திங்கள், பிப்ரவரி 15, 2021

♥️மெல்பேர்ண் எயாப்போட்டில் சனிக்கிழமைசாமியார்

சாமியாரின் நண்பன் ஒருத்தன் குடும்பத்தோட ஊருக்கு போயிருந்தான். திரும்பி வரும் போது அவனை ஏத்துவதற்காக போயிருந்தார்.

பின்னேரம் 3:30 இக்குத்தான் கொழும்பு - மெல்பேர்ண் சிறிலங்கா ஏயார்லைன்ஸ் வரும்.

சாமியார் கொஞ்சம் நேரத்தோட போய் arrival இடத்தில உள்ள கதிரையில் காவல் இருந்தார்.

பக்கத்தில இன்னும் கொஞ்ச எங்கட ஆக்கள் ஆளும்பேருமா வந்து இருந்தினம். சாமியார் ஒரு சிரிப்பை சிரிச்சுப்போட்டு போனை நோண்டத்தொடங்கினார்.

“மன்னார் புதைகுழி முடிவுகள் தமிழருக்கு ஆச்சரியத்தை கொடுக்கும். சுமந்திரனின் தீர்க்கதரிசனம் உண்மையானது”

“வரவு செலவு திட்டத்தை நிபந்தனையின்றி கூட்டமைப்பு ஆதரிக்கும்”

“திருமணமான 3 பிள்ளைகளின் தாயிடம் 60 லச்சத்தை பறிகொடுத்தார் ஜேர்மன் தமிழ் மைனர்”

இப்படி பல விநோதமான செய்திகள் முகப்புத்தகத்தில் உலாவின.

பக்கத்தில் இருந்த எங்கட ஆக்களின் ஆரவாரம் பெரிய ஆரவாரம்!

“போட்டோக்காரன் வந்திட்டானா?”
“ஒரு பூச்செண்டு காணுமோ இன்னும் ரண்டு வாங்கவோ மச்சான்?”
“மச்சான் நாலு காரும் ஒண்டாப்போவம். ஒருத்தனையும் இடையில பூர விடாத!”
“வீட்ட போனதும் ஆராத்தி ரெடி பண்ணவேணும்!”
“வாற சனி இரவு எயாப்போட்டுக்கு ஏத்த வந்த ஆக்களுக்கு பாட்டி”

இந்தக்கதைகள் சாமியாரின் இடக்காதுக்குள் பூந்து வலக்காதுக்குள்ளால போய்க்கொண்டிருந்தன.

சாமியாரின் புலன்விசாரணையின் அடிப்படையில் ஊரில இருந்து புதுசா “பொம்பிளை” இண்டைக்கு அவுஸ்திரேலியாவுக்கு வந்து இறங்கப்போகுது என்பது தெரிந்தது.

வந்திறங்கும் வாசலில் (departure gate) பூட்டப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டிக்கு அருகில் ரண்டுபேர் போய் நிண்டு ஆள் வாறவோ எண்டு பாத்துக்கொண்டிருந்தார்கள்.

மாப்பிளைக்கு ஊரில் இருந்து தொலைபேசி அழைப்பு மேல் அழைப்பு.

“ஓம் மாமி பிளேன் இறங்கிட்டுது. சனம் வெளியில வந்துகொண்டிருக்குது. கறுத்த ஜக்கெட் தானே போட்டுக்கொண்டு வந்தவள். ஒரு பிரச்சினையும் இல்லை”

“10 கிலோ மிளகாய்த்தூளும் கருவாடும் குடுத்து விட்டவையாம். எப்பிடியும் நாய் மணந்து பிடிச்சிருக்கும். கொண்டுவந்த எல்லா சாமானும் கிழறித்தான் விடுவாங்கள். கொஞ்சம் லேட் ஆகும்”

மாப்பிளை பரபரப்பா அங்கும் இங்கும் ஓடித்திரிஞ்சார்.

அதுக்கிடையில் போட்டோக்காரன் வந்திட்டான். போட்டோக்காரன் சும்மா ஏன் நிப்பான் எண்டு அங்க நிண்ட சனத்தை போட்டோ எடுக்கத்தொடங்கினார். 

“அண்ணை காரில டக்கெண்டு ஏறிப்போகவேண்டாம். கொஞ்ச நேரம் காருக்கு பக்கத்தில நில்லுங்கோ. போட்டோ எடுத்திட்டு போவம்”
போட்டோக்காரன் “லொக்கேசன்” சொன்னான்.

மாப்பிளை புது மனிசியை ஏத்த புதுக்கார் வாங்கியிருக்கிறார்.எப்பிடியும் அந்த கார் லோன் கட்டி முடிய நாலு வருசம் ஆகலாம்.

“புதுமனிசியை புதுக்காரில தான் ஏத்தவேணும” எண்டு ;
கூட இருந்த பொடியள் உசுப்பேத்தி இருப்பாங்கள். அதைக்கேட்டு பொடியனும் லோனில கார் வாங்கியிருப்பான்.

“மாப்பிளை என்ர மோளை புதுக்காரிலதான் எயாப்போட்டில வந்து ஏத்தினவர்” எண்டு மாப்பிளையின் மாமா கோப்பிறேசனில் புளிச்ச கள்ளை குடிச்சபடி புழுகியிருப்பார் என்பது சாமியாரின் ஞானக்கண்ணுக்கு தெரிந்தது.

திடீரெண்டு ஒரு சின்னப்பிள்ளை துள்ளிக்குதிச்சு கத்தியது.
“அந்தா அன்ரி வாறா மாமா”

சனம் எல்லாம் எழும்பி வாற வாசலுக்கு ஓடியது.மாப்பிளையும் பின்னால ஓடினார்.

மாப்பிளை புது மனிசியை பாக்குற அந்தரத்தில வாங்கின பூச்செண்டை சாமியாரின் கதிரைக்கு கொஞ்சம் அங்கால மறந்து போய் வைச்சிட்டு ஓடினார்.

சாமியார் அந்தப்பூச்செண்டை எடுத்துக்கொண்டு அதை மாப்பிளையிடம் கொடுக்க பின்னால ஓடினார்.

அதுக்கிடையில் ஒரே ஆரவாரம்!!!

வந்த பிள்ளையை சுத்தி சனம். கைகுடுப்பதும் கட்டிப்பிடிச்சு கொஞ்சுவதுமாய் ஒரே களோபரமா கிடந்தது. மாப்பிளையை கிட்டயும் விடயில்லை. வந்த பிள்ளை பாவமாக பேந்தப்பேந்த முளிச்சுக்கொண்டு தன்ர புருசனை தேடுகிறது.

கோதாரிவிழுந்த கல் நெஞ்சக்கார சனம் புது மாப்பிளையை மனிசிக்கு கிட்ட விடுகுது இல்லை.

சாமியார் எப்பிடியும் பூச்செண்டை அந்த பொடியனிடம் குடுக்க முயற்சிசெய்தார். சனம் விட்டால்த்தானே!

“அண்ணை ... இடிக்காதையுங்கோ. நாங்கள் முதல் வந்தனாங்கள். போட்டோ எடுத்துட்டு விடுறம். பிறகு பூச்செண்டை குடுங்கோ”

ஒரு குண்டு மனிசி சாமியாரைப்பர்த்து கொஞ்சம் கோபத்தோடு சொன்னா.

அடப்பாவிகளா சும்மா வந்த சாமியாரை உங்கட கூட்டத்தோடு சேத்திட்டியளே!!!

போட்டோக்காரன் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தான். 

கடைசியா ஒருமாதிரி மாப்பிளையை பொம்பிளையோடு சேர விட்டிட்டாங்கள்.

பிள்ளை டக்கெண்டு பொடியனின் கையை இறுக்கிப்பிடிச்சுக்கொண்டு அவன்ர முகத்தை பார்த்தது.

“இந்த சனத்திட்ட இருந்து என்னை காப்பாத்தி கூட்டிக்கொண்டு போ” எண்டு அந்தப்பிள்ளை மனசுக்குள் நினைச்சது மாப்பிளைக்கு கேட்டுதோ இல்லையோ சாமியாருக்கு கேட்டது.

அவுஸ்திரேலியா எண்டு கனவோட வந்த பிள்ளைக்கு விமான நிலையத்தில் வைச்சே எங்கட சனம் செய்யுற அலப்பறைகள் அந்த பிள்ளைக்கு மனதில் பயத்தை ஏற்படுத்தியிருக்கும்.

“தனக்கு இவ்வளவு ஆக்கள் வெளிநாட்டில இருக்கினம்” எண்டு காட்ட ஒரு பந்தாவுக்கு மாப்பிளை செய்த ஒரு “செட்டப்” தான் இது!

“இஞ்சை எல்லாரும் கையை தூக்கி ரண்டு விரலை காட்டுங்கோ. பேஸ்புக் லைவ் போகுது” ஒருத்தன் கத்தினான்.

அவர்களோடு சேர்ந்து சாமியாரும் கையை தூக்கி விரலை காட்டினார். 

“கறுத்தசட்டை போட்ட அண்ணை ஒருவிரல் இல்லை. ரண்டு விரல்”

சத்தியமா சாமியாரின் காதுக்கு ரண்டு விரலை காட்டச்சொன்னது கேக்கவேயில்லை.என்னத்துக்கு ரண்டு விரலை தூக்கி காட்டவேணும் என்பதும் இண்டுவரை சாமியாருக்கு தெரியவே தெரியாது.

சனத்தை விலத்தி ஒருமாதிரி மாப்பிளை பொம்பிளையிடம் வந்து சேர்ந்தார் சாமியார்.

“தம்பி ... உங்கட பூச்செண்டை மறந்து....”
சாமியார் சொல்லிமுடிக்க முதல் போட்டோக்காரன் கத்தினான்.

“அண்ணை கிட்ட நில்லுங்கோ  பூச்செண்டை பிள்ளையிட்ட மெதுவா குடுங்கோ”

சாமியார் திகைச்சுப்போனார். 

சாமியாரையும் அந்த சனக்கூட்டத்தில் ஒராள் எண்டு போட்டோக்காரன் தப்பா நினைச்சிட்டான்.

சாமியார் வழியில்லாமல் பூச்செண்டை மாப்பிளையிடம் கொடுக்க...

“அண்ணை அவாட்ட குடுங்கோ” என்றார் மாப்பிளை.

சாமியார் பூச்செண்டை புதுசா வந்த பிள்ளையிடம் கொடுத்தார். அதுவரை நேரமும் பேந்தப்பேந்த முளிச்ச பிள்ளையின் முகத்தில் ஒரு “மலர்ச்சி”!!!

“அண்ணா நன்றி. நீங்கள் தானே சனிக்கிழமைசாமியார்” 

பிள்ளை சிரிச்சபடி சாமியாருக்கு நன்றி சொன்னது.

“இவரை முதலே உனக்கு தெரியுமா?”
மாப்பிளை ஆச்சரியத்தோடு பிள்ளையிடம் கேட்டார்.

“என்ர பேஸ்புக்கில இருக்கிறார்.நல்லா எழுதுவார்” எண்டது பிள்ளை.

“அண்ணை விலத்துங்கோ. அடுத்த ஆக்கள் வாங்கோ” மீண்டும் போட்டோக்காரன் கத்தத்தொடங்கினான்.

சாமியார் வந்த அலுவலை மறந்து இதுக்குள்ள செருகுப்பட்டு நிண்டதால ஊரில இருந்து வரும் நண்பனை மறந்துவிட்டார்.

ஏற்கனவே நண்பன் வந்து இந்த “கூத்துகளை” பாத்துக்கொண்டு நிண்டான்.

சாமியார் நண்பனிடம் ஓடிப்போய் மன்னிப்பு கேட்டுவிட்டு அவனின் பயணப்பொதிகளை வாங்கி தள்ளிக்கொண்டு நடந்தார்.

“மச்சான் நீ என்னை ஏத்த வந்தனியோ அல்லது அவைக்கு பூச்செண்டு குடுக்கவந்தனியோ? உண்மையை சொல்லு”
நண்பன் கேட்ட கேள்வியால் சாமியார் ஒருகணம் ஆடிப்போனார்.

“இல்லை மச்சான் சத்தியமா உன்னைத்தான்ரா ஏத்த வந்தனான். அது பெரிய கதை. போகேக்குள்ள காரில சொல்லுறன்” என்றார் சாமியார்.

கடைசியாய் ஒருமுறை சாமியார் திரும்பிப்பார்த்தார். ஆரவாரம் இன்னும் முடியவில்லை. கமெரா flash ஒளித்துக்கொண்டேயிருந்தது.

பாவம் “அந்தப்பிள்ளை”!!!!

#சனிக்கிழமைசாமியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge