திங்கள், ஜூலை 27, 2009

உறவுகளின் வலி



"தவிப்பு"
---------------


வணக்கம்!!!
மனிதாபிமானம் மரித்த மண்ணில்
மறுக்கப்பட்ட வழ்வை தொலைத்து
தொட்டழைந்த மண்ணையும் விட்டு
உடன் இருந்த உறவுகளையும் தொலைத்து
முளையோடு பிடுங்கி எறியப்பட்ட "விதையாய்"
ஊன்ற நிலம் கேட்டு வந்திருக்கும்
தமிழ் பொடியனின் தவிப்பு இது!

தலை நிமிர்ந்து வாழ்ந்த "தாய்மண்ணை"
உயிர் காக்கும் "உறங்காத விழிகளை"
தலை சாய்ந்துறங்கும் "தாய்மடியை"
என் உயிராய் நேசித்த "நண்பர்களை"
இவற்றையெல்லாம் தொலைத்து விட்டு "வலியோடு"
வந்திருக்கிறேனே!-நான்
வாழ்வதற்கா? இல்லை வாழ வைப்பதற்கா???

ஆழக்கடல் கடந்து "வாழ்வு" தேடி
வந்தவனை "அகதி" எண்டு அடையாளம் இட
"ஆயிரம்" கேள்விகள்!

அழகான பூந்தோட்டத்திலிருந்து
பிடுங்கி எறியப்பட்ட சின்னஞ்சிறு செடி நான்
என் வேர்களில் இப்போதும் ஒட்டி இருப்பது-என்
தாய்மண்ணின் "புளுதி மண்" வாசம்தான்!

இங்கே நிரந்தரமாய் வேரூண்டி விழுதுகள் விட
ஆசையில்லை எனக்கு!
ஆணிவேரும் அடிக்கட்டைகளும் அங்கே இருக்க-இங்கே
ஆழ வேரூண்ட எவனுக்கும் ஆசை இல்லை.
என் ஒவ்வொரு கிளைகளும் கொடுக்கின்ற "நிழலில்"
இளைப்பாற வேண்டும் என் இனம்! என் சனம்!

தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு
தங்கத்தட்டில் தரமான உணவாம்!
என்ன கொடுத்தாலும் என் தாய் கொடுக்கும்
"புட்டுக்கும்" "நண்டுக்கறிக்கும்" ஈடாகுமா?

ஓலைப்பயில் ஒழுகும் மழைத்துளியில்
நனைந்து உறங்கியவனுக்கு-இங்கே
ஓசியாய் கிடைக்கிறது "ஏசி"


என்ன வேன்டும்?எண்டு கேட்டபின் கொடுக்கும் இவர்களுக்கு தெரியாது
கொடுத்தபின்இ இன்னும் வேண்டுமா? எண்டு கேட்கும் "இனம்" நான் எண்டு.

வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எல்லாம்-அங்கே
வீடு கட்டி வாழ்வதில்லை!
காலநிலை மாற்றம் அவற்றை கடல் கடக்க வைக்கிறது.

இப்போது எங்கள் மண்ணில் இலையுதிர்காலம்-நாளை
வசந்தகாலம் வரும்போது மீண்டும் வானமேறுவோம்
எங்கள் மண்ணில் நிரந்தரமான "வாழ்வை" தேடி!

அன்புடன்
தமிழ்பொடியன்


அன்பர் ஒருவர் "வாழ வந்த மண்ணையும் மக்களையும் குறை சொல்கிறேன்" என்று ஆதங்கப்பட்டார்.தட்டிகொடுப்பவர்களை விட தட்டிகேட்பவர்களை நேசிப்பவன் நான். இருந்தாலும் என் பதிலும் உணர்வும் இங்கே....!
0000000000000000000000000000000000000000





"வாழ்ந்து பாருங்கள் "வலி" தெரியும்.....!!!!
------------------------------------------------------------------

ஐயா..!
காவியம் படைக்க நான் கம்பனும் இல்லை!
மரபுக்கவிதை எழுத எனக்கு "மண்டையும்" இல்லை!
புதுக்கவிதை புனைய நான் "புதுவை அண்ணாவும்" இல்லை!

விரக்தியின் விளிம்பிலும்! வேதனையின் வேக்காட்டிலும்!
விம்முகின்ற உனர்வுகளை
"கவிதை" எனும் கட்டுக்குள் அடங்காமல்
விழி வழி வழியும் நீர்துளிகளைப்போல
வலியின் உச்சத்தில் வரும் என் வாய் "பிதற்றல்"
என் விரல் கிறுக்கும் கிறுக்கல் இது!

வாழ்ந்த மண்னை விட்டு
"வாழ்க்கை" தேடி வாழ வந்த மண்ணை
"பழிக்கும்" பாவம் செய்யும் பாவி நான் இல்லை!
"அடைக்கலம்" தந்த வீடுகளை "ஆலயங்களாய்"
நினைக்கும் ஆயிரம் தமிழர்களில் நானுமொருவன்!


ஐயா...!
"தமிழன்" என்ற செருக்கோடு தலை நிமிர்ந்து
வாழ்ந்த நாங்கள்....
"அகதி" என்ற அவமானத்தோடு அவலப்படுகிறோமே.!
அந்த "ஆதங்கம்" தான் எனக்கு!

"சிற்றிசன்" தந்தாலும் "சிம்மசனம்" எமக்கெல்லாம்
எங்ககள் தாயகத்தில் தான்.
அன்னை மண்ணில் ஆறடிக்குள் புதைந்து "துயிலும்"
அற்புதம் நம்மில் எத்தனைபேருக்கு கிடைக்கும்?
"ஆயிரம்" சொன்னாலும் "அகதி" என்ற பேரோடுதான் - இங்கே
"அடக்கம்" செய்யப்படும் அவலம்!

சொந்த மண்ணிலும் "அகதி"
வந்த மண்ணிலும் "அகதி"


ஐயா...!
அழுதாலும் விழங்காது..!
எழுதினாலும் புரியாது...!
"அகதி" எனும் சொல்லின் அவமானத்தின் "அசிங்கம்"
வாழ்ந்து பாருங்கள் "வலி" தெரியும்...!
15.06.2006



புதுப்பானை எடுத்து புத்தாடை உடுத்தி பொங்கலாம் வா.!
-----------------------------------------------------------------------------------------------------







புதுப்பானை எடுத்து புத்தாடை உடுத்தி பொங்கலாம் வா.!
வன்னியில் வயிறு கிழித்து குடல் எடுத்து தின்னுகிறான் சிங்களவன்
எங்களுக்கென்ன நீ வா.!
சக்கரைப்பொங்கல் பொங்கி நாங்கள் தின்னலாம் வா.!

சதைத்துண்டங்களாய் சிதறிக்கிடக்கிறது சின்னப்பிஞ்சு
அது என்ன எங்கள் பிள்ளையா?இல்லை எங்கள் தங்கையா?

சிரழிந்து சின்னாபின்னமாய் அழிந்து போகிறது தமிழன் வாழ்வு
எமக்கென்ன நீ வா நாவுக்கு ருசியாய் பொங்கி தின்னாலாம்.

இனமே அழியுது.! இன்னல் பெருகுது.!
இங்கே நாங்கள் தமிழனின் பண்பாடு அழியாமல்
இந்து மதம் இடிந்து போகாமல் இருக்க
பொங்கலாம் வா

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அழுபவனுக்காக அழிபவனுக்காக
இங்கிருந்து அழுது என்ன பலன்?

பிள்ளை குட்டி எல்லம் பொன்சரில வந்தாச்சு
சிற்றிசனும் எடுத்தாச்சு
பிறகெதுக்கய்யா பயப்பிடவேணும்?
நீ வா பொங்கலாம்.!

ஆயிரம் பேர் கூடி ஆர்ப்பாட்டம் செய்வதிலும் பார்க்க
ஐந்து பேர் சேர்ந்து ஆரவாரமாய் பொங்கினால்
அழிந்து போகாமல் நம் இனம் வாழும்
விழுந்து போகாமல் நம் சனம் எழும்.!

புலத்தில் உள்ள தமிழரெல்லாம் பொங்கி புத்தாண்டை கொண்டாடுக
தமிழீழத்தின் மானமும் வீரமும் நீங்கள் பொங்குவதில்தான் இருக்கிறது
இது நிலத்தில் வாழும் வீரத்தமிழனின் வேண்டுதல்

"காடுகளுக்குள் கால் கடுக்க கையில் உயிரைப்பிடித்து கொண்டு
கண்ணீரோடு ஓடிக்கொண்டு இருக்கிறோம்

கையில் என் கடைசி மகளின் கண்மூடிய சடலம்.!
அடக்கம் செய்யவே அவகாசம் இல்லை.
ஒடிக்கொண்டிருக்கிறோம்....!!

அதற்காக மரணவீடு மெல்பேணிலா வைக்க முடியும்?

தை பிறந்து தமிழனுக்கு வழி பிறக்க வேண்டும்
அதற்கு நீங்கள்தான் தைபொங்கல் பொங்கவேண்டும்
அதை நாங்கள் வானத்தில் இருந்து பார்த்து ரசிக்க வேண்டும்.
மறக்காமல் சக்கரை சேர்த்து பொங்குங்கள்
என் சின்ன மகளுக்கு சரியான ஆசை

மறக்காமல் கொஞ்சம் எங்களுக்காய்
மண்ணை நினைத்து மனதார நெஞ்சுருகி அழுகின்ற
மறத்தமிழனின் விழி சிந்தும் கண்ணீர் விட்டுப்பொங்குங்கள்
உப்புக்குப்பதிலாய்".

Sunday, 11 January 2009 at 22:08

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge