புதன், நவம்பர் 23, 2016

அடையாளம்!!!




பக்கத்துவீட்டுக்காரன் 
செத்து புழுத்து மணந்தாலும்
எட்டிப்பார்த்து ஏன் எண்டு
கேட்கா தேசத்தில் வாழ்ந்தாலும்...


இப்போதும் ஈழத்தமிழராய்த்தான் 
வாழ்கிறோம்.


எனக்கொண்டெண்டால் பத்துமைலுக்கப்பால் 
வாழும் என் நண்பன் ஓடி வருவான்
அவனுக்கு ஒண்டெண்டால் நான் ஓடிப்போவன்


கிழமையில் ஒருநாள் எண்டாலும்
அவன் வருவான்
இல்லையெண்டால் நான் போவன்


பிறந்தநாள் மண்டபத்தில்
கதிரை காணாமல் வருது


கொத்துரொட்டியும் பாணும் பருப்பும்
ரோல்சும் வடையும்
உடன் ஆட்டிறைச்சியும்
புட்டும் இடியப்பமும்
சொதியும் சம்பலும்
ஒடியற்கூழும்
இன்னும் தமிழ்க்கடைகளில் 
விற்பனைக்கு இருக்கு


கோயில்களும்
திருவிழாவும்
தேரும்
தீர்த்தமும்
கும்பாபிசேகங்களும்
மணிக்கடைகளும்
அன்னதானமும்
கொண்டக்கடலையும்
கச்சானும்
இங்கையும் இருக்கு...


கோவில் நிருவாகச்சண்டையும்
சங்க பொதுக்கூட்ட சண்டையும்
திருவிழா ஆர் செய்யுறது எண்ட
குழப்பமும் இப்பவும் 
இங்க இருக்கு...


அடுத்த தலைமுறையோட புலம்பெயர்தமிழன்
செத்துப்போவான் எண்டு எவன் சொன்னவன்?


தமிழ்பள்ளிக்கூடம் இருக்கு
விளையாட்டுப்போட்டி இருக்கு
ஆடிப்பிறப்பு இருக்கு
தமிழ்தின போட்டிகள் இருக்கு...
சின்ன சின்ன பிள்ளைகள்
தமிழ்ப்பேச்சும் இருக்கு...


காத்தான் கூத்து இருக்குது
நாடகம் இருக்குது
வில்லுப்பாட்டு இருக்குது
கூட்டு மேளம் இருக்குது
பறையும் இருக்குது


எந்த மடையன் சொன்னான்
அடுத்த தலைமுறையோட 
வெளிநாட்டில் தமிழ் செத்துப்போகும் எண்டு?


கொல்லும் குளிரிலும்
வேட்டியும் சால்வையும்
பட்டுச்சீலையும் கட்டியே 
இப்பவும் இங்க கோவிலுக்குப்போறம்
ஜீன்சும் சேட்டும் போட்டு அங்கபிரதட்சணை செய்வதுமில்லை
காவடி எடுப்பதும் இல்லை..


எந்த அறிவுக்கொழுந்து சொன்னான் 
எங்கள் கலாச்சாரம் வெளிநாட்டில்
அழிந்துவிடும் எண்டு?


இங்க இப்பவும்
இரவு பத்துமணிக்கு பின் வந்தால் அம்மா ஏசும்
அப்பா அடிக்கும்
அண்ணா முறைப்பான்...
தங்கச்சி மூஞ்சையை நீட்டுவாள்..


என் காச்சட்டை ஓட்டையை அம்மாதான் தைக்கிறா
என் உடுப்புகளை தங்கச்சிதான் தோய்க்கிறாள்


எவனடா சொன்னது
அடுத்த தலைமுறையோடு
பண்பாடு வெளிநாட்டில் 
அழிஞ்சுபோடும் எண்டு??


மாதாமாதம் 
அப்பம்மாவுக்கும்
அம்மம்மாவுக்கும்
அம்மாதான் காசு அனுப்புறா...


பத்து வருசம் கழிச்சும்
மாமியின் மூத்த மச்சாளின்
சாமத்தியவீடு 
அப்பாவின் இரண்டுமாத சம்பளத்தில்தான்
நடந்தது..


அப்பப்பாவின் செத்தவீடு
என்ர செலவு
அம்மம்மா செத்தாலும் அதுவும்
என்ர செலவுதான்
ஊரில எத்தின பேரன் இருந்தாலும்
ஆயிரம் மைல் கடந்து நான் இருந்தாலும்
எனக்கும் உரிமை இருக்கு
உரித்தும் இருக்கு


எந்த லூசன் சொன்னவன்
வெளிநாட்டுக்கு போனவங்கள்
வாயை பொத்திக்கொண்டு இருக்க வேணும் எண்டு??

என்னதான் சம்போ போட்டு முழுகினாலும்
என்ர தலையில வீட்டு முற்றத்து மண்ணும்
என்னதான் கைகழுவினாலும்
கரவலை மீன் கறி வாசமும்
போகுதேயில்லை...!!!
 
ஆயிரத்தில ஒண்டு
வெள்ளைகள் போல 
மாறினாலும்
தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதும்
தமிழனாத்தான் வாழுறம்.....


-தமிழ்ப் பொடியன்-



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge