புதன், ஜனவரி 20, 2016

வேண்டாம் மச்சான் வேண்டாம் - கவிதை






-----------------------------------------------
 

ஊரில் இருக்கும் மச்சான் சுகமாடா?
நீயும் “வெளிநாட்டுக்கு “ வரப்போகிறாய் எண்டு கேள்விப்பட்டன்!!!
உன் முடிவில் "நியாயம்" இருக்கிறது
இருந்தாலும் "யாதார்த்தம்" வேறு மச்சான்

கோதாரி விழுந்த காசுதான் 

எங்களின் சந்தோசங்களை முடிவுசெய்கிறது
அதுதான் எங்களின் வாழ்வையும் தீர்மானிக்கிறது.

கிட்டடியில அவுஸ்திரேலியா வந்த பக்கத்து வீட்டு
சேகர் அனுப்பும் காசில்..
"மாபிள்" பதிச்சு வீடு எழும்புது
"ஏசியும் கலர் கலரா பெயின்றும்" வீடு பழபழக்குது..!!

"ஐபோனும் கீறோ கொண்டாவும்" கனவில வந்து சாவடிக்குது
என்ன இழவுக்கு இங்க கிடந்து சாவான் என
உன் மனம் அலைக்கழியுது

கொப்பர் அடிக்கடி புறுபுறுக்கிறது உன் காதில் விழுகுது
"ஏஜென்சி" காரன் வேற அடிக்கடி போன் அடிக்கிறான்
வாற கிழமை கப்பல் வெளிக்கிடும் எண்டு அவசரப்படுத்துறான்
அங்கின இங்கின பிரட்டி 3லச்சமும் சேத்தாச்சு
காசு கொடுத்து சந்தோசங்களை விலைக்கு வாங்கும்- நான்
சந்தோசங்களை விற்று காசை விலைக்கு வாங்க ஆசைப்படும்- நீ

எனக்கு சம்பளம் டொலர்களில்
உனக்கு வெறும் ரூபாய்களில்

ஆனால்....
உனது சந்தோசங்களின் பெறுமதி டொலர்களில்
எனது சந்தோசங்களின் பெறுமதி ரூபாய்களில்....

உண்மையாக நேர்மையாக உழைத்தால்...!!!
உனது மாத சம்பளம் தான்
எனது மாத இறுதி சேமிப்பு

இதுதாண்டா உனக்கும் எனக்கும் இப்போது வித்தியாசம்..!!
ஆனால் உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு
நீ ஊரில இருந்தும் அகதி
நான் சிற்றிசன் கிடைச்ச அகதி....!!!


நண்பா....
குச்சு ஒழுங்கைகளிலும் 
வெண் மணல் வெளியிலும்
தொலைத்த சந்தோசங்களை...
இங்கே அதிவேக வீதிகளிலும் (high way) 
சீமெந்து காடுகளிலும்(concrete jungles) தேடுகிறோம்.

நான் நேரத்துக்கு நித்திரை கொண்டு நான்கு வருடங்கள்....
நிம்மதியாய் நித்திரை கொண்டு ஆறு வருடங்கள்...!!!
கனவுகளை விற்று நித்திரைகளை விலைக்கு வாங்காதே
விரல்களை அடைவு வைத்து தூரிகைகளை வட்டிக்கு வாங்காதே....!!!!

குண்டு மழைக்குள்ளும்
குருதிச்சேற்றிலும்
மரண ஓலங்களுக்குள்ளும்
முள்ளிவாய்க்கால் வரை 
கடைசி வரை நின்ற- நீ
உன்னோடு கூட நில்லாமல் 
ஓடி வந்த -நான்


வேலிகள் அறுக்கையில்லாமல்...

படலைகள் பாறி விழுந்ததால்
மக்கரிப்பாங்கள் எங்களின் முற்றத்தில் ...!!!

என் ஊரில் நீ இருப்பாய் 
எண்டுதானே நினைச்சன் மச்சான்
இது சுயநலம் இல்லை மச்சான்
மனவலி.. உனக்கு மட்டுமே புரியும் உயிர்வலி...!!!
உயிரைப்பணயம் வைத்து ஆயிரம் மைல் கடந்து
பட்டினி கிடந்து 
ஆபத்தான பயணம் ...
எத்தனை மரண கணங்களை தாண்டிய -நீ
அநியாயமாய் கடலிலே போனால்
வாழ்க்கை பூரா வலி எனக்கு!
எல்லாமும் தாண்டி நீ இங்கு வந்தாலும்
சொல்லமுடியாத சந்தோசம் எனக்கு...


மச்சான் ...!!!
வேணுமெண்டால்
இன்னோரு வேலைக்கு போறன்....
டொலர்களை அனுப்புகிறேன்
உன் சந்தோசங்களை வாங்கிய பின்
மிச்ச காசில்
சில்லறைகளாய் தொலைந்து போன -என் 
சந்தோசங்களை வாங்கி அனுப்பு.....!!!

இப்படிக்கு 
அகதி(தமிழ்)ப்பொடியன்
(Senior Refugee of Australia)
(Former Refugee of malaysia ,srilanka and thailand)
(Honorable Senior Member of UNHCR)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge