புதன், ஜனவரி 20, 2016

மலர் ரீச்சர்!!! -குறும் கதை


போனமாதம் “பிரேமம்” எண்டொரு மலையாளப்படம் பாத்தன்.
அந்தக்கதையின் கனவிசயங்கள் என்ர ”பழைய” கதைகளோட அப்பிடியே அச்சொட்டா ஒரேமாதிரியா இருந்திச்சு. கதையின் முடிவைத்தவிர!!
சின்னவயது காதலில் கதை ஆரம்பித்து ஒண்டு முடிய ஒண்டா தாவி படிப்பிச்ச ரீச்சரில காதலாகி ...
அதுவும் தோல்வியாகி...
பிறகும் அங்கின இங்கின ஒண்டாய் காதல் அரும்பி ,பூத்து ,கருகி...
கடைசியில எதிர்பார்க்காத ஒண்டு வந்து காதல் அரும்பி கனியான கதைதான் மலையாளப்படம் “பிரேமத்தின்” கதைச்சுருக்கம்.
நண்பனின் காதல் கதையான ”நோ துறு ஒழுங்கை” கதை எழுதிய பிறகு ...
என்னுடைய “மலர் ரீச்சரின்” கதையையும் எழுத வேணும் எண்டு ஒரு ஆசை!!!
இது காதல் கதை அல்ல...
காதலின் மறுவடிவமான ஒரு வகை “பாசத்தின்” கதை!
படிப்பிக்கிற ரீச்சரில வரும் ஒரு வகை அன்பின் வெளிப்பாடான “பாசம்” கொஞ்சம் அதிகமாகி அது ஒரு இனம்புரியாத ஈர்ப்பாக வெளிப்படும் அந்த “அனுபவத்தினை” எல்லோரும் அனுபவிச்சிருப்பியள்.
எனக்கு மட்டுமான அனுபவம் அல்ல இது.
எல்லோரும் ஒருமுறையேனும் சந்திச்ச அனுபவத்தினை “என் கதையாக” எழுதுகிறேன்.
இதில் ஒரு துளியேனும் “விரசம்” கலக்கப்படவில்லை என்பதை கூறி கதைக்கு வாறன்.
1996!
அப்ப நான் O/L படிச்சுக்கொண்டிருந்த காலம்.
வழமைக்கு மாறாக விஞ்ஞானம் படிப்பிக்கும் வாத்தியார் வலு ரிப் ரொப்பாக வெளிக்கிட்டு வகுப்புக்கு வந்தார்.
“சேர் என்ன இண்டைக்கு கலக்குறியள்.. ஏதும் விசேசமோ?”
நான் தான் வகுப்பு மொனிற்றர். என்னோட சேர் நல்லமாதிரி.
எங்களோட மனசு திறந்து (open) ஆ பேசுவார்.பம்பலா கனவிசயங்கள் கதைப்பார். அவருக்கு கலியாணம் ஆகவில்லை.
சேர் கொஞ்சம் வடிவு குறைவுதான். கொஞ்சம் கறுப்பு. ஆனால் நல்ல மனிசன்.
“டேய் .. இண்டைக்கு புது ரீச்சர் ஒரு ஆள் பள்ளிக்கூடத்துக்கு புதுசா வாறாவாம்”
சேர் சொல்லும் போது பின்னணியில் பாரதிராஜாவின் “அலைகள் ஓய்வதில்லை..”படத்தின் காதல் பாட்டு ஒண்டின் பின்னணி இசையை இளையராசா வாசித்துகொண்டிருந்தார்.
” சேர் ...கலக்குறியள் ..” என் நண்பன் சொன்னதும்...
சேரின் முகத்தில் ஒரு வெளிப்பு!!
திருவிழாவில் நிண்டு நிண்டு எரிஞ்சு பளீரென எரிஞ்ச ரியூப் லைற்தான் நினைவுக்கு வந்திச்சு.
பாடம் துவங்கி வலு ஆர்வமா போய்க்கொண்டிருந்தது. அண்டைக்கு எங்கட வகுப்பு “ஹவுஸ்புல்” (house full) . அடிக்கடி பள்ளிக்கூடத்துக்கு “கட்” அடிக்கும் சிவா கூட வந்திருந்தான். நாங்கள் வலு ஆர்வமா பாடத்தை கவனிச்சுகொண்டிருந்தம். ஒரே நக்கலும் பம்பலுமா அந்த பாடநேரம் (period) போய்க்கொண்டிருந்தது. காரணம் என்னண்டு கனபேருக்கு தெரியும்.
O/L வகுப்பு...
விஞ்ஞான பாடம்
வகுப்பு “ஹவுஸ்புல்”..
ஆர்வமா பொடியள் பாடத்தை கவனிக்கிறாங்கள்...
நக்கலும் பம்பலுமா பாட நேரம் போகுது...
எண்டா வேற என்னவா இருக்கும்??
O/L விஞ்ஞான புத்தகத்தில் அடிக்கடி ஆர்வமா பாக்கும் “இனப்பெருக்கம்” அத்தியாயம் தான் அண்டைக்கு போய்க்கொண்டிருந்தது.
உண்மையா இப்ப நினைக்க நினைக்க சிரிப்புத்தான் வரும்.
“பாலியல் கல்வியின் “ முக்கியத்துவத்தினையும் அதன் தேவையினையும் பற்றி அந்த காலத்தில் பருவம் அடைந்த மாணவர்களுக்கு தெளிவான கற்பித்தலும் விழிப்புணர்வும் செய்யப்படுவதில்லை.
ஆனால் வெளிநாடுகளில் இப்போது பார்க்கும் போது ...
அதன் தேவையும் முக்கியத்துவமும் இப்பதான் புரியுது.
இப்ப கூட எங்கட கல்விமுறையில எல்லாத்தையும் மூடி வைக்கிறதால தான் சில தவறான செயற்பாடுகளில் இளம்தலைமுறை போகிறதோ என்று கூட ஒரு சின்ன சந்தேகம்.
சரி உந்த கதையை விட்டிட்டு முக்கியமான கதைக்கு வருவம்!!!
பாடம் தொடங்கி கொஞ்ச நேரம் ஆகயில்லை...
அடிக்கடி சேர் பள்ளிக்கூடத்தின்ர பிரதான வாசலை (main gate) அடிக்கடி பாத்துக்கொண்டிருந்தார்.காரணம் என்னெண்டு நான் சொல்லவேண்டிய தேவையில்லை.
எங்கட வகுப்பு நேரா பள்ளிக்கூட பிரதான வாசலுக்கு நேர இருக்கும்.
அதனால ஆர் வந்தாலும் இலகுவா(easy) பாக்கலாம்.
9:24 முற்பகல் ..
சிவப்பு நிற சேலையில் ஒரு புது ரீச்சர் எங்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து இறங்கினா...
”பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு..” எண்ட இளையராசாவின் இன்னோரு பாட்டு பின்னணியில் எனக்கும் கேட்டது. சேருக்கும் கேட்டிருக்கவேணும்.
ஏனென்டால் அவரும் ஒரு பருவமடைந்த பொடியன் தானே!!!
இப்ப திருவிழா ரியூப் லைற்று என்ர முகத்திலும் எரிஞ்சுது!!!
லேடிஸ் சைக்கிளை எங்கட வகுப்புக்கு முன்னால உள்ள தேமா மர நிழலில் ...
அப்பிடியே வலக்காலால ஒரு ஸ்ரைலா ஸ்ராண்டை மடக்கி சைக்கிளை நிப்பாட்டிவிட்டு....
வகுப்பு சுவருக்கு மேலால தலையை மட்டும் கொஞ்சமா மெல்லிசா எட்டி புதினம் பாக்கும் பொடியளைப்பாத்து “அழகா “ ஒரு சிரிப்பு சிரிச்சபடி....
எங்கட வாத்தியாரையும் பாத்து ஒரு “மெல்லிய “ புன்னகையை அள்ளித்தெளித்தபடி...
மலர் ரீச்சர் எங்கட வகுப்பை கடந்து போகும் போது...
எனக்குள்ளும் ஒரு சில வண்ணத்துப் பூச்சிகள் பறந்ததை உணர்ந்தேன்.
பாரதிராசாவின் படங்களை அதிகமாக பார்த்ததன் இரசாயண விளைவு அது.
(இயக்கத்தின்ர கட்டுப்பாட்டு காலத்தில ஜெனறேற்றருக்கு (genarator) ஈரச்சாக்குப்போட்டு பக்கத்துவீட்டுக்கு சத்தம் கேக்காமல் கள்ளக்கொப்பியில படம் பாத்த கதைகள் நிறைய இருக்கு. அது பிறிம்பா வெற ஒரு சந்தர்ப்பத்தில சொல்லுறன்)
ரீச்சருக்கு அவ்வளவு பெரிய வயசு இல்லை.
என்ன ஒரு 20 அல்லது 21 இருக்கும் ...அப்பிடியெண்டா என்னை விட ஒரு 6,7 வயசுதான் கூட..
ரீச்சரைப்பாத்ததும் ஏதோ ஒரு இனம்புரியாத அன்பு...
சத்தியமா சொல்லுறன் அது காமத்திலும் காதலிலும் சேராத பருவவயதின் இனம்புரியாத ஒரு ”இனிதான உணர்வு”.
இதை கனபேர் அனுபச்சிருப்பம்.அதுதான் இதுவென இப்ப ஜோசிப்பியள்.
“மச்சான் ... புது ரீச்சர் கலக்குறாடா..” என் நண்பன் என்னை கிண்டினான்.
“டேய் ... ரீச்சரைப்பாத்து என்னடா கதைக்குறாய்?” இது நான்.
“மச்சி..உன்ர கடைவாயால ஏதோ வழியுது .. முதல்ல அதைத்துடை... வந்திட்டாய் என்னை திருத்த” இது என் நண்பன்.
திரும்பி கரும்பலகையை பாக்குறம்...
எங்கட விஞ்ஞான வாத்தியாரை காணயில்லை...
எங்கட போனவர் எண்டு பாத்தா ரீச்சருக்கு பின்னால ஆசிரியர் அறைக்கு(staff room) போய்க்கொண்டிருந்தார்.
பாவம் எங்கட வாத்தியார்...
அவருக்கும் காதல் தோல்வி கனக்க...
அவற்ற கதையை எழுதினால்...
எங்கட பள்ளிக்கூடத்தில பத்தாம் வகுப்புக்கு சமூகக்கல்வி படிப்பிக்கும் ரீச்சர் தொடக்கம் சங்கீத ரீச்சர் வரை அவரது காதல் கதை நீழும்.
போனவருசம் சங்கீத ரீச்சர் கலியாணம் கட்டினாப்பிறகு எங்கட வாத்தியார் “தாடியோட “ திரிஞ்சார்.
பாவம் வாத்தியாருக்கு சாதகத்தில ஏழுச்செவ்வாய் போல...
பிறகு சங்கீத ரீச்சர் பக்கத்து பள்ளிக்கூடத்துக்கு மாற்றலாகிப்போனதும் அதை வழிச்சிட்டார்.
அவற்ற கதையையும் எழுதும் நேரம் இல்லை...
அதனால என்ர கதைக்கு வாறன்...
வாத்தியார் போனதால வகுப்பில பொடியள் சத்தம் போடத்தொடங்கிட்டாங்கள்...
நான் தான் வகுப்பு தலைவர்(monitor).
ஆண்டு 6 இல இருந்து A/L கடைசிவரைக்கும் நான் தான் வகுப்புத்தலைவர்.
(கள்ளனை பொறுப்பாளாரா விட்டா களவு நடக்காது எண்டமாதிரி குழப்படிகாரனை மொனிற்றரா விட்டா வகுப்பு அமைதியா இருக்கும் .)
என்ர நண்பன் தான் அசிட்டண்ட் மொனிற்றர்( assistance monitor).
எங்கட வகுப்பு எப்பிடி இருக்கும் எண்டு ஒருக்கா ஜோசிச்சு பாருங்கோ!!! lol
நான் என்ற நண்பனை வகுப்பை பாக்கவிட்டிட்டு எங்கட வாத்தியாரை தேடி ஆசிரியர்கள் அறைக்குப்(staff room)போனன்.
"டேய் .. போடா வாறன்..”
சலூனுக்கு வரமறுத்து தலைமயிர் வெட்ட அடம்பிடிக்கும் சின்னப்பிள்ளையின் செயலினை என் வாத்தியாரின் பதிலில் கண்டேன்.
சந்தடி சாக்கில் புது ரீச்சரை உள்ளே தேடினேன். அங்க அவா இல்லை!!!
சரி வந்தனான் ... ஒபிசுக்குள்ள போய் ரண்டு சோக் (எழுது மணல் கட்டி) எடுத்துக்கொண்டு போவம் என அங்க போனன்.
அங்க சோக் பெட்டிக்கு காவலுக்கு இருக்கும் வினாசி அண்ணை (pion)என்னை முறைச்சுப்போட்டு ஒண்டுதான் தந்தார்.அவருக்கு ஏதொ உப அதிபர் எண்ட நினைப்பு.அவரின் அளப்பறைகள் கனக்க!!!
சோக்கை எடுத்துக்கொண்டு ஒபிசை(office) விட்டு வெளிய வரும் போது ...
திடீரென அதிபரின் குரல்...
“தம்பி இங்க ஒருக்கா நில்லு”
அதிபருக்கு பக்கத்தில புது ரீச்சர்...
எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு ..
நிண்டன்...!!!
இன்னும் ஆரம்பிக்கவேயில்லை..
அதுக்கிடையில ரீச்சர் அதிபரிட்ட சொல்லிட்டாவோ???
”ரீச்சருக்கு ஒருக்கா வன்னி block இல எட்டாம் ஆண்டு C வகுப்பை காட்டிவிடும்” அதிபர் என்னிடம் சொன்னதும்...
(வன்னி block- கொஞ்சம் தனியாக இருக்கும் கட்டிடம்.. குழப்படி செய்யாத பொடியளின் வகுப்புகள் அங்க இருக்கும்...)
இளையராசாவின் சிம்பொனி இசை பின்னணியில் பெரிசா ஒலிக்கத்தொடங்கியது!!!
ரீச்சர் எனக்குப்பின்னால வர ...
நான் அவாவுக்கு வழிகாட்டியாக...
என்ர வகுப்படிக்கு போகாமலேயே வன்னி block இக்கு போகலாம்.இருந்தாலும் என்ர வகுப்படியால தான் போனேன்.
காரணம் என்னண்டு உங்களுக்கு சொல்லத்தேவையில்லை எண்டு நினைக்கிறன்.lol
கொஞ்சத்தூரம் போனதும் ...
ரீச்சர் என்னைக்கேட்டா..
“ என்ன பேர் உம்மட.. எத்தினயாம் வகுப்பு படிக்கிறாய்?”
பெயரையும் வகுப்பையும் சொல்லிவிட்டு ரீச்சரின் பெயரைக்கேட்டேன்.
“மலர்விழி”
மலர் ரீச்சர்!!!!
ரீச்சர் பெரிசா ஏதும் அதுக்குப்பிறகு கதைக்கவில்லை.
“நன்றி “ என்றதோடு மட்டும் சரி...
நான் திரும்பி என்ர வகுப்புக்கு வரும்போது எங்கட வாத்தியார் திரும்பவும் வகுப்புக்கு வந்திருந்தார்.
“எங்க போனனீர் ?” வாத்தியாருக்கு என்ர ஆருயிர் நண்பன் பத்தி வைச்சிட்டான் என்பது அவர் கேட்ட குரலின் தொனியில் தெரிஞ்சுது.
நான் ரீச்சரை கூட்டிக்கொண்டு விட்ட கதையை கேட்டதும் வாத்தியாரின் முகம் மூண்டு நாள் வைச்சிருந்த சிற்றி பேக்கரி பாண் மாதிரி சுருங்கிப்போயிருந்தது.
நான் என்ன செய்ய...??
அடுத்த கிழமை...
எங்களுக்கு சமூகக்கல்வி படிப்பிக்கும் கெளரி ரீச்சர் என்னோட நல்லமாதிரி.
கெளரி ரீச்சரின் மகள் என்ர வகுப்புத்தான். பக்கத்து மகளிர் பள்ளிக்கூடம்.
ரீயூசனில ஒண்டாப்படிக்கிறம்....
வடிவான பிள்ளை...
ஆனா வாய் கொஞ்சம் கூட...
கெளரி ரீச்சருக்கு என்னைப்பிடிக்கும். நான் சரியான குழப்படி எண்டாலும் நல்லாப்படிப்பன். ஆண்டு 6 இல இருந்து O/L வரைக்கும் படிப்பிலையும் குழப்படியிலையும் முதலாம் இடம்.
கெளரி ரீச்சர் சைக்கிள் ஓடமாட்டா.. அதனால சில நேரம் நான் தான் பள்ளிக்கூடத்துக்கு ஏத்தியும் வருவன். பள்ளிக்கூடம் முடிய
அவாவின்ர வீட்டடியில இறக்கியும் விடுவன்.
அதனால ரீச்சரின்ர மகளுக்கும் எனக்கும் “ஏதோ” எண்டு எங்கட
பொடியள் கதையை கட்டி விட்டிட்டாங்கள்.
சத்தியமா சொல்லுறன்...
அந்த நேரத்தில அப்பிடியான எண்ணம் எனக்கு இருக்கவில்லை..
ஆனால் பொடியள் பழிக்கும் போது ஒரு சில நேரம் அப்பிடியான எண்ணம் வந்து போகும்.. அவ்வளவுதான்.
கெளரி ரீச்சர் என்னில வைச்சிருந்த நம்பிக்கைக்கும் அன்புக்கும் நான் மதிப்பு கொடுத்து அப்படியான எண்ணங்கள் வருவதை தவிர்த்துக்கொண்டன்.
கெளரி ரீச்சரும் புதுசா வந்த மலர் ரீச்சரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள்.
அதனால எனக்கு மலர் ரீச்சருடன் பழமும் வாய்ப்பு இலகுவாக கெளரி ரீச்சர் மூலமாக கிடைத்தது.
உண்மையா மலர் ரீச்சர் ஒரு அன்பான ஆசிரியை என்பது நெருக்கமாக பேசி பழகும் போதுதான் எனக்குப்புரிந்தது.
“போடா.. வாடா..” என நெருக்கமாக பேசி இயல்பாய் பழகும் அளவுக்கு எங்களின் நட்பு வளர்ந்தது.
மலர் ரீச்சர் எங்களுக்கு படிப்பிக்காவிட்டாலும் ...
அடிக்கடி என்ர வகுப்புக்கு வருவா...
என்னுடன் பேசுவா...
கெளரி ரீச்சர் அதுக்குப்பிறகு மலர் ரீச்சரோடதான் சைக்கிள்ள பள்ளிக்கூடம் வருவா. இருந்தாலும் பல நாட்கள் பள்ளிக்கூடம் விட்டுப்போகும் போது ...
நான் கெளரி ரீச்சரை ஏத்திக்கொண்டு போவன். மலர் ரீச்சரும் எங்களுடன் கூட வருவா...
வீட்டில நல்ல சாப்பாடு சமைச்சால் ....
மத்தியானம் என்னைக்கூப்பிட்டு எனக்கெண்டு கொண்டுவந்த சாப்பாட்டை தருவா...
எனக்கு பாடம் இல்லாத நேரத்தில் ரீச்சரின் வகுப்புக்கு போய் கொஞ்சநேரம் கதைச்சிட்டு வருவன்.
இப்படியே போய்க்கொண்டிருந்த எங்களின் உறவு...
ஒரு நாள் ரீச்சர் என்னை கூப்பிட்டு..
”டேய் நீ வாற வழிதானே.. பள்ளிக்கூடம் வரயுக்குள்ள என்னையும் ஏத்திக்கொண்டு வா” எண்டா.
எனக்கு இப்படி திடீரென கேட்டதும் ஒரு மாதிரியா போட்டுது.
பிரச்சினை ஒண்டும் இல்லை .. ஆனால் எங்கட பொடியள் பழிப்பாங்கள் எண்ட வெக்கம் மட்டும்தான்.
சரி ரீச்சர் கேட்டிட்டா .. மறுக்கமுடியாது எண்டதால “ஓம்” எண்டிட்டன்.
அடுத்த நாள் என் சைக்கிளை நல்ல வடிவா கழுவி றிம் எல்லாம் துடைச்சுக்கொண்டு ரீச்சரை ஏத்த அவாவின் வீட்டுக்குப்போனன்.
அங்க எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி!!!!
-வாற வெள்ளி தொடரும்-
பொறுப்புத்துறப்பு:இக்கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே!


போனகிழமை கதை பாத்து கனபேர் கொஞ்சம் மெரிசலாகிட்டினம்.
அப்பவும் ஆரம்பத்தில சொன்னனான்....
இது ஒரு பாடசாலைக்கால பசுமை நினைவுகள் எண்டு.
எல்லாற்ற வாழ்விலும் பெய்த பசுமை நினைவு மழையின் ஒரு தூறல் .. ஒரு சாரல் இது.

எனக்கும் மலர் ரீச்சருக்கும் இடையில் “அப்பிடி இப்பிடி “ எண்டு எங்கட பொடியள் பகிடிக்கு கதைக்கும் போதே எனக்கு கடுப்பாகும்.

ஏனெனில் பள்ளிக்கூட பருவ வயதில் இதெல்லாம் சாதாரணம்.

எந்த ரீச்சரையும் படிச்ச மாணவன் கலியாணம் கட்டினதா நான் கேள்விப்படவில்லை.காதலிச்சதாவும் கேள்விப்படவில்லை. ஆனால் படிப்பிச்ச வாத்தியாரை காதலிச்சு கலியாணம் கட்டின கனபேரை பாத்திருக்கிறம்.

என்ர வகுப்பிலேயே அது நடந்திருக்கு. அந்த கதையை எழுதினால் கனபெட்டையள் அடிக்க வருவாகள்.அதனால அது வேண்டாம்.

சரி கதைக்கு வாறன்...

மலர் ரீச்சர் வீட்டை வரச்சொன்னா.
காரணம் தன்னை பள்ளிக்கூடத்துக்கு ஏத்திக்கொண்டு போகவேணும் எண்டா.
சரி நானும் அண்டைக்கு காலமை நேரத்தோட எழும்பி குளிச்சு கிளிச்சு வடிவா வெளிக்கிட்டுப்போனன்.

அங்க போறன்...
எனக்கு இன்ப அதிர்ச்சி...

அதுக்கு முதல் கிழமை “லூர்த்து மாதா” கோயில் திருவிழாவில் நானும் என்ர நண்பனும் பார்த்து அங்கலாய்ச்சு ...
யாருக்கு அவள் எண்டு அடிபிடிப்பட்டு ...
ஏலுமெண்டா உனக்கு மடங்கினால் நீ மடக்கு பாப்பம் எண்டு ...

சண்டை பிடிச்ச அந்த சிவத்த புள்ளிச்சட்டை “ தேவதை” ....ரீச்சர் வீட்ட நிண்டாள்...

நான் ரீச்சர் வீட்டு வாசலில நிண்டு ரீச்சரை கூப்பிட “அவள்தான்” வெளியில வந்தாள்.
அவள் என்னைப்பார்த்து முதல்ல கொஞ்சம் அதிர்ச்சி ஆகிட்டாள்.

பிறகு சிரிச்சபடி .. கொஞ்சம் முறைச்சபடி
வந்தவள் ... “ வாங்கோ உள்ளுக்குள்ள.. ரீச்சர் இப்பதான் வெளிக்கிடுறா” என சொல்லி என்னை வீட்டுக்குள்ள கூப்பிட்டாள்.
எனக்கு ஒரே வெக்கமா .. கைகால் எல்லாம் படபடக்க..
உள்ளுக்குள்ள போய் இருந்தன்.
காரணம்..
திருவிழாவில...
அவளை கலை கலை எண்டு மூண்டு மணித்தியாலமா நானும் நண்பனும் கலைச்சு பின்னால திரிஞ்சம்.
முதல்ல மெழுகுதிரி கொழுத்திற இடத்தில ஆரம்பிச்சு..
கச்சான் கடை....
மணிக்கடை...
ஐஸ்பழவான் ...
எண்டு ஒரு இடமும் விடாமல் பின்னால திரிஞ்சு...



சில பல சிரிப்புகள்...
சில பல சேட்டைகள்..
சில பல நக்கல்கள்... என ஒரு கலக்கு கலக்கி இருந்தம்.

கடைசியா அவளின் அக்கா திரும்பி முறைச்சதோட எங்கட “ஒப்பிரேசனை” கைவிட்டு பழையபடி மெழுகுதிரி கொழுத்தும் இடத்தில் தஞ்சம் அடைந்தம்.
நாங்கள் சைவம்தான்...

ஆனால் எங்கட பொடியளின்ர தேவாலயத்தில் பெருநாள் எண்டால் ...

எங்களுக்கும் பெருநாள்த்தான்.
“எம் மதமும் சம்மதம்தான்”
ஞானஸ்தானம் பெற்ற எட்வினும் அருளும் டொமினிக்கும் குணரட்ணமும் வேட்டி கட்டி பொட்டும் போட்டு எங்களோட சன்நிதி கோயில் திருவிழா தொடங்கி வல்லிபுரக்கோயில் காண எங்களோட சுத்துவாங்கள்.
அதுமாதிரித்தான் நாங்களும்....
நாலாம் குறுக்குத்தெரு அந்தோனியார் கோயில் தொடக்கம் தும்பளை லூர்த்துமாதா வரை முழங்காலில இருந்து செபம் முணுமுணுத்து ..
மெழுகுதிரி கொழுத்துவம்.

அது ஒரு கனாக்காலம்...
காசு குடுத்தாலும் திரும்ப வராது.
சரி மலர் ரீச்சர் வீட்ட “ அவளைக்கண்டதும்” நான் மெரிசலாகிட்டன்.
உள்ளுக்குள்ள ஒரே “படபடப்பு”..
ரீச்சரிட்ட போட்டுக்குடுத்திடாளோ எண்டு வேற பயம்.
ரீச்சர் வரும் வரை நான் நிலத்தை பாத்து குனிஞ்ச தலை நிமிராமல் இருந்தன்.

வெள்ளைச்சட்டையில் .... மரூண் கலர் கழுத்துப்பட்டி அணிந்து
ஈரம் சொட்டச்சொட்ட பின் முதுகை நனைக்கும் ஒற்றைப்பின்னலோடு...
அதில் ஒரு சின்ன நித்தியகல்யாணி பூ வைத்து...
அம்மாவாணை சொல்லுறன் அந்த நேரம் எனக்கு அவள் “தேவதையாத்தான்” தெரிஞ்சாள்.

என்ன பெயராய் இருக்கும்???
மேசையில் இருக்கும் புத்தகங்களை அடுக்கிக்கொண்டு கடைக்கண்ணால் என்னை அவள் பார்ப்பதை நான் பார்க்க ....
என்னை பாக்காதமாதிரி வேற எங்கோ பாக்க..
திருப்பி அவள் என்னைப்பாக்க..
நான் அவளை பாக்காத மாதிரி சுவரில் தொங்கியிருந்த அழகிய குழந்தைப்பிள்ளை படத்தை பார்க்க...
இப்படி மாறி மாறி .. பார்வைகளால் நேரம் கரைந்து கொண்டிருந்தது.

எங்க படிக்கிறாய்? என்ன பெயர் ? எண்டு கேப்பம் எண்டு வாய் உன்ன..
ரீச்சர் வெளியில வந்திட்டா....

“டேய் எப்ப வந்தனி... பொறு வாறன் டக்கெண்டு வெளிக்கிட்டு கொண்டு” என சொல்லிவிட்டு ரீச்சர் என்னை பார்த்து சிரிச்சுப்போட்டு அறைக்குள் போனா.
கொஞ்ச நேரத்தால அவளும் அந்த அறைக்குள் போனாள்...
எனக்கு விளங்கிட்டுது....
படுபாவி போட்டுக்குடுக்கப்போறாள்...

யார் இவள்?
ரீச்சரின்ர தங்கச்சியா..

இல்லை முகச்சாயல் கொஞ்சம் வித்தியாசம்.
யாரா இருக்கும்.ஒரே குழப்பம்...
சர்வானந்தம் சேர் கணக்கில தாற தேற்றத்தையே 5 நிமிசத்தில சும்மா சிம்பிளா செய்து காட்டுற எனக்கு இவள் யார் எண்டதுதான் ஆறுமுகம் ரீச்சரின்ர வரலாறுப்பாடம் மாதிரி சிக்கலா இருந்தது.

பள்ளிக்கூட புத்தகங்களை அவள் அடுக்கும் போது நான் சாதுவா எட்டிப்பாத்தன்.

ஆண்டு 10 புத்தகங்கள். அப்ப என்னை விட ஒரு வயது குறைவு.

அப்பாடா அப்ப பருவாயில்லை. முதலாவது பொருத்தம் ஓகே.!

அவள் ஆயத்தமாகி ..
“ மாமி போட்டுவாறன்” எண்டு சொல்லி என்னையும் ஒருக்கா வெட்டி ஒரு பார்வையை எறிஞ்சுபோட்டு போனாள்.

ஓ ...மலர் ரீச்சரின் மருமகளா...???

பருவாயில்லை...

ரீச்சர் ஆயத்தமாகி ...
வெளியில் வந்து ஒரு நக்கல் சிரிப்பு என்னைப்பாத்து சிரிச்சா..
எனக்கு நல்ல வடிவா விளங்கிட்டுது.
“ வாடா போவம்” என என்னை கூப்பிட்டா.

வீட்டால வெளிக்கிட்டு ... சிவப்பிரகாச பள்ளிக்கூட இறக்கம் தாண்ட
ரீச்சர் என்னிடம் கேட்டா..

“ டேய் என்னடா போனகிழமை... மாதா கோயில் பெருநாளில
என்ன செய்தனியள்... என்ர மருமோளுக்கு பின்னாலையும் முன்னாலையும் திரிஞ்சனியளாம்”
ஐய்யய்யோ...
என்ன சொல்ல நான்...
“ ஐயோ .. ரீச்சர் அது நான் இல்லை.. அது என்ர பிறண்டு”

“ டேய் ...சோபியா சொன்னவள் நீதான் பின்னால திரிஞ்சனியாம்..
நீதான் பாத்து சிரிச்சனியாம்.. அவள் என்ன பொய்யா சொல்லுறாள்”

“ஐயோ ரீச்சர் ... அது சும்மா..”
“ மவனே இதோடை நிப்பாட்டு... அவளுக்கு சொந்தத்தில அத்தான் காரன் ஒருத்தனை பேசி இருக்கு... சுவிசில இருக்கிறான். அவள் A/L முடிச்சா கலியாணம்.. மறந்திடு”
அந்த நேரம் இளையராசாவின் “ சோகப்பாட்டு” ஒண்டின் பின்னணி இசை மெதுவா என் காதுகளுக்கு கேட்டது. என்ன பாட்டெண்டுதான் நினைவுக்கு வருகுது இல்லை. பாட்டா முக்கியம்... சிற்றுவேசன் தான் முக்கியம்.

பள்ளிக்கூட றோட்டால திருப்புறன் என்னை முந்திக்கொண்டு எங்கட விஞ்ஞான வாத்தியார் போனார்.போகும் போது எங்களைப்பார்த்து திரும்பி ஒரு சிரிப்பு. எங்களை எண்டு சொல்வது பிழை. ரீச்சரைப்பாத்து...

இப்ப என்ர முறை...

நான் ரீச்சரிட்ட கேட்டன்..

” என்ன ரீச்சர் ... வாத்தியார் அறம்புறமா உங்களுக்கு பின்னால திரியிறார் எண்டு கேள்விப்பட்டன். பாடம் இல்லாத நேரத்தில உங்களோடதான் ஒரே கதை எண்டும் கேள்விப்பட்டன்.. என்ன நடக்குது உங்க?”கேட்டதும் ரீச்சர் வெக்கப்பட்டா.

” விசராடா உனக்கு... அந்த ஆள் பாவம்.. என்னோட நல்லா கதைக்கும்.
நல்ல ஒரு பிறண்ட். அவ்வளவுதான். உனக்கு சொன்னால் என்ன எனக்கு வாறமதம் கலியாணம் முற்றாகிட்டுது. எனக்கும் சுவிசிலதான் ... பேசியிருக்கு”ரீச்சர் சொல்லும் போது எனக்கு விஞ்ஞான வாத்தியாரின் முகம்தான் கண்முன்னே தெரிஞ்சுது.

பாவம் அந்த ஆள்....!!!

கொஞ்ச நாட்களின் பின் ....
ரீச்சரின் கலியாணம்..
நானும் என்ர பொடியளும் போய் எல்லா வேலைகளும் செய்து குடுத்தம்.
இரவிரவா நிண்டு வீடெல்லாம் சோடிச்சம்.
ரீச்சரின் மருமகள் சோபியாவும் நிண்டாள். எங்களுக்கு அவள்தான் தேத்தண்ணியெல்லாம் போட்டுத்தந்தாள்.
ரீச்சரின் கலியாண வீடு இனிதே நிறைவுற்று ....
ரீச்சரின் பிரியாவிடை பள்ளிக்கூடத்தில் நடந்து...
போகும் போது மலர் ரீச்சர் கண்கலங்கி...
என்னிடம் “ போட்டு வாறன்ரா” எண்டு சொன்னது ..
இப்பவும் என் கண்முன்னே பசுமையாய் விரிகிறது.
அதுக்குப்பிறகு எனக்கு மலர் ரீச்சர் எங்க இருக்கிறா எண்டு தெரியாது.
இதுவரைக்கும் அவாவோட கதைக்கவில்லை.
இருந்தாலும் ரீச்சர் என்னில் வைச்ச அன்பும் பாசமும் அழியாமல் இருக்கு.





முற்றும்.

© தமிழ்ப்பொடியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge