புதன், அக்டோபர் 26, 2016

மண்ணாகிப்போ முருகா!!!




எதை தேடுறியள்?
அந்தரிக்கும் அந்த ஆத்மாக்கள் இரண்டையா!

எதை தேடுறியள்?
மதிலிக்கு பின்னால் ஒழிந்திருக்கும்
பேரினவாதத்தையா!

எதை தேடுறியள்?
புதைக்கப்பட்ட மனிதாபிமானத்தையா!

எதை தேடுறியள்?
செத்துப்போன நீதியையா!

எதை தேடுறியள்?
ஒழிக்க மறந்த தடயங்களையா!

எதை தேடுறியள்? மாத்தையா!
அம்மாவாணை எங்களுக்கு விளங்கவேயில்லை!

சுட்ட துப்பாக்கிகள்
பத்திரமா இருக்க;
வெற்றுத்தோட்டாக்களை;
ஏன் வீணாத் தேடுறியள்?


இறந்தவர்களின் "இரத்தசாசனம்"
மதிலில் அழியாமல் கிடக்கு!
உங்களுக்கு "அந்த" மொழியும் தெரியாது!
அவர்களின் வலியும் புரியாது!

கண்கலங்கும் சிங்கள மாணவர்களைக்கேளுங்கள்.
இரத்தக்கறைகளையும் எங்கள் அழுகுரல்களையும்...
சிங்களத்தில் மொழிபெயர்த்து தரக்கூடும்!

வானத்தை நோக்கி சுட்ட சூடு
வயிற்றுவழி துளைக்க..
காவல்த்துறை என்ன!
கண்கட்டி வித்தைக்காரனா?

கொன்றவனிடமே நீதி கேட்டு
குழறுவது தமிழனுக்கு இதுவா முதல்தடவை?
இல்லையே!!!

கொல் ..
மீண்டும் கொல்..
மீண்டும் மீண்டும் கொல்லுங்கள்
தடயங்களே இல்லாமல் கொல்லுங்கள்!
நாங்கள் நேந்துவிடப்பட்ட “கிடாய்கள்”
நீங்கள் வெட்டுவதில் தப்பேயில்லை!!

தேடுவதும்;
அழிப்பதும்;
புதைப்பதும்;
எரிப்பதும்;
புதிதல்லவே உங்களுக்கு!

முற்றவெளியில் கருக்கி;
செம்மணியில் புதைத்தீர்கள்!

முள்ளிவாய்க்காலில் எரித்து;
புங்குடுதீவில் புதைத்தீர்கள்!

மாத்தையோ!
சுட்ட துப்பாக்கிகள்
பத்திரமா இருக்க;
வெற்றுத்தோட்டாக்களை;
ஏன் வீணாத் தேடுறியள்?


கொத்துக்கொத்தாய்
கொன்றது போக;
எஞ்சியதை சொச்சம் சொச்சமாய்;
முடிக்கப்பாக்குறியள்!

புண்ணாகிப்போன கண்ணில் அழுவதற்கும் தண்ணியில்லை!
கல்லாகிப்போன கடவுளுக்கும்
கண்ணில்லை!
இனியெதுக்கு??
மண்ணாகிப்போ நல்லூர் முருகா!!!
நீ...
மண்ணாகிப்போ!!!

துன்பம் நேர்கையில்
“முருகா” எண்டு முணுமுணுக்கும்;
உன் அடியவனின் அடிவயிறு
எரிஞ்சு திட்டுறன்...
நீ..........
மண்ணாகிப்போ முருகா!!!


சனி, அக்டோபர் 22, 2016

யாழ்.பல்கலைக்கழக மாணவர் படுகொலை!!!- (ஒரு சாமானியனின் பார்வை)



யாழ்ப்பாணத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் நள்ளிரவில் பொலிசாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவத்தில் ஒரு தமிழ் பொலிஸ் உட்பட ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டு; உடனடியாக பதவி நீக்கப்பட்டு; குற்றப்புலனாய்வு பிரிவால் (CID)கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

சம்பவம் ஒரு விபத்தல்ல , அது ஒரு படுகொலை என்பது மரணவிசாரணை அறிக்கையின் படியும் சம்பவத்தினை பார்த்தவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் மிகத்தெளிவாக உறுதியாகியுள்ளது.

சம்பவ இடத்துக்கு அண்மையில் உள்ள கடை ஒன்றின் CCTV கமராவில் பதிவான காணொளியின் அடிப்படையில் இரு இளைஞர்களையும் ஒரு சில நிமிட இடைவெளியில் பொலிசார் துரத்திச்சென்றது பதிவாகியிருப்பதாக உறுதிப்படுத்த முடியாத தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சம்பவ இடத்துக்கு அருக்கில் இருந்த ஒரு சிலரின் உறுதிப்படுத்தமுடியாத வாக்குமூலத்தின் படி;
வெடிச்சத்தத்தை தொடர்ந்து பலத்த அழுகுரல் சத்தம் கேட்டதாகவும் அந்த இடத்தில் பொலிசார் கனபேர் நிண்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் இறந்தவர்களின் உடலை பொலிசார் ஒப்படைக்கும் போது "விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு" என்றே சொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படுகொலைச்சம்பவத்தின் உண்மையான முழு விபரங்களும் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

அதனால்;
பலரின் ஊகங்களும் கற்பனைகதைகளுமே ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் உலாவருகின்றன.

அப்படியான ஊகங்களும் கற்பனை கதைகளும் தேவையில்லாத மனவேதனைகளையும் வலியையும் சம்பந்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களும் ஏற்படுத்தும்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த கொதிமனநிலையில் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் மனநிலையின் கொதிநிலையை யாழ்ப்பாணத்து நீதித்துறையும் ஊடகங்களும் உணர்ந்து புரிந்து பொறுமையுடன் நடப்பது அவசியம்.

முக்கியமாக யாழ்ப்பாணத்து பொலிசாரின் மீது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த அதிருப்பியுடனும் கோபத்திடனும் இருக்கும் இந்த நிலையில்;
யாழ்.பொலிசாரும் நீதித்துறையும் கண்ணியமாக பொறுமையுடன் செயற்படவேண்டும்.

கொலைக்குற்றச்சாட்டு வெறுமனே சம்பந்தப்பட்ட ஐந்து பொலிசாரின் மேல் மட்டும் அல்ல..
ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்து அரச காவல்த்துறையின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஐந்து காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லிவிட்டு யாழ்ப்பாணத்து பொலிஸ் பிரிவு நழுவிச்செல்லமுடியாது.



🔴இந்த சம்பவம் எதேச்சையாக நடந்ததா?

🔴அல்லது திட்டமிட்டு நடந்ததா ?

🔴கொலைசெய்யப்பட்ட இளைஞர்களும் சம்பந்தப்பட்ட பொலிசாருக்கும் இடையில் தொடர்பு உள்ளதா?

🔴இளைஞர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் எங்கே போனார்கள்?

🔴சம்பவம் நடந்திருக்கும் நேரம் சுமார் நள்ளிரவு 12 மணி. எத்தனை மணிக்கு கொல்லப்பட்ட மாணவர்கள் யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்?
யார் அவர்களை அனுமதித்தது?
இறப்புக்கான என்ன காரணத்தை வைத்தியசாலையில் பொலிசார் சொன்னார்கள்?

🔴குற்றவாளிகளான பொலிசார் ஐஞ்சுபேரினதும் பின்னணி என்ன?

என்ற கோணத்திலும் சம்பவம் விசாரிக்கப்படவேண்டும்.

சம்பவத்தை நேரடியாக பார்த்த சாட்சியங்கள் இருக்கிறதா? அப்படி இருந்தால் அந்த சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மிகவும் முக்கியம்.
சாட்சியங்கள் பொலிசாரால் மிரட்டப்படலாம் அல்லது மறைக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இந்த விடயம் மிகவும் அவதானத்துடனும் நிதானத்துடனும் யாழ்.நீதித்துறை கையாளவேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் இருவரினதும் பூரண மரணவிசாரணை அறிக்கை வைத்தியசாலை அதிகாரிகளால் இன்னும் பூரணமாக வெளியிடப்படவில்லை.
ஆனால் ஆரம்பகட்ட அறிக்கையில் ஒரு மாணவனின் மரணம் துப்பாக்கிச்சூடு மற்றும் விபத்தினால் ஏற்பட்ட காயம் எனவும்;
மற்ற மாணவனின் சாவு விபத்து என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆக, சம்பவங்களின் அடிப்படையிலும் ஆரம்ப கட்ட விசாரணையிலும் இது ஒரு விபத்தல்ல என்பதும் துப்பாக்கிச்சூட்டால் மாணவன் ஒருவன் கொல்லப்பட அந்த மாணவன் ஓட்டிச்சென்ற மோட்டசைக்கிள் விபத்துக்குள்ளாகி அவனுடன் கூடச்சென்ற மாணவனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளான் என்பது தெளிவாகத்தெரிகிறது.

இந்தச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசார் ஐந்துபேருடைய வாக்குமூலமும் மிகவும் முக்கியமானது.

சுட்டுக்கொல்லப்பட்ட மாணவனின் இறந்தபின்னர் காயப்பட்ட இன்னொரு மாணவன் படுகாயம் அடைந்து இறந்தானா? அல்லது அவரும் கொல்லப்பட்டாரா?
என்ற விசாரணை மிக முக்கியம்.
ஏனெனில் விபத்தில் சூட்டுக்காயம் இல்லாமல் இறந்த மாணவனின் சாவில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

எது என்னவோ... அநியாயமாக இரு உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகின்றது.

பல்கலைக்கழகத்தில் மிகவும் தெரிந்த முகங்களாக ; மிகவும் கலகலப்பான மாணவர்களாக இவர்கள் இருவரும் இருந்துள்ளார்கள்.



இதில் சுலக்சன் என்ற மாணவன் ஒரு சில குறும்படங்களில் நடித்துள்ளான்.
கலைத்துறையிலும் ஊடகத்துறையிலும் மிகுந்த ஆர்வம் உள்ள 3ம் வருட மாணவன் இவன்.
பல கஸ்ரங்களுக்கு மத்தியில் படித்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி 3 வருடமாக படிப்பை தொடர்ந்த இந்த மாணவர்களின் அகாலமரணம் அவர்களின் குடும்பத்துக்கு பாரிய ஈடு செய்யமுடியாத இழப்பு.
இந்த இழப்புக்கு எவராலும் பதில் சொல்லவோ நீதி வழங்கவோ முடியாது.

அவர்களின் இழப்பின் பெறுமதியை எதைக்கொண்டும் ஈடுசெய்யமுடியாது என்பது யதார்த்தம்.இவர்களின் இந்த அவலச்சாவால்
அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்களும் பெற்றோரும் நண்பர்களும் அனுபவிக்கும் வலியும் வேதனையும் விபரிக்கமுடியாதவை.
அவர்களுக்கான மன அமைதியையும் இந்த இழப்பினை தாங்கும் மனவலிமையையும் இறைவன் அவர்களுக்கு கொடுக்கவேண்டும்.
இன்று இந்த மாணவர்களின் இழப்பு யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் நினைவுகூரப்படுகிறது.
எல்லோரும் அவர்களின் ஆத்ம சாந்திக்காய் மனதார பிரார்த்திக்கிறார்கள்.
இன்னும் பலர் அந்த இரு மாணவர்களையும் தங்களின் சொந்தப்பிள்ளைகள் போல நினைத்து கண்கலங்கி நிற்கிறார்கள்.
ஒரு திட்டமிட்ட இழப்பின் வலியை; யாழ் மண்ணும் பல்கலைக்கழக சமூகமும் இன்று அனுபவித்து நிற்கிறது.

சம்பந்தப்பட்ட பொலிசார் ஐஞ்சு பேருக்கும் இனி என்ன நடக்கும் என்ற கேள்வி பலராலும் கேட்கப்படுகிறது?

▪️அவர்கள் அனைவரும் உடனடியாக பொலீஸ் குற்றப்புலனாய்வு பிரிவால் (CID)கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

▪️தடுப்புக்காவலில் வைத்து அவர்கள் விசாரணை செய்யப்படுகிறார்கள்.

▪️இந்த படுகொலை சம்பவத்துக்கான விசாரணையில் ஜனாதிபதியின் நேரடித்தலையீடு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.எதிர்க்கட்சி தலைவர் திரு.சம்பந்தன் அவர்களும் சனாதிபதியுடன் நேரடியாக இதுபற்றி பேசியிருக்கிறார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

▪️ஐவரினதும் பணிகள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இப்போதைக்கு இவைதான் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபர்களின் மீதான நடவடிக்கைகள்.

ஆனால் யாழ் குடாநாட்டு மக்களினதும் பல்கலைக்கழக மாணவர்களினதும் சுட்டுவிரல் யாழ்ப்பாணத்து பொலிசாரின் மீது குறிப்பாக தமிழ் பொலிசாரின் மீது நீண்டுள்ளது.இதில் பிழையேதும் இல்லை.

நீதியை நிலைநாட்டவேண்டிய காவல்த்துறையே இப்படி காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக்கொல்வது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று.

இதற்கான எந்த நியாயப்படுத்தல்களையும் யாழ். பொலிஸ் திணைக்களம் சொல்லமுடியாது.

மேலும்; அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் ஒரு சில தமிழ் பொலிசாரின் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளில் பலர் அதிருப்தி அடைந்து காணப்படுகிறார்கள்.
அதற்காக ஒட்டுமொத்த தமிழ் பொலிசார் மீதும் குற்றப்பத்திரிகை எழுதமுடியாது.பலர் மிகவும் கடமை கண்ணியத்துடன் தங்கள் பணிகளை செய்கிறார்கள்.

குறித்த இந்த படுகொலை சம்பவத்துடன் தமிழ் பொலிசார் ஒருவரும் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த செய்தி உண்மையானால் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த கடும் கோபத்தினை அவர் எதிர்நோக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
அவர் செய்த அந்த கொடும்செயல் மற்றைய தமிழ் பொலிசாரின் பெயருக்கு கழங்கம் விளைவிக்கும்.

இந்த படுகொலைக்கான நீதி கிடைக்குமா?
இந்த கேள்விக்கு யாரும் இப்போது பதில் சொல்ல முடியாது.
ஏனெனில் இது ஒரு சிக்கலான சம்பவம்.நீதி விசாரணை முறையாக நடந்தாலும் இந்த படுகொலைச்சம்பவத்துக்கான நீதி மன்ற தீர்ப்பு வர வருடக்கணக்கு ஆகும்.

இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட படுகொலை (murder with intention)என்று நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படலாம்.அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

எதிர்பாராத விதமாக இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்ந்திருப்பின் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் பணிகள் நிரந்தரமாக நீக்கப்படும்.
ஒரு குறித்த ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

இந்தச்சம்பவத்துக்கு யாழ்.பொலிஸ் திணைக்களம் என்ன பதில் சொல்லப்போகிறது?
இந்தக்கேள்விக்கான பதிலை ஓரிரு நாட்கள் பொறுத்தே பதில் சொல்லமுடியும்.
நிச்சயமாக மக்களின் மனநிலை அறிந்து அவர்களின் பதில் அமையவேண்டும்.
எதிர்காலத்தில் காவல்த்துறையின் மேல் நம்பிக்கையும் மரியாதையும் வரக்கூடியதாக அவர்களில் "அறிக்கை" அமையவேண்டும்.

அல்லது கொதிநிலையில் இருக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினதும் மக்களினதும் கோபம் வன்முறையாக மாறும் அபாயம் இருக்கிறது.

அப்படியான எந்தவிதமான வன்முறை சம்பவங்களில் யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகமும் பொதுமக்களும் ஈடுபடக்கூடாது. வன்முறைச்சம்பவங்களில் ஈடுபடுவதால் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்துவிடமுடியாது.
இந்த விடயத்தில் சட்டரீதியிலான புத்திசாதுரிய நடவடிக்கைகள்தான் நீதியை பெற்றுத்தர வழிவகுக்கும்.

இறுதியாக;

இந்தப்படுகொலையில் அநியாயமாக சாகடிக்கப்பட்ட அந்த இரு உயிர்களுக்கு என்ன பதில்??இந்தக்கேள்விக்கு யாரிடமும் விடை இல்லை.


இனியும் இப்படியான சம்பங்கள் யாழ் குடாநாட்டில் நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?இதற்கும் பதில் இல்லை!!!

#தமிழ்ப்பொடியன்

Comments System

Recent Posts Widget

Facebook Badge