திங்கள், பிப்ரவரி 15, 2021

❤️சனிக்கிழமைசாமியாரும் காதலர் தினமும்!


"I love you" 
விடியக்காத்தால சாமியார் சாத்துவாயோட ஒரு SMS ஐ தட்டிவிட்டார்.

ஆதீனம் எல்லா அலுவலுகளையும் முடிச்சுப்போட்டுத்தான் அதை வாசிச்சவா.

"என்ன திடீரெண்டு? மாறி அனுப்பிட்டியளோ?" 
கொடுப்புக்குள் ஒரு சிரிப்பு.

உப்பிடித்தான் ஒருநாள் 2003 ஆம் ஆண்டு எண்டு நினைக்கிறன்.

பெப்ரவரி 14

கொழும்பில்  படிச்சுக்கொண்டிருந்த காலப்பகுதியில்;

மாணவர் விடுதியில் உள்ள இரண்டாம் மாடியில் நண்பர்களுடன் இரும்புக்கட்டிலில் "சுதந்திரமாக" படுத்திருந்தார்.

குப்புற படுத்திருந்த சாமியார் தன்னுடைய Nokia 3310 போனை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தார்.

"மச்சான் இண்டைக்கு காதலர் தினமாம். உன்ர மச்சாளுக்கு ஒரு SMS ஐ போடன்" 

சாமியாரின் "கட்டில் தோழன்" அவன்.

ஏற்கனவே அவனுக்கு "ஆள்" இருக்கு.

"மச்சான் போன் அடிச்சு கதைக்க பயமா இருக்கு. ஒரு SMS போடப்போறன். உன்னிட்ட ஏதும் படம் இருக்கோ?"

அந்தக்காலத்தில் நொகியா போனில் வெறும் படங்கள்
மாத்திரமே அனுப்பலாம்.

"தாஜ்மகால்" ஒண்டை நண்பன் உபயம் செய்தான்.

அந்த தாஜ்மகாலை சாமியார் மச்சாளுக்கு அனுப்பிவிட்டார்.

அண்டைக்கு முழுக்க பதிலே இல்லை.

சாமியாருக்கு கெடிக்கலக்கம்.ஒருவேளை அவள் பாத்துப்போட்டு வேண்டாம் எண்டு சொன்னால்???

இன்னுமொருதரம் "வேண்டாம்" "சரிவராது"  எண்ட சொல்லை தாங்கும் மனவலிமை சாமியாருக்கு இல்லை.

உப்பிடித்தான் சுமார் மூண்டு ஆண்டுகளுக்கு முன்னம் 2000 ஆம் ஆண்டு "சரிவராது" எண்டு ஒருத்தி சொல்லிவிட்டுப்போனாள்.
போனவள் போனவள்தான். இண்டுவரைக்கும் அதற்குப்பிறகு சாமியார் அவளை பார்க்கவேயில்லை. 

மீண்டும் அதேமாதிரி ஒரு ஏமாற்றத்தை தாங்கும் சக்தி சாமியாருக்கு இருக்கவில்லை.

ஒரு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு காதலர் தினத்தில் சாமியாரின் மனசில் செவ்வரத்தம் பூ அரும்பி பூத்துக்கிடந்தது.

சாமியார் அண்டு முழுக்க மச்சாளின் பதிலுக்காய் காத்திருந்தார்.

"ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்"

அண்டுமுழுக்க பதில் வரவேயில்லை.

நினைச்சதும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு போறதெண்டால் சும்மா சிம்பிள் வேலையில்லை.

அதனால சாமியார் பதிலுக்காய் காத்திருந்தார்.

அடுத்தநாளும் பதில் வரவில்லை. 

சாமியார் நினைச்சிருந்தால் ஒரு "கோல்" அடிச்சு கேட்டிருப்பார்.

"கேக்காத" எண்டு மனசு சொன்னதால சாமியார் பேசாமல் இருந்துவிட்டார்.

மூண்டாவது நாள் சாமியார் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

"இனிமேல் உந்த காதல் மயிர் மண்ணாங்கட்டி" எல்லாம் வேண்டாம்.

"தின்னுறம்.குடிக்கிறம்.நல்லா அனுபவிக்கிறம்.சாகிறம்"
சாமியார் மிகத்திடமாக முடிவெடுத்தார்.

நாலு நாளாச்சு "ஒரு பதிலுமில்லை"!!

வார இறுதி எண்டதால மாணவர் விடுதி வெறிச்சோடி இருந்தது.

சாமியார் மட்டும் தனியாக அறையில் கிடந்தார்.

சக்தி FM இல் இடைக்கால சோகப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன.

" மச்சா எண்டகோ! படு தியனுவா. காமுத?"
(மச்சான் சரக்கு இருக்கு. வா அடிப்பம்)

நுவான் சாமியாரின் சிங்கள வகுப்புத்தோழன். சாமியாருடன் மிக மிக நெருக்கமானவன்.

அவனுக்கு நாலைஞ்சு பெண் நண்பிகள். மிகவும் ஜாலியான பேர்வழி.நன்றாக வாழ்க்கையை அனுபவிக்கத்தெரிந்தவன்.

அவனுடன் சுமார் 6 மாதமாக ஒரே அறையில் தங்கியிருந்திருக்கிறார் சாமியார்.

பல அந்தரங்கங்களை அவன் சாமியாருடன் பகிர்ந்திருக்கிறான்.

"சரக்கு அடிப்பம் வா" எண்டு நுவான் கேட்டதும் சாமியார் ஒருகணம் குழம்பிவிட்டார்.

தன் காச்சட்டை பொக்கற்றுக்குள் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்துக்காட்டினான் நுவான்.

அது "ஈயப்பேப்பரால்" சுற்றப்பட்ட சின்னச்சரை.

வலப்பக்க காதில் ஒரு "கோல்ட்லீவ்" சிகறட் சொருகியிருந்தான்.

கோதாரிவிழுவான் இதையா சரக்கு எண்டான்?

நுவானின் அறையில் யாரும் இல்லை. 

மேசையில் ஒரு "லயன் லார்கர்" பியர் திறந்து கிடந்தது. அதன் ஆடை அரைவாசிக்கு மேல் உரிந்து கிடந்தது. 

ஏற்கனவே "உள்ள" விட்டுப்போட்டுத்தான் அவன் வந்திருந்தான்.

"மச்சான் வாடிவெண்ட"
(இரு மச்சான்)

சாமியார் மேசையில் இருந்த லயன் லாகரை எடுத்து மடக்கு மடக்கு எண்டு உள்ளே விட்டார்.

நுவான் சிரித்துக்கொண்டே இன்னொரு போத்தலை அலுமாரிக்குள் இருந்து எடுத்து வைத்தான்.

"மச்சான் ஏதும் பிரச்சினையா? ஏன் கவலையா இருக்கிறாய்?" என்று கேட்டான் நுவான்.

நுவான் காதில் இருந்த "கோல்ட்லீவை"  பற்றவைத்து ரண்டுதரம் இழுத்துவிட்டு சாமியாரிடம் நீட்டினான்.

சாமியார் இருந்த விசருக்கு அதைவாங்கி மூண்டு இழுவை இழுத்தார்.

நொகியா போன் அலறியது.

அவளா இருக்குமோ எண்டு ஆர்வத்தோடு போனை எடுத்தால்...

"டயலொக்காறன்" போன் பில்லை கட்டச்சொல்லி SMS அனுப்பியிருந்தான்.

சாமியார் தனக்கு பழக்கமான தூசணத்தால் டயலொக்காறனை ஏசிப்போட்டு;

லயன் லாகர் பியரை மடக்கு மடக்கு எண்டு உள்ளே விட்டார்.

"பச்சைக்கச்சல்" எண்டாலும் லயன் லாகர் பியர் ஒரு "கிக்" தான்.

"கோல்ட் லீவ்" கைமாறியது.

"மச்சான் நீதானே இப்ப உன்ர மச்சாளை லவ் பண்ணுறாய். அதில ஏதும் பிரச்சினையா?"
நுவானுக்கு சாமியார் ஏற்கனவே தன்ர கதையை விலாவாரியா சொல்லியிருக்கிறார்.

"இல்லை மச்சான்"

"விமலே அப்ப உன்ர முதல் காதல் ஏதும் பிரச்சினையோ?"

அவளைப்பற்றியும் நிறையவே நுவானுக்கு சாமியார் சொல்லியிருக்கிறார்.

"இல்லை மச்சான் அவள் எங்க இருக்கிறாள் எண்டே எனக்கு தெரியாது.தெரியவும் வேணாம்"

சிலதுகளை நினைவில் இருந்து அழிச்சாலும் மனசில் இருந்து அகற்றுவது கஸ்ரம்.

ஒவ்வொரு காதலர் தினத்திலும் சாமியார் முதல் காதலை நினைச்சுக்கொள்ளுவார்.
அவ்வளவுதான்.முதல்க்காதலை வாழ்வின் கடைசிவரை சந்திக்காதவன் பாக்கியசாலி. சாமியார் பெரிய பாக்கியசாலி.

திடீரெண்டு நொகியா போன் கிணுகிணுத்தது.

சாமியாருக்கு முக்கால் வெறி!

"ஹலோ நான் அகிலா கதைக்கிறன்.என்னத்துக்கு அந்த SMS அனுப்பினனியள்?"

விமானம் ஒன்று இரைச்சலோடு விடுதிக்கு மேலாக தாழப்பறந்து எழும்பிச்சென்றது.

விமானச்சத்தத்தில் அவள் சொன்னது சாமியாருக்கு விளங்கவில்லை.அல்லது சாமியார் அடிச்ச சரக்கு வேலையை காட்ட தொடங்கியிருக்கவேண்டும்.

இரண்டில ஏதோ ஒண்டு!

நுவான் தன் பங்கு முடிந்ததும் "கோல்ட்லீவை" சாமியாரிடம் நீட்டினான்.

சாமியார் அதை வாங்கிக்கொண்டு "பல்கனிக்கு" சென்றார்.

வெளியில் வானம் மிகத்தெளிவாய் இருந்தது. தூரத்தில் இன்னொரு விமானம் வெண் மேகங்களை கிழித்தபடி சாமியாரை நோக்கி வந்துகொண்டிருந்தது.

"ஏன் நான் எதுக்கு அனுப்பின்னான் எண்டு உனக்கு தெரியாதோ?" 
சாமியார் நன்றாக இழுத்து புகையை வெளியே விட்டார்.

போனுக்குள்ளால மணக்கவா போகுது எண்ட தைரியம்.

"நீங்கள் அனுப்பின SMS ஐ நான் அம்மாட்ட காட்டின்னான்"

"வலு சிறப்பு"
இதைவிட சாமியாருக்கு என்ன பதில் சொல்லுறது எண்டு தெரியவில்லை.

"பிறகு" 
சாமியாருக்கு என்ன கேக்குறது எண்டே தெரியவில்லை.

"பிறகென்ன?"
"எப்ப யாழ்ப்பாணம் வாறியள்?"

அந்த விமானம் சாமியாரின் தலைக்குமேல  தாழப்பறந்து பாதுக்காப்பாக தரையிறங்கியது.

கடைசியா அவள் சொன்னது சத்தியமாக சாமியாருக்கு கேக்கவேயில்லை.

சத்தியமாக சாமியாருக்கு வெறி இல்லை. 

"கடைசியா என்ன சொன்னனீ?"
சாமியார் பதட்டமாக கேட்டார்.

"எப்ப யாழ்ப்பாணம் வாறியள்?"

சாமியார் நிலத்தில் இல்லை. விடுதியின் ரண்டாவது மாடியில் இருந்தார்.

அப்பிடியே பல்கனியால குதிச்சு பறக்கவேணும் போல இருந்தது.

"மச்சான் சரக்கு இன்னும் வேணுமா?"
நுவான் நேரகாலம் தெரியாமல் கேட்டான்.

அருந்தப்பு அவன் சிங்களத்தில கேட்டதால நிச்சயம் அவளுக்கு விளங்கியிருக்காது.

கடைசியாக கோல்ட்லீவை ஒரு இழுவை இழுத்து மேலிருந்து கீழே தூக்கி தூர எறிந்துவிட்டு;

வெள்ளவத்தை ஹயஸ் வான்காரனுக்கு கோல் அடிச்சார் சாமியார்.

"அண்ணை இண்டைக்கு இரவு அவசரமாக யாழ்ப்பாணம் போகவேணும். இடமிருக்கோ?"

"பின்னுக்கு கடைசியில ஒரே ஒரு சீற்தான் மிச்சம் இருக்கு. வேற இல்லை. வேணுமோ?"

"பறுவாயில்லை. புக் பண்ணுங்கோ"

"கொன்பேர்ம்"

நொகியா 3310 மீண்டும் கிணுகிணுத்தது.

திறந்துபாத்தால் சாமியார் மச்சாளுக்கு அனுப்பிய தாஜ்மஹால் அவளிடம் இருந்து திரும்பி வந்திருந்தது. மேலதிகமாக அதுக்கு கீழ;

"I love you aththu" எண்டு முத்து முத்தாய் எழுதியிருந்தது.

#சனிக்கிழமைசாமியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge