அத்தியாயம் -1
முதலில “அதென்ன கோப்பிறேசன் அரசியல்” எண்டதுக்கு விளக்கத்தை சொல்லிப்போட்டு கதைக்குப்போவம்.
cooperation- ஒத்துழைப்பு/ஒற்றுமையாக எண்டு பொருள்படும் எண்டு google translator சொல்கிறது.
கூகுள் வரமுதலே பருத்தித்துறை கூவில் “தவறணையை” நாங்கள் “கோப்பிறேசன்” எண்டுதான் சொன்னனாங்கள் எண்டு
வரலாறு சொல்லுது. கள்ளுத்தவறணையை “கோப்பிறேசன்” எண்டு தமிழன் சொன்னதில ஒரு பெரிய “அரசியல் புரட்சி” இருக்கிறது.
அதாவது தவறணையில இன,மத,சாதி, ஏழை,பணக்காரன் வேறுபாடுகள் இல்லாம் ஒரே “பிளாவில” ஒற்றுமையா கள்ளுக்குடிக்கவேணும்.
எல்லாரும் தவறணையில கள்ளுத்தரும் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு(cooperation) வழங்கவேண்டும் என்பதுதான் அதன் தார்ப்பரியம்.
கள்ளுக்கோப்பிறேசனில தான் பல “அரசியல்” விவகாரங்கள் “சூடு” பறக்கவிவாதிக்கப்படும். ஊர்ப்பிரச்சினைகள் தொடக்கம் உலக அரசியல் வரைசும்மா வெட்டி விழுத்தி விளாசித்தள்ள ஒரு சிலர் இருப்பார்கள். சும்மா நேரத்தில் “அமசடக்காய்” இருக்கும் இவர்களுக்குள் ரண்டு போத்தல் “புளிச்ச கள்ளு”உள்ள இறங்கும்போதுதான் அரசியல் பேசுவார்கள். அவர்களுக்குள் இருக்கும் “அரசியல் புலி” உறக்கம் தெளிந்து கர்ச்சித்துவிட்டு வெறிமுறிய பழையபடி ஓரத்தில் போய் உறங்கிவிடும்.
ஊரில நடக்கும் “புருசன் பொஞ்சாதி” சண்டையை அமெரிக்காவின் வெள்ளை மாளிகைவரை தொடர்புபடுத்தி;
ஐ.நாவின் மனித உரிமை நீதிமன்றம் விசாரணையோடு இணைச்சு;
திரும்பவும் ஆப்கானிஸ்தான் -தலிபான் பிரச்சினைகளை அதுகுள்ள இழுத்து “மொட்டந்தலைக்கும் முளங்காலுக்கும்” முடிச்சுப்போட்டு;
கடைசியா சும்மா ஒரு சின்ன விசயத்துக்காக சண்டை போட்ட அந்த “குடும்பத்தை” நடுத்தெருவில கொண்டுவந்து நிப்பாட்டிப்போட்டு;
சாறத்தின்ர பின்பக்கம் கிடக்கும் மண்ணை தட்டிப்போட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்ட போய்விடுவார்கள். இதுவும் “தவறணை அரசியலில்” ஒரு அங்கம்.
பாராளுமன்றத்தில் விவாதிச்சது போக மிச்சம் சொச்சம் எல்லாம் யாழ்ப்பாணத்து “கள்ளுத்தவறணைகளில்” தான் விவாதிக்கப்படும்.
ஒவ்வொரு அரசியல் கட்சியின் அடிமட்டத்தொண்டனும் இந்த விவாதத்தில் தன் அரசியல் கட்சி சார்பாகவும், தன்னுடைய அரசியல் தலைவர்களுக்காகவும்ஓங்கிக்குரல் கொடுப்பான். சில நேரம் வெறிமுத்தி சத்தியும் எடுப்பான். அதன் “துர்நாற்றமானது” தற்போதைய அரசியலை விட பல மடங்கு நாறும்.
கோப்பிறேசன் அரசியலுக்கு என்று நெறிமுறைகள் ,வரைமுறைகள், ஒழுங்குவிதிகள் கிடையாது. அதாவது கட்சி அரசியலின் அத்தனை நடைமுறைகளும் கோப்பிறேசன் அரசியலில்
பின்பற்றப்படும்.
- நிதானமாக பேசமாட்டார்கள்
-ஒரு நிமிசத்துக்கு முதல் சொல்லிப்போட்டு “சொல்லவில்லை” என அடுத்த நிமிசம் அடிச்சுக்கூறுவார்கள்.
-பேசும் போது உணர்வு பூர்வமாக இருக்கும் ஆனால் அத்தனையும் நடிப்பு
-அடிக்கடி கட்சி தாவுவார்கள்.
-காசு ஆரிட்ட கூட இருக்கோ அவற்ற பக்கம்தான் கனபேர் நிப்பினம்.
-அமைதியாக ஆரம்பிக்கும் கூட்டம் கடைசியில் அடிதடியில்த்தான் முடியும்.
-கண்ணுக்கு முன்னால அநியாயம் நடக்கும் ஆனால் தட்டி கேக்கமாட்டினம்( கள்ளில தண்ணி கலந்து தருவினம்...ஆனால் அதை தட்டி கேட்கமாட்டார்கள்)
-இளம் ஆக்களை சேர்க்கமாட்டினம்.
இப்படி பல விசயங்கள் கட்சி அரசியலுக்கும் கள்ளுக்கொட்டில் அரசியலுக்கும் இடையில் ஒற்றுமையாக ஊறலாம்.
உண்மையில் பாராளுமன்றத்தை விட “கோப்பிறேசனில” தான் ஒரு சில விடயங்கள் மிகத்தெளிவாகவும் நியாயமாகவும் விவாதிக்கப்படுகின்றன.
இதை யாராலும் மறுக்கமுடியாது. அப்பிடி மறுக்கிறவனுக்கு உண்மையாகவே “கோப்பிறேசன் அரசியல்” தெரியாது எண்டுதான் அர்த்தம்.
பாராளுமன்றத்துக்கு போகாவதன் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. அங்க போறதைவிட கோப்பிறேசனுக்கு போனியள் எண்டா கனவிசயங்கள் தெளிவாகும்.
கோப்பிறேசனை யாரும் தரக்குறைவா பேசினியள் எண்டா ஊரில கனபேருக்கு வலு கோவம் வரும். காரணம் அவையள் கோயிலுக்கு மாதத்தில ஒருக்காத்தான் போவினம்.தவறணைக்கு தவறாமல் போவினம்.ஊரில ஆற்றேனும் வீட்டை கேட்டா? தெரியாது.... எண்டு சொல்லுவினம். ஆனால் நாலு ஊர் தாண்டி கிடக்கிற தவறணையின் விலாசத்தை வலி
தெளிவா ”அச்சொட்டா” சொல்லுவினம்.
“படிச்ச பள்ளிக்கூடத்தை மறந்தாலும் குடிச்ச கோப்பிறேசனை மறக்கமாட்டினம்”.
வெளிநாட்டால வாற கனபேர் உடன கேக்குற ஒரு விசயம் இருக்கு.
“ மச்சான் எனக்கு கள்ளு வேணும், எங்க எடுக்கலாம்? வா கோப்பிறேசனுக்குப்போவம்”
என்னதான் வெளிநாட்டு “சீமைத்தண்ணியை” குடிச்சாலும்; பனை நிழலில குந்தியிருந்து பிளாவில கள்ளுக்குடிக்குமாப்போல வருமோ? என கனபேர் அங்கலாய்ப்பதை கண்ணார கண்டிருக்கிறன்.( எனக்கும் அந்த அங்கலாய்ப்பு அடிக்கடி வரும்).
ஒரு பனைக்கள்ளு அல்லது தனிப்பனைக்கள்ளு( கலப்படம் இல்லாத புழிக்காத பனையால இறக்கின உடன் கள்ளு) இதற்கு கொஞ்சம் “மவுசு” கூட.
வாங்கி அடிச்சால் சும்மா “தேவாமிர்தம்” போலத்தான் இருக்கும்.
என்ர கள்ளுக்குடிக்கும் அனுபவம் ஆறு வயதாக இருக்கும் போது எங்கட ஊர் “சுந்தரம் அண்ணையிடம்” அப்பா வாங்கித்தந்த “ஒரு பனைக்கள்ளில்” இருந்துதான் ஆரம்பமானது. ( கள்ளுக்குடி அனுபவத்தை சொன்னதும் கனபேர் “ஆ” எண்டு வாயத்திறப்பியள்).அதைப்பற்றி விரிவா வரும் அத்தியாயங்களில பாப்பம்.(இப்ப சந்தோசம் தானே)
சரி கதைக்குப்போவம்....!!!
பாராளுமன்ற கூட்டத்தொடருக்கும் கள்ளுத்தவறணை கூட்டத்துக்கும் இடையிலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அவை என்னவென்று விவரிச்சால் பாராளுமன்ற உறுப்பினர்கள், கோவிப்பினம் எண்டதால அதை விடுவம். ஏன் வீண் வில்லங்கத்தை விலைக்குவாங்குவான்.
இந்தக்கதையினை பாராளுமன்ற கூட்டத்தொடர் விவாதம் போல ஆரம்ப அத்தியாயங்களை எழுதப்போகிறேன்.போகப்போக வேற விதமா மாத்துவம்.
”கோப்பிறேசன் அரசியல்” கூட்டத்தொடர்-1
இடம்(location): செம்பியன்பற்று கோப்பிறேசன்( பனை மர நிழல்).
காலம்(date and time):11/11/2016 மாலை 3 மணி
பங்கேற்பாளர்கள்(Attendees):”சைக்கிள்” குமார், “புறோக்கர்” சந்திரன்,”விண்ணாணம்” வினாசியார், "தவறணை” தவராசு
வராதோர் விபரம்(Apologies): "சிராய்" சின்னத்தம்பி,"சண்டியன்" சண்முகம்
நேரக்காப்பளர்(time keeper):”பூசாரி” மணியம்
ஒருங்கிணைப்பாளர்(coordinator): “ஐபோன்” ஐயாத்துரை.
நிகழ்ச்சி நிரல்(Agenda): அமெரிக்க தேர்தல் முடிவுகள், இலங்கை -அமெரிக்க உறவுகள்.
”பூசாரி” மணியத்தார் தன்னுடைய லுமாலா சைக்கிளை பனையோடு சாத்திவிட்டு , சைக்கிளின் பின் “கரியரில்” இருந்த பையை தூக்கிக்கொண்டு, தவறணையை நோக்கி நடந்தார். பெரிசாச் சனம் இல்லை.
‘பூசாரி” மணியம்: தவராசு உவன் ஐயாத்துரை வந்தவனோ?
“தவறணை” தவராசு: இல்லை மணியத்தார் இன்னும் வரயில்லை. ஆள் வரும் கட்டாயம்.
தவராசு நீண்ட நாட்களாக இந்த தவறணையில்த்தான் வேலை செய்யுறார். ஆரார் வந்தவை ஆரார் வரயில்லை எண்டதை சும்மா நேரம் தவறாமல் சொல்லுவார்.
எவரெவர் எத்தின போத்தல் அடிச்சா வெறியேறி சத்தி எடுப்பினம் எண்டதை “கேவில்” டொக்டரை விட சும்மா “அச்சொட்டா” சொல்லும் மனிசன்.
ஆள் பேக்காய்.
“ஜொக்கால” ஒரு போத்தல் அளந்தார் எண்டால் அது, “முக்காப்போத்தல்தான்” நிக்கும். அளவால வெட்டுறதில “சங்கக்கடை” மனேச்சரை விட ,ஆள் வலு விண்ணன். ஏன் தண்ணி கலக்குறியள்? புழிச்ச கள்ளை விக்கிறியள்? எண்டு கேட்டா அதுக்கொரு ”விஞ்ஞான”விளக்கம் சொல்லுவார் எண்டதால கனபேர் கேக்குறதில்லை.
தவராசு பெரிசா குடிக்கிறதில்லை. கோழியை சாக்காட்டி , அதை உரிச்சு இறைச்சி வெட்டி சமைச்சா .. சாப்பிடமனம் வராது. அருக்களிப்பா இருக்கும். அதுபொலத்தான் ....
தவராசுவும் நாள் முளுக்க கள்ளுக்குள்ள கைவைச்சு அளைஞ்சு ஊத்தி ஊத்தி குடுக்கிறதால தவராசு பெரிசா குடிக்கிறதில்லை.
தவறணை பூட்டுற நேரம் மாத்திரம் ஒரு நாலுமிடறு “தீர்த்தம்” மாதிரி குடிப்பார். மற்றப்படி குடிப்பதில்லை.தவராசு எப்பவும் பெனியனோடதான் நிப்பார். அவற்ற வேர்வை எல்லாம் வழிஞ்சு கள்ளுக்குள்ள கலந்து
ஒரு தனிச்சுவையாக கள்ளு மாறும்.
ஒருக்கா லண்டனில இருந்து வந்த சிவராசர் “ கிளவுஸ் போட்டுத்தான் வேலை செய்யவேணும்” எண்டு வெளிநாட்டு “புளிச்சல் ஏவறை”
கதை கதைக்க ... வந்த கோவத்தில கள்ளு உத்துற ”ஜொக்கால” சிவராசுவுக்கு தவராசு எறிஞ்சுபோட்டார். அது ”பொலிஸ் கேசாகி” பிறகு ஒரு மாதிரி எம்.பி ஒராளைப்பிடிச்சு,ஒருமாதிரி சமாளிச்சுவிட்டாச்சு.
பூசாரி மணியத்தார் வாடிக்கை குடிகாரர். காலமை எழும்பி குழிச்சுக்கிழிச்சு திருநூறு பட்டை இழுத்துக்கொண்டு கோயிலுக்குப்போய் விளக்கு வைச்சுப்போட்டு வந்தா;
அவற்ற வேலை முடிஞ்சுது. அதுக்குப்பிறகு ஆள் ”கோலம்” மாத்திவிடும். பின்னேரக்கள்ளு தவறாமல் 2 போத்தல் அடிச்சாத்தான் மணியத்தாருக்கு கைகால் வளங்கும்.
ஆனால் ஒண்டு மணியத்தார் “வெள்ளிக்க்கிழமை” கண்டிப்பா கள்ளு அடிக்க மாட்டார். அண்டைக்கு அவர் விரதம். கோயிலுக்கு போனியள் எண்டா ; மணியத்தாரை கால்ல விழுந்து கும்பிடுவியள். அந்த அளவுக்கு “வெள்ளிக்கிழமையில” மட்டும் மணியத்தார் பக்திப்பழமாக திகழ்வார்.
இண்டைக்கு திங்கள் கிழமை என்பதால் மணியத்தார் நேரத்தோட வந்திட்டார். அதைவிட மணியத்தார் தான் நேரக்காப்பாளர். மற்றாக்கள் வரமுதல் ஒரு அரைப்போத்தலை,வாங்கி “சூப்பி சூப்பி” கொஞ்சம் கொஞ்சமாக குடிச்சுக்கொண்டிருப்பார்.ஆனால் மற்றாக்கள் வந்ததும் தான் ரண்டு போத்தல் குடிச்சுப்போட்டு இருக்கிறமாதிரி “பீலா”
விடுவார்.
கன நாளா இவர் செய்த “ஓவர் பில்டப்பை” ஒரு நாள் “ தவறணை” தவராசு உடைச்சுப்போடார். கடுப்பான மணியத்தார் ஒரு கிழமையா மருதங்கேணி தவறணைக்கு,போனவர் அங்கை ஒரு “ சின்னப்பிரச்சினையால” திரும்பவும் செம்பியன்பற்று தவறணைக்கே வந்துவிட்டார். என்ன பிரச்சினை எண்டு மண்டையை உடைக்காதையுங்கோ.
கோப்பிறேசனில என்ன பிரச்சினை வரும்? இந்தியா-பாகிஸ்த்தான் எல்லைப்பிரச்சினையே வரும்!
வேற என்ன ... ஒருநாள் கள்ளை வாங்கிக்குடிச்ச மணியத்தார் “தன்ணி கூடக்கலந்திடாங்கள் .. கள்ளர்” எண்டு மனசில நினைச்சார்.
வெறியில அது அவற்ற வாயால வெளியில கொஞ்சம் சத்தமாக வர; பக்கத்தில நிண்ட ஆரோ “நல்ல” குடிமகன் அதைக்காவிக்கொண்டே நேர தவறணைப்பொறுப்பாளரிட்ட சொல்ல ;
மணியத்தாரை அடிக்காத குறையா கலைச்சுப்போடாங்கள்.
கோப்பிறேசனில் நிண்ட மணியத்தாரின் “பக்த கோடிகளில்” ஒருவரின் புண்ணியத்தால அருந்தப்பா தப்பி ,வீட்ட ஓடித்தப்பியதாக ஒரு கதை.இத்தோட “பூசாரி” மணியத்தாரின் சுயவிபரத்தை நிப்பாட்டுவம். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அப்பப்ப பேசுவம்.
“ஐபோன் ” ஐயாத்துரை தன் “பஜாஜ் பல்சர்” மோட்டச்சைக்கிளை வளைச்சு வெட்டித்திருப்பி ”ஸ்ரைலா” விலாசம் காட்டிப்போட்டு பக்குவமா பனைக்கு கீழ நிப்பாட்டிப்போட்டு,தன்னுடைய “ஐபோனை” எடுத்து காதில வைச்சபடி வந்தார். “கோல்” வந்தாலும் வராட்டிக்கும் ஒருக்கா தன்ர “ஐபோனை” மற்றாக்கள் பாக்கவேணும் எண்டதுக்காக “லெவல்”
காட்டுவது ஐயாத்துரையின் வழக்கமான செயற்பாடு.
இதற்கு பழக்கப்பட்டவர்கள் பெரிசா அலட்டிக்கொள்ளாகினம். புது ஆக்கள் எண்டால் புதினமா திரும்பிப்பாப்பினம்.
ரண்டு வருசத்துக்கு முன்னம் ஓட்டைச்சைக்கிளிலதான் ஐயாத்துரை வருவார். எப்பிடி “பஜாஜ் பல்சரும்” “ஐபோனும்” ஐயாத்துரைக்கு கிடைச்சது எண்டு நீங்கள் ஜோசிக்கலாம்.
பெரிசா ஒரு “சிதம்பர ரகசியமும்” இல்லை. ஐயாத்துரையின் கடைக்குட்டி ஒருத்தன் ஊரில சரியான “குழப்படி”.இயக்கத்தில இருந்து பிறகு தடுப்புக்குப்போய் ஊருக்கு வந்தவன்;ஒரே குடியும் வெறியுமா களவும் கஞ்சாவுமா திரிஞ்சான்.தடுப்புக்கு போக முதல் அருமையான பொடியன்.
ஐயாத்துரையர் மகனின் நிலையை பாத்து வருசக்கணக்கா கவலைப்பட்டு கனநாள் அதைச்சொல்லிசொல்லியே கள்ளடிப்பார்.
கடைசியா,ஐயாத்துரையர் கடனைக்கிடனைப்பட்டு ஒரு மாதிரி 8 லச்சம் பிரட்டி , அவனைப்பிடிச்சு அவுஸ்திரேலியாவுக்கு “கப்பல்லை” ஏத்தி அனுப்பிவிட்டார்.ஐயாத்துரையரின் மகன் கெட்டிக்காரன். ஒரு மாதிரி “ காம்பை” விட்டு வெளியில வந்திட்டான்.
