திங்கள், பிப்ரவரி 15, 2021

சனிக்கிழமைசாமியாரும் தியேட்டரும்

சனிக்கிழமை சாமியார் கன காலத்துக்குப்பிறகு படம் பாக்க தியேட்டருக்குப்போனார்.

ஆதீனம், குட்டிச்சாமியார் இல்லாமல் களவாக வீட்டுக்குத்தெரியாமல் ஒழிச்சுப்படம் பாக்குறதிலையும் ஒரு "கிக்" தான்!

முந்தி உப்பிடித்தான் சாமியார் களவா அச்சுவேலி தியேட்டரில் இருந்து நெல்லியடி மகாத்மா, பருத்தித்துறை பிரியா வரை கன படங்கள் ஒழிச்சுப்பாத்தவர்.

படம் முடிய முதல் ஒரு நிமிசத்துக்கு முதலே சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒழுங்கைக்குள்ளால ஓடி மெயின் றோட்டில ஏறுமட்டும் நெஞ்சு இடி.

மெயின் றோட்டில ஏறிட்டால் அங்கால ஏறி ஒரு மிதி. தப்பிடுவம்.

ஆனாலும் ஆரோ குறுக்கால போன ஒருத்தன் 750 றூட் பஸ்ஸுக்குள்ள இருந்து கண்டுபோட்டு ;
சாமியாரின் அப்பாவிடமோ அம்மாவிடமோ போட்டுக்கொடுத்துவிடுவார்கள்.

உப்பிடித்தான் "காதலுக்கு மரியாதை" படம் பாத்திட்டு தியேட்டரை விட்டு வெளியில வந்தார் சாமியார்.
இடப்பக்கம் வலப்பக்கம் ஒரு தெரிஞ்ச ஆக்களும் இல்லை.

சடாரெண்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு முன் ஒழுங்கைக்குள்ள விட்டார் சாமியார். முன்னால சாமியாரின் அப்பா MD 90 இல் வந்துகொண்டிருந்தார்.

பிறகென்ன "வீட்டில மரியாதை" அமோகமாக இருந்தது.

விசயத்துக்கு வருவம்.

வெளிநாட்டிலையும் படம் பாக்க போகும் போது எங்கட தமிழ் ஆக்களைக்கண்டால் பிரச்சினை.

சாமியார் களவாக படம் பாக்கவாறதை அடுத்த நிமிசம் ஆதீனத்திடம் போட்டுக்குடுத்து விடுவார்கள். 

ஊரெண்டால் மொட்டாக்கு போட்டுக்கொண்டு போகலாம். வெளிநாடுகளில் அப்பிடிச்செய்ய ஏலாது. 

சாமியார் படம் ஆரம்பிக்க முன்னர் கொஞ்சம் நேரத்தோட போட்டார். ஏனெண்டால் சனம் வரமுதல் போய் ஓரமா ஒழிச்சு இருந்தால் ஆரும் பாக்கமாட்டாங்கள்.

வழமையா தியேட்டருக்கு போகமுதல் கழிவறைக்கு போய் "இயற்கை கடனை" முடிச்சால்தான் மூண்டு மணித்தியாலம் உள்ள இருக்கலாம்.

கழிவறைக்குள் ஒரு "தமிழ்க்குரல்"

"இந்தா முடியுது செல்லம். பொறு டக்கெண்டு வாறன்"

சாமியார் தன்னுடைய கடமையை முடித்துவிட்டு கைகழுவ வந்தார். பக்கதில தமிழில கதைச்ச பொடியன் சாமியாருக்கு பழக்கம்.

என்னண்டு பழக்கம் எண்டால்?
பேஸ்புக்கிலதான் பழக்கம். பொடியன் நெல்லியடி. ரண்டு மூண்டு மாதத்துக்கு முன்னம் தான் கலியாணம் நடந்தது.
பெட்டை பருத்தித்துறை. சாமியாருக்கு தெரிஞ்ச பொடியன் ஒருத்தனின் தங்கச்சிதான். அந்தப்பொடியன் சாமியாருக்கு நல்ல பழக்கம்.

கலியாணவீட்டு போட்டோவுக்கு சாமியார் ஒரு லைக்கும் போட்டு கீழ வாழ்த்தும் போட்டவர்.

பிள்ளை நல்ல கிளி மாதிரி வடிவு. பொடியன் கறுவல். இருந்தாலும் மொறட்டுவை எஞ்சினியர் எண்டதால கட்டிக்குடுத்திட்டினம்.

"வணக்கம் தம்பி. எப்ப ஊரில இருந்து வந்தனியள்? கலியாணம் எல்லாம் எப்பிடிப்போச்சுது?" 

"ஒமண்ணை போனகிழமைதான் வந்தனான்.ஓம் எல்லாம் ஓகே" எண்டு சொல்லிவிட்டு அவசரமாக கைகழுவினதும் கழுவாததுமா பாதியில் ஓடினார் தம்பி.

அவருக்கு வெளியில அவற்ற " செல்லம்" காத்திருக்கிறா ;-)
கலியாணம் கட்டின புதுசுதானே.

"செல்லம்" கூப்பிட்டா டக்கெண்டு போகத்தானே வேணும்.

சாமியார் தியேட்டரை நோக்கி நடந்தார். வழியில தம்பி மீண்டும் தடக்குப்பட்டார்.

சாமியாருக்கு அதிர்ச்சி!

வேற ஒரு  பெட்டையோட தம்பியர் படம் பாக்க வந்திருந்தார். பெட்டை பாக்க சிங்களத்தி போல இருந்தது. கறுப்பி!

இவர் ஏதோ இங்கிலீசில சொல்ல அவா இவருக்கு கையில செல்லமா அடிச்சுப்போட்டு சிரிக்கிறா!

முழங்காலுக்கு மேல பாவாடை! 
ஆம்பிளையள் மாதிரி தலைவெட்டும் ஆளும் அவான்ர எடுவையும்?

அவர் கலியாணம் கட்டி ஒரு மாதம் ஆகயில்லை இன்னொரு பெட்டையோட கும்மாளம்!

அதுகும் சாமியாருக்கு முன்னால்!

எவ்வளவு நெஞ்சழுத்தம் ???

பொடியன் கட்டின பிள்ளையின் தமையனுக்கு கோல் அடிச்சார் சாமியார். பதில் இல்லை. 
"அவசரமா கோல் எடுங்கோ"  எண்டு ஒரு குறுந்தகவலை அனுப்பிவிட்டு தியேட்டருக்குள் நுழைந்து ஒரு மூலையில் ஒதுங்கினார் சாமியார்.

சாமியாருக்கு இடப்பக்கமாக முன் வரிசையில் தான் அவை ரண்டுபேரும் இருந்திச்சினம்.

இவர் அவான்ர தலையை தடவுறதும் அவா இவற்றை தோளில சாயுறதுமா ஒரே "அன்பு மழை"!

சாமியாருக்கு படத்தை பாக்குறதா? இல்லை இவையின்ர அன்பு மழையில் பட்டுத்தெறிக்கும் தூறலில் நனையுறதா?  எண்டு ஒரே குழப்பம்.

திடீரெண்டு சாமியாருக்கு " கோல்" வந்தது.

"தம்பி உங்களிட்ட சொல்லலாமோ தெரியாது. ரென்சன் ஆகவேண்டாம். ஆனால் பிரச்சினை சீரியஸ்" சாமியார் மெதுவாக எழும்பி தியேட்டருக்கு வெளியில வந்து கதைச்சார்.

"இல்லை பறுவாயில்லை சாமியார் சொல்லுங்கோ"

"உங்கட மச்சான் பொடியன் ஒரு சிங்களப்பெட்டையோட தியேட்டரில படம் பாக்குறார்"

"சாமியார் வடிவாப்பாத்தனியளோ?"

பருத்தித்துறை மெத்தக்கடைச்சந்தியால சாமியாரின் ஆள் சைக்கிளில் வரும் போது;
ரண்டு மைல் தள்ளி இருக்கும் நாலாம் குறுக்குத்தெரு புளியமரச்சந்தியில நிண்டு " மச்சான் என்ர ஆள் இண்டைக்கு சிவத்தப்புள்ளி" சட்டை எண்டு சொல்லும் அளவுக்கு சாமியாருக்கு கண் கூர்மை!!!

"தம்பி நான் வடிவாப்பாத்தனான். கதைச்சனான். எனக்கு முன்னாலதான் இருக்கினம். வந்தால் பிடிக்கலாம்"

"சாமியார் ஆக்களை நோட்டம் விட்டுக்கொண்டே இருங்கோ. இப்ப வாறன்"

"தம்பி ...நிறைய தமிழாக்கள் இருக்கினம். படம் முடியட்டும் . தனியா மடக்குவம்"

"தம்பி இன்னொரு விசயம் உங்கட தங்கச்சிக்கு சொல்லவேண்டாம். தெரிஞ்சால் பிரச்சினை பெரிசாகும்"

"இல்லை சாமியார் நான் சொல்லயில்லை. எனக்கு என்ன செய்யுறதெண்டே தெரியயில்லை. வாற விசருக்கு அவனை வந்து வெளுக்கிறன் பாருங்கோ"

" சொல்லாமல் விட்டிருக்கலாமோ" என சாமியார் ஒரு கணம் யோசித்தார். 

இல்லை சொல்லத்தான் வேணும்.என்ன குரங்குச்சேட்டை.அதுகும் சாமியாரின் கண்ணுக்கு முன்னால!

படம் முடியுறதுக்கு பத்து நிமிசத்துக்கு முன்னமே அவை ரண்டுபேரும் எழும்பி வெளியில வந்தினம். சாமியார் பின் தொடர்ந்தார்.

ரண்டு பேரும் சின்னப்பிள்ளைகள் விளையாடுற இடத்தில போய் துவக்கு சுட்டு விளையாடிச்சினம்.

"கொஞ்சம் பொறு ராசா . உன்ர கொத்தான் வந்து இப்ப உனக்கு சுடுவான்" எண்டு சாமியார் மனசுக்குள் நினைச்சார்.

"தம்பி டக்கெண்டு வாங்கோ . ஆக்கள் ரண்டுபேரும் எஸ்கேப் ஆகப்பாக்கினம்" சாமியார் சொல்லி வாய் மூடவில்லை பொடியன் முன்னுக்கு வந்து நிண்டான்.

"சாமியார் ஆக்கள் எங்க?"

பொடியன் துணைக்கு இன்னொருத்தனையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தான்.

"உந்தா உதுக்குள்ளதான் நிக்கினம்" சாமியார் காட்டிக்குடுத்தார்.

சொல்லிப்போட்டு சாமியார் கொஞ்சம் விலத்தி நிண்டார். ஏன் வீண் பிரச்சினை!

உள்ள போய் அவரை குமுறும் போது எப்பிடியும் சத்தம் வரும் அப்ப போய் விலக்குப்பிடிப்பம் எண்டு நினைச்சார் சாமியார்.

போய் கொஞ்சநேரமாக ஒரு சத்தத்தையும் காணயில்லை.

என்னடா நடக்குது எண்டு எட்டிப்பாத்தார் சாமியார்.

எல்லாரும் ஒண்டா நிண்டு சிரிச்சுக்கொண்டு நிண்டாங்கள்.

"என்ன கேவலம் கெட்ட குடும்பமடா" எண்டு சாமியாருக்கு பத்திக்கொண்டு வந்தது.

"சாமியார் வாங்கோ இங்க" கூப்பிட்டாங்கள்.

"சாமியார் இது என்ர தங்கச்சி. நீங்கள் மாறி பிழையா நினைச்சுப்போட்டியள்" சிரிச்சுக்கொண்டே பொடியன் சொன்னான்.

சாமியார் வடிவா பெட்டையின் முகத்தை கிட்டவா உத்துப்பாத்தார். 

கலியாணவீட்டு போட்டோவில நிண்ட பிள்ளைக்கும் இந்த கறுப்பிக்கும் சம்பந்தமே இல்லை!

ஊரில உள்ள கலியாணவீட்டு "மேக்கப்காறியள்" ஆரும் அந்த நேரம் சாமியாரின் கையில அம்பிட்டு இருக்கவேணும். கொலைசெய்திருப்பார்!

பிளடி பனங்கொட்டைஸ்!!!

#சனிக்கிழமைசாமியார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge