இன்று..!!!
11ம் ஆண்டு சுனாமி நினைவேந்தல் நாள்!!
1256 உறவுகள் ஒரேநாளில் வடமராட்சிக்கிழக்கில் இயற்கை தந்த பேரிடர் அழிவால் எங்களை விட்டுப்பிரிந்த நாள்!!!
1991 இல் போரினால் ஊரை விட்டு ஓடினோம்.
2002 இல் ...
11 வருடங்களின் பின் மீண்டும் எங்களின் ஊரில் குடியேறினோம்..
சிறுகச்சிறுக ...
குருவி சேர்ப்பதுபோல எங்கள் வாழ்வை ஆரம்பித்தோம்..
கொஞ்சம் ..
போர் ஓய்ந்து
நிம்மதிபெருமூச்சு விடும் போது...
2004 டிசம்பர் 26 காலை ..!!!
நாங்கள் தாயாய் நேசிக்கும் கடல் அன்னை பொங்கி எழுந்து ...
எங்கள் ஊர் புகுந்து 1256 உயிர்களை வாரி எடுத்துச்சென்று மீண்டும் அமைதியானாள்!!!
கடல் வந்து கால் நனைக்கும் தூரத்தில்தான் எங்கள் வீடுகள் இருந்தன..
முற்றத்தில் இருந்து எட்டிப்பார்த்தால் எங்கள் அப்பா கடலில் நிக்குறது தெரியும்!!!
மாரி காலத்தில் வீட்டு வேலிக்குள்ளால் மெல்ல நுழைந்து எங்கள் கிணற்றடியில் வந்தமர்வாள் கடலம்மா...
இருந்தாலும் கிணத்து நீரை அள்ளிக்குடிச்சால் அமிர்தமடா அமிர்தம்!!!!
பள்ளிக்குடத்தால் ஓடிவந்து
பசிக்களையில்
வாளி நிறைய தண்ணி அள்ளி வயிறு நிறைய குடிச்சால்
பசி எல்லாம் ஓடிப்போகும்..
அத்தனை அமிர்தமடா எங்கள் தண்ணீர்!!!
கடலம்மா எங்களை கைவிடாள் எனும் நம்பிக்கையில்த்தான்..
அந்தளவு துணிவோடு ..
அவள் வந்து கால் நனைக்கும் தூரத்தில் நிம்மதியாய் நித்திரை கொண்டம்!!!
நித்திரையால் எழும்பமுன் .....
என்ன நடக்குதென புரியமுன்..
எல்லாம் கணப்பொழுதில் நடந்து முடிந்தது!!!
வடலிக்குள் ஒன்றும்
வேலிக்கம்பிக்குள் ஒன்றும்
முறிந்து விழுந்த மரத்துக்குள்
ஒன்றுமாய்..
உயிரற்ற உடலங்களை
பொறுக்கி எடுத்தோம்...
ஐயோ என்ர அம்மா என ஒரு குரல்
ஐயோ என்ர பிள்ளை என ஒரு குரல்
ஐயோ என்ர அக்கா என ஒரு குரல்
ஐயோ என்ர தம்பி என ஒரு குரல்
ஐயோ என்ர மனிசி என ஒரு குரல்!!!
எங்கே பார்த்தாலும் அழுகுரல்
எங்கே பார்த்தாலும் அவலக்குரல்
சில ஊரில் குடும்பம் மொத்தமும் அழிந்தது
சில குடும்பத்தில் ஒருத்தர் மட்டும் உயிர் தப்ப மற்ற எல்லாரும் இறந்துபோனார்கள்.
ஊரெங்கும் பிணவாடை
யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென தெரியாமல் திகைச்சு நிண்டோம்.
போராலும்
இயற்கை செய்த கோரத்தாலும்
எங்கள் வாழ்வும்
எங்கள் ஊரும்
சிதைந்து போனது!!!
வழமையாக ஊருக்குப்போனால்...
சிரித்தபடி வரவேற்கும்
உறவுகள் பலரை
உயிரற்ற உடல்களாய் பனை வடலிக்குள்ளும்
முள்ளிவேலிகளிலும்
பொறுக்கி எடுத்தபோது...
கடலோடு சேர்ந்து என் கண்ணீரும் வற்றியிருந்தது...!!!
தமிழ்ப்பொடியன்®

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக