புதன், நவம்பர் 23, 2016

Mummy i want thanni......!!!

ஆயிரம் மைல் கடந்து அன்னைதேசம் தனை பிரிந்து
அனாதைகளாய் ஆனபோதும்
அண்ணனாய் தம்பியாய் பிள்ளைகளாய் உற்ற உறவுகளாய்
அன்போடு அரவணைக்கும் என் புலம் பெயர் சொந்தங்களே வணக்கம்!
 
என் உயிரிலும் மேலான தமிழ்தாயின் உச்சிமுகர்ந்து
அவள் தந்த தமிழ்ப்பாலின் பாசம் உணர்ந்து
புதுவை அண்ணாவை என் நெஞ்சில் வைத்து
காசி அண்ணாவின் கைபிடித்து 
கவிதை நான் எழுதி வந்தேன் காலம் அறிந்து!
 
வீட்டிலே தமிழ்!
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!
 
தமிழனாய் பிறந்தோம் என்று பெருமை பேசு-இல்லையேல்
தமிழினத்தின் அருமை போச்சு!
 
தமிழினத்தின் உயிர் மூச்சுதானே எங்கள் செம்மொழி
மூச்சையே நிறுத்திவிட்டால் இனம் வாழ ஏது வழி?
 
படலை திறந்து வந்தோம்
உடலை மட்டும் தானே கொண்டுவந்தோம்
உயிரும் உணர்வும் இப்போதும் அங்கேதானே!
 
சத்தியமாய் சொல்லுங்கள் எங்களின் கால் இடுக்கில்
இப்போதும் எங்கள் வீட்டின் முற்றத்து மண்தானே ஒட்டி இருக்கிறது.
 
அரியாலையில் இருந்தமாதிரி அவுஸ்திரேலியாவில் இருக்கமுடியாது
மேடைக்கு ஏற்ற வேசம் போட்டே ஆகவேண்டும்
ஆனாலும் தமிழன் என்ற அடையாளம் தொலைக்கப்படாது
 
அடையாளங்களை தொலைத்துவிட்டு அரைகுறையாய் வாழ்வதை விட
அட அம்மணமாக வாழ்வது எவ்வளோ மேல்!
 
”வெள்ளை” என்று சொல்வதில் சிலநேரம் எனக்கு பெருமை!
என்னதான் வெளுக்க "லோசன்"(lotion) போட்டாலும் என் தோல் கருமை!
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகாது அதுதான் உண்மை!
 
வீட்டிலே தமிழ்!
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!
 
பிள்ளை ஒன்று பெறுவதே பெரும்பாடு
என் பெற்றபிள்ளை தமிழ் மறந்தால் அது வெக்கக்கேடு!
 
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!
 
பெற்ற பிள்ளைக்கு பீற்றர் என்றும் ஹரிபோட்டர் என்றும்
பெயர் வைச்சால் என்ர பிள்ளை என்ன மொழி பேசும்?
 
பீற்றரும் ஸ்ரெல்லாவும் "hi how are you " என்று பேசலாம்
தமிழரசியும் கலையரசியும் "hi how are you buddy" என்று சொன்னால் 
என்னாகும் எங்கள் சந்ததி?
 
தமிழரசியின் பெயரில் மட்டுமே தமிழ்
அவள் மூச்சிலும் இல்லை பேச்சிலும் தமிழ் இல்லையே!
அது அவள் பிழை இல்லை! தழிழரசியை பெற்ற தந்தை என் பிழை!
 
Factory இல பட்டை அடி அடிச்சுப்போட்டு 
பாசத்தோடு ஓடி வந்து முத்தமிட்டால்
"அப்பா" என்று சொன்னால்த்தானெ அந்த அலுப்பு தீரும்
அப்பதான் என்ர ஆயுளும் கூடும்
 
என்ர மூத்தது "Daddy i want ulunthu VADA" என்கிறான்
அட என்ர கடைக்குட்டி Mummy i want thanni... என்கிறாள்
 
தாலி கட்டியவளை "darling" என்றால்
என்ர பிள்ளை என்னப்பாத்து "dada" என்டுதான் சொல்லுவான்
காலம் போக என்னை "வாடா" என்பான்
மனம் நொந்து என்ன பலன்?
 
கட்டிலிலே தமிழ் மறந்தால்....
தொட்டிலிலே என்ன வரும்?
 
Mummy i want thanni......!!!
தமிழ்த்தாய் நொந்து போவாளே இதை எண்ணி
 
வீட்டிலே தமிழ்!
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!
 
தாய்ப்பாலோடு சேர்த்து தமிழையும் ஊட்டுங்கள்
தாய்பாசத்தோடு சேர்த்து தமிழ்நேசத்தையும் காட்டுங்கள்
 
நாங்கள் எல்லாம் பூவரசம் கதியால்
புடுங்கி வந்து FRANCE இல் நட்டாலும் 
பூக்கிறது பூவரசம் பூதான்!
ஆனால் இந்த பிஞ்சுகள் பூவரசம் பூவின் நிறம் அறியாத ரோஜாக்கண்டுகள்
 
விதை விதைக்கும் போது அவதானம்
இல்லையெனில் எங்களுக்குத்தான் அவமானம்!
 
NORWAY இல் இருந்து வந்த மூத்தவளின் இளையதும்
FRANCE  இல் இருந்து வந்த இளையவனின் கடைசியும்
என்ன மொழியில் பேசுவது என்று தெரியாமல் முழிக்கும்..!!!
 
என்ர அப்புவுக்கு ஆயிரம் டொலர் தேவையில்லை
கனடாவில இருந்து வந்த தன்ர பேரன் தமிழ் பேசவேண்டும்.
“அப்பு” எண்டு வாய் நிறையா கூப்பிட வேணும்.
அப்பதான் அப்புவின் அடிவயிறு குளிரும்.
 
ஆங்கிலம் பேச வேண்டாம் எண்டு குதர்க்கம் பேசவில்லை
ஆங்கிலம் என்பது அவசிய மொழிதான் - ஆனால்
அன்னை மொழியை ஆங்கிலம் திண்டால்
அடுத்த சந்ததி தமிழ் மறந்தால்
யாருக்கு வேதனை?
 
தமிழ் இனத்தை அழிக்க ஆரும் தேவையில்லை
மொழியை மறந்தால் தமிழ் இனம் தானாய் அழியாதோ?
 
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!
 
எத்தனை ஆயிரம் உயிர்விலை கொடுத்து
செங்குருதி ஊற்றி வளர்த்த மொழியல்லோ எங்கள் தாய்மொழி
தமிழ் இனத்தின் விழிதானே எங்கள் தமிழ்மொழி
 
அடிபடுவம் பிடிபடுவம் புடுங்குப்படுவம்- ஆனால்
தமிழீழம்,தலைவன்,தமிழ் எண்டால் 
தம்பியாய் தங்கையாய் அண்ணனாய் ஒண்டா நிப்பம்!
 
தாயை பழித்தவனின் நாக்கைதான் அறுப்போம்.
தாய் மொழியை பழித்தவனின் தலையையே அறுப்போம்.
 
நாளைய இந்த சந்ததி தமிழ் மறந்தால் நாறிப்போகாதோ நம் இனம்?
இளைய சந்ததிக்கு இது புரிந்தால் இன்னும் தலைனிமிரும் எம் இனம்.
 
தாய் பிறந்த தேசத்தின் வாசம் அறியாத இந்த பிஞ்சுகள் சில
தமிழீழத்தின் மேலும் தமிழின் மேலும் கொண்ட பாசம்
அப்பழுக்கில்லாத ஆழ்ந்த நேசம்.!
விடுதலை மீதும் அண்ணனின் மீதும் இவர்கள் காட்டும் பாசம்
எங்களில் சிலர் போடும் வேசத்திலும் பெரியது!
 
எல்லா மொழிகளையும் வாசியுங்கள்
தமிழை மட்டும் சுவாசியுங்கள்...!!!
 
வாய்க்கால் வெட்டி வளிந்தோடும்  நீரை விதைகளுக்கு விடுங்கள்.
வளர்க்கிற போதே வாய்க்கு வாய் தமிழ் சொல்லி வளருங்கள்
 
வெளியில என்ன மொழியையும் பேசுங்கோ
விட்டில மறக்காமல் தமிழையே பேசுங்கோ...!!!
 
Mummy i want thanni......!!!
தமிழ்த்தாய் நொந்து போவாளே இதை எண்ணி
 
வீட்டிலே தமிழ்!
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!

எங்கட ஊருக்கும் மின்சாரம்

எங்கட ஊருக்கும் மின்சாரம் - இனி 
அவுணில சுடலாம் பணியாரம்
 
சும்மா குடுக்கிறாங்களாம் எல்.சி.டி
இனி எல்லா வீட்டிலயும் சண் டி.வி
படிப்பு தான்ரா எங்கட சொத்து
வச்சான்ரா ஆமிக்காரன்  அதுக்கு ஆப்பு
 
ஆருக்கு வேணும் தமிழீழம்
அதை மறந்து நாங்கள் கனகாலம்..!!!
தூந்து போன துயிலும் இல்லங்கள்
மறந்து போனாலும் மனச்சாட்சி கொல்லும்
 
லாம்பு விளக்கில் மங்கிய இரவுகள்
இனி ரியூப்பு பல்ப்பில் பளபளக்கும் கனவுகள்..!
 
அன்றைய இரவில் நிலவும் நச்சத்திரங்களும் கூட இருந்தன
மங்கிய வெளிச்சத்திலும் தெளிவாய் நடந்தோம்
இரவுகளின் நீளங்கள் தெரியாமல் வாழ்ந்தோம்.
 
இனி ஆருக்கு வேணும் தமிழீழம்
அதை மறந்து நாங்கள் கனகாலம்...!!!
 
எங்கட ஊருக்கும் மின்சாரம்-இனி
அவுணில சுடலாம் பணியாரம்
 
இனி வீட்டுக்கு வீடு இன்ரனெற்று
கெதியில வரும் ஊரில குத்துவெட்டு
சிலது சொன்னால் புரியாது
பட்டாலும் தெளியாது..!!!
 
வேப்ப மர நிழலின் அருமை
கடற்கரைக்காற்றின் இதமான குழுமை
மண்சட்டியில் சமைத்த சூடை
கொட்டுக்கிணற்றில் குடிக்கும் தண்ணீர்
 
சந்தோசம் என்பது இருக்கும் போது தெரியாது
அதை ஆரும் சொன்னாலும் அனுபவிக்காமல் புரியாது
 
எங்கட ஊருக்கும் மின்சாரம்
எங்களுக்கும் கேக்க சந்தோசம்தான்
 
எங்கட ஊருக்கு மின்சாரம் - இனி 
அவுணில சுடலாம் பணியாரம்...!!!
 
 
 
தமிழ்ப்பொடியன்
18/06/2013
 
குறிப்பு: 21ம் நூற்றாண்டிலாவது எங்கட ஊருக்கு முதல் முதலா கறண்டு வாறது சந்தோசம்தான்.
              1990 களில் இருந்த மாதிரியே எங்கட ஊர் இருக்கோணும் எண்டு அவுஸ்திரேலியாவில இருந்து      கொண்டு ஆசைப்படுவது அபத்தமானதுதான்.இருந்தாலும் சிலதுகளை ஏற்க மனசு மறுக்குது.இன்ரனெற்று,ஈமெயில் எண்டு உலகம் எங்கயோ நிக்கும் போது மாற்றங்களை ஏற்க மறுப்பது மடமைதான்.இருந்தாலும் சில ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் மொழிபெயர்க்கும் போது சில உண்மைகள் சுடுகிறது. நாங்கள் மட்டும் ”எல்லாத்தையும்” அனுபவிச்சு கொண்டு விசைப்பலகைகளில் விண்ணாணம் பேசுவது கேவலம் தான்.இருந்தாலும் சில நேரம் கைகள் அரிக்குது.எழுத வைக்குது.

ஒற்றைச் சொல்லு வலி!!!

1990
ஆனையிறவுசமர்
தரையிறக்கம்
இடப்பெயர்வு
அகதிமுகாம்
இடப்பெயர்வு
முகாம்
பசி
பட்டினி
இழப்பு
வலி
இடப்பெயர்வு...(3)
முகாம்
செல்லடி
பொம்பர்
கெலி
நேவிக்காரன்
படுகொலை
இடப்பெயர்வு
முகாம்

1995
யாழ்இடப்பெயர்வு
கிளாலி
படுகொலை
வன்னி
முகாம்
போராட்டம்
இடப்பெயர்வு
இடப்பெயர்வு
இடப்பெயர்வு......(6)
முல்லைத்தீவு
ஆனையிறவு
வெற்றிகள்


சமாதானம்
ஏ9
ஓமந்தை
கொழும்பு

சுனாமி
அவலம்
சாவு
இடப்பெயர்வு

மகிந்த
சண்டை
சண்டை 
படுகொலை
கொத்து குண்டு
படுகொலை
போராட்டம்
சண்டை
முள்ளிவாய்க்கால்
பாதுகாப்புவலயம்
படுகொலை
இடப்பெயர்வு

வவுனியா
முகாம்
சித்திரவதை
சிறை
ஏழாம் மாடி
அடி
உதை
காசு
லஞ்சம்

புத்தளம்
கப்பல்
காசு
கடல்
பசி
பட்டினி
சாவு
பயம்
கிறிஸ்துமஸ் தீவு
அவுஸ்திரேலியா
அகதி
கெவின் றுட்
NO VISA
வாழ்க்கை??????


#தமிழ்ப்பொடியன்
30/07/2013






மனித உரிமை மாநாடும் மண்ணாங்கட்டியும்

ஜெனிவாவில நடக்கப்போதாம் மாநாடு
அது முடிஞ்சதும் அவங்கள் தருவாங்களாம்
தமிழனுக்கு தனி நாடு!

அமெரிக்கா கொண்டுவருமாம் தீர்மானம்
அவன் இலங்கையை பிரிச்சுத்தருவான் சரிசமானம்

இந்தியாவும் ஆதரிக்குமாம் தீர்மானம்
பிறகு "என்பலப்பில" மடிச்சுத்தருவாங்களாம் தமிழீழம்!!!

முப்பது வருசம் கழிச்சுத்தான் தெரியுது "இன அழிப்பு" எண்டு!
அஞ்சு வருசம் கழிச்சுத்தான் தெரியுது "போர்க்குற்றம்" எண்டு!

இன்னும் அம்பது வருசம் கழிச்சு வரும் "தீர்ப்பு"
இருங்கோ பாத்துக் கொண்டு...!!!

மன்னாரில தோண்டுறாங்கள் "மண்டை ஓடுகள்"
சனத்தை அடிச்சு சாக்கொன்றவனே அதற்கு
காவலும் கண்காணிப்பும்..!!!

மனித உரிமையும் மண்ணாங்கட்டியும்
தமிழனுக்கு கிடைக்காது நீதியும் நியாயமும்...
முள்ளிவாய்கால் முடிஞ்சு அஞ்சு வருசம்.

மனுநீதி செத்தும் கன வருசம்
அடையாளங்களை அழிச்சும் கன வருசம்.

சாட்சிகள் இல்லாத இன அழிப்பு
இதை செய்யச்சொன்னதே ஐ.நா

அமெரிக்கா ஆயுதம் குடுக்க
யுகே துணை நிற்க
சோனியா வழிமொழிய
நம்பியார்(ஐ.நா) செய்த இன அழிப்பு இது.

முள்ளிவாய்க்கால் அவலம் ஒன்றும் மூன்று நாளில் நடக்கவில்லை
வருசக்கணக்காய் நிகழ்ந்த பேரவலம்
அவலம் நடந்தது ஒன்றும் செவ்வாய் கிரகத்தில் அல்ல
ஐ.நா வின் கண்ணுக்கு முன்னால்

இன்னுமா நம்புது உலகம்... 

ஐ.நா ஒரு மனித உரிமை அமைப்பெண்டு??

செத்த நீதிக்கும் நியாயங்களுக்கும் "போஸ்மோட்டம்" செய்யும்
பிணவறை மன்றம் தான் ஜெனிவா மன்றம்..!!!

வெள்ளையனின் உடலில தான்ரா ஓடுது ரத்தம்
தமிழன் சிந்தினது வெறும் தண்ணி..!!!

வெள்ளையன் சொல்லுறதுதான் நீதி
மற்றவன் செய்யுறது எல்லாம் அநீதி!

நாயைக்கொண்டா நாலுவருசம் சிறையில் போடும் 
வெள்ளைகளின் "நீதி"

நாப்பதாயிரம் சனத்தை கொன்றவனுக்கு 
விரிப்பான் "செங்கம்பள வீதி"

கேக்க நாதியற்ற இனமடா ஈழத்தமிழினம்
பக்கத்தில ஆறுகோடி இருந்தும் அழிஞ்ச இனம்

வெட்டிப்புதைச்சவனும் கொன்று குவிச்சவனும்
கூட நின்றவனும்தான் நீதிபதிகள்

அவங்கள் குடுப்பாங்கள் நீதி தட்டில வச்சு!!!

ஆயுதம் அள்ளிக்குடுப்பான் பின் வளவால -பிறகு
நல்லா நடிப்பாங்கள் வளவுக்கு முன்னால!!

ஜெனிவாவில காட்டப்போறாங்கள் "சினிமா"
கதை, வசனம் :அமெரிக்கா
தயாரிப்பாளர் :இந்தியா
இயக்கம் :யூகே..
விநியோகம் :ஐ.நா

உந்த படம் ஓடும் நல்லா இன்னும் அஞ்சு வருசம்....!!!

கேக்க நாதியற்ற இனமடா -ஈழத்தமிழினம்

பக்கத்தில ஆறுகோடி இருந்தும் -அழிஞ்ச இனம்!
மனித உரிமை மாநாடும் மண்ணாங்கட்டியும்.....!!!!



தமிழ்ப்பொடியன்
02/02/2014


முக்கியகுறிப்பு: இது சாதாரண என்னைப்போன்ற சனங்களின்ர புலம்பல்.
அதுக்காக மனித உரிமைக்காகவும் தமிழரின் நீதிக்காகவும் போராடும் யாரையும் அவர்கள் செய்யும் செயல்கள் வீண் என்றும் சொல்லவில்லை.
எங்களின் மனநிலையில் உந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐ.நாவும் 5 வருசமா என்னத்தை புடுங்குறாங்கள் என்ற மன வெப்பியாரம் தான் மிச்சமாய் கிடக்குது.

Comments System

Recent Posts Widget

Facebook Badge