”ஊரில ஆமிக்காரங்கள் சி.ஐ.டி ஒரே கரைச்சல்.. அடிக்கடி வீட்ட வாறங்கள்.என்னாலை சிறிலங்காவில இருக்கேலாது”
“திரும்பிப்போனா ஆமி சி.ஐ.டி என்னை தூக்கி உள்ள போடுவாங்கள்.....” எண்டு வெள்ளைக்காரனிட்ட அழுதுகொண்டு சொல்ல; அவனும் அதை நம்பி தற்காலிக விசா குடுத்துவிட்டான்.
அதுக்குப்பிறகு “கைக்காசுக்கு” வேலைசெய்துகொண்டு ( tax இக்கு காட்டாத கள்ளவேலை) அரசாங்கம் தாற காசையும் எடுத்து; மாதம் இலங்கை காசுக்கு 3 லச்சம் உழைக்கிறான்.களவா வங்கியில “லோன் - loan" ஒண்டு 40 லச்சத்துக்குப்போட்டு அவ்வளவத்தையும் ஐயாத்துரைக்கு அனுப்பிவிட்டான்.
அதுக்குப்பிறகு ஐயாத்துரைக்கு “சுக்கிர திசை”.
- வந்த காசில முதலாவதா “பஜாஜ்” மோட்டச்சைக்கிள் வாங்கினார்.
- இரண்டாவதா “சுத்து மதில்” கட்டினார்.
- மூண்டாவதா “மாடி வீடு” ஒண்டுக்கு அத்திவாரம் போட்டார்.
- நாலாவதா “5 பவுணில” சங்கிலி ஒண்டை வாங்கி கழுத்தில போட்டு முதல் ரண்டு தெறியையும் திறந்துவிட்டார்.
அப்ப “ஐபோன்” எப்பிடி வந்தது எண்டு நீங்கள் முணுமுணுக்கிறது கேக்குது எனக்கு.
ஏற்கனவே நான் சொன்னன் தானே ஐயாத்துரையரின் மகன் “வலு கெட்டிக்காரன்” எண்டு. “ஐபோன் 7” ஒண்டை புதுசா “பிளானில்” வாங்கிய பொடியன்;அதை “துலைஞ்சுபோட்டுது-lost" எண்டு சொல்லி இன்னொரு “ஐபோன்” தனக்கு வாங்கிக்கொண்டு;
பழைய “ஐபோனை” மூண்டு நாளா off பண்ணி வைச்சிட்டு சிறிலங்கா திரும்பிப்போன தன்ர நண்பன் ஒருத்தனிடம் குடுத்து விட்டிட்டான்.
ஐயாத்துரையருக்கு “ஐபோன்” வந்த கதை இது. பெரிய பம்பல் என்னண்டா ”பச்சையையும் சிவப்பையும்” அமத்தி nokia போன் கதைச்ச ஐயாத்துரையருக்கு ;
ஒரு லச்சம் பெறுமதியான “ஐபோன்” கிடைச்சதும் தலை கால் தெரியாமல் துள்ளிக்குதிச்சார்.
முதலாவதா “ஐபோனை” தவறணைக்கு கொண்டுபோய் மற்ற
ஆக்களுக்கு விலாசம் காட்டிப்போட்டு வந்துதான் போனை “சார்ஜ்சிலேயே” போட்டார் எண்டால் பாருங்கோவன்.
ஐயாத்துரையின் முத்தமகள் வந்து கேட்டும் குடுக்க மாட்டன் எண்டு விடாப்பிடியா சொல்லிவிட்டார்.
ஐயாத்துரையின் மூத்தமகளின் புருசன் ஒரு வாத்தியார். “கொப்பருக்கு என்னத்துக்கு ஐபோன்? வாங்கிக்கொண்டுவா?” எண்டு வாத்தியார் அனுப்பிவிட்டதை,அறிஞ்ச ஐயாத்துரையருக்கு கடும் கோபம் வந்தது.
பெத்த மகளையே “தூசணத்தால” ஏசி அனுப்பிவிட்டார்.
அந்தளவுக்கு “ஐபோனும்” ஐயாத்துரை அண்ணையும் வலு “அற்றாச்-attached".
"ஐபோனை” unlock செய்து அதன் உள்ளே சென்று “கோல்” வந்தா பச்சை...... “கட்” பண்ண சிவப்பு எண்டதோடதான் ஐயாத்துரையரின் பயணம் ஆரம்பமானது.
அதன்பிறகு அப்படி படிப்படியாய் வளர்ந்து இண்டைக்கு ஐயாத்துரை அன்ணையின் “ஐபோனில்” .... வைபர் முதல் pokkyman வரை இருக்கிறது.
facebook,twitter,whatsup,line,skype எண்டு எல்லாத்தையும் ஏத்தி அதையும் வலு விலாசமா ஊர் முழுக்க சொல்லிக்கொண்டு திரிஞ்சார்.
பேஸ்புக்கில ஐயாத்துரை அண்ணை கோட்டும் சூட்டும் போட்ட படம் ஒண்டைத்தான் profile picture ஆகப்போட்டுள்ளார். cover photo வில் தனுசின் கோட் சூட்போட்ட VIP பட “ஸ்டில்” படம் ஒண்டு உள்ளது.
ஆர் உதெல்லாம் செய்து தந்தது ? எண்டு ஒரு கேள்வியைக்கேட்டால் “ மண்டலாய்ப்பிள்ளையாராணை நான் தான் செய்தனான்” எண்டு
வாய் கூசாமல் சத்தியம் செய்வார்.
”ஐபோன்” ஐயாத்துரை அண்ணைக்குப்பின்னால் பல சுவாரசியமான சம்பவங்கள் உள்ளன. வரும் அத்தியாயங்களில் ஒண்டொண்டா பாப்பம்.
“சைக்கிள்” குமாரும் தவறணைக்கு வந்து சேர்ந்தார். குமார் அண்ணை சைக்கிள் கடை வச்சிருக்கிறார். அதனாலதான் அவருக்கு அந்தப்பட்டப்பெயர்.
ஒரு சிலர் அவர் “தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்”
தீவிர ஆதரவாளர் என்பதால் அவருக்கு அந்தப்பெயர் வந்ததாக சொல்லுவார்கள். அதுவும் உண்மையாக இருக்கலாம். குமார் அண்ணை பழைய ஆள்...!! குமார் பொன்னம்பலத்தின்ர தீவிர ஆதரவாளர்.
சட்டரீதியாக கனவிசயங்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மாதிரி “எடுத்து” விடுவதில் வலு கெட்டிக்காரன். சும்மா சொல்லக்கூடாது “சைக்கிள்” குமார் அண்ணைக்கு அரசியல் ஞானம் இருக்கிறது.
மனிசன் படிக்கவில்லை எண்டாலும் உந்த BBC, IBC,தந்தி tv,சக்தி ரீவி,வசந்தம் ரீவி, டாண் ரீவி எண்டு எல்லாத்தையும் கேட்டும் பாத்தும் அரசியல் விசயங்களை update இல வைச்சிருப்பார்.
சம்பந்தன் ஐயா குசுவிட்டால் கூட அது குற்றம் எண்டும் ; சுமந்திரன் அண்ணை தும்மினால் அது போர்க்குற்றம் எண்டும் கடும் வாதங்களை முன்வைப்பார். அந்தளவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில்
கடும் எதிர்ப்பு மனநிலையில் இருக்கிறார். பம்பல் என்னண்டா 2003 தேர்தலில தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஊர் ஊராப்போய் பிரச்சாரம் செய்ததில முன்னுக்கு நிண்டது குமார் அண்ணைதான்.
அதுக்குப்பிறகு நடந்த குழறுபடியளால குமார் அண்ணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எண்டால் “முஸ்லிம்களுக்கு பண்டியை காட்டினால்” வாற கோவம்தான் வரும்.
போன தேர்தலில எப்பிடியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி 4 சீற் எண்டாலும் வெல்லும் எண்டு “பகல் கனவு” கண்ட பலரில் முக்கியமான ஒரு ஆள் இவர். தேர்தல் முடிஞ்சு சுமந்திரன், சம்பந்தன்
வென்றுவிட்டார்கள் எண்டு அறிஞ்சதும் மூக்கு முட்ட கள்ளை குடிச்சுப்போட்டு மனிசியின் தலையில் அடிச்சு சத்தியம் செய்தார்.
“இனிமேல் அரசியல் பேசமாட்டன்.... இது என்ர மூண்டு பிள்ளைகள் மேல சத்தியம்”
ஆனால் அடுத்த நாள் விடியக்காலமை வெறிமுறிய மறுபடியும் “அடியே .... எண்டைக்காவது ஒரு நாள் சைக்கிள் வெல்லுமடி ...” எண்டு சபதம் செய்தார்.
இந்தமுறை குமார் அண்ணையின் மனிசி தன்ர தலையில் சத்தியம் செய்ய விடவில்லை. “வேணுமெண்டால் உங்கட கொமான்ர தலையில அடிச்சு சத்தியம் செய்யுங்கோ” எண்டு ,கண்டிப்புடன் மறுத்துவிட்டார் குமார் அண்ணையின் மனைவி.
மாலை 4 மணி..
”பூசாரி” மணியத்தார்,”ஐபோன்” ஐயாத்துரை, “தவறணை” தவராசு, “சைக்கிள்” குமார் இவர்கள் எல்லோரும் வந்தாச்சு.
இனி வரவேண்டிய ஆக்கள் “புறோக்கர்” சந்திரனும் “விண்ணாணம்” வினாசித்தம்பியும்தான்.
இதில் வழமையா “விண்ணாணம்” வினாசித்தம்பி பிந்தித்தான் வருவார். ஊரில உள்ள “விடுப்புகள் விண்ணாணங்கள்” எல்லாத்தையும் சேகரிச்சு வர அவருக்கு நேரமாகும்.
”புறோக்கர்” சந்திரன் ... தன்னைப்பெரியாள் எண்டு காட்ட பிந்தித்தான் வருவார். “எங்க சந்திரனைக்காணயில்லை” எண்டு நாலுபேர் நாலுதரம் கெட்டாப்பிறகுதான் வருவார்.
அதில அவருக்கு ஒரு “அல்ப்ப” சந்தோசம்!
”பூசாரி” மணியத்தாரும் ”ஐபோன்” ஐயாத்துரையும் அரைவெறியில் பனைக்கு கீழே குந்தியிருந்தார்கள். “சைக்கிள்” குமார் அண்ணை ஒரு போத்தல் கள்ளை வாங்கிக்கொண்டு அவர்களுடன்
சேர்ந்துகொண்டார்.
“புறோக்கர்” சந்திரன் அண்ணைக்கும் “சைக்கிள்” குமார் அண்ணையும் நல்ல நண்பர்கள்; ஆனால் அரசியல் எதிரிகள். சம்பந்தரும் விக்கினேஸ்வரனும் போல எண்டு வையுங்கோவன்.
அடிபடுறமாதிரி அடுபடுவினம். கோப்பிறேசனை விட்டுப்போகயுக்கை கட்டிப்பிடிச்சு “அத்தான் -மச்சான்” எண்டுதான் போவினம்.கோப்பிறேசனில குடிக்க வந்த மற்றவங்களை “பேப்பட்டம்”
கட்டுறதில ரண்டுபேரும் பேக்காயள்.
“புறோக்கர்” சந்திரன் அண்ணை..!!!
வீடுகள்,கடையள்,மோட்டச்சைக்கிள் முதல் கலியாண புறோக்கர் வரை சிம்பிளா “டீலை” முடிக்கிறதில வலு கெட்டிக்காரன். அதை இதை சொல்லி ஒரு மாதிரி வித்துப்போட்டு பிழை எண்டு வந்து
கேள்வி கேட்டா; கேள்வி கேட்டவனையே குழப்பி மடக்கி பேயனாக்குறதில வலு விண்ணர். சட்ட நுணுக்கங்களை , நெழிவு சுழிவுகளை, ஓட்டைகளை தெரிஞ்சு வைச்சு அங்கங்க அப்பப்ப “அச்சொட்டா”
அடிச்சு விளாசி விளையாடும் கெட்டிக்காரன்.
எந்தப்பந்தையும் எதிர்கொண்டு “ரண்” எடுக்காட்டிலும் “அவுட்” ஆகாமல் இருக்கிறதில சந்திரன் அண்ணை “சுழியன்”.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு என்பதை விட தமிழரசு கட்சிக்கான ஆதரவு என்பதுதான் “புறோக்கர்” சந்திரன் அண்ணையின் தெளிவான நிலைப்பாடு. எப்பிடியும் ஒரு காலத்தில “தேர்தலில”
போட்டியிடும் வாய்ப்பு வரும் எண்டு காத்திருக்கும் சந்திரன் அண்ணை அதை சாத்தியமாகுவதற்கான வழிகள் பலவற்றை ஆரம்பிச்சு விட்டார்.
-“புறோக்கர்” சந்திரனோட நீங்கள் கதைச்சு வெல்லேலாது. பயங்கர “சுத்துமாத்து”.
-இண்டைக்கு ஒண்டு சொல்லிட்டு அதையே நாளைக்கு மாத்தி சொல்லும் கெட்டித்தனம் உள்ளவர்.
-அநியாயங்களை கண்டால் பொங்குவது போல நடிச்சுக்கொண்டு அதுக்குள்ள “ஆதாயம்” ஏதும் கிடைக்குமோ எண்டு தேடும் குணம் கொண்டவர்.
-அங்கையும் பாடி இங்கையும் பாடி பாலைக்கறந்து தான் மட்டும் குடிக்கும் பேர்வழி.
இது எல்லாத்துக்கும் மேல ஆள் சரியான “கொதியன்”. ஆக்கள் கதைக்கிறதுக்கு முன்னமே குரலை உயர்த்தி கத்தி ஒரு மாதிரி அடக்கிப்போடுவார்.
பிழையெண்டு தெரிஞ்சாலோ... கேள்வியால மடக்கிப்போடுவாங்கள் எண்டு தெரிஞ்சாலோ டக்கெண்டு எழும்பி “கத்திக்கதைச்சு” ஆக்களை குழப்புறதில “புறோக்கர்” சந்திரன் அண்ணை “இஸ்ரேலில ரெயினிங்” எடுத்தவர்.
“புறோக்கர் “ சந்திரனும் பனை நிழலில் ஆரம்பமாகும் கூட்டத்தில் ஐக்கியமாகினார்.
“ பாத்தியளோ நான் சொன்னன் தானே டொணால்ட் றம்தான் அமெரிக்க தேர்தலில வெல்லுவான் எண்டு. எல்லாரும் அண்டைக்கு சிரிச்சியள் “ எண்டு கூட்டத்தினை ஆரம்பிச்சு வைச்சார் சந்திரன்.
“விழுகுற பக்கம் குறி சுடுற ஆக்கள் தானே மச்சான் நீங்கள்” எண்டு சொல்லிவிட்டு குமார் அண்ணை கள்ளை ஒரு இழுவை இழுத்துவிட்டு நிலத்தில் போத்தலை குத்திவைச்சார்.
“அமெரிக்க தேரிதலில ஆர் வெண்டா எங்களுக்கென்ன வரப்போகுது? ஏதோ முந்தி மூடை மூடையா தந்தவங்கள் மாதிரியல்லோ கதைக்கிறியள்” பூசாரியார் புறுபுறுத்துவிட்டு கடைவாயில் ஒட்டியிருந்த கள்ளுநுரையை சாறத்தலைப்பால் துடைச்சுவிட்டார்.
“பேஸ் புக்கில பாத்தனியளே... டொணால்ட் றம்பின்ர மனிசியை... 40 வயசுதான் ஆனால் சும்மா கிளுகிளுப்பா இருக்கிறாள் வெள்ளச்சி” என ஐயாத்துரை அண்ணை தன் ஐபோனை எடுத்து “கிளுகிளுப்பான” படங்கள் சிலவற்றை காட்டினார்.
பூசாரி மணியத்தார் அதை ஆவெண்டு பிராக்குப்பாத்து பக்கத்தில் இருந்த குமாரின் கள்ளுப்போத்தலை தட்டி விழுத்தப்பார்த்தார்.
அருந்தப்பு குமார் கள்ளுப்போத்தலை கழுத்தில் பிடிச்சதால அது மண்ணில ஊத்துப்படாமல் தப்பியது. ஊத்துப்பட்டிருந்தால் பெரிய “மரண கலகம்” ஒண்டு அங்க நடந்திருக்கும்.
“புதினம் என்னண்டா ... கிலாரி கிளிண்டன் வெல்லவேணும் எண்டு மாகாண சபை சிவாஜிலிங்கத்தார் நல்லூரில 1008 தேங்காய் உடைச்சவராம். கிலாரி வெண்டு தமிழீழம் தருவாஎண்டு சொல்லிவிட்டு கள்ளுப்போத்தலின் மேலிருந்த “மண்டியை” சடக்கென போத்தலை சரிச்சு ஊத்தினார் “ஐபோன்” ஐயாத்துரை அன்ணை.
எண்ட நினைப்பு சிவாஜிலிங்கத்துக்கு... கிலாரியிட்ட கேக்குறதைவிட்டுப்போட்டு நேரடியா நல்லூர் முருகனிட்டையே நேரடியா கேக்கவேண்டியதுதானே! கோமாளிப்பயலுகள்”
“அதில என்ன பிழை? அந்த ஆள் தன்ர காசில தேங்காய் வாங்கி கோயிலுக்குத்தானே உடைச்சது. அவரவர் நம்பிக்கை. இதை நக்கலடிக்கப்படாது. கோயில்ல தேங்காய் அடிச்சு
நேத்திக்கடன் செய்யுறது எங்கட சமய நம்பிக்கை. ஏதோ நீங்கள் செய்யாததையே அந்தாள் செய்தது?”
“வந்திட்டியள் பிழை பிடிக்க?”
என அடுப்புக்குள்ள போட்ட உப்புப்போல் வெடிச்சார் “சைக்கிள்” குமார்.
“ செங்கோலை ஒழிச்சு வைக்கயுக்குள்ளயும் அநுராத புரத்தில போய் ஜனாதிபதி தேர்தலில நிக்கயுக்கையும் விளங்கியிருக்கவேணும் அவற்ற நிலைப்பாடு”
“விசர் மனிசனப்பா” எண்டு சொல்லிவிட்டு வாய்விட்டுச்சிரித்தார் “ஐபோன்” ஐயாத்துரை அண்ணை.
“அதை விடுங்கோ ... நேற்றையான் சுடரொளி பேப்பர் பாத்தனியளே? ”
“ அமெரிக்க அதிபர் டொணால்ட் றம்புடன் இணைந்து செயற்படுவோம் எண்டு சம்பந்தன் ஐயா தெரிவிப்பு”
“சிவாஜிலிக்கம் செய்தது பரவாயில்லைப்போல கிடக்கு” எண்டு சொல்லிவிட்டு புறோக்கர் சந்திரனைப்பாத்து கொடுப்புக்குள் சிரித்தார் சைக்கிள் குமார் அண்ணை.
அதுக்கொரு “விஞ்ஞான விளக்கம்” குடுத்தர் புறோக்கர் சந்திரன். சந்திரன் சொன்னதைக்கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சார்கள்.
என்ன விளக்கம் சொன்னார் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
தொடரும்....
ஆக்கம்:
#தமிழ்ப்பொடியன்
பொறுப்புத்துறப்பு:
இந்தக்கதையில் வரும் பெயர்கள்,சம்பவங்கள் அத்தனையும் கற்பனையே. நகைச்சுவைக்காக எழுதப்படும் தொடர்கதை இது. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.
வாசித்து சிரித்துவிட்டு கடந்துபோக பழகிக்கொள்ளுங்கள். Don't take it personaly.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக