார் உற்சாகம் அடைந்தார். ஏனெனில் சாமியார் அவாவின் "உடன்கட்டையேறும் ரசிகன்-die hard fan" .
இந்த "உற்சாகம் அடைதலை" ஆதினம் கடைக்கண்களால் குறிப்பெடுத்துக்கொண்டது.
அதன் பலாபலன்கள் அப்பப்ப எதிர்காலத்தில் வெளிப்படுத்தப்படும்.

கடைசியா படம் முடிய இரவு ஒரு மணி ஆகிவிட்டது.
எந்த level park இல காரை விட்டது என்ற பெருங்குழப்பத்துக்கு ஆளான சாமியார் கடைசியில் வெத்திலையில் "மைபோட்டு" காரை கண்டுபிடித்தார்.

வீட்டுக்கு வந்த சாமியாருக்கு அவரின் நண்பன் தொலைபேசி அழைப்பு எடுத்தான்.
" மச்சான் ... படம் அந்த மாதிரி என்ன? Graphics , VFX எல்லாம் விசயின்ர புலி படத்தில வந்தமாதிரியே இருக்கு என்ன?" என்றான்.

சனிக்கிழமை சாமியார் தலைக்கிறுதியில கட்டில்ல அப்பிடியே மயங்கி விழுந்தவர் தான் ....
அடுத்த நாள் விடியக்காலமைதான் எழும்பினார்.

மே மாதம்!!!



மே மாதம்!


வெசாக் கூடுகள் கட்டும் ஆரவாரத்தில்;
தீப்பந்தங்களை மறந்துவிடாதீர்கள்.
"முழுநிலா வெண்பொங்கலுக்கு"முதல்;
"முள்ளிவாய்க்கால்" கஞ்சிதானே குடித்தோம்.
"பிரித்" ஓதும் சத்தத்தில்
"காணாமல் போனோரின்" கதறல்களை மறந்துவிடாதீர்கள்.
ஆரியகுளத்து மணிகளின் சத்தத்தில்
நல்லூரான் காண்டா மணி அடங்கிப்போகக்கூடாது!
தாமரைகள் குளத்தில் பூக்கட்டும்.
எங்கள் வேலிகளில் பூவரசே பூக்கட்டும்.
"வேட்டிகள்"எப்போதும் வெள்ளையாகவே இருக்கட்டும்.
"காவி" படிந்தால் அது நிறம் மாறிவிடும்.
எங்களின் குணமும் மாறிவிடும்!
"யாழ் தேவி" க்குப்பிறகு
"உத்தரட்ட தேவி" வரட்டும்.
"பற்றிக் சாரம்" கட்டுவதில் தப்பில்லை
"கோமணத்தை" மறப்பது தப்பு!
அந்தியேட்டி நாளில்..
தீபாவளி வந்தால்
"கிடாய்" வெட்டுவதில்லை!
செத்தவீட்டு வளவுக்கு முன்னால
"பைலா" படிப்பதில்லை!
அழுதுகொண்டே இருப்பதும் பிழை
"அதை" மறந்துவிட்டு போவதும் பிழை!
கண்ணீரை கையால துடைக்கலாம்;
"கண்டின காயம்" காலத்தால் அழியாது!
வெடிச்சத்தம் கேட்டால்
மாடுகள் இப்பவும் வெருண்டுதான் ஓடும்.
சீருடைகளை கண்டால் நாய்கள்
இப்பவும் குரைக்கும்.
வாலாட்டுவதில்லை!
வெசாக் கூடுகளை கட்டுங்கள்..
ஆனால் கவனம்;
அவை எப்போதும்...
பனையின் உயரத்துக்கு கீழேயே இருக்கட்டும்!

ஊடக பயங்கரவாதம் (Media mafia)



ஊடக பயங்கரவாதம்
(Media mafia)


யாழ்ப்பாணத்தில் இப்போது லஞ்சம், ஊழல் என்பதற்கு அடுத்தபடியாக தமிழ் ஊடகங்களின் பயங்கரவாத செயல்கள் தலைதூக்கி ஆடுகின்றன.
ஊடக சுதந்திரத்துக்காக குரல் எழுப்பும் தமிழ் ஊடகங்கள் எதுவுமே நியாயமாக செய்திகளை வெளியிடுவதில்லை.
ஏதாவது ஒரு தனிநபரின் துதிபாடலாகவும் அல்லது கட்சிகளின் துதிபாடலாகவும் தான் வெளிவருகின்றன.
அச்சடிக்கப்படும் ஒவ்வொரு சொற்களுக்கும் "பணம்" சம்பாதித்துவிடும் ஒரு மனநிலையே காணப்படுகிறது.
சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கும் வல்லமை அற்ற வெறும் "நோஞ்சான்களாகவே" இருக்கிறது ஊடகங்கள்.
துணிவாய் யாரும் எழுதினால் கூட அதை வெளியிடும் "திராணியற்ற" ஊடகங்களாக இருப்பதாய் அண்மையில் ஒரு யாழ்ப்பாணத்து ஊடகன் பதிவிட்டான்.
ஒண்டு உண்மையோட நிலூங்கோ!
அல்லது பொய்யோட நில்லுங்கோ!
நடுநிலை எண்டு பேக்காட்டிக்கொண்டு ரண்டு பக்கமும் "தடவுவது" பிழை.
ஊடகங்கள் என்பது சமூகத்தின் காவல் நாய்கள். குரைக்கவேண்டும். வாலாட்டக்கூடாது.
சமூக நீதியை நிலைநாட்ட ஊடகங்களின் பங்களிப்பு மிக மிக அவசியம்.ஆனால் இன்று பல ஊடகங்கள் பிரிவினைகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன.
"பேப்பர்" என்பது ஒரு சமூகத்தின் கண்ணாடி.உடைத்துவிடாதீர்கள்!

மக்களுக்கு நேர்மையாய் செய்தி சொல்லவேண்டும் என்ற வைராக்கியத்தோடு வாழ்ந்து அதற்காகவே இறந்த...
நிமலாரஜன், நடேசன் போன்றோரின் சாபம் உங்களை சுட்டெரிக்கும்.
கவனம்!!!!

இனியும் எதற்கு நாடகம்?




இனியும் எதற்கு நாடகம்?
முள்வேலிக்குள் மீண்டும் தூக்குமேடையா!
நந்திக்கடலை எதற்கு தூர் வாருகிறீர்கள்?
முள்ளிவாய்க்காலில் எதை கிண்டிப்பாக்குறியள்?
எட்டு வருடமாச்சு
உக்கியிருக்கும்,
விட்டுவிடுங்கள்.
பாவம்...
அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!
மீண்டும்!
எங்கள் வீட்டு வேலியில் "கிளைமோர்"
கட்டப்படலாம்!
எங்கள் பின் வளவுக்குள் துருப்பிடித்த
துப்பாக்கிகள் கிடைக்கலாம்!
என் தம்பியின் புத்தகப்பைக்குள்
"ரவைகள்" கண்டுபிடிக்கப்படலாம்!
எங்கள் வீட்டு கோழிக்கூட்டுக்குள் இருந்து "கிரனைட்" எடுக்கப்படலாம்!
ஏன் கனக்க ;
என் அக்காவின் தாலிக்குப்பதிலாய்
சயனைற் கட்டப்படலாம்!
நேற்றுத்தானே முள்ளிவாய்க்காலில்
கதறினார்கள்....
"எங்கட பிள்ளைகளை திருப்பி தாங்கோ"
இன்று;
பளையில் பொலிஸ் வாகனத்துக்கு துப்பாக்கிச்சூடு.பொலிசார் காயம்.
நாளை;
முள்ளிவாய்க்காலில் தன் மூத்த பிள்ளையை காணவில்லை என
கதறிய தாயின்...
கடைக்குட்டி கைதுசெய்யப்படலாம்!
இனியும் எதுக்கு நாடகம்?
"அவர்களிடம்"ஒண்டுமே இல்லை.
உயிர்களைத்தவிர!
அவர்களை வாழ விடுங்கள்;
அல்லது...
நிம்மதியாகவேனும் சாகவிடுங்கள்!
கவனமாக தேடுங்கள்!
பளை பொலிஸ் நிலைய துப்பாக்கியின் ரவைகள் இரண்டு காணாமல் போயிருக்கும்.
அல்லது கொடிகாமத்தின் இராணுவ
முகாமில் இருந்தும் கூட ரவைகள் காணாமல் போயிருக்கலாம்.
சிங்கள பேப்பரால் சுத்தி ;
கண்டெடுக்கப்பட்ட கிளைமோர் போல!!!
நேற்றுத்தானே ...
செத்தவர்களுக்காய் அழுதோம்.
இன்னும் அழுத கண்ணீர் ஈரம் காயவேயில்லை!
இன்று ...
உயிரோடு உள்ளவர்களுக்காய் அழுகிறோம்.
நாங்கள் சபிக்கப்பட்ட அடிமைகள்.
எங்களை கழுத்தில் இறுக்க கட்டுக!
எங்கள் குரல்வளைகளை நசுக்குக!
சப்பாத்து கால்களால் உழக்குக!
எங்களை தூக்கிலிடுக!
அடையாளங்களை அழித்துவிடுக!
முடிந்துவிட்டதாயும் வென்றுவிட்டதாயும்
ஆர்ப்பரிக்குக!
நாங்கள் மெளனமாகவே குற்றுயிரோடு செத்துப்போவோம்!
முன்பொரு வைகாசியில் மூச்சடங்கியது போல!
எங்களை மீண்டும் தோண்டி எடுத்து
சித்திரவதை செய்து...
கொன்று புதையுங்கள்.
உங்கள் ஆத்திரங்கள் அப்போதென்றாலும்
அடங்கட்டும்!
புத்தனின் சிலையை...
ஆரியகுளத்து சந்தியில் பெயர்த்தெடுத்து
நல்லூரான் உள்வீதியில் பிரதிஸ்டை செய்க!
"சிங்க லே" கொடியை கிளிநொச்சி வீதியின் மின்கம்பத்தில் மட்டும் அல்ல...
எங்கள் பனை மரங்களிலும் கட்டிவிடுக!
எது வேண்டுமானாலும் செய்யுங்கள்!!
ஏனெனில்;
"சிறிலங்கா அபே ரடே(எங்கட நாடு)"என;
போனகிழமைதான் "ஞானசார தேரர்"
கொழும்பில் கத்திச்சொன்னார்.
நாங்கள் சபிக்கப்பட்ட ஆடுகள்..
நீங்கள் பசியடங்கும் வரை தின்னலாம்.
வைச்சு சூடாக்கி சூடாக்கி நாளைக்கும் தின்னலாம்!
"ஏன்"என்ற கேள்வி யாருமே கேட்கமாட்டார்கள்!
ஏனெனில்;
நாங்கள் "சபிக்கப்பட்ட" அடிமைகள்!

சனிக்கிழமைசாமியாரும் கலியாண வீட்டு வீடியோவும்!!


னிக்கிழமைசாமியாரும் கலியாண வீட்டு வீடியோவும்!!







கலியாண வீட்டுக்கு வீடியோக்கு ஆரைப்பிடிக்கிறியள் எனும் கேள்வி மிக முக்கியமானது.
அது அந்தக்காலத்தில் என்ர மூத்தக்காவின் சாமத்தியவீட்டில் இருந்து இன்று என் நண்பனின் கலியாணம் வரை "அதே கேள்வி" விதம் விதமாய் கேக்கப்படுகிறது.
அந்தக்காலத்தில் தெரிவுகள் குறைவாய் இருந்ததால் ஒண்டு பருத்தித்துறையில் உள்ள "ராசன் வீடீயோ" அல்லது அச்சுவேலி "ஒளியருவி" தான். இல்லாட்டில் "புலவர் வீடியோ".
ஆனால் இப்ப இஞ்ச வெளிநாடுகளில் பெரிய பிரச்சினை என்னண்டா மணப்பந்தல் சோடினையில இருந்து வீடியோ வரை கனக்கப்பேர் வைச்சிருக்கினம்.
இதில பெரிய சிக்கல் என்னண்டா;
ஆரைப்பிடிக்கிறது? என்பதுதான்.
அவரைப்பிடிச்சா இவருக்கு கோவம்..
இவரைப்பிடிச்சா அவருக்கு கோவம்..!
முந்தி ஊரில கலியாண வீடியோ எண்டால் பெரிய புதினம்.
வீடியோவுக்கு ஆரை முதல் "நிக்கிறதுக்கு"கூப்பிடுறது எண்டதிலேயே பிரச்சினையாகி "வெட்டுக்குத்தெல்லாம்" நடந்திருக்கு. அதே கோதாரி விழுந்த சம்பிரதாயம் இப்பவும் கனடாவுக்கும் வந்து மாறாமல் இருப்பதுதான் பெருங்கேவலம்.
"சாப்பிட்டியளா? "எண்டு கேக்க மறந்தாலும் ;
"போட்டோ எடுத்தியளோ" என கேப்பதை மறக்கமாட்டினம்.
சாப்பாட்டுக்கு நிக்கிற கியூவை விட போட்டோவுக்கு நிக்கிற கியூதான் பெரிசு. அதிலையும் முதல் போறதுக்காக இடையில பூருற ஆக்களை கண்டால் சாமியாருக்கு கடும் கோபம் வரும்.
ஒரு சிலர் இப்பவும் போட்டோவுக்கு நிக்கமாட்டம் எண்டு "லெவல்" காட்டுவினம். அது அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை இருக்கு.
"கூட்டிக்குறா" பவுடரையும் அப்பி தலை நிறைய எண்ணையையும் வைச்சு;
ரட்டை பின்னலையும் பின்னி;
சிவத்த ரிப்பன் கட்டி வீடியோவில் நிற்கும் அழகே அழகு.
நித்தியகல்யாணி, கனகாம்பர கொண்டைகளில் அந்தக்காலத்தில் பெண்கள் தனியழகு!
அதை close up இல வீடியோ எடுக்கும் விதமே தனி அழகு.
சாப்பிடும் போதும்.. சாப்பிட்ட விரலை சூப்பும் போதும் அதை closeup இல எடுத்து போடுவினம்.
அது பெரும்கொடுமை.
அதில வேற ஆக்களை close up இல காட்டி பயமுறுத்துவாங்கள்.
ஒரு long shot, ஒரு close up. இதுதான் அந்தக்கால வீடியோ.
ஆனால் இப்ப கிறேன் எண்டுறாங்கள். பறக்கிற கமரா எண்டுறாங்கள்.
Slow motion, wide angle, close up, arial shoot எண்டுறங்கள்.
ஒரு கோதாரியும் விளங்குதில்லை.
அந்தகாலத்து வீடியோவுகளில் பெரும்பாலும் கலியாண மாப்பிளை பொம்பிளையை slow motion இல ஓட விடுவினம்.பூமரங்களுக்கு முன்னால நிக்கச்சொல்லுவினம். செவ்வரத்தம் பூவை பிடிச்சு முகத்துக்கு கிட்ட ஆட்டச்சொல்லி வீடியோ எடுப்பினம்.
அதிக பட்ட graphics ஆக ஒரு ஆளை நாலைஞ்சா காட்டுவதும் அல்லது விளையாட்டு ஹெலியில பறக்கவிடுவதும் தான்.
அதைவிட செத்த ஆக்கள் அல்லது கலியாணத்துக்கு வரமுடியாத உறவுகளை போட்டோவில் "இணைப்பது" மிக முக்கியம்.
உப்பிடித்தான் சனிக்கிழமை சாமியாரின் கலியாணம் இந்தியாவில் திருச்சியில் நடந்தது.
கலியாணவீட்டுக்கு ரண்டு நாள் முதல்த்தான் மாப்பிளையான சாமியார் போய் இறங்கினார்.
சாமியாரின் ஒல்லியான கறுத்த உருவத்தை பார்த்த ஊர்ச்சனம் அவர் அவுஸ்திரேலியாவில் இருப்பதை நம்ப மறுத்தது.
அதனால் "பலரின்" வேண்டுகோளை ஏற்று "gold facial " செய்தார் சாமியார். அப்பதான் போட்டோவுக்கும் வீடியோவுக்கும் வடிவா இருக்கும் என்பதால்.
கலியாண வீட்டுக்கு போட்டோ எடுக்கும் போது casual ஆக இருக்கவேணும் என்பதாலும்;
முகத்தில் பயத்தை வெளிக்காட்டகூடாது என்பதற்காகவும்...
சாமியார் ஒரு சின்ன technique பாவித்தார்.
ஒரு bubble gum வாங்கி அதை சப்பிக்கொண்டும் சிரிச்சு சிரிச்சு கதைச்சுக்கொண்டும் இருந்தார்.
கடைசியா வீடியோவை பாக்கும் போது ஆடு இலைகுழையை அரைச்சு தின்னுற மாதிரி இருந்தது!
அசிங்கப்பட்டார் சாமியார்!!!
வெளிப்புற படப்பிடிப்பு( outdoor shooting) எடுப்பதற்கு திருச்சியின் ஒரு பழைய பூங்காவுக்கு போனார் சாமியார்.
அங்கே பூமரங்களுக்கு நடுவிலும் மரத்துக்கு பின்னாலும் ஓடிப்பிடிச்சு விளையாடுவதை படமாக்கினார்கள்.
பழைய பாக்கியராசாவின் படங்களிலும் பாரதிராசாவின் படங்களிலும் எப்படி பாட்டுக்கட்டங்கள் இருக்குமோ...
அதைப்போலவே அச்சொட்டாய் படமாக்கினார்கள்.
பூங்காவின் மூலையில் ஒரு "சறுக்கீஸ்" உம் ஊஞ்சலும் இருந்தது.
ஊஞ்சலில் மாறி மாறி இருத்தி ஆட்டிவிட்டு எடுத்தார்கள்.
அதைவிட கொடுமை "சறுக்கீசில்" இரண்டுபேருமா சறுக்கவிட்டும் எடுத்தார்கள்.
சுமார் மூண்டு மணித்தியாலமா கதறக்கதற வீடியோ எடுத்தார்கள்.
கடைசியா long shot இல நடக்கவிட்டு திரும்பி "டா டா" காட்டுவதோடு எங்களின் திருமண வீடியோ இனிதே நிறைவு பெறும்.
கடைசியா போட்டோவும் வீடியோவும் வந்தபோது....
ஒல்லிப்பயித்தங்காயான சாமியார் போட்டோவுகளில் "மன்மதக்குஞ்சாய்" அழகாக இருந்தார். வீடியோவில் பாட்டுக்கட்டம் மட்டும் பெரும் "காமெடியாக" இருந்தது.
அதுவும் "கண்கள் இரண்டால்.." எண்ட நாடோடிகள் படப்பாட்டை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பு சிரிப்பா வரும்.
ஆ... சொல்லமறந்திட்டன்..
கூலிங்கிளாஸ் போட்டு நெத்தியில கொஞ்சி இப்பிடி வழமையான விளையாட்டுகள் காட்டியும் போட்டோவுகளும் வீடியோவும் எடுத்தம்.
அந்த "து(அ)ன்பியல்" சம்பவம் நடந்தது 2010 களில்.
ஆனால் இப்பவும் அதே பழைய passion இல தான் வீடியோ எடுக்கினம்.
மரத்தை சுத்தி ஓடுவதும்...
கூலிங்கிளாசை கழட்டி மாட்டுவதும்..
பொம்பிளையை தூக்கி சுத்துறதும்..
நெத்தியில கொஞ்சுறதும்...
மூக்கையும் மூக்கையும் தேய்க்கிறதும்...
BMW காருக்கு முன்னால நிண்டு தெறிக்கவிடுவதுமாய்த்தான் இப்பவும் வீடியோ, போட்டோ எடுக்கினம்.
அந்தக்காலத்தில் பருத்தித்துறை ராசன் வீடியோ செய்த graphics இல ஒரு சதவீதம் கூட இருக்காது.
ஹெலியில , விளையாட்டு காரில போற மாதிரி ஏலுமெண்டா செய்து காட்டுங்கோ பாப்பம். ஏலாது உங்களால....
ஆனால் கேட்டால் அதெல்லாம் பழைய fassion எண்டுவியள்.
உப்பிடித்தான் சாமியார் போனவருசம் இதெ மாதம் அவரது "பால்ய"நண்பன் ஒருவனின் கலியாணத்துக்கு சென்னை போனார்.
"தனியாத்தான்" போனவர்.lol
சாமியாரின் நண்பன் "சுழையா"40000 ரூபாய் வீடியோக்காரனுக்கு எண்ணிக்குடுக்கும் போது;
தலையில அடிச்சு சொன்னார்.
"மச்சான் காசை முதல்ல குடுக்காத..
போட்டோ தரமாட்டங்கள்" எண்டு.
பொதுவாக சாமியார் சொல்வது "பலிக்கும்".
காரணம் சாமியாருக்கு "பட்ட அறிவும்" "பார்த்த அனுபவமும்" கனக்க!
இப்ப முழுசா ஒரு வரியம் ஆகப்போகுது. அல்பமும் இல்லை... வீடியோவும் இல்லை!
அவன் இந்தியாவுக்கு போன் அடிச்சா "மோடிஜீ" தான் கதைக்கிறாராம்.
(ஹிந்தியில ரெக்கோடிங் போகுது)
அண்டைக்கு எனக்கெடுத்து அழுவாரப்போல கேக்குறான்...
"மச்சான் உன்ர போனில ஏதும் கலியாண வீட்டு போட்டோ இருக்கோ" எண்டு!
அதுக்கு சாமியார் சொன்னார்
"மச்சான் நீ பேசாமல் திரும்பவும் ஒருக்கா இந்தியா போனியெண்டால் வாங்கிப்பிடிச்சிடலாம்"
அதுக்கு அவன் சொன்னான்.
"மச்சான் பிள்ளை பிறக்கப்போகுது. திருச்சி உச்சிப்பிள்ளையாரிலதான் மொட்டை அடிக்கிறதா நேத்திக்கடன். ஒரேயடியா அங்கையே முதலாவது பிறந்தநாள் செய்து அதையும் என்ர கலியாணவீட்டு வீடியோவில் இணைச்சுவிடுவம்"
சாமியார் அவனை நினைத்து பரிதாபப்பட்டார்.
அடுத்த வரிசமாவது அவனது கலியாண வீட்டு வீடியோ கிடைக்க எல்லாம் வல்ல "மதவடி வைரவர்" துணைபுரியட்டும்.
முக்கியகுறிப்பு: சாமியாரின் கலியாணவீட்டு வீடியோ "ஆதீனத்தின்"தணிக்கைகுழு கைகளில் சிக்கியிருப்பதால் அதை வெளியிடுவதில் "பெரும்சிக்கல்" இருப்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.




Comments System

Recent Posts Widget

Facebook Badge