திங்கள், ஜனவரி 25, 2016

அவுஸ்திரேலிய தினமும்...!!! "மறைக்கப்பட்ட இனப்படுகொலை"!!! "The stolen generation and genocide"



அவுஸ்திரேலிய தினமும்...!!!
"மறைக்கப்பட்ட இனப்படுகொலையும்"
"The stolen generation and genocide"

******
அவுஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 26 ம் திகதியை , வெள்ளை இன மக்கள் "அவுஸ்திரேலிய தினமாக" கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள் எல்லோருக்கும் பொது விடுமுறைமுறையும் கூட.

1788ம் ஆண்டு தை மாதம் 26 ம் திகதி ஆயிரத்துக்கும் அதிகமான பிரித்தானிய வெள்ளை இன குடியேறிகள் ( அதில் 90 சதவீததுக்கும் அதிகமானவர்கள் குற்றவாளிகள்)அவுஸ்திரேலியாவில் கப்டன் "ஆர்தர் பிலிப்" தலைமையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் இருக்கும் "பொட்டானி" கடற்கரையில் தரையிறங்கிய நாள் அது.

அந்த நாளில் இந்த அவுஸ்திரேலிய மண்ணின் பூர்வீக குடிகள் ஆரியத்துக்கும் மேற்பட்டவர்கள் அநியாயமாக "இனப்படுகொலை" செய்யப்பட்டார்கள்.

ஒரு இனம் படுகொலை செய்யப்பட்ட "இனப்படுகொலை நாளையே" அவுஸ்திரேலிய வெள்ளை இன மக்கள் "அவுஸ்திரேலிய தினமாக" - கொண்டாடி மகிழ்கிறார்கள்.

பிரித்தானிய வெள்ளை இன ஏகாதிபத்தியத்தின் படையெடுப்பால்

அவுஸ்திரேலிய மன்ணில் வாழ்ந்த பூர்வீக குடிகலை அநியாயமாக கோரமாக "இனப்படுகொலை" செய்து அவர்களின் குருதியை இந்த மண்ணில் ஓடவைத்து...

பிரித்தானிய ஏகாதிபத்திய நில ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் இரத்தக்கறை படிந்த நாளே " அவுஸ்திரேலிய தினம் " ஆகும்.
அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளின் குருதிக்கறை படிந்த பிரித்தானிய காலணித்துவ ஆக்கிரமிப்பளர்களின் கொடி


 
ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை நாளான "மே18" தினத்தினை சிங்கள பேரினவாதம் "போர் வெற்றி விழாவாக" கொண்டாடும் நாளுக்கு ஒப்பான நாளே இந்த "அவுஸ்திரேலிய தினம்"-Australia day.

இதை அறிந்த அறியாத ஒரு பகுதி ஈழத்தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் இந்த தினத்தில் தங்கள் வாகனத்திலும் வீடுகளிலும் அவுஸ்திரேலிய கொடியை பறக்கவிடுவதும்....




"இனிய அவுஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்" என வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதும் மிக மிக அபத்தமான செயல்.இந்த தினத்தின் அடிப்படை வலராறு அறியாமால் செய்யும் முட்டாள்த்தனம். ஒரு இனம் 'இனப்படுகொலை" (Genocide) செய்த நாளை கொண்டாடுவது வேதனையிலும் வேதனை.


1788 இல் வந்திறங்கிய பிரித்தானிய வெள்ளை இன மக்களால் " சின்னம்மை" எனும் கொடிய நோய் அவுஸ்திரேலிய பழங்குடியினருக்கு பரவியது. சரியான மருந்தும் பராமரிப்பும் இல்லாமல் அவுஸ்திரேலிய மாநகரில் வசித்த "பூர்வீக குடிகளில்" 90% மக்கள் அநியாயமாக இறந்துபோனார்கள்.

இது கூட ஒரு திட்டமிட்ட இன அழிப்புத்தான்.

1788 இல் ஆரம்பமாகிய "பூர்வீக குடிகள்" மீதான இன அழிப்பு போர் 150 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தது. பல பிரித்தானிய படையெடுப்பாளர்கள் "இனப்படுகொலை குற்றவாளிகளாக" அடையாளம் காணப்பட்டும் அவர்கள் தண்டிக்கபடவேயில்லை.
1804 இல் தஸ்மேனியா "றிட்சன்" மலைக்குகை முனையில் 50 இக்கும் மேற்பட்ட "பூர்வீக குடிகள்" கோரமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.



அந்த படுகொலை என்பது தஸ்மேனியாவில் வாழ்ந்த பூர்வீக குடிகளுக்கு ஒரு செய்தியை சொன்னது.

"போராடினால் அல்லது உரிமைகளுக்காக புரட்சி செய்தால் நீங்கள் படுகொலை செய்யப்படுவீர்கள்"

ஆனாலும் அந்த பூர்வீக குடிகள் தொடர்ந்து தங்களின் உரிமைகளுக்காக தங்களின் மண்ணில் போராடினார்கள்.



(மேலே உள்ள புகைப்படத்தில் ஒன்பது பூர்வீக குடிகள் இரும்புச்சங்கிலியால் மிருகங்கள் போல கட்டப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு முன் எடுத்த புகைப்படம் இது. அதில் துப்பாக்கியோடு நிற்கும் ஒருவரை உற்றுப்பாருங்கள்.அவனும் ஒரு பூர்வீக குடிதான். ஆனால் பணத்துக்கும் வசதிக்கும் வெள்ளையர்களுக்கு விலைபோன ஒரு எட்டப்பன்)




1838 இல் எழுபதுக்கும் அதிகமான அவுஸ்திரேலிய பூர்வீக குடி மக்கள் கன்பரா மாநகருக்கு அண்மையில் இருக்கும் "வினெகர் மலை" எனும் இடத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். அதே வருடம் அதே இடத்துக்கு அண்மையில் "மையெல்" சிற்றோடைக்கு அருகில் 28 பூர்வீககுடிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களும் உள்ளடக்கம். இதுவும் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையே தான்.
Read More:Risdon_Cove_massacre_a_reassessment



1928ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அவுஸ்திரேலிய மண்ணின் உள்நாட்டு மக்கள் 110 இக்கு பேருக்கும் அதிகமானவர்கள் "கொனிஸ்ரன்" (Coniston station)என்ற இடத்தில் ( அவுஸ்திரேலியாவின் வடக்கு மாநகரில் உள்ள ஒரு இடம்) பழிவாங்கல் படுகொலை(massacre in revange) செய்யப்பட்டார்கள்.
"Frederick Brooks" எனும் வெள்ளை இன வேட்டையாளன்(dingo hunter) ஒருவன் இறப்புக்கு பழிவாங்கும் முகமாக அந்த " பூர்வீக குடிமக்கள்" கோரமாக படுகொலை செய்யப்பட்டார்கள். இதில் பெண்களும் பச்சிழம் குழந்தைகளும் அதிகம்.

The Coniston massacre, which took place from 14 August to 18 October 1928 near the Coniston cattle station in Northern Territory, Australia, was the last known officially sanctioned massacre of Indigenous Australians and one of the last events of the Australian Frontier Wars. People of the Warlpiri, Anmatyerre and Kaytetye groups were killed. The massacre occurred in revenge for the death of dingo hunter Frederick Brooks, killed by Aboriginal people in August 1928 at a place now known as Yukurru, (also known as Brooks Soak).
Official records at the time stated that 31 people were killed. The owner of Coniston station, Randall Stafford, was a member of the punitive party for the first few days and estimated that at least twice that number were killed between 14 August and 1 September. Historians estimate that at least 60 and as many as 110 Aboriginal men, women and children were killed.The Warlpiri, Anmatyerre and Kaytetye believe that up to 170 died between 14 August and 18 October.

தஸ்மேனியா பெருநகரில் வாழ்ந்த பூர்வீக குடிமக்கள் திட்டமிட்டே இனவழிப்பு செய்யப்பட்டார்கள்.


1824 இல் 1500 இக்கும் அதிகமான பூர்வீக குடிமக்கள் தஸ்மேனியா பெரு நகரில் வாழ்ந்தார்கள். ஆனால் 7 வருடங்களுக்கும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக படுகொலை செய்யப்பட்டு 1831 இல் வெறும் 350 பேரே வாழ்ந்ததாக வரலாறு சொல்கிறது.

அந்த மன்ணில் வாழ்ந்த "பூர்வீக குடிகளின் " வாக்குமூலத்தின் படியும் சாட்சியங்களின் படியும் இது ஒரு தெட்டத்தெளிவான " இனப்படுகொலை" என தெளிவாகிறது.
https://en.wikipedia.org/wiki/Coniston_massacre

அவுஸ்திரேலிய பூர்வீக மக்களின்(aboriginal flag) கொடி

1978 இலே 750,000 ஆக இருந்த பூர்வீக குடிகளின் சனத்தொகையானது

1920 இல் வெறும் 60,000 ஆக குறைந்தது.


132 வருடங்களில் ஒரு இனம் விருத்தியடந்து பெருதாவதற்கு பதில் அந்த இனம் திட்டமிட்டு படிப்படியாக " இனப்படுகொலை " செய்து அழிக்கப்பட்டது.
 
 
இந்த பூர்வீக குடிகளின் சுகாதாரம், அடிப்படை வசதிகள் என்பன கவனிக்கப்படாது ஆயிரக்கணக்கானவர்கள் நோய்வாய்ப்பட்டு அநியாயமாய் இறந்தும் போனார்கள்.


***






அவுஸ்திரேலிய தினமாகிய இன்று "கூகுள்" தனது முகப்புபக்கத்தில் "அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளின் வலி சுமந்த ஒரு வரலாற்று துயரத்தின்" (stolen generation)படத்தினை பிரசுரித்து ...



அவுஸ்திரேலிய தினத்தின் முகத்திரையை கிழித்து ஒரு "மறைக்கப்பட்ட இனப்படுகொலையின்" உண்மை பக்கத்தினை தெளிவாய் வெளியிட்டுள்ளது.

இது ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படலாம்.
 


The World’s Most Popular Website Just Ripped The Rug Out From Under Australia Day

If you were hoping to wake up to an all ‘Aussie, Aussie, Aussie, Oi, Oi, Oi’ Australia Day this morning, then whatever you do, don’t log onto the world’s largest website.

In a stunning departure from convention, today’s ‘Google Doodle’ – the picture that adorns the Google logo, and changes based on the significance of the day – has delivered what surely must be the most overtly political statement in world Google history.
Over to Google for the explanation: "Doodle 4 Google 2015 was won by Ineka Voigt from Canberra High School in ACT, for her entry ‘Stolen Dreamtime’," explains the corporate giant.

Australians hopping onto Google this morning will see an extremely powerful image

 

 


(picture above:
Google's Australia Day doodle is a powerful reminder of the stolen generation.)


The Stolen Generations (also known as Stolen Children) were the children of
Australian Aboriginal and Torres Strait Islander descent who were removed from their families by the Australian Federal and State government agencies and church missions[clarification needed], under acts of their respective parliaments. The removals occurred in the period between approximately 1905and 1969,although in some places children were still being taken until the 1970s Documentary evidence, such as newspaper articles and reports to parliamentary committees, suggest a range of rationales. Motivations evident include child protection, beliefs that given their catastrophic population decline after white contact that Aboriginal people would die out, and a fear of miscegenation by full-blooded Aboriginal people.

அவுஸ்திரேலிய பூர்வீக குடிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள்.



பலபகுதிகளிலும் இருந்து சின்னக்குழந்தைகள் அவர்களின் குடும்பங்களில் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து எடுக்கப்பட்டு ஒரு "தலைமுறையையே" களவாடினார்கள்.

அந்த தலைமுறை நீண்ட நாட்களாக குடும்பங்களை விட்டு பிரித்து வைக்கப்பட்டு பல ஆண்டுகளின் பின் ஒரு "அநாதை தலைமுறையாக" தங்களின் குடும்பம் எங்கே? தங்களின் தாய் தந்தை யார்? தங்களின் சகோதரங்கள் யார்? என தெரியாமல் வாழ்ந்து அநாதைகளாக செத்துப்போனது.



இது ஒரு மிகவும் கொடிய இன அழிப்பின் மறைக்கப்பட்ட மறுபக்கம்.








 




 
ஒரு இனவழிப்பு..!!!

ஒரு கொண்டாட்டம்..!!!

ஒரு இனத்தின் வலி..!!!




இதை அறியாமல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழினத்தின் ஒரு சிலர் " அவுஸ்திரேலிய தினத்தினை " கொண்டாடுவதும் ...

இந்த நாளின் குதூகல நிகழ்வுகளில் பங்கெடுப்பதும் ....

மனவேதனையான விடயம்!!!!!

 
@தமிழ்ப்பொடியன்





 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

புதன், ஜனவரி 20, 2016

மலர் ரீச்சர்!!! -குறும் கதை


போனமாதம் “பிரேமம்” எண்டொரு மலையாளப்படம் பாத்தன்.
அந்தக்கதையின் கனவிசயங்கள் என்ர ”பழைய” கதைகளோட அப்பிடியே அச்சொட்டா ஒரேமாதிரியா இருந்திச்சு. கதையின் முடிவைத்தவிர!!
சின்னவயது காதலில் கதை ஆரம்பித்து ஒண்டு முடிய ஒண்டா தாவி படிப்பிச்ச ரீச்சரில காதலாகி ...
அதுவும் தோல்வியாகி...
பிறகும் அங்கின இங்கின ஒண்டாய் காதல் அரும்பி ,பூத்து ,கருகி...
கடைசியில எதிர்பார்க்காத ஒண்டு வந்து காதல் அரும்பி கனியான கதைதான் மலையாளப்படம் “பிரேமத்தின்” கதைச்சுருக்கம்.
நண்பனின் காதல் கதையான ”நோ துறு ஒழுங்கை” கதை எழுதிய பிறகு ...
என்னுடைய “மலர் ரீச்சரின்” கதையையும் எழுத வேணும் எண்டு ஒரு ஆசை!!!
இது காதல் கதை அல்ல...
காதலின் மறுவடிவமான ஒரு வகை “பாசத்தின்” கதை!
படிப்பிக்கிற ரீச்சரில வரும் ஒரு வகை அன்பின் வெளிப்பாடான “பாசம்” கொஞ்சம் அதிகமாகி அது ஒரு இனம்புரியாத ஈர்ப்பாக வெளிப்படும் அந்த “அனுபவத்தினை” எல்லோரும் அனுபவிச்சிருப்பியள்.
எனக்கு மட்டுமான அனுபவம் அல்ல இது.
எல்லோரும் ஒருமுறையேனும் சந்திச்ச அனுபவத்தினை “என் கதையாக” எழுதுகிறேன்.
இதில் ஒரு துளியேனும் “விரசம்” கலக்கப்படவில்லை என்பதை கூறி கதைக்கு வாறன்.
1996!
அப்ப நான் O/L படிச்சுக்கொண்டிருந்த காலம்.
வழமைக்கு மாறாக விஞ்ஞானம் படிப்பிக்கும் வாத்தியார் வலு ரிப் ரொப்பாக வெளிக்கிட்டு வகுப்புக்கு வந்தார்.
“சேர் என்ன இண்டைக்கு கலக்குறியள்.. ஏதும் விசேசமோ?”
நான் தான் வகுப்பு மொனிற்றர். என்னோட சேர் நல்லமாதிரி.
எங்களோட மனசு திறந்து (open) ஆ பேசுவார்.பம்பலா கனவிசயங்கள் கதைப்பார். அவருக்கு கலியாணம் ஆகவில்லை.
சேர் கொஞ்சம் வடிவு குறைவுதான். கொஞ்சம் கறுப்பு. ஆனால் நல்ல மனிசன்.
“டேய் .. இண்டைக்கு புது ரீச்சர் ஒரு ஆள் பள்ளிக்கூடத்துக்கு புதுசா வாறாவாம்”
சேர் சொல்லும் போது பின்னணியில் பாரதிராஜாவின் “அலைகள் ஓய்வதில்லை..”படத்தின் காதல் பாட்டு ஒண்டின் பின்னணி இசையை இளையராசா வாசித்துகொண்டிருந்தார்.
” சேர் ...கலக்குறியள் ..” என் நண்பன் சொன்னதும்...
சேரின் முகத்தில் ஒரு வெளிப்பு!!
திருவிழாவில் நிண்டு நிண்டு எரிஞ்சு பளீரென எரிஞ்ச ரியூப் லைற்தான் நினைவுக்கு வந்திச்சு.
பாடம் துவங்கி வலு ஆர்வமா போய்க்கொண்டிருந்தது. அண்டைக்கு எங்கட வகுப்பு “ஹவுஸ்புல்” (house full) . அடிக்கடி பள்ளிக்கூடத்துக்கு “கட்” அடிக்கும் சிவா கூட வந்திருந்தான். நாங்கள் வலு ஆர்வமா பாடத்தை கவனிச்சுகொண்டிருந்தம். ஒரே நக்கலும் பம்பலுமா அந்த பாடநேரம் (period) போய்க்கொண்டிருந்தது. காரணம் என்னண்டு கனபேருக்கு தெரியும்.
O/L வகுப்பு...
விஞ்ஞான பாடம்
வகுப்பு “ஹவுஸ்புல்”..
ஆர்வமா பொடியள் பாடத்தை கவனிக்கிறாங்கள்...
நக்கலும் பம்பலுமா பாட நேரம் போகுது...
எண்டா வேற என்னவா இருக்கும்??
O/L விஞ்ஞான புத்தகத்தில் அடிக்கடி ஆர்வமா பாக்கும் “இனப்பெருக்கம்” அத்தியாயம் தான் அண்டைக்கு போய்க்கொண்டிருந்தது.
உண்மையா இப்ப நினைக்க நினைக்க சிரிப்புத்தான் வரும்.
“பாலியல் கல்வியின் “ முக்கியத்துவத்தினையும் அதன் தேவையினையும் பற்றி அந்த காலத்தில் பருவம் அடைந்த மாணவர்களுக்கு தெளிவான கற்பித்தலும் விழிப்புணர்வும் செய்யப்படுவதில்லை.
ஆனால் வெளிநாடுகளில் இப்போது பார்க்கும் போது ...
அதன் தேவையும் முக்கியத்துவமும் இப்பதான் புரியுது.
இப்ப கூட எங்கட கல்விமுறையில எல்லாத்தையும் மூடி வைக்கிறதால தான் சில தவறான செயற்பாடுகளில் இளம்தலைமுறை போகிறதோ என்று கூட ஒரு சின்ன சந்தேகம்.
சரி உந்த கதையை விட்டிட்டு முக்கியமான கதைக்கு வருவம்!!!
பாடம் தொடங்கி கொஞ்ச நேரம் ஆகயில்லை...
அடிக்கடி சேர் பள்ளிக்கூடத்தின்ர பிரதான வாசலை (main gate) அடிக்கடி பாத்துக்கொண்டிருந்தார்.காரணம் என்னெண்டு நான் சொல்லவேண்டிய தேவையில்லை.
எங்கட வகுப்பு நேரா பள்ளிக்கூட பிரதான வாசலுக்கு நேர இருக்கும்.
அதனால ஆர் வந்தாலும் இலகுவா(easy) பாக்கலாம்.
9:24 முற்பகல் ..
சிவப்பு நிற சேலையில் ஒரு புது ரீச்சர் எங்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து இறங்கினா...
”பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு..” எண்ட இளையராசாவின் இன்னோரு பாட்டு பின்னணியில் எனக்கும் கேட்டது. சேருக்கும் கேட்டிருக்கவேணும்.
ஏனென்டால் அவரும் ஒரு பருவமடைந்த பொடியன் தானே!!!
இப்ப திருவிழா ரியூப் லைற்று என்ர முகத்திலும் எரிஞ்சுது!!!
லேடிஸ் சைக்கிளை எங்கட வகுப்புக்கு முன்னால உள்ள தேமா மர நிழலில் ...
அப்பிடியே வலக்காலால ஒரு ஸ்ரைலா ஸ்ராண்டை மடக்கி சைக்கிளை நிப்பாட்டிவிட்டு....
வகுப்பு சுவருக்கு மேலால தலையை மட்டும் கொஞ்சமா மெல்லிசா எட்டி புதினம் பாக்கும் பொடியளைப்பாத்து “அழகா “ ஒரு சிரிப்பு சிரிச்சபடி....
எங்கட வாத்தியாரையும் பாத்து ஒரு “மெல்லிய “ புன்னகையை அள்ளித்தெளித்தபடி...
மலர் ரீச்சர் எங்கட வகுப்பை கடந்து போகும் போது...
எனக்குள்ளும் ஒரு சில வண்ணத்துப் பூச்சிகள் பறந்ததை உணர்ந்தேன்.
பாரதிராசாவின் படங்களை அதிகமாக பார்த்ததன் இரசாயண விளைவு அது.
(இயக்கத்தின்ர கட்டுப்பாட்டு காலத்தில ஜெனறேற்றருக்கு (genarator) ஈரச்சாக்குப்போட்டு பக்கத்துவீட்டுக்கு சத்தம் கேக்காமல் கள்ளக்கொப்பியில படம் பாத்த கதைகள் நிறைய இருக்கு. அது பிறிம்பா வெற ஒரு சந்தர்ப்பத்தில சொல்லுறன்)
ரீச்சருக்கு அவ்வளவு பெரிய வயசு இல்லை.
என்ன ஒரு 20 அல்லது 21 இருக்கும் ...அப்பிடியெண்டா என்னை விட ஒரு 6,7 வயசுதான் கூட..
ரீச்சரைப்பாத்ததும் ஏதோ ஒரு இனம்புரியாத அன்பு...
சத்தியமா சொல்லுறன் அது காமத்திலும் காதலிலும் சேராத பருவவயதின் இனம்புரியாத ஒரு ”இனிதான உணர்வு”.
இதை கனபேர் அனுபச்சிருப்பம்.அதுதான் இதுவென இப்ப ஜோசிப்பியள்.
“மச்சான் ... புது ரீச்சர் கலக்குறாடா..” என் நண்பன் என்னை கிண்டினான்.
“டேய் ... ரீச்சரைப்பாத்து என்னடா கதைக்குறாய்?” இது நான்.
“மச்சி..உன்ர கடைவாயால ஏதோ வழியுது .. முதல்ல அதைத்துடை... வந்திட்டாய் என்னை திருத்த” இது என் நண்பன்.
திரும்பி கரும்பலகையை பாக்குறம்...
எங்கட விஞ்ஞான வாத்தியாரை காணயில்லை...
எங்கட போனவர் எண்டு பாத்தா ரீச்சருக்கு பின்னால ஆசிரியர் அறைக்கு(staff room) போய்க்கொண்டிருந்தார்.
பாவம் எங்கட வாத்தியார்...
அவருக்கும் காதல் தோல்வி கனக்க...
அவற்ற கதையை எழுதினால்...
எங்கட பள்ளிக்கூடத்தில பத்தாம் வகுப்புக்கு சமூகக்கல்வி படிப்பிக்கும் ரீச்சர் தொடக்கம் சங்கீத ரீச்சர் வரை அவரது காதல் கதை நீழும்.
போனவருசம் சங்கீத ரீச்சர் கலியாணம் கட்டினாப்பிறகு எங்கட வாத்தியார் “தாடியோட “ திரிஞ்சார்.
பாவம் வாத்தியாருக்கு சாதகத்தில ஏழுச்செவ்வாய் போல...
பிறகு சங்கீத ரீச்சர் பக்கத்து பள்ளிக்கூடத்துக்கு மாற்றலாகிப்போனதும் அதை வழிச்சிட்டார்.
அவற்ற கதையையும் எழுதும் நேரம் இல்லை...
அதனால என்ர கதைக்கு வாறன்...
வாத்தியார் போனதால வகுப்பில பொடியள் சத்தம் போடத்தொடங்கிட்டாங்கள்...
நான் தான் வகுப்பு தலைவர்(monitor).
ஆண்டு 6 இல இருந்து A/L கடைசிவரைக்கும் நான் தான் வகுப்புத்தலைவர்.
(கள்ளனை பொறுப்பாளாரா விட்டா களவு நடக்காது எண்டமாதிரி குழப்படிகாரனை மொனிற்றரா விட்டா வகுப்பு அமைதியா இருக்கும் .)
என்ர நண்பன் தான் அசிட்டண்ட் மொனிற்றர்( assistance monitor).
எங்கட வகுப்பு எப்பிடி இருக்கும் எண்டு ஒருக்கா ஜோசிச்சு பாருங்கோ!!! lol
நான் என்ற நண்பனை வகுப்பை பாக்கவிட்டிட்டு எங்கட வாத்தியாரை தேடி ஆசிரியர்கள் அறைக்குப்(staff room)போனன்.
"டேய் .. போடா வாறன்..”
சலூனுக்கு வரமறுத்து தலைமயிர் வெட்ட அடம்பிடிக்கும் சின்னப்பிள்ளையின் செயலினை என் வாத்தியாரின் பதிலில் கண்டேன்.
சந்தடி சாக்கில் புது ரீச்சரை உள்ளே தேடினேன். அங்க அவா இல்லை!!!
சரி வந்தனான் ... ஒபிசுக்குள்ள போய் ரண்டு சோக் (எழுது மணல் கட்டி) எடுத்துக்கொண்டு போவம் என அங்க போனன்.
அங்க சோக் பெட்டிக்கு காவலுக்கு இருக்கும் வினாசி அண்ணை (pion)என்னை முறைச்சுப்போட்டு ஒண்டுதான் தந்தார்.அவருக்கு ஏதொ உப அதிபர் எண்ட நினைப்பு.அவரின் அளப்பறைகள் கனக்க!!!
சோக்கை எடுத்துக்கொண்டு ஒபிசை(office) விட்டு வெளிய வரும் போது ...
திடீரென அதிபரின் குரல்...
“தம்பி இங்க ஒருக்கா நில்லு”
அதிபருக்கு பக்கத்தில புது ரீச்சர்...
எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு ..
நிண்டன்...!!!
இன்னும் ஆரம்பிக்கவேயில்லை..
அதுக்கிடையில ரீச்சர் அதிபரிட்ட சொல்லிட்டாவோ???
”ரீச்சருக்கு ஒருக்கா வன்னி block இல எட்டாம் ஆண்டு C வகுப்பை காட்டிவிடும்” அதிபர் என்னிடம் சொன்னதும்...
(வன்னி block- கொஞ்சம் தனியாக இருக்கும் கட்டிடம்.. குழப்படி செய்யாத பொடியளின் வகுப்புகள் அங்க இருக்கும்...)
இளையராசாவின் சிம்பொனி இசை பின்னணியில் பெரிசா ஒலிக்கத்தொடங்கியது!!!
ரீச்சர் எனக்குப்பின்னால வர ...
நான் அவாவுக்கு வழிகாட்டியாக...
என்ர வகுப்படிக்கு போகாமலேயே வன்னி block இக்கு போகலாம்.இருந்தாலும் என்ர வகுப்படியால தான் போனேன்.
காரணம் என்னண்டு உங்களுக்கு சொல்லத்தேவையில்லை எண்டு நினைக்கிறன்.lol
கொஞ்சத்தூரம் போனதும் ...
ரீச்சர் என்னைக்கேட்டா..
“ என்ன பேர் உம்மட.. எத்தினயாம் வகுப்பு படிக்கிறாய்?”
பெயரையும் வகுப்பையும் சொல்லிவிட்டு ரீச்சரின் பெயரைக்கேட்டேன்.
“மலர்விழி”
மலர் ரீச்சர்!!!!
ரீச்சர் பெரிசா ஏதும் அதுக்குப்பிறகு கதைக்கவில்லை.
“நன்றி “ என்றதோடு மட்டும் சரி...
நான் திரும்பி என்ர வகுப்புக்கு வரும்போது எங்கட வாத்தியார் திரும்பவும் வகுப்புக்கு வந்திருந்தார்.
“எங்க போனனீர் ?” வாத்தியாருக்கு என்ர ஆருயிர் நண்பன் பத்தி வைச்சிட்டான் என்பது அவர் கேட்ட குரலின் தொனியில் தெரிஞ்சுது.
நான் ரீச்சரை கூட்டிக்கொண்டு விட்ட கதையை கேட்டதும் வாத்தியாரின் முகம் மூண்டு நாள் வைச்சிருந்த சிற்றி பேக்கரி பாண் மாதிரி சுருங்கிப்போயிருந்தது.
நான் என்ன செய்ய...??
அடுத்த கிழமை...
எங்களுக்கு சமூகக்கல்வி படிப்பிக்கும் கெளரி ரீச்சர் என்னோட நல்லமாதிரி.
கெளரி ரீச்சரின் மகள் என்ர வகுப்புத்தான். பக்கத்து மகளிர் பள்ளிக்கூடம்.
ரீயூசனில ஒண்டாப்படிக்கிறம்....
வடிவான பிள்ளை...
ஆனா வாய் கொஞ்சம் கூட...
கெளரி ரீச்சருக்கு என்னைப்பிடிக்கும். நான் சரியான குழப்படி எண்டாலும் நல்லாப்படிப்பன். ஆண்டு 6 இல இருந்து O/L வரைக்கும் படிப்பிலையும் குழப்படியிலையும் முதலாம் இடம்.
கெளரி ரீச்சர் சைக்கிள் ஓடமாட்டா.. அதனால சில நேரம் நான் தான் பள்ளிக்கூடத்துக்கு ஏத்தியும் வருவன். பள்ளிக்கூடம் முடிய
அவாவின்ர வீட்டடியில இறக்கியும் விடுவன்.
அதனால ரீச்சரின்ர மகளுக்கும் எனக்கும் “ஏதோ” எண்டு எங்கட
பொடியள் கதையை கட்டி விட்டிட்டாங்கள்.
சத்தியமா சொல்லுறன்...
அந்த நேரத்தில அப்பிடியான எண்ணம் எனக்கு இருக்கவில்லை..
ஆனால் பொடியள் பழிக்கும் போது ஒரு சில நேரம் அப்பிடியான எண்ணம் வந்து போகும்.. அவ்வளவுதான்.
கெளரி ரீச்சர் என்னில வைச்சிருந்த நம்பிக்கைக்கும் அன்புக்கும் நான் மதிப்பு கொடுத்து அப்படியான எண்ணங்கள் வருவதை தவிர்த்துக்கொண்டன்.
கெளரி ரீச்சரும் புதுசா வந்த மலர் ரீச்சரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள்.
அதனால எனக்கு மலர் ரீச்சருடன் பழமும் வாய்ப்பு இலகுவாக கெளரி ரீச்சர் மூலமாக கிடைத்தது.
உண்மையா மலர் ரீச்சர் ஒரு அன்பான ஆசிரியை என்பது நெருக்கமாக பேசி பழகும் போதுதான் எனக்குப்புரிந்தது.
“போடா.. வாடா..” என நெருக்கமாக பேசி இயல்பாய் பழகும் அளவுக்கு எங்களின் நட்பு வளர்ந்தது.
மலர் ரீச்சர் எங்களுக்கு படிப்பிக்காவிட்டாலும் ...
அடிக்கடி என்ர வகுப்புக்கு வருவா...
என்னுடன் பேசுவா...
கெளரி ரீச்சர் அதுக்குப்பிறகு மலர் ரீச்சரோடதான் சைக்கிள்ள பள்ளிக்கூடம் வருவா. இருந்தாலும் பல நாட்கள் பள்ளிக்கூடம் விட்டுப்போகும் போது ...
நான் கெளரி ரீச்சரை ஏத்திக்கொண்டு போவன். மலர் ரீச்சரும் எங்களுடன் கூட வருவா...
வீட்டில நல்ல சாப்பாடு சமைச்சால் ....
மத்தியானம் என்னைக்கூப்பிட்டு எனக்கெண்டு கொண்டுவந்த சாப்பாட்டை தருவா...
எனக்கு பாடம் இல்லாத நேரத்தில் ரீச்சரின் வகுப்புக்கு போய் கொஞ்சநேரம் கதைச்சிட்டு வருவன்.
இப்படியே போய்க்கொண்டிருந்த எங்களின் உறவு...
ஒரு நாள் ரீச்சர் என்னை கூப்பிட்டு..
”டேய் நீ வாற வழிதானே.. பள்ளிக்கூடம் வரயுக்குள்ள என்னையும் ஏத்திக்கொண்டு வா” எண்டா.
எனக்கு இப்படி திடீரென கேட்டதும் ஒரு மாதிரியா போட்டுது.
பிரச்சினை ஒண்டும் இல்லை .. ஆனால் எங்கட பொடியள் பழிப்பாங்கள் எண்ட வெக்கம் மட்டும்தான்.
சரி ரீச்சர் கேட்டிட்டா .. மறுக்கமுடியாது எண்டதால “ஓம்” எண்டிட்டன்.
அடுத்த நாள் என் சைக்கிளை நல்ல வடிவா கழுவி றிம் எல்லாம் துடைச்சுக்கொண்டு ரீச்சரை ஏத்த அவாவின் வீட்டுக்குப்போனன்.
அங்க எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி!!!!
-வாற வெள்ளி தொடரும்-
பொறுப்புத்துறப்பு:இக்கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே!


போனகிழமை கதை பாத்து கனபேர் கொஞ்சம் மெரிசலாகிட்டினம்.
அப்பவும் ஆரம்பத்தில சொன்னனான்....
இது ஒரு பாடசாலைக்கால பசுமை நினைவுகள் எண்டு.
எல்லாற்ற வாழ்விலும் பெய்த பசுமை நினைவு மழையின் ஒரு தூறல் .. ஒரு சாரல் இது.

எனக்கும் மலர் ரீச்சருக்கும் இடையில் “அப்பிடி இப்பிடி “ எண்டு எங்கட பொடியள் பகிடிக்கு கதைக்கும் போதே எனக்கு கடுப்பாகும்.

ஏனெனில் பள்ளிக்கூட பருவ வயதில் இதெல்லாம் சாதாரணம்.

எந்த ரீச்சரையும் படிச்ச மாணவன் கலியாணம் கட்டினதா நான் கேள்விப்படவில்லை.காதலிச்சதாவும் கேள்விப்படவில்லை. ஆனால் படிப்பிச்ச வாத்தியாரை காதலிச்சு கலியாணம் கட்டின கனபேரை பாத்திருக்கிறம்.

என்ர வகுப்பிலேயே அது நடந்திருக்கு. அந்த கதையை எழுதினால் கனபெட்டையள் அடிக்க வருவாகள்.அதனால அது வேண்டாம்.

சரி கதைக்கு வாறன்...

மலர் ரீச்சர் வீட்டை வரச்சொன்னா.
காரணம் தன்னை பள்ளிக்கூடத்துக்கு ஏத்திக்கொண்டு போகவேணும் எண்டா.
சரி நானும் அண்டைக்கு காலமை நேரத்தோட எழும்பி குளிச்சு கிளிச்சு வடிவா வெளிக்கிட்டுப்போனன்.

அங்க போறன்...
எனக்கு இன்ப அதிர்ச்சி...

அதுக்கு முதல் கிழமை “லூர்த்து மாதா” கோயில் திருவிழாவில் நானும் என்ர நண்பனும் பார்த்து அங்கலாய்ச்சு ...
யாருக்கு அவள் எண்டு அடிபிடிப்பட்டு ...
ஏலுமெண்டா உனக்கு மடங்கினால் நீ மடக்கு பாப்பம் எண்டு ...

சண்டை பிடிச்ச அந்த சிவத்த புள்ளிச்சட்டை “ தேவதை” ....ரீச்சர் வீட்ட நிண்டாள்...

நான் ரீச்சர் வீட்டு வாசலில நிண்டு ரீச்சரை கூப்பிட “அவள்தான்” வெளியில வந்தாள்.
அவள் என்னைப்பார்த்து முதல்ல கொஞ்சம் அதிர்ச்சி ஆகிட்டாள்.

பிறகு சிரிச்சபடி .. கொஞ்சம் முறைச்சபடி
வந்தவள் ... “ வாங்கோ உள்ளுக்குள்ள.. ரீச்சர் இப்பதான் வெளிக்கிடுறா” என சொல்லி என்னை வீட்டுக்குள்ள கூப்பிட்டாள்.
எனக்கு ஒரே வெக்கமா .. கைகால் எல்லாம் படபடக்க..
உள்ளுக்குள்ள போய் இருந்தன்.
காரணம்..
திருவிழாவில...
அவளை கலை கலை எண்டு மூண்டு மணித்தியாலமா நானும் நண்பனும் கலைச்சு பின்னால திரிஞ்சம்.
முதல்ல மெழுகுதிரி கொழுத்திற இடத்தில ஆரம்பிச்சு..
கச்சான் கடை....
மணிக்கடை...
ஐஸ்பழவான் ...
எண்டு ஒரு இடமும் விடாமல் பின்னால திரிஞ்சு...



சில பல சிரிப்புகள்...
சில பல சேட்டைகள்..
சில பல நக்கல்கள்... என ஒரு கலக்கு கலக்கி இருந்தம்.

கடைசியா அவளின் அக்கா திரும்பி முறைச்சதோட எங்கட “ஒப்பிரேசனை” கைவிட்டு பழையபடி மெழுகுதிரி கொழுத்தும் இடத்தில் தஞ்சம் அடைந்தம்.
நாங்கள் சைவம்தான்...

ஆனால் எங்கட பொடியளின்ர தேவாலயத்தில் பெருநாள் எண்டால் ...

எங்களுக்கும் பெருநாள்த்தான்.
“எம் மதமும் சம்மதம்தான்”
ஞானஸ்தானம் பெற்ற எட்வினும் அருளும் டொமினிக்கும் குணரட்ணமும் வேட்டி கட்டி பொட்டும் போட்டு எங்களோட சன்நிதி கோயில் திருவிழா தொடங்கி வல்லிபுரக்கோயில் காண எங்களோட சுத்துவாங்கள்.
அதுமாதிரித்தான் நாங்களும்....
நாலாம் குறுக்குத்தெரு அந்தோனியார் கோயில் தொடக்கம் தும்பளை லூர்த்துமாதா வரை முழங்காலில இருந்து செபம் முணுமுணுத்து ..
மெழுகுதிரி கொழுத்துவம்.

அது ஒரு கனாக்காலம்...
காசு குடுத்தாலும் திரும்ப வராது.
சரி மலர் ரீச்சர் வீட்ட “ அவளைக்கண்டதும்” நான் மெரிசலாகிட்டன்.
உள்ளுக்குள்ள ஒரே “படபடப்பு”..
ரீச்சரிட்ட போட்டுக்குடுத்திடாளோ எண்டு வேற பயம்.
ரீச்சர் வரும் வரை நான் நிலத்தை பாத்து குனிஞ்ச தலை நிமிராமல் இருந்தன்.

வெள்ளைச்சட்டையில் .... மரூண் கலர் கழுத்துப்பட்டி அணிந்து
ஈரம் சொட்டச்சொட்ட பின் முதுகை நனைக்கும் ஒற்றைப்பின்னலோடு...
அதில் ஒரு சின்ன நித்தியகல்யாணி பூ வைத்து...
அம்மாவாணை சொல்லுறன் அந்த நேரம் எனக்கு அவள் “தேவதையாத்தான்” தெரிஞ்சாள்.

என்ன பெயராய் இருக்கும்???
மேசையில் இருக்கும் புத்தகங்களை அடுக்கிக்கொண்டு கடைக்கண்ணால் என்னை அவள் பார்ப்பதை நான் பார்க்க ....
என்னை பாக்காதமாதிரி வேற எங்கோ பாக்க..
திருப்பி அவள் என்னைப்பாக்க..
நான் அவளை பாக்காத மாதிரி சுவரில் தொங்கியிருந்த அழகிய குழந்தைப்பிள்ளை படத்தை பார்க்க...
இப்படி மாறி மாறி .. பார்வைகளால் நேரம் கரைந்து கொண்டிருந்தது.

எங்க படிக்கிறாய்? என்ன பெயர் ? எண்டு கேப்பம் எண்டு வாய் உன்ன..
ரீச்சர் வெளியில வந்திட்டா....

“டேய் எப்ப வந்தனி... பொறு வாறன் டக்கெண்டு வெளிக்கிட்டு கொண்டு” என சொல்லிவிட்டு ரீச்சர் என்னை பார்த்து சிரிச்சுப்போட்டு அறைக்குள் போனா.
கொஞ்ச நேரத்தால அவளும் அந்த அறைக்குள் போனாள்...
எனக்கு விளங்கிட்டுது....
படுபாவி போட்டுக்குடுக்கப்போறாள்...

யார் இவள்?
ரீச்சரின்ர தங்கச்சியா..

இல்லை முகச்சாயல் கொஞ்சம் வித்தியாசம்.
யாரா இருக்கும்.ஒரே குழப்பம்...
சர்வானந்தம் சேர் கணக்கில தாற தேற்றத்தையே 5 நிமிசத்தில சும்மா சிம்பிளா செய்து காட்டுற எனக்கு இவள் யார் எண்டதுதான் ஆறுமுகம் ரீச்சரின்ர வரலாறுப்பாடம் மாதிரி சிக்கலா இருந்தது.

பள்ளிக்கூட புத்தகங்களை அவள் அடுக்கும் போது நான் சாதுவா எட்டிப்பாத்தன்.

ஆண்டு 10 புத்தகங்கள். அப்ப என்னை விட ஒரு வயது குறைவு.

அப்பாடா அப்ப பருவாயில்லை. முதலாவது பொருத்தம் ஓகே.!

அவள் ஆயத்தமாகி ..
“ மாமி போட்டுவாறன்” எண்டு சொல்லி என்னையும் ஒருக்கா வெட்டி ஒரு பார்வையை எறிஞ்சுபோட்டு போனாள்.

ஓ ...மலர் ரீச்சரின் மருமகளா...???

பருவாயில்லை...

ரீச்சர் ஆயத்தமாகி ...
வெளியில் வந்து ஒரு நக்கல் சிரிப்பு என்னைப்பாத்து சிரிச்சா..
எனக்கு நல்ல வடிவா விளங்கிட்டுது.
“ வாடா போவம்” என என்னை கூப்பிட்டா.

வீட்டால வெளிக்கிட்டு ... சிவப்பிரகாச பள்ளிக்கூட இறக்கம் தாண்ட
ரீச்சர் என்னிடம் கேட்டா..

“ டேய் என்னடா போனகிழமை... மாதா கோயில் பெருநாளில
என்ன செய்தனியள்... என்ர மருமோளுக்கு பின்னாலையும் முன்னாலையும் திரிஞ்சனியளாம்”
ஐய்யய்யோ...
என்ன சொல்ல நான்...
“ ஐயோ .. ரீச்சர் அது நான் இல்லை.. அது என்ர பிறண்டு”

“ டேய் ...சோபியா சொன்னவள் நீதான் பின்னால திரிஞ்சனியாம்..
நீதான் பாத்து சிரிச்சனியாம்.. அவள் என்ன பொய்யா சொல்லுறாள்”

“ஐயோ ரீச்சர் ... அது சும்மா..”
“ மவனே இதோடை நிப்பாட்டு... அவளுக்கு சொந்தத்தில அத்தான் காரன் ஒருத்தனை பேசி இருக்கு... சுவிசில இருக்கிறான். அவள் A/L முடிச்சா கலியாணம்.. மறந்திடு”
அந்த நேரம் இளையராசாவின் “ சோகப்பாட்டு” ஒண்டின் பின்னணி இசை மெதுவா என் காதுகளுக்கு கேட்டது. என்ன பாட்டெண்டுதான் நினைவுக்கு வருகுது இல்லை. பாட்டா முக்கியம்... சிற்றுவேசன் தான் முக்கியம்.

பள்ளிக்கூட றோட்டால திருப்புறன் என்னை முந்திக்கொண்டு எங்கட விஞ்ஞான வாத்தியார் போனார்.போகும் போது எங்களைப்பார்த்து திரும்பி ஒரு சிரிப்பு. எங்களை எண்டு சொல்வது பிழை. ரீச்சரைப்பாத்து...

இப்ப என்ர முறை...

நான் ரீச்சரிட்ட கேட்டன்..

” என்ன ரீச்சர் ... வாத்தியார் அறம்புறமா உங்களுக்கு பின்னால திரியிறார் எண்டு கேள்விப்பட்டன். பாடம் இல்லாத நேரத்தில உங்களோடதான் ஒரே கதை எண்டும் கேள்விப்பட்டன்.. என்ன நடக்குது உங்க?”கேட்டதும் ரீச்சர் வெக்கப்பட்டா.

” விசராடா உனக்கு... அந்த ஆள் பாவம்.. என்னோட நல்லா கதைக்கும்.
நல்ல ஒரு பிறண்ட். அவ்வளவுதான். உனக்கு சொன்னால் என்ன எனக்கு வாறமதம் கலியாணம் முற்றாகிட்டுது. எனக்கும் சுவிசிலதான் ... பேசியிருக்கு”ரீச்சர் சொல்லும் போது எனக்கு விஞ்ஞான வாத்தியாரின் முகம்தான் கண்முன்னே தெரிஞ்சுது.

பாவம் அந்த ஆள்....!!!

கொஞ்ச நாட்களின் பின் ....
ரீச்சரின் கலியாணம்..
நானும் என்ர பொடியளும் போய் எல்லா வேலைகளும் செய்து குடுத்தம்.
இரவிரவா நிண்டு வீடெல்லாம் சோடிச்சம்.
ரீச்சரின் மருமகள் சோபியாவும் நிண்டாள். எங்களுக்கு அவள்தான் தேத்தண்ணியெல்லாம் போட்டுத்தந்தாள்.
ரீச்சரின் கலியாண வீடு இனிதே நிறைவுற்று ....
ரீச்சரின் பிரியாவிடை பள்ளிக்கூடத்தில் நடந்து...
போகும் போது மலர் ரீச்சர் கண்கலங்கி...
என்னிடம் “ போட்டு வாறன்ரா” எண்டு சொன்னது ..
இப்பவும் என் கண்முன்னே பசுமையாய் விரிகிறது.
அதுக்குப்பிறகு எனக்கு மலர் ரீச்சர் எங்க இருக்கிறா எண்டு தெரியாது.
இதுவரைக்கும் அவாவோட கதைக்கவில்லை.
இருந்தாலும் ரீச்சர் என்னில் வைச்ச அன்பும் பாசமும் அழியாமல் இருக்கு.





முற்றும்.

© தமிழ்ப்பொடியன்

வேண்டாம் மச்சான் வேண்டாம் - கவிதை






-----------------------------------------------
 

ஊரில் இருக்கும் மச்சான் சுகமாடா?
நீயும் “வெளிநாட்டுக்கு “ வரப்போகிறாய் எண்டு கேள்விப்பட்டன்!!!
உன் முடிவில் "நியாயம்" இருக்கிறது
இருந்தாலும் "யாதார்த்தம்" வேறு மச்சான்

கோதாரி விழுந்த காசுதான் 

எங்களின் சந்தோசங்களை முடிவுசெய்கிறது
அதுதான் எங்களின் வாழ்வையும் தீர்மானிக்கிறது.

கிட்டடியில அவுஸ்திரேலியா வந்த பக்கத்து வீட்டு
சேகர் அனுப்பும் காசில்..
"மாபிள்" பதிச்சு வீடு எழும்புது
"ஏசியும் கலர் கலரா பெயின்றும்" வீடு பழபழக்குது..!!

"ஐபோனும் கீறோ கொண்டாவும்" கனவில வந்து சாவடிக்குது
என்ன இழவுக்கு இங்க கிடந்து சாவான் என
உன் மனம் அலைக்கழியுது

கொப்பர் அடிக்கடி புறுபுறுக்கிறது உன் காதில் விழுகுது
"ஏஜென்சி" காரன் வேற அடிக்கடி போன் அடிக்கிறான்
வாற கிழமை கப்பல் வெளிக்கிடும் எண்டு அவசரப்படுத்துறான்
அங்கின இங்கின பிரட்டி 3லச்சமும் சேத்தாச்சு
காசு கொடுத்து சந்தோசங்களை விலைக்கு வாங்கும்- நான்
சந்தோசங்களை விற்று காசை விலைக்கு வாங்க ஆசைப்படும்- நீ

எனக்கு சம்பளம் டொலர்களில்
உனக்கு வெறும் ரூபாய்களில்

ஆனால்....
உனது சந்தோசங்களின் பெறுமதி டொலர்களில்
எனது சந்தோசங்களின் பெறுமதி ரூபாய்களில்....

உண்மையாக நேர்மையாக உழைத்தால்...!!!
உனது மாத சம்பளம் தான்
எனது மாத இறுதி சேமிப்பு

இதுதாண்டா உனக்கும் எனக்கும் இப்போது வித்தியாசம்..!!
ஆனால் உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு
நீ ஊரில இருந்தும் அகதி
நான் சிற்றிசன் கிடைச்ச அகதி....!!!


நண்பா....
குச்சு ஒழுங்கைகளிலும் 
வெண் மணல் வெளியிலும்
தொலைத்த சந்தோசங்களை...
இங்கே அதிவேக வீதிகளிலும் (high way) 
சீமெந்து காடுகளிலும்(concrete jungles) தேடுகிறோம்.

நான் நேரத்துக்கு நித்திரை கொண்டு நான்கு வருடங்கள்....
நிம்மதியாய் நித்திரை கொண்டு ஆறு வருடங்கள்...!!!
கனவுகளை விற்று நித்திரைகளை விலைக்கு வாங்காதே
விரல்களை அடைவு வைத்து தூரிகைகளை வட்டிக்கு வாங்காதே....!!!!

குண்டு மழைக்குள்ளும்
குருதிச்சேற்றிலும்
மரண ஓலங்களுக்குள்ளும்
முள்ளிவாய்க்கால் வரை 
கடைசி வரை நின்ற- நீ
உன்னோடு கூட நில்லாமல் 
ஓடி வந்த -நான்


வேலிகள் அறுக்கையில்லாமல்...

படலைகள் பாறி விழுந்ததால்
மக்கரிப்பாங்கள் எங்களின் முற்றத்தில் ...!!!

என் ஊரில் நீ இருப்பாய் 
எண்டுதானே நினைச்சன் மச்சான்
இது சுயநலம் இல்லை மச்சான்
மனவலி.. உனக்கு மட்டுமே புரியும் உயிர்வலி...!!!
உயிரைப்பணயம் வைத்து ஆயிரம் மைல் கடந்து
பட்டினி கிடந்து 
ஆபத்தான பயணம் ...
எத்தனை மரண கணங்களை தாண்டிய -நீ
அநியாயமாய் கடலிலே போனால்
வாழ்க்கை பூரா வலி எனக்கு!
எல்லாமும் தாண்டி நீ இங்கு வந்தாலும்
சொல்லமுடியாத சந்தோசம் எனக்கு...


மச்சான் ...!!!
வேணுமெண்டால்
இன்னோரு வேலைக்கு போறன்....
டொலர்களை அனுப்புகிறேன்
உன் சந்தோசங்களை வாங்கிய பின்
மிச்ச காசில்
சில்லறைகளாய் தொலைந்து போன -என் 
சந்தோசங்களை வாங்கி அனுப்பு.....!!!

இப்படிக்கு 
அகதி(தமிழ்)ப்பொடியன்
(Senior Refugee of Australia)
(Former Refugee of malaysia ,srilanka and thailand)
(Honorable Senior Member of UNHCR)



Comments System

Recent Posts Widget

Facebook Badge