புதன், நவம்பர் 23, 2016

ஊருக்கு ஒருக்கா போகவேணும்

ஊருக்கு நான் போகவேணும்
என்ர கடலில காலை நனைக்கவேணும்.

வெள்ளை மணலில படுத்து கிடக்கவேணும்
அம்மான்ர மடியில நித்திரை கொள்ளவேணும்.

தம்பியை தோளில தூக்கவேணும்
தங்கச்சியை கைபிடிச்சு நடக்கவேணும்.

மாமியின்ர வீட்டையும் போகவேணும்
என்ர மச்சாளையும் ஒருக்கா பாக்கவேணும்.

முருகன் கோயிலுக்கு திருவிழா செய்யவேணும்
கடலைக்கொட்டை சோளம் வாங்கி தின்னவேணும்.

சைக்கிள்ள சுத்தி திரியவேணும்
ஊரில கனபேரை சந்திக்கோணும்.

எங்கட பொடியளோட கும்மாளம் அடிக்கவேணும்
எங்கினையும் அவங்களை கூட்டிக்கொண்டும் போகவேணும்.

பள்ளிக்கூடத்துக்கும் ஒருக்கா போகவேணும்
எனக்கு படிப்பிச்ச ரீச்சரையும் சந்திக்கோணும்.

கொக்குப்பட்டம் கட்டி ஏத்தவேணும்
நார் கூவ இராக்கொடி விடவேணும்.

உறைப்பா காரல் சொதி ஒண்டு வைக்கவேணும்
கூப்பன் மா புட்டோட குழைச்சு தின்னவேணும்.

தட்டிவானில ஒருக்கா ஏறவேணும்
கொடிகாம சந்தைக்கும் ஒருக்கா போகவேணும்.

கூழன் பிலாப்பழம் வாங்கிவரவேணும்
கறுத்த கொழும்பான் சீவி தின்னவேணும்.

பூவரசம் இலையில "பீப்பீ" செய்து ஊதவேணும்
அம்மம்மா "பீப்பீ" குழல் திருவிழாவில வாங்கவேணும் .

நிலவு வெளிச்சத்தில முற்றத்தில இருக்கவேணும்
ஊர்ப்புதினங்கள் கனக்க கதைக்கவேணும்.

அக்கான்ர கல்லறைக்கு போகவேணும்
அவளை விதைச்ச இடத்தில் நிண்டு அழவேணும்.

அம்மாவாணை என்ர ஊருக்கு ஒருக்கா போகவேணும்
எங்கட கடலில ஒருக்கா குளிக்கவேணும்.

இதெல்லாம் நடக்க எனக்கு விசா கிடைக்கவேணும்
விசா கிடைச்சாலும் போக கையில காசு வேணும்.

FACTORY இல பட்டையடி அடிக்கவேணும்
நித்திரை கொள்ளாமல் இரவுபகல் ஓடி ஓடி உழைக்கவேணும்.

அம்மாவாணை என்ர ஊருக்கு ஒருக்கா போகவேணும்
எங்கட கடலில ஒருக்கா குளிக்கவேணும்.




#தமிழ்ப்பொடியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge