புதன், நவம்பர் 23, 2016

எங்கட ஊருக்கும் மின்சாரம்

எங்கட ஊருக்கும் மின்சாரம் - இனி 
அவுணில சுடலாம் பணியாரம்
 
சும்மா குடுக்கிறாங்களாம் எல்.சி.டி
இனி எல்லா வீட்டிலயும் சண் டி.வி
படிப்பு தான்ரா எங்கட சொத்து
வச்சான்ரா ஆமிக்காரன்  அதுக்கு ஆப்பு
 
ஆருக்கு வேணும் தமிழீழம்
அதை மறந்து நாங்கள் கனகாலம்..!!!
தூந்து போன துயிலும் இல்லங்கள்
மறந்து போனாலும் மனச்சாட்சி கொல்லும்
 
லாம்பு விளக்கில் மங்கிய இரவுகள்
இனி ரியூப்பு பல்ப்பில் பளபளக்கும் கனவுகள்..!
 
அன்றைய இரவில் நிலவும் நச்சத்திரங்களும் கூட இருந்தன
மங்கிய வெளிச்சத்திலும் தெளிவாய் நடந்தோம்
இரவுகளின் நீளங்கள் தெரியாமல் வாழ்ந்தோம்.
 
இனி ஆருக்கு வேணும் தமிழீழம்
அதை மறந்து நாங்கள் கனகாலம்...!!!
 
எங்கட ஊருக்கும் மின்சாரம்-இனி
அவுணில சுடலாம் பணியாரம்
 
இனி வீட்டுக்கு வீடு இன்ரனெற்று
கெதியில வரும் ஊரில குத்துவெட்டு
சிலது சொன்னால் புரியாது
பட்டாலும் தெளியாது..!!!
 
வேப்ப மர நிழலின் அருமை
கடற்கரைக்காற்றின் இதமான குழுமை
மண்சட்டியில் சமைத்த சூடை
கொட்டுக்கிணற்றில் குடிக்கும் தண்ணீர்
 
சந்தோசம் என்பது இருக்கும் போது தெரியாது
அதை ஆரும் சொன்னாலும் அனுபவிக்காமல் புரியாது
 
எங்கட ஊருக்கும் மின்சாரம்
எங்களுக்கும் கேக்க சந்தோசம்தான்
 
எங்கட ஊருக்கு மின்சாரம் - இனி 
அவுணில சுடலாம் பணியாரம்...!!!
 
 
 
தமிழ்ப்பொடியன்
18/06/2013
 
குறிப்பு: 21ம் நூற்றாண்டிலாவது எங்கட ஊருக்கு முதல் முதலா கறண்டு வாறது சந்தோசம்தான்.
              1990 களில் இருந்த மாதிரியே எங்கட ஊர் இருக்கோணும் எண்டு அவுஸ்திரேலியாவில இருந்து      கொண்டு ஆசைப்படுவது அபத்தமானதுதான்.இருந்தாலும் சிலதுகளை ஏற்க மனசு மறுக்குது.இன்ரனெற்று,ஈமெயில் எண்டு உலகம் எங்கயோ நிக்கும் போது மாற்றங்களை ஏற்க மறுப்பது மடமைதான்.இருந்தாலும் சில ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் மொழிபெயர்க்கும் போது சில உண்மைகள் சுடுகிறது. நாங்கள் மட்டும் ”எல்லாத்தையும்” அனுபவிச்சு கொண்டு விசைப்பலகைகளில் விண்ணாணம் பேசுவது கேவலம் தான்.இருந்தாலும் சில நேரம் கைகள் அரிக்குது.எழுத வைக்குது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge