திங்கள், பிப்ரவரி 15, 2021

சனிக்கிழமைசாமியாரும் கொமுனிக்கேசன் சிஸ்ரமும்!

1998!
அந்த நேரம் ஊரில கைத்தொலைபேசிகள் இல்லை.5G உம் இல்லை.சம்சுங்கும் இல்லை. ஆனாலும் எங்கட தொழில்நுட்பங்கள் பனையின்ர வட்டை விட உயரமாகவே இருந்தன.

உதாரணத்துக்கு சனிக்கிழமைசாமியார் ரியூசனுக்கு "கட்" அடிச்சுப்போட்டு ஓராங்கட்டை சந்தியில உள்ள பிரியா தியேட்டரில் படம் பார்ப்பார். படம் முடிஞ்சு வெளியில வர வாசலில சாமியாரின் தேப்பன் பூவரசம் தடியோட நிப்பார்.
அப்பிடி ஒரு வேகமான "கொமுனிக்கேசன் சிஸ்ரம்" எங்கட ஊரில இருந்தது.

இன்னும் ஒரு உதாரணம் சொல்லுறன்.
சனிக்கிழமைசாமியார் A/L உயர்தரம் படிக்கும் போது சாமியாரின் நாலாவது ஆள் O/L படிச்சவா. சனிக்கிழமை சாமியாருக்கும் அவரின் நண்பனுக்கும் கொடுக்கப்பட்ட வேலை என்னண்டால்;

அந்த பிள்ளையை பத்திரமா வீட்டு படலையடியில இருந்து கூட்டிக்கொண்டே ரியூசன் வாசலில விடுவதும்;
பிறகு ரியூசன் முடிய அலுங்காமல் குலுங்காமல் திரும்பவும் அந்த பிள்ளையின் வீட்டு வாசலில கொண்டே விடுவது. இந்த வேலையை சாமியாரும் சாமியாரின் நண்பனும் ஒரு நாள்கூட "சிக் லீவு" எடுக்காமல் ஒரு வருசமாக செய்தார்கள்.

உப்பிடித்தான் ஒருநாள் சாமியாருக்கு உசுப்பேறி அந்தப்பிள்ளையை ஒரு ஒழுங்கையுக்குள்ள மடக்கி;
முடிவைக்கேட்டார்.
ஒழுங்கை தொங்கலில சனிக்கிழமை சாமியாரின் உயிர் நண்பன் காவல்.

"நான் அம்மாவைக்கேட்டுத்தான் முடிவு சொல்லுவன்" எண்டு அந்தப்பிள்ளை சொல்லி முடிச்சு தலைநிமிரமுதல் ;
ஒழுங்கை வாசலில அந்தப்பிள்ளையின் அம்மாவை ஏத்திக்கொண்டு மூத்தமச்சாள் வந்திட்டா.

மூத்தமச்சாள் எண்டு சொன்னது சனிக்கிழமை சாமியாரின் ஆளின்ர மூத்த அக்கா.அவாவுக்கு சனிக்கிழமைசாமியாரில் ஒரு விருப்பம் இருக்கு. விருப்பம் எண்டால் பிழையா விளங்கப்படாது.
தன்ர தங்கச்சியை சனிக்கிழமைசாமியார் போல ஒரு வடிவான பொடியனுக்கு கட்டிக்குடுக்க விருப்பம். அவ்வளவுதான்.

சுமார் 20 வருசம் கழிச்சு சனிக்கிழமைசாமியாரை முகநூலில் தேடிப்பிடிச்சு மூத்தமச்சாள் இந்த விசயத்தை சொன்னபோது சாமியார் உருகிப்போனார்.

சரி விசயத்துக்கு வருவம்.
சனிக்கிழமைசாமியாரின் ஆள் கொஞ்சம் வடிவான பெட்டை. பொதுவா வடிவான பெட்டை எண்டால் குறைஞ்சது நாலுபேரெண்டாலும் பின்னால சுத்துவாங்கள். சனிக்கிழமைசாமியார் தன் உயிர் நண்பனோடு அஞ்சாவதாகத்தான் சுத்துவார். ஆனால் சுத்தி முடிக்கும் போது முதலவதாக நிப்பார். அதுக்கு காரணம் சாமியாரின் ஆருயிர் நண்பன். சாமியாரை சைக்கிள் முன்னால இருத்தி நாய் மாதிரி மூசி மூசி ஓடுவான்.குச்சொழுங்கை, கிறவல், மண்றோட்டு , பள்ளம், திட்டி எண்டு பாராமல் அவன் ஓடிய ஓட்டம் தான் இண்டைக்கும் சாமியாரின் விடாமுயற்சிக்கு ஊன்றுகோல்.

பதிலுக்கு சாமியாரும் நண்பனுக்காக பருத்தித்துறையில் இருந்து தொண்டைமானாறு, கெருடாவில், உடுப்பிட்டி, கரணவாய்க்கு தேயத்தேய நண்பனை சைக்கிளில் ஏத்திக்கொண்டு ஓடியிருக்கிறார்.

சனிக்கிழமைசாமியார் ஒரு அசட்டுத்துணிச்சலில் பெட்டையை ஒழுங்கையுக்குள்ள மடக்கி முடிவை கேக்கும் நேரத்தில் ஆரோ ஒரு வில்லன் இந்த விசயத்தை வலு வேகமாக அந்தப்பிள்ளையின் வீட்டில சொல்லிப்போட்டான்.

பிற்காலத்தில் நடந்த பல காட்டிக்கொடுப்பு, துரோகம் போன்ற பெரிய குற்றச்செயல்களுக்கு இதுதான் ஆரம்பம் எண்டும் சொல்லலாம்.

SMS ஐ விட வேகமாக அந்தக்காலத்தில் செய்திகள் பரப்பப்பட்டுவிடும்.

மந்திகையில் இந்தியன் ஆமிக்காரன் றோந்தில வாறான் எண்டுறது 2 நிமிசத்தில  மெத்தைக்கடை சந்தியில் உள்ள இயக்கப்பொடியளுக்கு தெரிஞ்சிடும்.

கதையோட கதையா ஒழுங்கை வாசலில காதலுக்கு காவல்  நிண்ட சனிக்கிழமைசாமியாரின் நண்பனை மறந்திட்டம் பாருங்கோ!

ஒழுங்கை வாசலில சென்றியில காவலுக்கு நிண்ட நண்பனின் AK 74 ஐத்தாண்டி எப்பிடி மூத்தமச்சாளும் மாமியும் வந்தவை எண்டு சாமியார் குழம்பிட்டார்.

மாமி எண்டு சொன்னது சாமியாரின் ஆளின்ர அம்மா. காதலிச்ச பிள்ளையை கட்டுறமோ இல்லையோ சாகும்வரைக்கும் ஒரு சோட்டைக்கு மாமி, மாமா, மச்சான்,மச்சாள் என்ற உறவு முறைகளை சொல்லிக்கூப்பிடுவதில் ஒரு தனிச்சுகம்.

ஆமிக்காரன்ர றவுண்டப்பில் ஆப்பிட்ட ஆளைப்போல பதறிப்போய் தன் ஆருயிர் நண்பனைத்தேடினார் சாமியார்.

ஒழுங்கை வாசலில ஆள் இல்லை.

ஒரு மாதிரி மூத்தமச்சாள் பாவப்பட்டு சனிக்கிழமைசாமியாரை பிணை எடுத்து விட்டார். அண்டைக்கு மட்டும் மூத்தமச்சாள் வந்திருக்காவிட்டால் நிச்சயம் சனிக்கிழமைசாமியாரின் கன்னத்தில் மாமி குடுத்திருப்பா. அதாவது சனிக்கிழமை சாமியாருக்கு கன்னத்தில அடி விழுந்திருக்கும்.

அவமானத்தில் கூனிக்குறுகி ஒழுங்கை வாசலில் நிண்டு தன் நண்பனைத்தேடினார் சாமியார். ஒழுங்கை வாசலில் சைக்கிள் மல்லாக்காய் கிடந்தது. நண்பனைக்காணவில்லை!

ஒழுங்கையின் எதிர்ப்பக்கத்தில் உள்ள பனம் காணிக்குள் இருந்து வந்தான் நண்பன். வரும்போது தன்னுடைய காச்சட்டையின் "சிப்பை" சரிசெய்துகொண்டு வந்தான்.

"மச்சான் என்ன முடிஞ்சுதா? என்னவாம் ஆள். ஓமண்டுட்டாளோ?" 
நண்பனின் கேள்விக்கு சாமியாரின் பதில் என்ன பாசையில் இருந்திருக்கும் என்பதை உங்களின் ஊகத்துக்கே விடுவம்.

சனிக்கிழமைசாமியாரை ஏத்திக்கொண்டு சைக்கிள் பருத்தித்துறை றோட்டால் தும்பளைக்கு பயணமானது. அவ்வளவு நேரமும் ஒழுங்காய் ஓடின சைக்கிள் செயின் "கிறீச் கிறீச்" எண்டு சோக கீதம் இசைத்தது.

மாமி கேட்ட கேள்வி ஒண்டு சாமியாரின் இதயத்தில் சாக்கு தைக்கிற ஊசியால குத்தின மாதிரி ஒரு வலி!

வீட்டுக்குப்போன சாமியார் கிணத்தடியில போய் நிண்டு அள்ளி முழுகினார். முழுகும் போது அவமானத்திலும் தோல்வியிலும் சாமியரின் கண்ணில் இருந்து கண்ணீர்த்துளிகள் "லக்ஸ்" சோப்போடு கழுவுப்பட்டு போயின.

அம்மாவின் சோட்டியால் தலையை உணத்திப்போட்டு அப்பாவின் சாரத்தை கட்டினார் சாமியார். 
கொடியில் கிடந்த அண்ணாவின் சேட்டைப்போட்டுக்கொண்டு றேடியோவில் சோகப்பாட்டை போட்டு கேட்டபடி விறாந்தையில் இருந்தார் சாமியார்.

"அந்தப்பிள்ளையில எங்களுக்கும் விருப்பம் தான். ஆனால் அதுகளுக்கும் எங்களுக்கும் ஒத்துவராது. பேசாமல் துரையன் மாமாவின்ர அகிலாவைப்பார். அவளின்ர வடிவுக்கு ஒருத்தரும் கிட்ட நிக்காயினம்"

அம்மா குசினியுகுள்ள இருந்து புறுபுறுத்தது சாமியாரின் காதுகளுக்கு பனிகாலத்தில் புலிகளின் குரல் செய்திகள் கிளியராய் கேப்பது போல கேட்டது.

சம்பவம் நடந்து அரை மணித்தியாலத்துக்குள்ள சனிக்கிழமைசாமியாரின் அம்மாவின் காதில போடும் அளவுக்கு அந்த நேரம் எங்கட "கொமுனிக்கேசன் சிஸ்ரம்" வலு வேகமாத்தான் இருந்தது. உந்த 5G எல்லாம் அப்ப இல்லை எண்டதை நினைவில் வைச்சுக்கொள்ளுங்கோ!

சரி உதைவிடுவம். சனிக்கிழமை சாமியாரின் அம்மா சொன்ன துரையன் மாமாவின் மகளைத்தேடி சாமியார் போனாரா? இல்லையா? என்பதை அடுத்த கிழமை பாப்பம்.

#சனிக்கிழமைசாமியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge