வியாழன், ஆகஸ்ட் 25, 2016

விசஊசியும் .....வில்லங்கமும்!!!



காலத்துக்கு காலம் ; கிழமைக்கு கிழமை ஏதோ ஒரு "விசயம்" பரபரப்பாய் பேசப்படவேண்டும்.அப்படி பேசப்படும் அல்லது கிழறப்படும் விடயங்கள் அண்மையகாலமாக அதிகரித்துவிட்டது.

அப்படி பரபரப்பாய் கிழறப்பட்ட; அல்லது கிழறப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு முக்கியவிடயம் தான் “விச ஊசி”.

உண்மையில் “விச ஊசி” ஏற்றப்பட்டதா? என்ற மர்மகேள்விக்கு விடை தெரியாமல் இருக்கிறது.ஆனால் இந்த விடயத்தினை கிழறிக்கொண்டிருக்கும் சிலருக்கு “விசர் ஊசி” ஏற்றப்பட்டிருப்பது தெளிவாகத்தெரிகிறது.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர்; பல ஆயிரம் விடுதலைப்புலிகளின் போராளிகள் சரணடைந்தார்கள்.
அதில் பலர் கைதுசெய்யப்பட்டார்கள்.கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களில் பலர் காணாமல் போய்விட்டார்கள் அல்லது கொல்லப்பட்டுவிடார்கள்.
புனர்வாழ்வில் பலர் சித்திரவதைக்கு உள்ளானார்கள் அல்லது மன அழுத்தத்துக்கு உள்ளானார்கள் என சுதந்திரமான சர்வதேச ஆய்வுகள்(International independent research) கூறுகின்றன.

"Freedom of Torture" என்ற சர்வதேச ஆய்வு மையம் தனது ஆய்வுகளின் முடிவின் இறுதியில் பல உண்மைகளை “புட்டுப்புட்டு”
வைத்திருக்கிறது. சுமார் 350 பணியாளர்களின் உதவியோடு இயங்கும் ஒரு சர்வதேச தொண்டு நிறுவனம் இது.


அந்த தொண்டு நிறுவனத்தின் ஆவணங்களை இந்த இணைப்பில் பாருங்கள்.

https://www.freedomfromtorture.org/sites/default/files/documents/update_on_post_conflict_torture_may_2016.pdf

லண்டனைத்தளமாகக்கொண்டியங்கும் இந்த அமைப்பின் இணையத்தில்
2009 இல் இருந்து இன்றுவரை சிறிலங்காவில் நிகழ்ந்த பல “துன்புறுத்தல் சம்பவங்களை” பட்டியலிட்டுள்ளது.

2009 இல் இருந்து 2016 வரை சுமார் 1750 துன்புறுத்தல் முறைப்பாடுகளை அந்த அமைப்பு பெற்றுக்கொண்டிருக்கிறது.அவற்றில் சுமார் 148 பேரை தெரிவுசெய்து;
“Tainted Peace" என்ற தலைப்பில் ஒரு ஆழமான ஆய்வு முடிவுகளை அந்த அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது.

அதன் இணைப்பு இங்கே:
https://www.freedomfromtorture.org/features/8481

2009 இல் இருந்து 2015 வரை சுமார் 250 பேருக்கு சட்டபூர்வமான மருத்துவவியல் பரிசோதனையையும்( Medico-Legal Reports-MLRs) செய்துள்ளார்கள்.

எந்த ஒரு இடத்திலும் அவர்கள் இந்த “விச ஊசி” “விச உணவு” பற்றிய வாக்குமூலங்களை சித்திரவதைக்கு உள்ளானவர்கள் வெளிப்படுத்தினார்கள் என்று சொல்லவில்லை.


அதன் முழுவிபரங்களையும் அவர்களின் இணையத்தில் பார்வையிடலாம்.

இனி முக்கியவிடயத்துக்கு வருவோம்.

அண்மைய காலமாக விடுதலைப்புலிகளின் போராளிகளின் மரணத்தில் “சந்தேகம்” எழுந்துள்ளது. இந்த சந்தேகம் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் அணிப்பொறுப்பாளர் தமிழினியின் மரணத்தில் இருந்து ஆரம்பமாகியது. தமிழினி “புற்றுநோயால்” இறக்கவில்லை அவருக்கு “விச ஊசி” அல்லது “தொற்றுநோய் கிருமி” ஏற்றப்பட்டிருக்கலாம் என ஒரு சிலர் ”புரளியை”கிளப்பிவிட்டார்கள். அது புரளியா? அல்லது உண்மையா ? என கண்டுபிடிப்பதற்குள் தொடர்சியான போராளிகளின் மரணம் அந்த விடயத்தினை இன்னும் பேசுபொருளாக்கி முக்கிய விவகாரமாக்கியது.

சுமார் 20 வருடங்களாக பல யுத்தங்களில் காயமடைந்து விழுப்புண்களை சுமந்த தமிழினி 2009 இல் புனர்வாழ்வு முகாமில் அடைக்கப்படார். அதன் பின் ஒரு சில வருடங்களில் வெளியில் வந்த அவர் 2014இல் நோயாளியாக அவதிப்பட்டார். 2015 இல் புற்றுநோய் கண்டறியப்பட்டு இறந்துபோனார்.

இவர் பல மருத்துவ பரிசோதனைகளை இலங்கையின் பல வைத்தியசாலைகளில் சிங்கள,தமிழ் மருத்துவர்களிடம் செய்துள்ளார்.
தமிழினியின் மரணம் புற்றுநோய்தான் என மருத்துவச்சான்றிதழ் சொல்கிறது.அது போலியானது என்பது ஒரு சிலரின் சந்தேகம்.
சரி அது போலியான மருத்துவச்சான்றிதழாக கூட இருக்கட்டும்.

 ஆனால் தமிழினி உயிரோடு இருந்தபோது புலம்பெயர் தேசத்தில் பலரோடு பேசி இருந்தார். இந்த “விச ஊசி” பற்றி ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை .
அப்படிப்பேசியிருந்தால் இந்த விவகாரம் பல ஆண்டுகளுக்கு முன்னரே கிழம்பியிருக்கும்.

தமிழினியின் மரணத்துக்கு முன்னும் பின்னும்  பிறகு சுமார் 100இக்கும் அதிகமான  போராளிகள்  நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்கள். அதாவது சுமார் 6 வருடங்களில் இந்தச்சாவுகள் உத்தியோகபூர்வமற்றதாக சுமார் 100 ஆக இருக்கலாம் எனச்சொல்லப்படுகிறது.

அதாவது சுமார் 20 பேர் ஒரு வருடத்தில் இறந்திருக்கலாம் என்பது எடுகோள்.
இந்தச்சாவு வீதம் என்பது 2009 இக்கு பின்னராக போரினால் காயமடைந்து ; அந்த விழுப்புண்களின் காரணமாக சாவடைந்த சாதாரண பொதுமக்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது மிகக்குறைவானது.

அதற்கும் மேல் விளக்கமாக சொல்வதானால்;
2009 இக்கு முன்னர் விடுதலைப்புலிகளில் இருந்த போராளிகளில் சண்டையில் “விழுப்புண்” அடைந்து அதன் காரணமாக சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கை அதிகமானது.குண்டுச்சன்னங்கள் தலைகளில் ஏறி அல்லது வயிற்றில் ஏறி அதை சத்திரசிகிச்சை செய்து எடுக்கமுடியாத நிலையில் ஏற்புத்தாவி சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கை அதிகம்.

இறுதிப்போரில் “பொஸ்பரஸ் குண்டுகள்” மற்றும் “இரசாயண ஆயுதங்கள்” பயன்படுத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதற்கான ஒரு சில ஆதாரங்களும் இனங்காணப்பட்டுள்ளன. சிறிலங்கா இதை மறுத்தாலும்; அப்படியான தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் கடைசி யுத்தத்தில் பாவிக்கப்பட்டிருப்பதற்கான ஆதரங்கள் உள்ளதாக சுதந்திர சர்வதேச அமைப்புகள் ( Independent international agencies) தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகளின் போராளிகளுக்கு இந்த “இரசாயண குண்டுகளின்” தாக்கம் நிச்சயம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது அந்த “இரசாயண குண்டுகளின்” துண்டுகள்( piece) அவர்களின் உடம்பில் இருந்தால் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

பல  போராளிகள் இந்த நோய் அறிகுறிகள் இருந்தால்; அதற்கான பரிசோதனையை செய்தும் சத்திர சிகிச்சை செய்தும் பூரண குணம் அடைந்து தங்களின் இயல்பு வாழ்க்கையினை வாழ்கிறார்கள்.

ஒரு சில  போராளிகள் இப்போதும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கான பிரத்தியேக சிகிச்சை ( specialist treatment) செய்தால் அவர்களும் பூரண குணமடைய அதிக வாய்ப்புகள் உள்ளன.

 போராளிகளின் நோய்கள் பெரும்பாலும் உடல் ரீதியானதாக(physical) இருப்பதை விட மனரீதியான அழுத்தங்கள்தான் (Mental Depression) அதிகமாக காணப்படுவதாக அண்மைய ஆய்வுகள் சொல்கின்றன.
உடல் ரீதியாக சிறு காயங்களுக்கு உட்பட்ட அவர்களை மன அழுத்தங்கள் மேலும் கடும் நோயாளிகள் ஆக்குகின்றன.

போரின் பின்னரான புனர்வாழ்வு காலத்தில்   போராளிகளுக்கான  மன அழுத்த சிகிச்சையோ( psychological Treatment) அல்லது ஆற்றுப்படுத்தல்களோ
( counselling) போதியளவு வழங்கப்படவில்லை. போதியளவு என்று சொல்வதை விட “முற்றாக வழங்கப்படவில்லை” என்றுக்கூடச்சொல்லலாம்.

பல இன்னல்களையும் சித்திரவதைகளையும் துன்புறுத்தல்களையும்(Trauma and torture)  மன அழுத்தங்களையும் தாண்டி வந்த இவர்களை முறையான பராமரிப்பு செய்ய தவறிவிட்ட குற்றத்தினை செய்த தரப்பாக;

1. இலங்கை அரசாங்கம்
2.தமிழ் அரசியல் தலைமைகள்
3.புலம்பெயர் சமூகம்

இருக்கின்றன.

இதில் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இழந்த நிலைதான் இன்றும் காணப்படுகிறது. ஏனெனில் போரை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக சொல்லும் அவர்கள் போரின் பின்னரான நடவடிக்கைகள் இப்போதும் ”விமர்சனத்துக்கும் விசாரணைக்கும்” உட்பட்டவையாக காணப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்ட போராளிகளை யார் கவனிப்பது? அல்லது அவர்களில் யார்  அக்கறை காடுவது? என்ற கேள்விக்கான விடைக்கு இரண்டு பதில்கள் முக்கியமானவை.

புலம்பெயர் சமூகமும்; தமிழ் அரசியல் தலைமைகளும் நிச்சயமாக இந்த விடயத்தில் முக்கிய கவனமெடுத்து செயற்படவேண்டும்.

”விச ஊசி” அல்லது “ விச உணவு” என்ற சொற்பதங்கள் மிகவும் கூரிய வார்த்தைகள்(sensitive words). இந்த விவகாரம் ஒரு முக்கிய பிரச்சினையாகும்.
சொல்லிவிட்டு கடந்துபோய் வேறு வேலையைப்பார்க்கும் சாதாரண பிரச்சினை அல்ல. இது ஒரு உணர்வு சம்பந்தப்பட்ட விடயம்( sensitive issue).பல ஆயிரம் உயிர்கள் சம்பந்தப்பட்ட விடயம். பல ஆயிரம் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட விடயம்.

சில நுண்ணிய விவகாரங்களை கையாளும் விதம் எப்படி? என்று தெரியாத ஒரு சிலரின் கைகளில் இந்த விடயம் போய்ச்சேர்ந்து இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. அவர்களில் முக்கியமானவர்கள்.....

1.சுயலாப அரசியல்வாதிகள்
2.அநாமதேய தமிழ் இணையங்கள்
3.சமூக வலைப்பதிவர்கள்

சுயலாப அரசியல்வாதிகளின் கைகளில் இந்த விடயம் போய்ச்சேர்ந்ததால்...


  • போராளிகளின் வேதனைகளை தாங்கள் பங்கு போடுகிறோம் என்றும்;
  • அவர்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கிறோம் என்றும் “பப்படா” காட்டி;

 அரசியலில் தமது இருப்பை தக்கவைக்க இதையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்திறார்கள்.

மக்களின் நன்மதிப்பை பெற்று தங்களின் வாக்கு வங்கியை குறையவிடாமல் பாதுகாக்க இதுவும் ஒரு வழியாக பயன்படுத்துகிறார்கள்.

அடுத்து;
அநாமதேய தமிழ் இணையங்கள் நடாத்தும் ஒரு சில “தமிழ் தேசியவாதிகள்”
தங்களின் “இணைய வியாபாரத்துக்கு” அல்லது “இணையப்பிரபலத்துக்கு” இந்த விடயத்தினை பயன்படுத்துகிறார்கள்.

சும்மா கிடக்கும் கல்லுக்கு ”பொட்டும் பூவும்” வைச்சு அதுக்கு பால் ஊற்றி; கும்பாபிசேகம் செய்யும் வல்லமை இந்த முதலெழுத்து இல்லாத அநாமதேய தமிழ் இணையங்களுக்கு “கைவந்த கலை”.

இவர்களுக்கு இந்தச்செய்தி “காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த “ நிலை.



அடுத்து “சமூக வலைப்பதிவர்கள்”.

இவர்களில் பலர் ஈயடிச்சான் “copy and paste"  வகையறாக்கள்தான் அதிகம்.
10$ அநாமதேய இணையத்தளங்களை மேயும் இவர்கள் அந்த செய்திகளை அப்படியே பகிர்வார்கள் அல்லது அதில் இருந்து கொஞ்சம் பொறுக்கி அதை நறுக்கி ஒரு பதிவாக பகிர்ந்து அதற்கு கிடைக்கும் “like and comments" இல் ;
குதூகலம் அடைவார்கள்.


ஆக; உற்றுநோக்கிப்பார்த்தால் விச(ர்) ஊசி ஏற்றப்பட்டிருப்பது மேற்குறிப்பிட்ட மூன்று பகுதியினருக்குத்தான் என்பது தெட்டத்தெளிவு.
  • ஒரு செய்தியின் பின்னணி ( Background) 
  • ஒரு செய்தியின் அடிப்படை(Basic)
  • ஒரு செய்தியின் தொடர்ச்சி(follow up)

    இவை பற்றிய தேடலும் அறிவும் ( Research and knowledge)  இல்லாத ஆர்வக்கோளாறு உடையவர்கள் செய்திகளை எழுதுகிறார்கள் என்று சொல்வதை விட உருவாக்குகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    பொறுப்புக்கூறும் வல்லமை இல்லாத தமிழ்  ஊடகங்கள் ஒருசிலவற்றின் ஆர்வக்கோளாறின் காரணமாகவே இந்த “விச ஊசி “ விவகாரம் ஊதிப்பெருப்பிக்கப்படுகிறது.

    நாளை இந்த ‘விச ஊசி” விவகாரத்தை மறந்து வேறு ஒரு விடயத்தைப்பற்றி பரபரப்பாக பேசத்தொடங்கிவிடுவார்கள்.

புலம்பெயர் தேசத்தில் இருக்கும் ஒருசில அதிதீவிர "ஆர்வக்கோளாறுகள்" எப்போதும் உணர்வுகளின் அடிப்படையில் இயங்குவதற்கு மட்டுமே பழக்கப்பட்டுவிட்டார்கள்.
அறிவுபூர்வமாக சிந்திக்கவேண்டிய தருணங்களில் கூட
 " உணர்ச்சிக்கொந்தளிப்பு" தான் அவர்களை இயக்கும். இப்படியானவர்களின் கைகளில் இந்த விடயம் இப்போது "குரங்கு கையில் பூமாலையாக" சிக்கி சின்னாபின்னமாகிறது.



2009 இக்கு முன்னரும் பின்னரும் பல ஆயிரம் போராளிகள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய மற்றும் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார்கள். அவர்களில் பலர் படுகாயங்களுக்கு உள்ளானவர்கள்.

உதாரணத்துக்கு அவுஸ்திரேலியாவுக்கு உள் நுழையும் போது நிச்சயமாக அவர்களின் இரத்தம் முழுமையான பரிசோதனைக்கு( FBC- full blood count) உட்படுத்தப்படும். அவர்களின் குருதியில் ஏதாவது வித்தியாசம் இருந்தால்
அப்படியான பரிசோதனையில் நிச்சயம் தெரியவந்திருக்கும்.

 ஒரு சிலருக்கு குண்டுத்துகள்கள்( piece) அவர்களின் தலை நெஞ்சுப்பகுதியில் இருந்தது. தலைசுற்று, மயக்கம், களைப்பு போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு அதிகமாக வந்த போது அவர்களுக்கு "சத்திரசிகிச்சை" செய்யப்பட்டது. இப்போது அவர்கள் பூரண சுகமாக இருக்கிறார்கள்.

இலங்கையில் இருக்கும் விழுப்புண் அடைந்த  போராளிகள் பலருக்கு தகுந்த சிறப்பு சிகிச்சை( special treatments) இன்னமும் அளிக்கப்படவில்லை. அப்படி  தகுந்த சிகிச்சை வழங்கப்பட்டால் அவர்களும் பூரண சுகம் அடைந்து தேக ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் விழுப்புண் அடைந்த போராளிகள் பலர் சிகிச்சைபெற்று மிகவும் ஆரோக்கியத்துடன் திருமணமாகி குழந்தைகள் பெற்று சந்தோசமாக வாழ்கிறார்கள்.

எனவே
போராளிகளே...!!!

  • இப்படியான “விச ஊசி” “விச உணவு” செய்திகளைக்கேட்டு மனதளவில் பாதிப்படையதேவையில்லை.
  • பல வலிகளை தாங்கிய உங்களுக்கு இது ஒரு பெரிய விடயம் அல்ல; இருந்தாலும் இது பற்றிய தெளிவும் மனத்தைரியமும் உங்களுக்கு எப்போதும் இருக்கவேண்டும்.
  • உங்களது உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள மருத்துமனைக்குச்சென்று பூரண பரிசோதனை (full blood count and medical check up) செய்யுங்கள்.
  • உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அயலவர்களுக்கும் முடிந்தளவு தெளிவுபடுத்துங்கள்.
  • உங்களுடைய நண்பர்கள் பலர் புலம்பெயர் தேசங்களில் இருக்கிறார்கள்.உங்களோடு புனர்வாழ்வு மையங்களில் வலிகளை சேர்ந்து அனுபவித்தவர்கள் அவர்கள். அவர்களை அந்தந்த நாடுகளில் மருத்துவ பரிசோதனை செய்து “உண்மை” என்னவென்று வெளியுலகத்துக்கு சொல்லச்சொல்லுங்கள்.

 போராளிகளின் பெற்றோர்களே... உறவினர்களே!!!
  • பல ஆண்டுகளாக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்து ; பல வேதனைகளையும் வலிகளையும் தாங்கிக்கொண்டு வாழும் உங்களின் பிள்ளைகள்/உறவுகளிற்கு உறுதுணையாக இருங்கள்.
  • அவர்கள் அனுபவித்த வலிகளை தங்களுக்குள்ளே மூடி வைத்து;உங்களுக்காக வாழும் அவர்களுக்கு மனத்தைரியமும் ஆதரவும் கொடுக்கவேண்டியது உங்களின் கடமை.
  • உங்களால் முடிந்த அளவு அவர்களுக்கான மருத்துவ வசதிகளை செய்து கொடுங்கள்.
  • மனவழுத்தம் தான் பல நோய்களுக்கான முக்கிய காரணி. இந்த மன அழுத்தத்தினை குறைக்கும் வழிகளை கண்டறிந்து அவர்களிற்கு மனத்தைரியத்தினை கொடுங்கள்.
  • எல்லா வழிகளிலும் அவர்களுக்கு  ஆதரவாக இருங்கள்.



இறுதியாக;


கிட்டத்தட்ட 15000 முன்னாள் போராளிகளின் எதிர்கால வாழ்வினை கேள்விக்குறியாக்கி ; அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் வைத்துத்தான் சர்வதேச சமூகத்துக்கு எமக்கு நிகழ்ந்த கொடுமைகளை உறுதியாக சொல்ல முடியும் எனும் கட்டாயம் இங்கு இல்லை.

அதற்காக அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் அநீதிகளுக்கும்  அவர்கள் பற்றிய பிரச்சினைகளை பேசாமல் எப்படி தீர்வு கிடைக்கும்? என்ற கேள்வி எழலாம்.
நியாயமான கேள்விதான்.

ஆனால் ஒரு விடயத்தினை நினைவில் வைத்துக்கொண்டு எதைவேண்டுமானாலும் செய்யுங்கள்.

தங்களின் வாழ்க்கையின் பாதியை தொலைத்துவிட்டு; உடலாலும் மனதாலும் பல வலிகளின் வடுக்களை சுமந்து ...
ஏதோ ஒரு வாழும் நம்பிக்கையில்...
அம்மா...அப்பா...கணவன்...மனைவி...பிள்ளைகள் என ஒரு புதிய உலகத்தில்..
வாழ ஆசைப்படும் அவர்களின் மிகுதி வாழ் நாட்களை கேள்விக்குறியாக்காதீர்கள்.

சில விடயங்களை எப்படி கையாளவேண்டும் ? எப்படி கையாளக்கூடாது? என்பதற்கு இந்த “விச ஊசி” விவகாரம் மிக நல்ல உதாரணம்.நாளை ஒரு சுதந்திர மருத்துவ பரிசோதனை (independent international medical test) செய்யப்பட்டு இந்த விவகாரம் “பொய்” என நிரூபிக்கப்பட்டால்;விடுதலைப்புலி போராளிகளின் வாக்குமூலங்களின் நம்பகத்தன்மை(credibility) கேள்விக்குறியாக்கப்படும்.

சரி உண்மையாகவே அப்படி நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பின் ; புலம்பெயர் தேசங்களில் வாழும்  போராளிகள் ஒன்றிணைந்து ஒரு மருத்துவ பரிசோதனையை செய்து முறையாக வெளிக்கொணர்ந்து இருக்கலாம். அந்தப்பரிசோதனை நம்பத்தகுந்ததாக அமைந்திருக்கும்.

இதுவரை ...

புலம்பெயர் தேசத்தில் உள்ள  போராளிகள் ஒரு வாய்கூடத்திறக்காமல்  மெளனமாக இருக்கிறார்கள் என்றால் என்ன காரணம்????

பல மருத்துவ பரிசோதனைகளை அவர்கள் வாழும் புலம்பெயர் நாட்டில் கட்டாயம் செய்திருப்பார்கள். அப்படியொரு வித்தியாசமான நோய்த்தாக்கம்  கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நாட்டு மருத்துவ திணைக்களம் நிச்சயம் அதை அவர்களுக்கு சொல்லியிருக்கும்.
அப்படி நிகழ்ந்ததாய் இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.
இந்த “விச ஊசி” செய்தியின்    பின்னர் ;
புலம்பெயர் தேசத்தில் இருக்கும்  ஒரு சில  போராளிகள் தங்களை பூரண பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இதுவரை யாருக்கும் இப்படியான “விச ஊசித்தாக்கம்” கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும் இந்த “விச ஊசி”  செய்தியால் ஒரு நன்மையும் ஏற்பட்டிருக்கிறது.யாரும் கவனிப்பாரற்றுக்கிடந்த போராளிகளின் பக்கம் எல்லோரினதும் கவனம் திரும்பியுள்ளது. ”மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என அக்கறையோடு  பலர் போராளிகளைப்பார்த்து கேட்கிறார்கள்.நிச்சயமாக அவர்கள் பூரண மருத்துவ பரிசோதனை செய்வதினால்; அவர்களுக்கு ஏதாவது நோய்கள் இருந்தால் கண்டுபிடிக்கப்படும்.அதற்கான சிகிச்சை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இதனால் பல போராளிகளின் நாட்பட்ட நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு பூரண சுகம் அடைய வாய்ப்புகள் உருவாகும்.



எம் இனத்துக்கு நிகழ்ந்த கொடுமைகளை நிரூபிக்க ...
ஆயிரம் வழிகள் இருக்கிறது.
அதை விட்டு விட்டு மீண்டும் மீண்டும் “அந்த சீவன்களின்” உணர்வுகளோடு விளையாடாதீர்கள்.



சொந்த அண்ணாவோ; தம்பியோ; தங்கச்சியோ; அக்காவோ...
கடைசிநேரம் பிடிபட்டு புனர்வாழ்வுக்குப்போய் திரும்பி வந்திருந்தா...
"விச ஊசி" " வன்புணர்வு" எண்டு கதைக்க மனம் வராது.
மனச்சாட்சியும் இடம் கொடுக்காது!!!!
இதை நான் சொல்லவில்லை...
ஊரில இருக்கும் தம்பி ஒருத்தன் சொன்னான்.

அப்படியானால் இசைப்பிரியா, கிருசாந்தி இவர்களுக்கு நிகழ்ந்த கொடுமையை பேசக்கூடாதா? என்ற கேள்வி எழலாம்.
பேசுங்கள்......
ஆனால் பேச முதல்...
இந்த  கொடுமைகள் எல்லாம் நிகழ்ந்த பின்;
அவர்கள்  உலகின் ஒரு மூலையில்   உயிரோடு இருக்கிறார்கள்  என வைத்துக்கொண்டால்..
எப்படி பேசுவீர்களோ...
அப்படிப்பேசுங்கள்!!!



"இசைப்பிரியா" ஒரு நொடியில் இறந்தாள்!
அவளைப்பெற்றவர்கள் ...
உயிரோடு இருக்கும்
ஒவ்வொரு கணமும்
இறக்கிறார்கள்!!!



போராளிகள் மன ரீதியாக இன்னும் வலிமையோடுதான் இருக்கிறார்கள் என்பது உண்மை.

மற்றவர்களுக்காக போராடியவர்கள்...
இப்போது தங்களின் வாழ்க்கைக்காக போராடுகிறார்கள்.
சாகும் வரை அவர்களின் வாழ்வு போராட்டமே!!!


எமக்காக எவ்வளவோ செய்தவர்கள்... காலம் வரும் போது தங்களின் மெளனம் கலைத்து தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை துணிவோடு சொல்வார்கள். அதுவரை பொறுத்திருங்கள்.

“உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.. உபத்திரவம் செய்யாதீர்கள்”

போதும் இனியாவது அவர்களை “ துகிலுரியாது” இருப்போம்.




 #தமிழ்ப்பொடியன்©

























வியாழன், ஆகஸ்ட் 18, 2016

உலகில் நிம்மதியாய் வாழச்சிறந்த நகரம் எது?

உலகத்தில் மிகச்சிறந்த வாழ்க்கைத்தரம்(world's most liveable city) உள்ள நகரமாக அவுஸ்திரேலியாவின் “மெல்பேர்ண் நகரம்” தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த வருடத்துடன் சேர்த்து தொடர்ந்தும் ஆறாவது வருடமாக தன் முதலாவது இடத்தை “மெல்பேர்ண் நகரம்” தக்கவைத்துள்ளது.

மிகவும் கஸ்ரமான வாழத்தகுதியுடைய நகரமாக சிரியாவின் தலைநகரான “டமக்கஸ் நகரம்” இருக்கிறது.



இந்த கருத்துக்கணிப்பையும் ஆராய்ச்சி முடிவையும் EIU( Economist Intelligence Unit) எனும் அமைப்பு அறிவித்துள்ளது.

நிம்மதியாக சிறந்த வாழ்க்கைதரத்துடன் வாழக்கூடிய நகரங்களின் போட்டியில்; அவுஸ்திரேலியாவின் மூன்று நகரங்கள் முதல் ஏழு இடத்துக்குள் வந்திருக்கின்றன.

மெல்பேர்ண் -1அடிலைட்-5பேர்த்-7


தூரதிஸ்டவசமாக போனவருடம் 7ஆம் இடத்தில் இருந்த அவுஸ்திரேலியாவின் இன்னொரு நகரான சிட்னி இந்தமுறை முதல் பத்து இடத்துக்குள் கூட வரவில்லை.

இதற்கான முக்கியகாரணமாக போனவருடம் அந்த நகரில் நடந்த “பயங்கரவாத தாக்குதலே” ( heightened perceived threat of terrorism) ஆகும்.

உலகத்தில் உள்ள முக்கியமான 140 நகரங்கள் இந்த போட்டியில் பங்குபெற்றன.

வாழ்க்கைத்தரம்,சுகாதாரம்,கல்வி,கட்டுமானங்கள்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாச்சாரம் போன்ற முக்கியமான விடயங்கள் இந்த தெரிவில் பங்குவகித்தன.

இந்தவருடம் 97.5 புள்ளிகள் எடுத்து மெல்பேர்ண் நகரம் தன்னுடைய முதலாவது இடத்தை ஆறாவது வருடமாகவும் தக்கவைத்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ஆஸ்ரியாவின் “வியன்னா நகரம்” உள்ளது.



மெல்பேர்ண் நகரம் கடந்த பல ஆண்டுகளாக உலகமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என சொல்லப்படுகிறது.
#சுவையான கோப்பி- tasty coffee
#பல்சமூக உணவுக்கடைகள்- multicultural  restaurants
#இனிமையான இரவுவாழ்க்கை- beautiful nightlife
#அழகிய சுற்றுலா இடங்கள்- attractive tourist places
#பழகுதற்கு இனிய மக்கள் - local people
#ரம்மியமான அழகிய கடற்கரைகள்- sandy beaches
என மெல்பேர்ண் நகரம் தன்னை கவர்ச்சிகர நகராக காட்டி உலகத்தில் மிகச்சிறந்த நகராக மிளிர்ந்து நிற்கிறது.





மெர்பேண் நகருக்கு புலம்பெயர்ந்த மக்கள் பலரும் தாங்கள் மிக நல்லதொரு வாழ்வை கண்டெடுத்துள்ளோம் என பாராட்டியுள்ளார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து இங்கு வந்தவர்கள் பலர் தாங்கள் நல்ல உத்தியோகத்தை இந்த நகரத்தில் பெற்றுக்கொண்டோம் என கூறியுள்ளார்கள்.

இந்த நகரத்துக்கு வியாபாரம் செய்ய வந்தவர்களும் மிகவும் உற்சாகமாகவும் இலாபத்தோடும் தங்களின் வியாபாரம் நடக்கிறது என புகழ்ந்துள்ளார்கள்.

மெல்பேர்ண் நகர மேயர் ”ரொபேர்ட் டொய்லே” கருத்து தெரிவிக்கையில்;
“இந்த அங்கிகாரம் சும்மா வழங்கப்படவில்லை. ஒரு நல்ல வாழ்க்கைசூழலை இந்த நகரத்தில் ஏற்படுத்த பல நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம். தொடர்ந்தும்
நாங்கள் எல்லோரும் சேர்ந்து இந்த நகரத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்போம்” என்றார்.



#தமிழ்ப்பொடியன்©


Comments System

Recent Posts Widget

Facebook Badge